search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி மேல்சபை தேர்தல்"

    பாஜக கூட்டணி சார்பில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஹரிவன்ஷ் நிறுத்தப்படுவார் என்று தெரியவந்துள்ளது. #BJP #NitishKumar #Congress

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மேல் சபையான மாநிலங்கள் அவையில் துணைத் தலைவராக இருந்த பி.ஜே.குரியனின் பதவிக் காலம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்தது.

    இதனால் மேல்சபை துணைத் தலைவர் பதவி கடந்த இரு மாதங்களாக காலியாக உள்ளது.

    பாராளுமன்ற மேல் சபையை பொருத்தவரை தலைவராக இருக்கும் துணை ஜனாதிபதிக்கு அடுத்த நிலையில் துணைத் தலைவர் பதவி முக்கியமானதாக கருதப்படுகிறது. காங்கிரஸ் ஆதரவுடன் குரியன் இருந்ததால், அந்த பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.

    ஆனால் மேல்சபை துணைத் தலைவரை போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்து எடுக்கலாம் என்று பா.ஜ.க. திட்டமிட்டது. அந்த திட்டத்தை காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை. இதனால் மேல்சபை துணைத் தலைவரை தேர்வு செய்ய தேர்தல் நடத்த வேண்டியதாகியுள்ளது.

    துணைத் தலைவர் பதவிக்கு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தேர்தல் நடத்தப்படும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் நாளை மதியத்துக்குள் விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நாளை மாலை துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் விபரம் தெரிய வரும்.

    நாளை மறுநாள் பகல் 11 மணிக்கு ஓட்டுப்பதிவு நடைபெறும். மேல்சபை எம்.பி.க்கள் இதில் பங்கேற்று தங்களது வாக்குகளை பதிவு செய்வார்கள். அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு வெளியிடப்படும்.


    பாராளுமன்ற மேல்சபையின் மொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கை 245 ஆகும். இதில் ஒரு இடம் காலியாக உள்ளது. எனவே 244 பேர் வாக்களிப்பார்கள். இந்த தேர்தலில் வெற்றி பெற்று துணைத் தலைவர் பதவியை பெற வேண்டுமானால் 122 எம்.பி.க்களின் ஆதரவு வேண்டும்.

    மேல்சபையில் இந்த எண்ணிக்கை அளவுக்கு எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை பலம் இல்லை. பா.ஜ.க.வுக்கு அதிகபட்சமாக 73 எம்.பி.க் களும், காங்கிரசுக்கு 50 எம்.பி.க்களும் உள்ளனர். பா.ஜ.க. கூட்டணிக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் கூட 122 எம்.பி.க்கள் பலம் இல்லை. இதன் காரணமாக மேல்சபை துணை தலைவர் பதவியை கைப்பற்ற பா.ஜ.க. காங்கிரஸ் கூட்டணிகளிடையே கடும் பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது.

    பா.ஜ.க. கூட்டணிக்கு 90 எம்.பி.க்கள்தான் உள்ளனர். அதாவது பா.ஜ.க.வுக்கு 73, ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு 6, நியமன எம்.பி.க்கள் 4, சிரோண்மணி அகாலிதளத்துக்கு 3, போடோலேண்ட் மக்கள் முன்னணி, நாகா மக்கள் முன்னணி, இந்திய குடியரசு கட்சி, சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆகியவற்றுக்கு தலா ஒரு எம்.பி.க்கள் என 90 எம்.பி.க்கள் உள்ளனர். பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் 3 எம்.பி.க் கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்று தெரியவில்லை.

    90 எம்.பி.க்களே உள்ளதால் துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற பா.ஜ.க. கூட்டணிக்கு மேலும் 32 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. இந்த நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அகாலிதளம் கட்சியின் 3 எம்.பி.க்கள் ஓட்டெடுப்பை புறக்கணிப்பார்கள் என்று கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் பா.ஜ.க.வின் பலம் 90-ல் இருந்து 87 ஆக குறைந்து விடும்.


    சிவசேனா, அகாலி தளம் கட்சிகள் உதவி செய்யுமா என்ற சந்தேகமான நிலையில், சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியின் 6 வாக்குகளை பா.ஜ.க. உறுதி செய்துள்ளது. அடுத்து 13 எம்.பி.க்களை வைத்துள்ள அ.தி.மு.க. ஆதரவையும் பா.ஜ.க. பெறும் என்று தெரிகிறது. இதனால் பா.ஜ.க. கூட்டணிக்கு 109 எம்.பி.க்கள் ஆதரவு உறுதியாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற மேலும் 13 எம்.பி.க்கள் ஆதரவு வேண்டும். பிஜூ ஜனதா தளம் கட்சிக்கு 9 எம்.பி.க்களும், 6 சுயேட்சை எம்.பி.க்களும் உள்ளனர். அவர்களது ஆதரவைப் பெற பா.ஜ.க. முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இது தவிர திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சிகளில் இருந்து தலா ஒரு எம்.பி.யை இழுக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணிக்கு மேல் சபையில் 112 எம்.பி.க்கள் இருப்பதால், காங்கிரஸ் கட்சியும் துணை தலைவர் பதவியை விட்டு விடக் கூடாது என்று தீவிரமாக களம் இறங்கியுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரசுக்கு 50, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 13, சமாஜ்வாடிக்கு 13, தெலுங்கு தேசத்துக்கு 6 ராஷ்டீரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5, பகுஜன் சமாஜ், தி.மு.க. தேசியவாத காங்கிரஸ், கட்சிகளுக்கு தலா 4, ஆம்ஆத்மிக்கு 3, இந்திய கம்யூனிஸ்டுக்கு 2, முஸ்லிம் லீக், கேரளா காங்கிரசுக்கு தலா 1 என 112 எம்.பிக்கள் இருக்கிறார்கள்.

    இதனால் மேல்சபை தலைவர் பதவியை கைப்பற்ற காங்கிரஸ் கூட்டணிக்கு இன்னும் 10 எம்.பி.க்கள் ஆதரவு இருந்தாலே போதுமானது. எனவே 9 எம்.பி.க்களை வைத்துள்ள பிஜூ ஜனதா தளம் கட்சியின் ஆதரவைப் பெற காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    மேல்சபை துணைத் தலைவர் தேர்தலில் பிஜூ ஜனதா தளம் கட்சி கிங் மேக்கர் போன்ற நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அந்த கட்சிக்கு பிடித்தமான வேட்பாளரை களம் இறக்க பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் ஆய்வு செய்து வந்தன. இந்த நிலையில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஹரிவன்ஷ் நிறுத்தப்படுவார் என்று தெரியவந்துள்ளது.

    முதல் தடவை எம்.பியான இவர் பீகாரில் ‘‘பிரபாத் கபார்’’ எனும் பத்திரிகையை நடத்தி வருகிறார். பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் அதிகம் விற்பனையாகும் இந்த பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான ஹரிவன்ஷை பா.ஜ.க. தேர்வு செய்ததற்கு 2 காரணங்கள் முக்கியமானதாக கூறப்படுகிறது.

    முதல் காரணம் ஐக்கிய ஜனதா தளத் கட்சிக்கு மேல்சபை துணை தலைவர் பதவியை கொடுப்பதன் மூலம் நிதிஷ்குமாரை சமரசம் செய்து பா.ஜ.க. கூட்டணியில் தக்க வைக்க முடியும் என்பதாகும். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜ.க. இந்த முடிவுக்கு வந்துள்ளது. இரண்டாவதாக ஹரிவன்சை பிஜூ ஜனதா தளம், அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் எந்த பிரச்சினையும் இல்லாமல் ஆதரிக்க செய்ய முடியும் என்பதாகும்.

    பா.ஜ.க. தனது கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியை திருப்திபடுத்துவது போல காங்கிரஸ் கட்சியும் தனது தோழமை கட்சிகளில் ஒரு கட்சிக்கு மேல்சபை துணை தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க ஆலோசித்து வருகிறது. இன்று மதியம் 1 மணிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூடி இதில் இறுதி முடிவு எடுக்க உள்ளனர்.

    காங்கிரஸ் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வந்தனா சவான், தி.மு.க.வின் திருச்சி சிவா ஆகிய இருவரது பெயர்களும் பரிசீலணையில் உள்ளன. இந்த இரு கட்சிகளுக்கும் டெல்லி மேல் சபையில் தலா 4 உறுப்பினர்களே உள்ளனர். தி.மு.க. வட்டாரத்தில் கேட்ட போது நாங்கள் மேல் சபை துணை தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்றனர்.

    சரத்பவார் கட்சியினர் தங்களுக்கு அந்த பதவியைத் தரவேண்டும் என்று காங்கிரசிடம் வலியுறுத்தி உள்ளனர். காங்கிரசின் வேட்பாளரை பொருத்து ஆதரவு கிடைப்பது உறுதியாகும். தற்போதைய நிலையில் இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் இரு கூட்டணிகளும் வெற்றிக்கு அருகில் உள்ளன. சிலரது வாக்குகளே வெற்றி-தோல்வியை நிர்ணயம் செய்யும். #BJP #NitishKumar #Congress

    ×