search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா துப்பாக்கி சூடு"

    • வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் மேலும் ஒரு பெண்ணை சுட்டுக் கொன்றார்.
    • தகவலறிந்ததும் போலீசார், தப்பி ஓடிய வாலிபரை பிடிக்க நடவடிக்கையில் இறங்கினர்.

    அமெரிக்காவின் வடக்கு பிலடெல்பியா புறநகர் பகுதியான லெவிட்டவுனில் உள்ள ஒரு வீட்டுக்கு முன் துப்பாக்கியுடன் புகுந்த வாலிபர், அங்கிருந்த 55 வயது பெண் மற்றும் 13 வயது சிறுமி ஆகிய 2 பேரை சுட்டுக்கொன்றார்.பின்னர் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் மேலும் ஒரு பெண்ணை சுட்டுக் கொன்றார்.

    இது குறித்து தகவலறிந்ததும் போலீசார், தப்பி ஓடிய வாலிபரை பிடிக்க நடவடிக்கையில் இறங்கினர். இதில் நியூ ஜெர்சி நகரில் பதுங்கியிருந்த அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் ஆண்ட்ரே கார்டன் (வயது 26) என்பதும் அவர் தனது வளர்ப்புத்தாய் மற்றும் சகோதரியை சுட்டுக் கொன்றதும் தெரிய வந்தது.

    டிராண்டன் பகுதியில் கார் ஒன்றை திருடிய ஆண்ட்ரே கார்டன், அதில் லெவிட்டவுன் பகுதிக்கு சென்று தனது உறவினர்களை சுட்டுக் கொன்றுள்ளார். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • சொகுசுக்கார் ஒன்றில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிகிறது.
    • வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று காவல்துறை அதிகாரி கூறி உள்ளார்.

    அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், ஜூலை 4ம் தேதி, சுதந்திர தின கொண்டாட்டத்ததின் போது நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில், அதில் பங்கேற்றவர்களில் 2 சிறுவர்கள் உள்பட 9 பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    இது குறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பது:

    வெள்ளை மாளிகைக்கு கிழக்கே, 20 நிமிட பயணத்தில் அடையக்கூடிய ஒரு பகுதியில், அதிகாலை 01:00 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 10-வயது மற்றும் 17-வயதுடைய இருவர் இருந்தனர். அனைவரும் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்திற்காக யாரும் கைது செய்யப்படவில்லை. இது குறித்த விசாரணைக்கு பொதுமக்களும் உதவ வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால், வாகனத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களா என்பதும் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களோ, வேறு எந்த விவரமோ காவல்துறை தெரிவிக்கவில்லை. டீன்வுட் அருகே சொகுசுக்கார் ஒன்றில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிகிறது.

    "இது போன்ற வன்முறை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது", என்று பெருநகர காவல்துறை உதவித்தலைவர் லெஸ்லி பார்சன்ஸ், தெரிவித்தார்.

    "நம் மக்களிடம் ஏராளமாக துப்பாக்கிகள் இருக்கின்றன. அதே போல பல வன்முறையாளர்கள் தெருக்களில் உள்ளனர்" என வாஷிங்டன் மேயர் முரியல் பவுசர் தெரிவித்தார்.

    இதேபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை பால்டிமோர் பகுதியில் நடந்த ஒரு விருந்தில் மர்ம நபர் ஒருவர் 30 பேர் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 2 பேர் உயிரிழந்தனர்.

    திங்கட்கிழமை இரவு, பிலடெல்பியாவின் தெருக்களில் குண்டு துளைக்காத மேலாடை அணிந்த ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதில் 2 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர். சம்பவத்திற்கு பிறகு, குற்றவாளி காவல்துறையிடம் சரணடைந்தார்.

    திங்கட்கிழமை பின்னிரவு, டெக்சாஸ் சுற்றுப்புற பகுதியில் நடைபெற்ற ஒரு கொண்டாட்டத்தின் போது அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டத்தின் மீது பலர் கண்மூடித்தனமாக சுட்டதில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 8 பேர் காயமடைந்தனர். வருடந்தோறும் நடைபெறும் கோமோஃபெஸ்ட் கொண்டாட்டங்கள் முடிந்த 2 மணி நேரத்திற்குப் பிறகு கோமோ பகுதியின் ஃபோர்ட்வொர்த் சுற்றுவட்டாரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

    புளோரிடா மாநிலத்தில், தம்பா விரிகுடா பகுதியை கடக்கும் ஒரு தரைப்பாதையில், ஜூலை 4 கொண்டாட்டத்திற்காக கூடியிருந்த இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் போது துப்பாக்கிச் சூட்டில் ஒரு நபர் காயமடைந்தார். மேலும் ஒரு 7-வயது குழந்தை கொல்லப்பட்டது.

    அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடுகளும், உயிரிழப்புகளும் அமெரிக்க மக்களை பெரிதும் கவலை கொள்ள செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த சிறுவனுக்கு முதலுதவி செய்தனர்.
    • சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தில் உள்ள ஒரு வால்மார்ட் கடைக்கு வெளியே, 14 வயது சிறுவன் தனது தம்பியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து சோக்டாவ் காவல்துறை தலைவர், கெல்லி மார்ஷல் கூறுகையில், "இரண்டு சிறுவர்களும் காருக்குள் அமர்ந்திருக்கின்றனர். அவர்களின் தாய் கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன், காருக்குள் துப்பாக்கி இருப்பதை கண்டிருக்கிறான். அதனை எடுத்து விளையாட்டாக அழுத்தும்போது, தற்செயலாக அவனது தம்பியை சுட்டு விட்டான். அந்த சத்தம் அந்த வழியாக சென்றவர்களுக்கு கேட்டதையடுத்து அவசர உதவி எண் 911ஐ அழைத்தனர்" என தெரிவித்தார்.

    இரண்டு சிறுவர்களும் ஓக்லஹோமா நகர காவல்துறை அதிகாரி ஒருவரின் மகன்கள் என்றும் இதில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி அவருடையது என்றும் ஆனால் சம்பவம் நடந்த போது அவர் சம்பவ இடத்திலேயே இல்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த சிறுவனுக்கு முதலுதவி செய்தனர். உடலில் தோட்டா பாய்ந்த பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறுவதை நிறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டனர். சுடப்பட்ட அந்தச் சிறுவன் சுயநினைவோடு இருந்திருக்கிறான்.

    அவசரகால மருத்துவ பணியாளர்கள் அவனை ஆம்புலன்ஸ் மூலம் ஓக்லஹோமா பல்கலைக்கழக சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்றனர். சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவன் விரைவில் அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படுவான் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    சில மாதங்களுக்கு முன் விடுமுறை தின வியாபாரம் மும்முரமாக நடைபெற்றபோது, வால்மார்ட் ஊழியர் ஒருவர், துப்பாக்கியால் 6 பேரை சுட்டுக் கொன்று, தன்னையும் சுட்டுக் கொண்டு பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொதுமக்களுக்கு மேலும் அச்சுறுத்தல் இல்லை என அன்னாபோலிஸ் போலீசார் தெரிவித்தனர்.
    • சந்தேகத்திற்குரிய ஒரு நபர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

    அன்னாபோலிஸ்:

    அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்திலுள்ள, அன்னபோலிஸ் பிராந்தியத்தில் உள்ள ஒரு இல்லத்தில் நேற்று துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில், குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர் என்றும் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்து.

    அமெரிக்காவின் பிரபலமான மற்றும் முக்கியமான கேபிட்டல் ஹில் பகுதியிலிருந்து அன்னாபோலிஸ் 30 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

    அன்னபோலிஸ் காவல்துறைத் தலைவர் எட் ஜாக்சன் கூறுகையில், மாநிலத்தின் தலைநகரான பேடிங்டன் பிளேஸ் பகுதியின் 1000வது பிளாக்கில், துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும், இது தொடர்பாக ஒரு நபர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

    குறைந்தபட்சம் ஒருவர் இறந்ததாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில், குறைந்தது மூன்று பேர் இறந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை குறித்து தற்பொழுது எதுவும் தெரியவில்லை என்றும், பலத்த காயமடைந்த ஒருவர் தலைக்காய சிகிச்சை மையத்திற்கு விரைந்து எடுத்துச் செல்லப்பட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

    இருப்பினும் அன்னாபோலிஸ் போலீசார் கூறும்போது, 'பொதுமக்களுக்கு மேலும் அச்சுறுத்தல் இல்லை' என சம்பவ இடத்திலும், இணையத்தின் வாயிலாகவும் தெரிவித்தனர்.

    துப்பாக்கிச் சூடு நடந்த பகுதியில் பல போலீஸ் கார்கள் தென்பட்டன. இந்த இடம் நகரின் மையத்திற்கு தெற்கே, நீர்நிலைக்கு அருகே உள்ளது.

    'சமூகத்திற்கு எனது செய்தி இதுதான். இது ஒரு தற்செயலான வன்முறைச் செயல் அல்ல' என காவல்துறை தலைமை அதிகாரி ஜாக்சன், சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

    மேலும், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகத்திற்குரிய ஒரு நபர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், சம்பவ இடத்தில் இருந்து ஒரு ஆயுதம் கைப்பற்றப்பட்டதாகவும், காவல்துறை தலைவர் கூறியிருக்கிறார்.

    துப்பாக்கிச் சூடு குறித்து முகநூலில் கருத்து பதிவேற்றம் செய்திருக்கும் மாநில செனட்டர் சாரா எல்ஃப்ரெத், இந்த சம்பவத்தை "வார்த்தைகளால் விவரிக்க முடியாத சோகம்" என குறிப்பிட்டுள்ளார்.

    இச்சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் ஒரு பட்டமளிப்பு விழா நடந்ததாகவும், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இதனுடன் தொடர்புடையதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அப்பகுதி மக்கள் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கின்றனர்.

    • அமெரிக்காவில் நியூமெக்சிகோவின் பார்மிங்டனில் உள்ள குடியிருப்பு பகுதியில் 18 வயது நபர் துப்பாக்கி சூடு நடத்தினார்.
    • துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.

    அமெரிக்காவில் நியூமெக்சிகோவின் பார்மிங்டனில் உள்ள குடியிருப்பு பகுதியில் 18 வயது நபர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 3 பேர் சம்பவ இடத்திேலயே உயிரிழந்தனர். 2 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர். அவர் யார்? என்ற தகவலை போலீசார் வெளியிடவில்லை. துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.

    • அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்தபடி இருக்கிறது.
    • பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உள்பட 21 பேர் பலியான சம்பவம் அந்நாட்டை உலுக்கியது.

    டெக்சாஸ்:

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரத்தின் புறநகரமான ஆலனில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏராளமானோர் கூடி இருந்தனர். அப்போது வணிக வளாகத்துக்குள் துப்பாக்கியுடன் மர்ம நபர் புகுந்தார். அங்கு திரண்டிருந்த பொதுமக்களை நோக்கி சுட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறியடித்தப்படி சிதறி ஓடினார்கள். பலர் அங்குள்ள கடைகளுக்குள் புகுந்து பதுங்கி கொண்டனர். மேலும் வணிக வளாகத்தில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.

    துப்பாக்கி சூட்டில் பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் வணிக வளாகத்தை சுற்றி வளைத்தனர். பின்னர் அந்த கட்டிடத்துக்குள் நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

    இதில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

    மர்ம நபரின் துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் உள்பட 9 பேர் பலியானார்கள். 7 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வணிக வளாகத்துக்குள் சிக்கியிருந்த பொது மக்களை மீட்டு ஒவ்வொருவராக வெளியே அழைத்து வந்தனர்.

    வணிக வளாகத்துக்குள் வேறு யாராவது துப்பாக்கியுடன் உள்ளனர்களா? என்று தீவிரமாக சோதனை நடத்தினர். அதன்பின் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையே மர்ம நபர் வாகனத்தில் இருந்து துப்பாக்கியுடன் இறங்கி வணிக வளாகத்துக்குள் செல்லும் வீடியோ காட்சி பரவி வருகிறது.

    துப்பாக்கி சூடு நடத்திய நபர்? எதற்காக தாக்குதல் நடத்தினார்? போன்ற விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. அதேபோல் பலியானவர்களின் விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை.

    அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்தபடி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு தொடக்க பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உள்பட 21 பேர் பலியான சம்பவம் அந்நாட்டை உலுக்கியது.

    இதையடுத்து துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. டெக்சாஸ் மாகாணத்தில் எந்த பயிற்சியும், உரிமமும் இன்றி யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்துக் கொள்ள சட்டம் அனுமதி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மருத்துவ கட்டிடத்தில் புகுந்த மர்ம மனிதன் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டான்.
    • புகைப்படத்தை வைத்து அவனை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

    அட்லாண்டா:

    அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிர் இழந்தார்.

    அங்குள்ள அட்லாண்டா மேற்கு பீச்ட்ரீ ரோட்டில் ஏராளமான உயரமான கட்டிடங்கள் உள்ளது. சிறந்த வியாபார தலமாகவும் இப்பகுதி விளங்குகிறது.

    இந்த பகுதியில் உள்ள ஒரு மருத்துவ கட்டிடத்தில் புகுந்த மர்ம மனிதன் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டான். இந்த துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே ஒருவர் இறந்தார். 4 பேர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதன் யார்? என்பது தெரியவில்லை. சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டது 24 வயது வாலிபர் என தெரியவந்தது. அவன் முகத்தை கறுப்பு துணியால் மறைத்து இருந்தான். அவனது புகைப் படத்தை போலீசார் வெளியிட்டு உள்ளனர். அந்த புகைப்படத்தை வைத்து அவனை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

    • உணவகத்தின் அருகில் சந்தேகத்திற்குரிய பை ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.
    • இது போன்ற சம்பவத்தால் நாடு பாதிப்படைந்துள்ளதாக காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

    கிரீன்வுட்:

    அமெரிக்காவின் இண்டியானா மாநிலம், கிரின்வுட் நகரில் 'கிரீன்வுட் பார்க் மால்' என்ற வணிக வளாகம் உள்ளது. நேற்று மாலை இங்கிருக்கும் உணவகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் ஒருவர், அங்கிருந்தவர்களை சுடத்தொடங்கினார். இதனால் அனைவரும் சிதறி ஓடினர். இந்த திடீர் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். அப்போது அங்கிருந்த ஒருவர் தன் கையிலிருந்த துப்பாக்கியால், துப்பாக்கி சூடு நடத்திய நபரைச் சுட்டுக் கொன்றுள்ளார்.

    இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஜிம் ஐசன் கூறியதாவது:

    துப்பாக்கி மற்றும் பலவிதமான வெடிமருந்துகளுடன் வணிக வளாகத்தில் உள்ள உணவகத்தில் நுழைந்த நபர், துப்பாக்கியால் சுடத்தொடங்கினார். அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் ஆயுதமேந்திய நபரைத் தன்னிடம் இருந்த துப்பாக்கியினைக் கொண்டு சுட்டுக்கொன்றார். இந்த சம்பவத்தில் ஆயுதமேந்திய நபர் உட்பட 4 பேர் பலியாயினர். இருவர் படுகாயமடைந்தனர்.

    சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் மாலை 6 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்றனர். உணவகத்தின் அருகிலுள்ள பாத்ரூம் அருகில் சந்தேகத்திற்குரிய பை ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர். இண்டியானா போலீஸ் மற்றும் பல விசாரணை அமைப்பினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது போன்ற சம்பவத்தால் நாடு பாதிப்படைந்துள்ளது என இண்டியானாபோலிஸ் காவல்துறை துணை அதிகாரி க்ரிஸ் பேய்லி கூறியுள்ளார்.

    பாதிப்படைந்தவர்களுக்காக வருந்துவதாகவும், அவர்களுக்காக பிரார்தனை செய்வதாகவும் கிரீன்வுட் நகரின் மேயர் மார்க் மையர்ஸ் தெரிவித்தார். இந்த கோரச் சம்பவம் நம் சமூகத்தை பயங்கரமாக தாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    ×