search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிக்கி ஹாலே"

    • மீண்டும் அதிபராக விரும்பி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் டிரம்ப்
    • மன்னிப்பதுதான் நாட்டு நலனுக்கு உகந்த முடிவு என்றார் நிக்கி ஹாலே

    அமெரிக்க அதிபர் தேர்தல் இவ்வருடம் நடைபெற உள்ளது.

    ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ள நிலையில், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரை எதிர்த்து தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.

    ஆனால், டொனால்ட் டிரம்ப் மீது அமெரிக்காவின் புளோரிடா, நியூயார்க் மற்றும் ஜியார்ஜியா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல வழக்குகள் பதிவாகியுள்ளன.

    2020ல் அமெரிக்காவில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளியான போது அவற்றை மாற்ற முயற்சித்தது, ரகசிய ஆவணங்களை தவறாக பயன்படுத்தியது, ஆபாச பட நடிகை ஒருவருக்கு சட்டவிரோதமாக பணம் வழங்கியது உள்ளிட்ட பல தீவிரமான குற்றச்சாட்டுகள் டிரம்ப் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

    குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களில் டிரம்பிற்கு அடுத்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி மற்றும் ஐ.நா.விற்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ஆகியோர் ஆதரவு தேடி பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், நியூ ஹாம்ப்ஷையர் (New Hampshire) மாநிலத்தில், ஒரு பேட்டியில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு குறித்து பேசிய நிக்கி ஹாலே, "நான் அதிபரானால் டொனால்ட் டிரம்பிற்கு மன்னிப்பு வழங்கி விடுவேன். அதுதான் நாட்டு நலனுக்கு உகந்த செயல். 80 வயது மனிதரை சிறையில் வைத்து அதன் மூலம் நாட்டை பிளவடைய விட மாட்டேன். அவரை மன்னிப்பதன் மூலம் அவரை குறித்த பேச்சுக்களையே தொடராமல் செய்து விடுவேன்" என கருத்து தெரிவித்தார்.

    நிக்கியின் இந்த கருத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

    சில தினங்களுக்கு முன் இதே கருத்தை மற்றொரு போட்டியாளரான விவேக் ராமசாமியும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அடுத்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக டிரம்ப் அறிவிப்பு
    • குடியரசு கட்சி வேட்பாளர் போட்டி களத்தில் நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி, ரான் டிசாண்டிங், கிறிஸ் கிறிஸ்டி ஆகியோரும் உள்ளனர்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் முன்னாள் அதிபரும் குடியரசு கட்சியை சேர்ந்தவருமான டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். இதற்காக குடியரசு கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் போட்டியில் டிரம்ப் தனக்கான ஆதரவை திரட்ட தீவிர பிரசாரத்தில் உள்ளார்.

    அதேபோல் குடியரசு கட்சி வேட்பாளர் போட்டி களத்தில் தென்கரோலினா மாகாண முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே, இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி, புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிங், நியூஜெர்சி முன்னாள் கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி ஆகியோரும் உள்ளனர்.

    இந்த நிலையில் அதிபர் வேட்பாளராக குடியரசு கட்சியில் யாருக்கு அதிக ஆதரவு இருப்பது தொடர்பாக தனியார் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது. மாகாண வாரியாக நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் உள்ளார். அவருக்கு 61 சதவீத குடியரசு கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    நிக்கி ஹாலே, ரான் டிசாண்டிங் ஆகியோருக்கு தலா 11 சதவீதம் பேரும், விவேக் ராமசாமிக்கு 5 சதவீதமும், கிறிஸ் கிறிஸ்டி 2 சதவீதமும் ஆதரவு உள்ளது. 8 சதவீதம் பேர் தங்களது ஆதரவை முடிவு செய்யவில்லை என்று தெரிவித்தனர்.

    டிரம்ப் மீது பாராளுமன்ற வன்முறை வழக்கு உள்பட பல்வேறு வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. அதில் அவர் ஆஜராகி வருகிறார். ஆனாலும் குடியரசு கட்சியினர் மத்தியில் டிரம்புக்கு அமோக ஆதரவு உள்ளது.

    • அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியில் உள்ளார் நிக்கி ஹாலே.
    • சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வந்திருக்கலாம் என நிக்கி ஹாலே தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2024-ல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே அறிவித்து விட்டார். டிரம்பிற்கு போட்டியாக களமிறங்கப் போவதாக அதே கட்சியைச் சேர்ந்த நிக்கி ஹாலேயும் அறிவித்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்நிலையில், சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் வந்திருக்கலாம் என முன்னாள் மாகாண கவர்னரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் உள்ள நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், கொரோனா சீன ஆய்வகத்திலிருந்து வந்திருக்கலாம். அமெரிக்கா சீனாவுக்கான உதவியை நிறுத்தவேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    ஏற்கனவே, இதுதொடர்பாக நிக்கி ஹாலே அளித்த பேட்டியில் கூறியதாவது:

    எந்த ஒரு வலுவான அமெரிக்கரும், தன் பணம் மோசமான நபர்களுக்குச் சென்றடைவதை விரும்ப மாட்டார்கள். இந்த வகையில், நான் அதிபராக தேர்வானால், அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தான், சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு நிதியுதவி கிடைப்பதை முழுமையாக தடுத்து நிறுத்துவேன்.

    கடந்தாண்டு மட்டும், 3.81 லட்சம் கோடி ரூபாயை பல நாடுகளுக்கு உதவியாக அமெரிக்கா அளித்துள்ளது. அமெரிக்காவுக்கு எதிராக செயல்படுவோருக்கு தங்களுடைய வரிப்பணம் செல்கிறது என்பது வரி செலுத்துவோருக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.

    • கடந்த முறை ஜோ பைடனிடம் தோல்வியடைந்த டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்
    • நிக்கி ஹாலே போட்டியிட உள்ளதாக அறிவித்ததும், அவருக்கு இந்திய வம்சாவளியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட உள்ளதாக முன்னாள் மாகாண கவர்னரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூத்த நிர்வாகியுமான நிக்கி ஹாலே (வயது 51) இன்று அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 2024 அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளருக்கான போட்டியில் களமிறங்க உள்ளதாக கூறி உள்ளார்.

    'குடியரசு கட்சியினர் கடந்த 8 அதிபர் தேர்தல்களில் 7-ல் மக்கள் வாக்குகளை இழந்துள்ளனர். இது மாற்றப்பட வேண்டும். ஜோ பைடனின் சாதனை படுமோசமானது. ஆனால் இதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எனவே வரும் தேர்தலில் மக்கள் ஆதரவை பெற்று, பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், எல்லையைப் பாதுகாக்கவும், நமது நாட்டை, வலுப்படுத்தவும் புதிய தலைமுறை தலைமையேற்கும் நேரம் இது' என்றும் நிக்கி ஹாலே கூறி உள்ளார்.

    குடியரசு கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 76) ஏற்கனவே அறிவித்துள்ளார். அவர் கடந்த முறை அதிபர் தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதற்காக ஆதரவு திரட்டி வருகிறார். தற்போது நிக்கி ஹாலேவும் அறிவித்துள்ளதால், குடியரசு கட்சியின் வேட்பாளர் யார்? என்பதில் இவர்கள் இருவருக்கும் இடையே நேரடி போட்டி உள்ளது.

    குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் டிரம்பை எதிர்த்து நிக்கி ஹாலே இன்று தனது பிரசாரத்தை தொடங்கினார். அவருக்கு இந்திய வம்சாவளியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    அதிபர் தேர்தலில் நுழைவதற்கு முன், அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் குடியரசுக் கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் நிக்கி ஹாலே வெற்றி பெற வேண்டும். அதன்பிறகே அவர் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார். அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது.

    • ஜனாதிபதி ஜோ பைடன் ஜனநாயக காட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.
    • டிரம்ப் ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிட்டால் அவருக்கு எதிராக களம் இறங்க மாட்டேன் எனவும் நிக்கி ஹாலே கூறிவந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நவம்பர் 5-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. ஆனால் இப்போதில் இருந்தே அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் ஜனநாயக காட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல் கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.

    அவர் தேர்தலில் போட்டியிடுவதை முறைப்படி அறிவித்து, தேர்தலுக்கான பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார்.

    இந்த நிலையில் 2024 ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த மூத்த பெண் அரசியல்வாதியும், இந்திய வம்சாவளியுமான நிக்கி ஹாலே போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வருகிற 15-ந் தேதி அவர் தனது முடிவை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. நிக்கி ஹாலே ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவது உறுதியானால் குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியில் டிரம்புக்கு எதிரான முதல் போட்டியாளராக அவர் இருப்பார்.

    தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னராக 2 முறை பதவி வகித்தவரும், ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதருமான 51 வயதான நிக்கி ஹாலே, கடந்த 2020-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் டிரம்பின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். அதோடு டிரம்ப் ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிட்டால் அவருக்கு எதிராக களம் இறங்க மாட்டேன் எனவும் நிக்கி ஹாலே கூறிவந்தார். ஆனால் சமீப காலமாக அவரது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் தனது சமீபத்திய பேட்டிகளில், "இது ஒரு புதிய தலைமுறைக்கான நேரம். நாட்டை ஒரு புதிய தலைவர் ஆள வேண்டும்" என பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

    ×