search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கி கலாச்சாரம்"

    • சொகுசுக்கார் ஒன்றில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிகிறது.
    • வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று காவல்துறை அதிகாரி கூறி உள்ளார்.

    அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், ஜூலை 4ம் தேதி, சுதந்திர தின கொண்டாட்டத்ததின் போது நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில், அதில் பங்கேற்றவர்களில் 2 சிறுவர்கள் உள்பட 9 பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    இது குறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பது:

    வெள்ளை மாளிகைக்கு கிழக்கே, 20 நிமிட பயணத்தில் அடையக்கூடிய ஒரு பகுதியில், அதிகாலை 01:00 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 10-வயது மற்றும் 17-வயதுடைய இருவர் இருந்தனர். அனைவரும் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்திற்காக யாரும் கைது செய்யப்படவில்லை. இது குறித்த விசாரணைக்கு பொதுமக்களும் உதவ வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால், வாகனத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களா என்பதும் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களோ, வேறு எந்த விவரமோ காவல்துறை தெரிவிக்கவில்லை. டீன்வுட் அருகே சொகுசுக்கார் ஒன்றில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிகிறது.

    "இது போன்ற வன்முறை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது", என்று பெருநகர காவல்துறை உதவித்தலைவர் லெஸ்லி பார்சன்ஸ், தெரிவித்தார்.

    "நம் மக்களிடம் ஏராளமாக துப்பாக்கிகள் இருக்கின்றன. அதே போல பல வன்முறையாளர்கள் தெருக்களில் உள்ளனர்" என வாஷிங்டன் மேயர் முரியல் பவுசர் தெரிவித்தார்.

    இதேபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை பால்டிமோர் பகுதியில் நடந்த ஒரு விருந்தில் மர்ம நபர் ஒருவர் 30 பேர் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 2 பேர் உயிரிழந்தனர்.

    திங்கட்கிழமை இரவு, பிலடெல்பியாவின் தெருக்களில் குண்டு துளைக்காத மேலாடை அணிந்த ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதில் 2 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர். சம்பவத்திற்கு பிறகு, குற்றவாளி காவல்துறையிடம் சரணடைந்தார்.

    திங்கட்கிழமை பின்னிரவு, டெக்சாஸ் சுற்றுப்புற பகுதியில் நடைபெற்ற ஒரு கொண்டாட்டத்தின் போது அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டத்தின் மீது பலர் கண்மூடித்தனமாக சுட்டதில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 8 பேர் காயமடைந்தனர். வருடந்தோறும் நடைபெறும் கோமோஃபெஸ்ட் கொண்டாட்டங்கள் முடிந்த 2 மணி நேரத்திற்குப் பிறகு கோமோ பகுதியின் ஃபோர்ட்வொர்த் சுற்றுவட்டாரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

    புளோரிடா மாநிலத்தில், தம்பா விரிகுடா பகுதியை கடக்கும் ஒரு தரைப்பாதையில், ஜூலை 4 கொண்டாட்டத்திற்காக கூடியிருந்த இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் போது துப்பாக்கிச் சூட்டில் ஒரு நபர் காயமடைந்தார். மேலும் ஒரு 7-வயது குழந்தை கொல்லப்பட்டது.

    அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடுகளும், உயிரிழப்புகளும் அமெரிக்க மக்களை பெரிதும் கவலை கொள்ள செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த சிறுவனுக்கு முதலுதவி செய்தனர்.
    • சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தில் உள்ள ஒரு வால்மார்ட் கடைக்கு வெளியே, 14 வயது சிறுவன் தனது தம்பியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து சோக்டாவ் காவல்துறை தலைவர், கெல்லி மார்ஷல் கூறுகையில், "இரண்டு சிறுவர்களும் காருக்குள் அமர்ந்திருக்கின்றனர். அவர்களின் தாய் கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன், காருக்குள் துப்பாக்கி இருப்பதை கண்டிருக்கிறான். அதனை எடுத்து விளையாட்டாக அழுத்தும்போது, தற்செயலாக அவனது தம்பியை சுட்டு விட்டான். அந்த சத்தம் அந்த வழியாக சென்றவர்களுக்கு கேட்டதையடுத்து அவசர உதவி எண் 911ஐ அழைத்தனர்" என தெரிவித்தார்.

    இரண்டு சிறுவர்களும் ஓக்லஹோமா நகர காவல்துறை அதிகாரி ஒருவரின் மகன்கள் என்றும் இதில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி அவருடையது என்றும் ஆனால் சம்பவம் நடந்த போது அவர் சம்பவ இடத்திலேயே இல்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த சிறுவனுக்கு முதலுதவி செய்தனர். உடலில் தோட்டா பாய்ந்த பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறுவதை நிறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டனர். சுடப்பட்ட அந்தச் சிறுவன் சுயநினைவோடு இருந்திருக்கிறான்.

    அவசரகால மருத்துவ பணியாளர்கள் அவனை ஆம்புலன்ஸ் மூலம் ஓக்லஹோமா பல்கலைக்கழக சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்றனர். சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவன் விரைவில் அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படுவான் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    சில மாதங்களுக்கு முன் விடுமுறை தின வியாபாரம் மும்முரமாக நடைபெற்றபோது, வால்மார்ட் ஊழியர் ஒருவர், துப்பாக்கியால் 6 பேரை சுட்டுக் கொன்று, தன்னையும் சுட்டுக் கொண்டு பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார்.
    • அதிபயங்கர ஆயுதங்கள், துப்பாக்கிகள், தோட்டாக்களைத் தடை செய்வதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், துப்பாக்கியை தவறாக பயன்படுத்துவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அவ்வகையில், சமீபத்தில் துப்பாக்கிச் சூடு நடந்த லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகர்ப் பகுதிக்கு சென்ற போது, துப்பாக்கி வாங்குவோரின் பின்னணி குறித்த விசாரணைகள் மற்றும் சோதனைகளை விரைவுபடுத்தும் புதிய நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.

    அத்துடன், துப்பாக்கி சூடு நடந்த மான்டேரி பார்க் சென்று, இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அதிபயங்கர ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள், தோட்டாக்களைத் தடை செய்வதில் தான் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.

    பைடன் அறிவித்துள்ள புதிய நடவடிக்கைகளின் மூலம், இனி பலகட்ட விசாரணைகளுக்குப் பிறகே துப்பாக்கிகள் விநியோகிக்கப்படும். துப்பாக்கியை ஒருவர் வாங்கும் முன்பு, அவர் குற்றவாளியா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை செய்பவரா என்பதை பார்த்த உடன் கண்டுபிடித்து விடலாம் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான தடை சட்டத்திற்கு பைடன் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையிலும், பாராளுமன்றத்தில் குடியரசுக் கட்சியினரின் ஆதரவில்லாததால் சட்டம் இயற்றுவதில் சிக்கல் உள்ளது. 

    ×