search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனுஷ்கோடி ஆதித்தன்"

    • போராட்டத்தில் பங்கேற்ற கட்சியினர் அனைவரும் வாயில் கருப்பு துணி கட்டியிருந்தனர்.
    • ராகுல்காந்தியின் பதவி நீக்கம் என்பது ஜனநாயக படுகொலைக்கு நிகரானது.

    நெல்லை:

    அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை தகுதிநீக்கம் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    நெல்லையில் மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் தச்சநல்லூரில் உள்ள காந்தி சிலையிடம் மனு அளிக்கும் அறவழி மவுன போராட்டம் இன்று நடைபெற்றது.

    மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டார்.

    போராட்டத்தில் பங்கேற்ற கட்சியினர் அனைவரும் வாயில் கருப்பு துணி கட்டியிருந்தனர்.

    பின்னர் தனுஷ்கோடி ஆதித்தன், சங்கரபாண்டியன் ஆகியோர் காந்தி சிலையிடம் மனு அளித்தனர். இதில் பொதுச்செயலாளர் மகேந்திர பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் கவிபாண்டியன், சொக்க லிங்ககுமார், மண்டல தலைவர்கள் கெங்கராஜ், ராஜேந்திரன், பரணி இசக்கி மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    போராட்டம் குறித்து முன்னாள் மத்தியமந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கூறியதாவது:-

    ராகுல்காந்தி எம்.பி.யின் பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று அறவழியில் மவுன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அதானி குறித்து பாராளுமன்றத்தில் பேசவிடாமல் தடுப்பதற்காகவே ராகுல்காந்தியை பதவிநீக்கம் செய்துள்ளனர். எனவே எங்களின் மக்கள் போராட்டம் தொடரும்.

    ராகுல்காந்தியின் பதவி நீக்கம் என்பது ஜனநாயக படுகொலைக்கு நிகரானது. அவர் இந்திய பிரதமர் ஆவதற்கு ஏதுவாக எங்களது இந்த போராட்டம் அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடி 1-ம் கேட் காந்திசிலை முன்பு அறவழி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. டேனியல்ராஜ் போராட்டத்தை தொடங்கிவைத்தார். மாநில துணை தலைவர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×