search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீயணைப்பு வீரர்"

    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறு கட்டி தண்ணீரில் சிக்கியவர்களை மீட்டனர்.
    • மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் யார்? என விசாரணை நடந்து வருகிறது.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே இளந்தோப்பு பகுதியில் உள்ள ஒரு தோப்பில் மது விருந்து நடந்துள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக செண்பகதோப்பு ஓடையை கடந்து 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் மது விருந்து முடிந்து நள்ளிரவில் ஒரே மோட்டார் சைக்கிளில் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

    இதற்கிடையே மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக செண்பகத்தோப்பு ஓடையில் அதிக அளவு தண்ணீர் வர தொடங்கியது.

    மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்றால் ஓடையை கடந்து விடலாம் என எண்ணி ஓடைக்குள் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தி உள்ளனர்.

    ஆனால் அதிக நீர்வரத்து காரணமாகவும், போதையில் இருந்ததாலும் நிலை தடுமாறி தண்ணீரில் விழுந்து சிக்கிக் கொண்டனர். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் சுதாரித்துக் கொண்டு நீந்தி கரையேறினார். மற்ற இருவரும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

    நள்ளிரவு நேரம் என்பதால் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனால் தனி நபராக அவர் நண்பர்களை மீட்க முயன்றார். ஆனால் இயலவில்லை. பின்னர் அவர் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. பல மணி நேரம் அவர்கள் தண்ணீரிலேயே அங்கிருந்த கோரைப் புல்லை பிடித்து கொண்டு தண்ணீரில் தத்தளித்தனர்.

    அதிகாலையில் அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ராஜபாளையம் தீயணைப்பு நிலை அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறு கட்டி தண்ணீரில் சிக்கியவர்களை மீட்டனர்.

    விசாரணையில் தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டவர்கள் ராஜபாளையம் குப்புசாமி ராஜா தெருவை சேர்ந்த வெங்கட்குமார் (வயது 25), பி.எஸ்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த சங்கர் (31) என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இரவு மது விருந்து நடந்ததா? நடத்தியவர்கள் யார்? அதில் கலந்து கொண்டவர்கள் யார்-யார்?, ஓடையில் சிக்கிய வாலிபர்கள் மது குடித்து விட்டு வந்தவர்களா?, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் யார்? என விசாரணை நடந்து வருகிறது.

    • குழந்தைகள் செய்யும் குறும்புகளால் பெண்கள் அவதிக்கு ஆளாவதை அடிக்கடி பார்க்கலாம்.
    • வீட்டின் சமையலறையில் இருந்த இட்லி தட்டை எடுத்து தட்டியபடி விரலை அதன் ஓட்டைக்குள் நுழைப்பதும், எடுப்பதுமாக இருந்தது.

    கன்னியாகுமரி:

    வீடுகளில் சிறு குழந்தைகளின் சேட்டைக்கு அளவே இருக்காது. இப்போது கோடை விடுமுறை விடப்பட்டதால் வீடுகளில் குழந்தைகள் செய்யும் குறும்புகளால் பெண்கள் அவதிக்கு ஆளாவதை அடிக்கடி பார்க்கலாம்.

    அந்த வகையில் கன்னியாகுமரி லூர்து மாதா தெருவில் குடியிருக்கும் ஆரோக்கிய செல்வி என்பவரின் 4 வயது குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருந்தது. அப்போது வீட்டின் சமையலறையில் இருந்த இட்லி தட்டை எடுத்து தட்டியபடி விரலை அதன் ஓட்டைக்குள் நுழைப்பதும், எடுப்பதுமாக இருந்தது.

    ஒரு கட்டத்தில் குழந்தையின் விரல் இட்லி தட்டின் ஓட்டைக்குள் சிக்கி கொண்டது. அதனை வெளியே எடுக்க முடியாமல் குழந்தை அழுதது. சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர், குழந்தையின் விரலை இட்லி தட்டில் இருந்து வெளியே எடுக்க முயன்றனர். அவர்களால் முடியாமல் போனதை தொடர்ந்து கன்னியாகுமரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் விரைந்து சென்று கட்டிங் எந்திரம் மூலம் இட்லி தட்டை துண்டு, துண்டாக வெட்டி குழந்தையின் விரலை மீட்டனர். கொஞ்ச நேரத்தில் ஏற்பட்ட களேபரத்தால் அந்த பகுதியே பரபரப்பாகி போனது. இனி இந்த விடுமுறை முடியும் முன்பு இதுபோன்ற எத்தனை குறும்புகளை இந்த குழந்தைகள் செய்யப்போகிறார்களோ என்று பெண்கள் இப்போதே தவிப்பில் உள்ளனர்.

    • 24 மணி நேரத்திற்கு பின்னர் மறுநாள் அவர் திக்குறிச்சி பகுதியில் ஆற்றிலிருந்து தீ அணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்களால் உயிருடன் மீட்கப்பட்டார்.
    • நாகர்கோவிலில் மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் வைத்து விருது வழங்கும் விழா நடந்தது.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே பாரதப் பள்ளியைச் சேர்ந்தவர் புஷ்பபாய் (வயது 60) இவர் கடந்த 10 -ந்தேதி இப்பகுதி வழியாகப் பாயும் கோதையாற்றில் குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் அடித்துச் செல் லப்பட்டார்.

    இந்நிலையில் 24 மணி நேரத்திற்கு பின்னர் மறுநாள் அவர் திக்குறிச்சி பகுதியில் ஆற்றிலிருந்து தீ அணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்களால் உயிருடன் மீட்கப்பட்டார்.

    இதை யடுத்து மீட்புப் பணியில் ஈடுபட்ட குலசேகரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் (போக்கு வரத்து) செல்வ முருகேசன், தீ அணைப்பாளர்கள் ஜெக தீஸ், கோட்டை மணி, நிஜல்சன், மாரி செல்வம், கபில் சிங், பைஜூ மற்றும் படகு ஓட்டுனர் சுஜின் ஆகியோருக்கு நாகர்கோவிலில் மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் வைத்து விருது வழங்கும் விழா நடந்தது.

    நிகழ்ச்சியில் தீ அணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தென் மண்டல துணை இயக்குனர் நா. விஜயகுமார் அங்கீகார விருது வழங்கி கவுரவித்தார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகுமார், மாவட்ட உதவி தீ அணைப்பு அலுவலர் இம்மானுவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

    • தீயணைப்பு வீரருக்கு பொதுமக்கள் பாராட்டினர்
    • சிலிண்டரில் பிடித்த தீயை சாதுர்யமாக அணைத்தார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி டேவிதார்சாலை முக்கத்தில் செல்வமணி என்பவர் டீ கடை நடத்தி வருகின்றார். இவர் நேற்று கடையில் வடை போடுவதற்காக அடுப்பை பற்றவைத்துள்ளார். அப்போது திடீரென நெருப்பு பிடித்து சிலிண்டர் எரியத்தொடங்கியுள்ளது.இந்நிலையில் சிலின்டர் எரிகிறது என்றதும் அருகில் இருந்தவர்கள் ஆங்காங்கே சிதறி ஓடியுள்ளனர்.அப்போது அந்த வழியாக சென்றுகொண்டிருந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகர், விரைந்து வந்து சாக்கை நனைத்து சிலின்டர் மீது மூடி சிலிண்டரை லாவகமாக வெளியே இழுத்துவந்து அருகில் இருந்த சாக்கடையில் மூழ்கடித்தார். இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்து விபத்தை தடுத்த புதுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரை அனைவரும் பாராட்டினர்.

    • ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீயணைப்பு வீரர் படுகாயம் அடைந்தார்
    • குண்டு வெடித்தது போன்ற சத்தத்தால் கோர்ட்டில் பரபரப்பு

    திருச்சி

    திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகாமையில் திருச்சி மத்திய மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு படை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு தீயணைப்பு படை வீரர்கள் அவசர தேவைக்கு பயன்படுத்தக்கூடிய ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் வசதி உள்ளது. இந்த மண்டலத்துக்கு உட்பட்ட தீயணைப்பு நிலையங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் தீர்ந்து விட்டால் காலி சிலிண்டர்களை கொண்டு வந்து இங்கு நிரப்பிச் செல்வார்கள்.

    வழக்கம்போல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி அளவில் நிலைய அலுவலர் சரவணன் முன்னிலையில் திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த அன்பில் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 27) என்ற தீயணைப்பு படை வீரர் காலி சிலிண்டர்களில் ஆக்ஸிஜன் நிரப்பும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக கூடுதல் அழுத்தத்தால் அந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த தீயணைப்பு வீரரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சக தீயணைப்பு படை வீரர்கள் அவரை மீட்டு அருகாமையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சிலிண்டர் வெடிப்பு சத்தம் அருகாமையில் உள்ள கோர்ட்டு மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என கருதி ஓட்டம் பிடித்தனர்.

    விபத்து தொடர்பாக செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்பு மண்டல அலுவலகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கன்றுக்குட்டி கிணற்றுக்குள் அங்கும் இங்கும் கத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது.
    • கன்றுக்குட்டியை பத்திரமாக உயிருடன் மீட்டு கயிற்றின் மூலம் கட்டி மேலே கொண்டு வந்தனர்.

    காங்கயம் :

    காங்கயத்தை அடுத்த வட்டமலை அருகே சேடன்புதூர் பகுதியில் உள்ள செட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 68) விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் தண்ணீர் இல்லாத 80 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. அதில் தோட்டத்தில் சுற்றித்திரிந்த பிறந்து 3 மாதங்களே ஆன கன்றுக்குட்டி ஒன்று தவறி விழுந்தது.

    பின்னர் மேலே வரமுடியாமல் கன்றுக்குட்டி கிணற்றுக்குள் அங்கும் இங்கும் கத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. இந்த சத்தத்தை கேட்ட பெரியசாமி அங்கு சென்று கிணற்றை எட்டிப்பார்த்த போது கிணற்றுக்குள் கன்றுக்குட்டி விழுந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து காங்கயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் காங்கயம் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திக்கு வந்து பார்வையிட்டு கன்றுக்குட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி கன்றுக்குட்டியை பத்திரமாக உயிருடன் மீட்டு கயிற்றின் மூலம் கட்டி மேலே கொண்டு வந்தனர். பின்னர் கன்றுக்குட்டி அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ×