search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக காவல்துறை"

    • தமிழக காவல்துறை அனைவருக்கும் பொதுவானது.
    • தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பா.ம.க.வின் இரு சக்கர ஊர்தி பேரணிக்கு தமிழக காவல்துறை உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க.வின் இளைஞரணி மாநாட்டையொட்டி, அக்கட்சியின் இளைஞரணி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,647 கி.மீ நீளத்திற்கு இரு சக்கர ஊர்தி பேரணி கன்னியாகுமரியில் இருந்து இன்று தொடங்கப்பட்டுள்ளது.

    வரும் 27-ந்தேதி வரை மொத்தம் 13 நாட்கள் நடைபெறும் இந்த பேரணியில் 188 இருசக்கர ஊர்திகள் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓர் அரசியல் கட்சியின் கொள்கையை விளக்குவதற்காக இத்தகைய பேரணிகள் நடத்தப்படுவது இயல்பானது; தேவையானது. ஆனால், இத்தகைய பேரணிகளுக்கு அனுமதி வழங்குவதில் தமிழக காவல்துறை இரட்டை நிலைப்பாட்டை மேற்கொள்வது ஏன்? என்பது தான் எனது வினா.

    தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உன்னத கொள்கையை வலியுறுத்தி, கடந்த அக்டோபர் 5-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் இருசக்கர ஊர்தி பேரணிகளை நடத்தும்படி பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு அழைப்பு விடுத்து இருந்தேன். பேரணியில் அதிக அளவாக 50 ஊர்திகள் மட்டுமே பங்கேற்க வேண்டும்; பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் இருசக்கர ஊர்தி பேரணி நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டிருந்தேன்.

    ஆனால், இல்லாத காரணங்களைக் கூறி, பா.ம.க.வின் இரு சக்கர ஊர்தி பேரணிக்கு அனுமதி மறுத்திருந்த தமிழக காவல்துறை, இப்போது தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இரு சக்கர ஊர்தி பேரணி நடத்த அனுமதி அளித்திருக்கிறது. இது எந்த வகையில் நியாயம்?

    மதுவிலக்கு பரப்புரைக்கான பேரணிக்கு அனுமதி மறுத்துவிட்ட காவல்துறை, இப்போது கட்சி மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பேரணிக்கு அனுமதி வழங்கியிருப்பது எந்த வகையில் நியாயம். தி.மு.க.வுக்கு ஒரு நீதி... பா.ம.க.வுக்கு ஒரு நீதியா?

    தமிழக காவல்துறை அனைவருக்கும் பொதுவானது. அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஒரே மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும். ஆளுங்கட்சியின் கைப்பாவையாக நடந்து கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பா.ம.க.வின் இரு சக்கர ஊர்தி பேரணிக்கு தமிழக காவல்துறை உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மது விலக்கு குறித்து பேரணி நடத்த பா.ம.க. மனு அளித்தது
    • மராத்தான் ஓட்டத்திற்கு அனுமதி வழங்குவதை நீதிபதி குறிப்பிட்டார்

    பாட்டாளி மக்கள் கட்சி, தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு கோரி பல வருடங்களாக தமிழ்நாட்டின் ஆளும் கட்சிகளுக்கு கோரிக்கை வைத்து வருகிறது. அக்கட்சியின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக பூரண மதுவிலக்கை நீண்ட காலமாக பிரச்சாரம் செய்து வருகிறது.

    தங்களின் கோரிக்கையை மக்களிடம் பிரச்சாரம் செய்ய அக்டோபர் 5-ஆம் தேதி ஒரு மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்த ராணிப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் பா.ம.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

    அனுமதி மறுக்கப்பட்டதால் பா.ம.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    பேரணி செல்லும் பாதையில் பிற மதத்தினர் உள்ளனர் என கூறி அனுமதி மறுக்கப்பட்டதாகவும், பா.ம.க. மதம் சார்ந்த கட்சி அல்ல என்றும் பா.ம.க. வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இதை கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் அரசு தரப்பு வக்கீலிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பினார்.

    அவர் விசாரணையின் போது கேட்டதாவது:

    ஆளும் கட்சியினர் மராத்தான் ஓடவும், நடப்பதற்கும் அனுமதி வழங்குகிறீர்கள்; மதுவுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கினால் என்ன? யாருக்காக காவல்துறை உள்ளது? தமிழ்நாட்டில் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் சோதனைகளை நடத்தினால் அவை மத்திய அரசின் ஏஜென்சிகள் என குற்றம் சாட்டுகிறீர்கள். அப்படி என்றால் தமிழ்நாடு காவல்துறை யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறது? ஆளும் கட்சிக்கு ஆதரவாகத்தான் காவல்துறை செயல்படுமா?

    இவ்வாறு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    விவாதங்களுக்கு பிறகு வழக்கை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    • சரியாக முன் திட்டமிடாத காரணத்தினால், கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • முதலமைச்சரின் வாகன அணிவகுப்பும், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக உளவுத்துறை கடந்த 28 மாத தி.மு.க. ஆட்சியில், முற்றிலும் செயலிழந்துவிட்டதால், குற்றங்கள் பெருகி மக்களை குலைநடுங்க வைத்துள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சியில், அண்டை நாடான இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ உள்ளதை முன்னதாகவே கண்டறிந்து, மத்திய அரசு மூலம் இலங்கைக்கு அறிவுரை வழங்கிய தமிழக நுண்ணறிவுப் பிரிவு, தி.மு.க. ஆட்சியில் கோவை கார் குண்டு வெடிப்பு, கள்ளக்குறிச்சி பள்ளி சம்பவம், இந்த ஆண்டு மதுரையில் நடைபெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வில் உயிர்பலி, சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தில் கள்ளச்சாராய சாவு, துப்பாக்கி கலாசாரம், தினசரி கொலைகள் என்று, திமுக அரசின் காவல்துறை சறுக்கிய நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

    தி.மு.க. ஆட்சியில், தமிழகத்தில் போதைப் பொருட்களின் பிடியில் இளைஞர்களும், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என, பல்வேறு குற்றங்கள் தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகின்றன. 1.9.2023 முதல் 12.9.2023 வரை மட்டும் தமிழகத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

    நேற்று (12-ந்தேதி) கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ரஞ்சித் என்பவர் ஆஜராகிவிட்டு, தனது நண்பர்கள் நித்திஷ், கார்த்திக் ஆகியோருடன் வீடு திரும்பிச் செல்லும் போது, எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டப்பகலில் பயங்கர ஆயுதங்களுடன் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    உயிருக்குப் போராடிய மூவரும் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    20.8.2023 அன்று, கழக வீரவரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற்றதையொட்டி, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், இம்மாநாட்டிற்கு வரும் பல லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவும், பல்லாயிரக்கணக்கில் வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்தவும், சாலைகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம், தேவைப்படும் காவலர்களை பணியமர்த்திட வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது.

    ஆனால், தி.மு.க. அரசின் ஏவல்துறை, 20.8.2023 அன்று மதுரையில் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான கழகத் தொண்டர்கள் கலந்து கொண்ட வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்காமலும், போக்குவரத்து நெரிசலை சீர்செய்யாமலும் வேடிக்கை பார்த்தது.

    அதே போன்ற நிலைமை தான் இரு நாட்களுக்கு முன்பு, சென்னை பனையூர் பகுதியில் நடைபெற்ற ஆஸ்கார் பரிசு பெற்ற ஏ.ஆர். ரஹ்மானுடைய இசை நிகழ்ச்சியிலும் நடைபெற்றது. நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்த காவல்துறை, போக்குவரத்து நெரிசலை சீர்செய்தல் குறித்தும், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் குறித்தும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் பேசி, சரியாக முன் திட்டமிடாத காரணத்தினால், கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    முதலமைச்சரின் வாகன அணிவகுப்பும், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டது. இது, தி.மு.க. அரசின் காவல்துறையினுடைய தோல்வியைக் காட்டுகிறது.

    அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் காவல்துறைக்கு சுதந்திரம் வழங்கி, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தியது போல், இனியாவது தமிழகக் காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும், தமிழக மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்றும், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சென்னையில் ஏராளமான மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்றது.
    • ஏற்பாடுகளை தேர்வு வாரிய டி.ஜி.பி. சீமா அகர்வால், ஐ.ஜி.செந்தில் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    சென்னை:

    தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு படை வீரர்கள் ஆகிய பதவிகளுக்கு 3,552 காவலர் பணி இடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து 3½ லட்சத்துக்கு அதிகமானோர் விண்ணப்பித்தனர்.

    இவர்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. 295 மையங்களில் காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. மதியம் 12.40 மணி அளவில் தேர்வுகள் முடிவடைகிறது.

    தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தவர்களில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 887 பேர் இளைஞர்கள் ஆவர். 66 ஆயிரத்து 811 பேர் பெண்கள். 50 பேர் திருநங்கைகள் ஆவர்.

    சென்னையிலும் ஏராளமான மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தேர்வு வாரிய டி.ஜி.பி. சீமா அகர்வால், ஐ.ஜி.செந்தில் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டுகளும், மாநகர பகுதிகளில் காவல் ஆணையர்களும் தேர்வுக்கான ஏற்பாடுகளையும், பாதுகாப்பு பணிகளையும் மேற்கொண்டிருந்தனர்.

    • ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளிக்க பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி தமிழக அரசு மனு தாக்கல்.
    • மனுவில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளதால் சீராய்வு மனுவில் தமிழக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

    பாஜக மற்றும் இந்து அமைப்பு பிரமுகர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த நிலையில் சட்ட ஓழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு காவல் துறை அனுமதி மறுத்து வருகிறது.

    ஆர்எஸ்எஸ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகளின் பேரணிக்கு தமிழக காவல் துறை அனுமதி வழங்க மறுத்துள்ளது. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி அளித்திருந்த நிலையில் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதற்கு எதிராக, ஆர்எஸ்எஸ் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

    இந்நிலையில், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளிக்க பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

    தமிழகத்தில் ஆர்எஸ்எஸ், விசிக பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில் உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளதால் சீராய்வு மனுவில் தமிழக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

    மேலும், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளித்த உத்தரவுக்கு தடைவிதிக்க கோரியும் காவல் துறை தரப்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    • ரவுடிகளை ஒழிக்க, அவர்களை ஏ, ஏ-பிளஸ், பி, பி-பிளஸ் என பல்வேறு பிரிவுகளாக பிரித்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

    சென்னை:

    2012-ம் ஆண்டு நிலவரப்படி தமிழகம் முழுவதும் 16,502 ரவுடிகள் இருந்தனர். தலைநகர் சென்னையில் மட்டும் 3,175 ரவுடிகள் இருந்தனர்.

    ரவுடிகளை ஒழிக்க, அவர்களை ஏ, ஏ-பிளஸ், பி, பி-பிளஸ் என பல்வேறு பிரிவுகளாக பிரித்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ரவுடிகள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், ஜாமீனில் வெளியே வந்த கொலைக் குற்றவாளிகளை கண்காணிக்க 'பருந்து' என்ற செயலியை தமிழக காவல்துறை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

    இது குறித்து, காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளின் தற்போதைய நிலையை அறியவும், அவர்களின் குற்றச் செயல்கள், பழிக்குப்பழி கொலைகள் மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்களின் நடத்தையைக் கண்காணித்து உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் 'பருந்து' செயலி உதவும்.

    மேலும், ரவுடிகள் மற்றும் கொலை குற்றவாளிகள் தலைமறைவாக இருந்தால், அவர்களுக்கு எதிரான பிடியாணைகளை நிறைவேற்றவும், நிலுவை வழக்குகளை கண்காணிக்கவும் பருந்து செயலி உதவும்.

    ரவுடிகளின் பெயர், இருப்பிடம், குற்ற வழக்குகள், அவர்களின் கூட்டாளிகள், குடும்ப பின்னணி, அவரது குடும்பத்தில் வேறு யாரேனும் ரவுடிகளாக உள்ளார்களா? எத்தனை முறை சிறை சென்றுள்ளார் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் புதிய செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா அலுவலகங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
    • சந்தேகத்தின் அடிப்படையில் 100க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே விரும்பத்தகாத வகையில் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கோவை, பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய இடங்களில் பா.ஜனதா, இந்து முன்னணி பிரமுகர்களின் கடைகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திலும் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா அலுவலகங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. தாக்குதல் தொடர்பாக அந்தந்த பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.


    இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களை தடுத்து நிறுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் போலீசார் உஷாராக இருக்க டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தினர். இரவு ரோந்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. சந்தேகத்தின் அடிப்படையில் 100க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 5 நாட்களில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும், கோவை, ஈரோடு, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 15 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேவைப்பட்டால் உயர் அதிகாரிகளுக்கு உதவியாளர், இருப்பிட உதவியாளர் பணியிடங்களை உருவாக்கலாம்
    • ஆர்டலிகள் பயன்படுத்தப்படுவதாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு

    சென்னை:

    காவல்துறையில் பணியாற்றும் யு.மாணிக்கவேல் என்பவர் காவலர் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், போலீஸ் உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் உள்ளவர்களை கட்டுப்படுத்த இயலாவிட்டால், நன்மதிப்பை இழக்கவும் நேரிடும் என கருத்து தெரிவித்ததுடன், உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை போன்ற விவகாரங்கள் குறித்தும் விசாரித்தார்.

    ஆர்டர்லிகளை வைத்திருக்கக் கூடாது என்கிற தமிழக உள்துறை செயலாளரின் உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதையடுத்து, ஆர்டர்லி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், ஆர்டர்லி முறையை காவல்துறையினர் தவறாக பயன்படுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

    பெரும்பாலான ஆர்டர்லிகளை திரும்ப பெற்றுள்ளதாகவும், மாற்று ஏற்பாடு செய்தவுடன் மீதமுள்ளவர்களும் திரும்பப்பெறப்படுவார்கள் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது.

    காவல்துறை பணி தவிர தனிப்பட்ட பணிகளுக்காக ஆர்டர்லியை பயன்படுத்த மாட்டோம் என அனைத்து ஐ பி எஸ் அதிகாரிகளும் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும், டிஜிபி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். மேலும், டிஜிபி எடுத்துவரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது என்றும், பாராட்டுக்குரியது என்றும் , ஆர்டர்லி முறையை ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் இன்று பிறப்பித்தார். அதில், அரசு உத்தரவாதம் அளித்தபடி ஆர்டர்லி முறையை 4 மாதத்திற்குள் ஒழிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    'தேவைப்பட்டால் உயர் அதிகாரிகளுக்கு உதவியாளர், இருப்பிட உதவியாளர் பணியிடங்களை உருவாக்க தமிழக அரசுக்கு டிஜிபி பரிந்துரைக்கலாம். எந்த பணிக்காக நியமிக்கப்பட்டார்களோ அந்த பணியை மட்டும் வழங்கி அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமையை நிலைநாட்டவேணடும். காவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக தங்கியிருப்போரை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 19 ஆர்டலிகள் திரும்ப பெறப்பட்டுள்ளனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    • முதல்வரின் எச்சரிக்கை மட்டும் போதாது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி கருத்து

    சென்னை:

    தமிழகத்தில் பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாகப் பணியாற்றும் போலீசாரை உடனே திரும்ப பெற வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். மேலும், ஆர்டலி தொடர்பாக ஏதாவது புகார் வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

    அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்டலி முறையை ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்துவருவதாகவும், 19 ஆர்டலிகள் திரும்ப பெறப்பட்டுள்ளனர் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, ஆர்டலி முறை ஒழிப்பு தொடர்பாக தமிழ்நாடு உள்துறை முதன்மை செயலாளர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பிய நீதிபதி, இது தொடர்பாக ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி டிஜிபிக்கு உத்தரவு பிறப்பித்தார்.

    ஆர்டலி விவகாரத்தில் முதல்வரின் எச்சரிக்கை மட்டும் போதாது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 75வது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில் ஆங்கிலேயே ஆர்டலி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது. ஆர்டலி ஒழிப்பு முறையை பின்பற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட நேரிடும், என்றும் நீதிபதி எச்சரித்தார்.

    • தமிழக காவல்துறையில் 12 அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • உளவுத்துறை புதிய ஐஜியாக செந்தில் வேலன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் காவல்துறையின் 12 அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உளவுத்துறை ஐஜியாக இருந்த ஆசியம்மாள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் அமலாக்கப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறை புதிய ஐஜியாக செந்தில் வேலன் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் கலவரத்துக்கு உளவுத்துறையின் தோல்வியும் ஒரு காரணம் என விமர்சனம் எழுந்த நிலையில், உளவுத்துறை ஐஜி மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் வள்ளியூர் சப்-டிவிஷன் ஏஎஸ்பி சமய் சிங் மீனா, மதுராந்தகம் சப்-டிவிஷன் ஏஎஸ்பி கிரண் ஸ்ருதி, பவானி சப்-டிவிஷன் ஏஎஸ்பி தீபக் சிவாச், கோட்டக்குப்பம் சப்-டிவிஷன் ஏஎஸ்பி ஹர்ஷ் சிங், திருத்தணி சப்-டிவிஷன் ஏஎஸ்பி சாய் பிரனீத் ஆகியோர் எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

    சென்னை பூக்கடை துணை கமிஷனர் மகேஷ்வரன் மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.யாகவும், சென்னை வடக்கு போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர் ஆல்பர்ட் ஜான், பூக்கடை துணை கமிஷனராகவும், ஆவடி டிஎஸ்பி-வி பட்டாலியன் எஸ்பி ராதாகிருஷ்ணன் சீருடைப் பணியாளர் தேர்வாணைய எஸ்.பி.யாகவும், சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் திருவல்லிக்கேணி துணை கமிஷனராகவும், எஸ்.பி. கண்ணன் சென்னை நவீனமயமாக்கல் பிரிவு உதவி ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பான அறிவிப்பை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி இன்று வெளியிட்டுள்ளார்.

    ×