search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்காய் பர்பி"

    • பண்டிகையில் இனிப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
    • உறவினர்களுக்கு இனிப்புகளை பரிமாறி மகிழ்வார்கள்.

    பண்டிகையில் இனிப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்புகளை பரிமாறி மகிழ்வார்கள். பண்டிகை நாட்களை தித்திக்க வைக்கும்படி, பரவலாக ருசிக்கப்படும் இனிப்பு பலகாரங்கள் உங்கள் பார்வைக்கு...

    குலாப் ஜாமூன்:

    சிறுவர்கள் விரும்பி உண்ணும் இனிப்பு பலகாரம் இது. பாலை மிதமான சூட்டில் நீண்ட நேரம் கொதிக்கவிட்டு, அதனை சுண்ட வைத்து அதில் மைதா மாவு சேர்த்து உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில் பொரித்தெடுக்கப்படும். பின்பு அதனை சர்க்கரை பாகில் ஊற வைத்து ருசிப்பர். இப்போது குலாப் ஜாமூன் மாவு கடைகளில் கிடைக்கிறது. அதனை கொண்டு சுலபமாக தயாரித்து ருசிப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    பால் பேடா:

    பால், சர்க்கரை, ஏலக்காய் கொண்டு தயாரிக்கப்படும் இது பண்டிகை காலங்களில் ருசிக்கப்படும் பலகாரங்களில் தனித்துவமானது. வட்ட வடிவில் இருக்கும் இதனை சிறுவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். பால் பேடா செய்வதற்கு சுமார் 2 மணி நேரமாகும். ஒரு லிட்டர் பாலை பாத்திரத்தில் ஊற்றி மிதமான சூட்டில் கிளறவும். அவ்வப்போது கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அடிப்பிடிக்க வாய்ப்புள்ளது.

    பால் பாதியாக குறைந்ததும் 100 கிராம் சர்க்கரை, அரை டேபிள் ஸ்பூன் ஏலக்காய் சேர்க்கவும். பால் நன்றாக சுண்டி, பாத்திரத்திலேயே தனியாக திரண்டு வரும். அப்போது மிக குறைந்த தீயில் வைத்து இறக்கவும். கோவா கையில் ஒட்டாத பதத்தில் இருக்க வேண்டும். அதனை சிறு உருண்டைகளாக உருட்டி வட்ட வடிவத்தில் அலங்கரித்து ருசிக்கலாம்.

    காஜு கத்லி:

    முந்திரி பர்பி என்றும் அழைக்கப்படும் இது முகலாய காலத்தை சேர்ந்தது. காஜு என்றால் முந்திரி என்றும், பர்பி என்பது பாலுடன் சர்க்கரை, குங்குமப்பூ போன்ற மசாலா பொருட்கள் கலந்து கொதிக்கவைத்து கெட்டி பதத்துக்கு மாற்றுவது என்றும் அர்த்தம் கொள்ளப்படுகிறது. இது வைரத்தை போன்று வெட்டி பரிமாறப்படுவதால் வைர வடிவ இனிப்பு பலகாரமாகவும் காட்சி அளிக்கிறது.

    ஜிலேபி:

    மைதா, கடலை மாவு, சர்க்கரை, நெய், குங்குமப்பூபோன்றவை கொண்டு தயாரிக்கப்படும் ஜிலேபி சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி ருசிக்கும் பலகாரமாக இருக்கிறது. முறுக்கு போன்று சுருள் வடிவில் தயாரிக்கபப்டும் இது சர்க்கரை பாகில் ஊறவைத்து ருசிக்கப்படுகிறது.

    தேங்காய் பர்பி:

    தேங்காய் துருவல், முந்திரி, பாதாம், சர்க்கரை, ஏலக்காய் கொண்டு தயார் செய்யப்படும் இது அனைவரும் விரும்பி சுவைக்கும் இனிப்பு பலகாரமாகும். இதனை தயார் செய்வதும் எளிதானது.

    தேவையானவை:

    தேங்காய் துருவல் - 1 கப்

    சர்க்கரை - 1 கப்

    ஏலக்காய் - 4 (பொடித்தது)

    முந்திரி, பாதாம் - தலா 1 டேபிள்ஸ்பூன் (பொடித்தது)

    நெய் - 1 டேபிள்ஸ்பூன்

    செய்முறை:
    முதலில் தேங்காய்த் துருவலை வாணலியில் கொட்டி சிறு தீயில் லேசாக வறுத்துக் கொள்ளவும். அதனை இறக்கியதும் மற்றொரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீரில் சர்க்கரையைக் கொட்டி கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும். அந்த பதத்துக்கு வந்ததும் தேங்காய் துருவலைக் கொட்டி கிளறவும். இடைவிடாமல் தொடர்ச்சியாக கிளறவும். இல்லாவிட்டால் அடிப்பிடித்துவிடும். கெட்டி பதத்துடன் வாணலியில் ஒட்டாமல் வரும் போது, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

    ஒரு தட்டில் நெய் தடவி, தேங்காய் கலவையை அதில் கொட்டி பரப்பி ஆற வைக்கவும். பின்பு நெய்யில் முந்திரி, பாதாமை போட்டு பொன்னிறமாக வறுத்து, தேங்காய் கலவையில் கொட்டி லேசாக கிளறவும். ஓரளவுக்கு சூடு ஆறியதும் துண்டுகளாக வெட்டி ருசிக்கலாம்.

    ×