search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை மோசடி"

    போலி இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்தி ரூ.35 ஆயிரம் மோசடி செய்த கணவன் கைது செய்யப்பட்டார். மனைவியை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    பாகூர் இருளன்சந்தை பள்ளிவாடி தெருவை சேர்ந்தவர் இளையராஜா (வயது 33). இவர் புதுவை 100 அடி ரோட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் ஆன்லைனில் இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ஒருவரிடம் லைஃப் இன்சூரன்ஸ் போடுவதற்கு பேசினார். அவர்கள் போனில் தொடர்பு கொண்டு ஆதார் கார்டு, மற்றும் பல ஆவணங்களை வாங்கிக்கொண்டு ரூ.35 ஆயிரம் பணம் ஆன்லைனில் மாற்ற சொன்னார்.

    அதன் பேரில் இளையராஜா ரூ.35 ஆயிரம் பணம் செலுத்தினார். அவர்கள் இன்சூரன்ஸ் போட்டு அதை இளையராஜாவுக்கு அனுப்பினர்.

    அதில் உள்ள நம்பரை இளையராஜா ஆய்வு செய்த போது அந்த நிறுவன பெயர் எதுவும் வரவில்லை. அந்த நிறுவனம் போலி என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளையராஜா இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த ஸ்ரீராம் என்ற கோபாலகிருஷ்ணன் (29), அவரது மனைவி ரேவதி என்பது தெரிய வந்தது.

    இருவரும் வேறு ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பெயரை போலியாக பயன்படுத்தி இளையராஜாவிடம் ரூ.35 ஆயிரம் மோசடி செய்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் வழக்கு பதிவு செய்து ஸ்ரீராமை கைது செய்தார். ரேவதியை தேடி வருகிறார்.
    புதுவையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.3 கோடி மோசடியில் ஈடுபட்டதாக பொதுமக்கள் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் டோல்கேட் பகுதியில் உள்ள பச்சைவாழியம்மன் கோவில் அருகே எஸ்.எஸ்.எஸ். நிதி லிமிடெட் என்ற பெயரில் கடந்த ஜூலை மாதம் தனியார் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது.

    இந்த நிதி நிறுவனத்தை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சகாயம், ராஜா, சுரேஷ், சிவசங்கர் ஆகிய 4 பேர் பங்குதாரர்களாக நடத்தி வந்தனர்.

    இந்த நிறுவனத்தில் அரியாங்குப்பம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் இருந்து சிலரும் ஊழியர்களாக பணிபுரிந்து வந்தனர்.

    இந்த நிதி நிறுவனத்தில் தங்களது நிதி நிறுவனத்தில் ரூ.1000-ம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்தால் ஆண்டு இறுதியில் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என்றும், மேலும் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் டெபாசிட் செய்தால் அவர்களுக்கு தனிநபர் கடனாக ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர்.

    இதனை நம்பி அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் நிதி நிறுவனத்தில் சேர்ந்து ரூ.3 கோடிக்கு மேல் டெபாசிட் செய்தனர். டெபாசிட் செய்த சிலர் தனி நபர் கடன் கேட்டபோது நிதி நிறுவன பங்குதாரர்கள் ஒரு குறிப்பிட்ட தேதியை சொல்லி பணம் தறாமல் காலம் கடத்தி வந்தனர். மேலும் ஒரு சிலருக்கு இன்று பணம் தருவதாக கூறி இருந்தனர்.

    அதன்படி பணத்தை பெற்றுக்கொள்ள அவர்கள் இன்று காலை ஆவலோடு நிதி நிறுவனத்துக்கு வந்தனர். ஆனால் நிதி நிறுவனம் பூட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வெகுநேரமாக காத்திருந்தும் நிதி நிறுவனம் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து நிதி நிறுவன பங்குதாரர்களுக்கு போன் செய்தனர். ஆனால் அவர்கள் செல்போன்கள் சுவிட்ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர்கள் ஆவேசம் அடைந்து அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களும் தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று புலம்பியபடி கண்ணீர் விட்டனர்.

    இந்த தகவல் நிதி நிறுவனத்தில் பணம் கட்டிய மற்றவர்களுக்கும் பரவியது. அவர்களும் நிதி நிறுவனத்துக்கு படையெடுத்து வந்தனர்.

    பின்னர் அவர்கள் பணம் மோசடி செய்யப்பட்டது குறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தனர். நிதி நிறுவனத்தில் பணம் கட்டிய சில பெண்கள் பெரிய தொகை கடனாக கிடைக்கும் என்ற எண்ணத்தில் நகைகளை அடகு வைத்து செலுத்தி உள்ளனர். அவர்கள் கண்ணீர் வடித்தபடி, வாயில் வயிற்றில் அடித்து அழுதனர்.
    ×