search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜனவரி 18"

    காவிரிக்கு நடத்துகிற இந்த வழிபாடு அனைத்து வரங்களையும் வழங்கும். குழந்தைப் பேறு, திருமணப் பேறு கிடைக்கும். அஷ்ட ஐஸ்வர்யமும் தேடி வரும். வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.
    காவிரியை வழிபட்டு அனைத்து நலன் களையும் பெறுவதற்கு இந்த ஆடிப்பெருக்கு தினத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ‘கணவன் நோய்நொடி இல்லாமல் இருக்க வேண்டும்... தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும்’ என்று காவிரித் தாயை வணங்குவார்கள் மணமான பெண்கள்.

    திருமணம் ஆகாத கன்னிப் பெண்களும் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு திருமண வரம் வேண்டி, காவிரியைப் பிரார்த்திப்பார்கள். புதுமணம் ஆன பெண்கள் தாலி பிரித்து, புதுத் தாலி முடிந்து கொள்வார்கள். வயது முதிர்ந்த சுமங்கலி, புதுத் தாலி எடுத்துத் தருவார். அதோடு, திருமணம் ஆன தினத்தன்று அணிந்து கொண்ட மலர் மாலைகளை வீட்டில் பத்திரமாக பாதுகாத்து வைத்து, ஆடிப்பெருக்கன்று ஆற்றில் விடுவர்.

    ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த பெண்கள் தலைமையில் இவை அனைத்தும் காவிரிக் கரையில் நடைபெறும். சிறுவர்கள் ‘சப்பரத் தட்டி’ எனப்படும் சிறு மரத் தேர்களை உருட்டிக் கொண்டு ஆற்றங்கரையில் விளையாடுவர்.

    விவசாயத்தையும், தங்கள் குடும்பத்தையும் வாழ வைக்கிற காவிரிக்கு மங்களப் பொருட்களை அர்ப்பணித்து, பெண்கள் தங்கள் கழுத்திலும், உடன் வந்திருக்கிற ஆண்கள் தங்கள் கைகளிலும் மஞ்சள் கயிறுகளைக் கட்டிக் கொள்வார்கள்.

    அன்றைய தினம் பெண்கள் நீராடி விட்டு, புத்தாடை அணிந்து கொள்வர். ஆற்றங்கரையில் ஓரிடத்தை சுத்தம் செய்து விட்டு தீபம் ஏற்றி வைப்பர். அங்கு வாழையிலைகளைப் பரத்துவார்கள். பசுஞ்சாணத்திலோ அல்லது மஞ்சளிலோ பிள்ளையார் பிடித்து வைத்து வாழையிலையில் மங்களப் பொருட்களை வைப்பார்கள். மஞ்சள், குங்குமம், தாம்பூலம், தாலிப்பொட்டு, தேங்காய், கண்ணாடி வளையல்கள், பனையோலையால் ஆன காதோலை, கருகமணி, அரிசி, வெல்லம், ரவிக்கைத் துணி, காப்பரிசி, அவல் போன்றவற்றை வைப்பதுண்டு.

    சர்க்கரைப் பொங்கல், தேங்காய்ச் சாதம், புளிசாதம், தயிர் சாதம் போன்ற சித்ரான்னங்களை வீட்டில் இருந்தே எடுத்து வந்து வைப்பார்கள். குடும்பத்தில் இருக்கிற அனைவரும் கூடி இருக்கும்போது காவிரித் தாயைப் போற்றி அவரவர்கள் தங்களுக்குத் தெரிந்த பாடல்களைப் பாடுவார்கள். பிறகு, தேங்காய் உடைத்து வைத்து, நிவேதனம் செய்து விட்டுக் கற்பூரம் காண்பிப்பார்கள். இதே தீபத்தை காவிரிக்கும் காண்பித்து வணங்குவார்கள்.

    அதன்பின் தாலிப்பொட்டு, மஞ்சள், குங்குமம், காதோலை, கருகமணி, புஷ்பம் போன்றவற்றை காவிரித் தாய்க்கு அர்ப்பணிப்பர். வாழைமட்டையில் தீபமும் ஏற்றி நீரில் மிதக்க விடுவர்.

    காவிரிக்கு நடத்துகிற இந்த வழிபாடு அனைத்து வரங்களையும் வழங்கும். குழந்தைப் பேறு, திருமணப் பேறு கிடைக்கும். அஷ்ட ஐஸ்வர்யமும் தேடி வரும். வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.

    ஆடிப்பெருக்குக்கு ஏற்றவாறு காவிரி ஆற்றில் வெள்ளம் புது வெள்ளமாய்ப் பாய்ந்து வருகிறது. ஆகவே இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா முன்கூட்டியே களை கட்டிவிட்டது.
    ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 அன்று காவிரி பாய்ந்து செல்லும் பகுதிகளில் ஆடிப் பெருக்கு விழா சிறப்பாக நடைபெறும். கடந்த சில ஆண்டுகளாக ஆடிப்பெருக்கு விழா ஒப்புக்குத்தான் நடந்ததே தவிர களைகட்டவில்லை. ஏனெனில் காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லை.

    தண்ணீருக்கு பதிலாக பாறைகளும் வெறும் மணலாகவும் காட்சியளித்தது. ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் காவிரி ஆறு பொங்கி வருகிறது. ஆடிப்பெருக்குக்கு ஏற்றவாறு வெள்ளம் பெருக்கு புது வெள்ளமாய்ப் பாய்ந்து வருகிறது. ஆகவே இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா முன்கூட்டியேகளை கட்டிவிட்டது.

    ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படும் இடங்களில் முக்கிய இடமாக கருதப்படுவது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி கூடுதுறை ஆகும். பவானி, காவிரி, அமுத நதி ஆகிய மூன்று நதி கள் சங்கமிக்கும் இடம்தான் பவானி கூடுதுறை.

    இங்கு அமைந்துள்ள சங்கமேஸ்வரர் கோவில் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. நாளை (வெள்ளிக்கிழமை) ஆடிப்பெருக்கு விழா பவானி கூடுதுறையில் அமர்க்களமாக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.



    ஈரோடு மாவட்டம் மட்டு மல்லாமல் திருப்பூர், நாமக்கல், கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் நாளை அதிகாலையிலேயே கூடுதுறையில் குவிகிறார்கள். இவர்கள் பொங்கி வரும் காவிரி ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபடுவார்கள். புதுமண தம்பதிகள் தங்களது மணமாலையை ஆற்றில் விட்டு வழிபடுகிறார்கள்.

    சுமங்கலி பெண்கள் தங்கள் வாழ்க்கை நாயகன் நலமுடன் வாழ வேண்டி வணங்கி புது தாலிக்கயிறு அணிவார்கள். திருமணமாகாத கன்னிப்பெண்கள் தங்களுக்கு ஏற்ற மணவாளன் கிடைக்க வேண்டியும், திருமண வாழ்க்கைகை கூட வேண்டியும் வழிபடுகிறார்கள்.

    குறிப்பாக விவசாய பெருமக்கள் தங்களின் விவசாய நிலங்களை செ(கொ)ழிக்க வைக்கும் காவிரி தாயை வணங்கி மகிழ்வார்கள். இப்படி நாளை பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழாவை அமர்க்களமாக கொண்டாட ஒரு லட்சம் பக்தர்கள் குவிகிறார்கள்.

    காவிரி ஆற்றில் வெள்ளம் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு செல்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். ஆழமான பகுதி யில் பக்தர்கள் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆற்றின் ஓரமாக எச்சரிக்கை போர்டும் வைக்கப்பட்டு உள்ளது.

    போலீசார் ஆற்றில் பரிச லில் சென்றும் எச்சரிக்கை விடுக்கிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
    ஆடி 18 பண்டிகையின்போது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் காவேரி அம்மனுக்கு தாய்வீட்டு சீதனங்களை கொண்டு வந்து படைத்து செல்லும் வழக்கம் இன்றைக்கும் உள்ளது.
    தமிழ்நாட்டில் காவிரி கரையோரத்தில் அமைந்த முதல் சிவாலயமான தேசநாதேஸ்வரர் கோவில் ஒகேனக்கல்லில் உள்ளது. இந்த கோவில் வளாகத்திற்குள்தான் காவிரி ஆற்றின் சிறப்பை போற்றும் வகையில் காவேரியம்மன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி தாயே அம்மன் வடிவில் இங்கு எழுந்தருளியிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.

    குருச்சேத்திர போர் முடிந்த பின்னர் போரினால் ஏற்பட்ட பாவங்களை போக்க பஞ்சபாண்டவர்கள் கங்கை நதியில் குளித்தனர். அப்போது பாவங்கள் நீங்க கங்கையில் குளித்தால் மட்டும் போதாது, குடகு மலையில் அகத்தியரின் கமண்டலத்தில் அடைபட்டு கிடக்கும் பொன்னி நதியில் குளிக்க வேண்டும் என்று கிருஷ்ண பரமாத்மா கூறினார். அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த பொன்னி நதியை விடுவிக்க வேண்டி பஞ்சபாண்டவர்கள் விநாயகரை வழிபட்டனர். இதனால் மகிழ்ந்த விநாயகர் காக்கை வடிவில் குடகுமலைக்கு சென்று அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த பொன்னி நதிநீரை தென்திசை நோக்கி தள்ளிவிட்டார்.

    இந்த பொன்னி நதிநீர் வேகமாக ஓடி ஒகேனக்கல்லில் அஷ்வமேத யாகம் செய்து கொண்டிருந்த பிரம்மாவின் யாக குண்டத்தில் விழுந்து அருவிகளாக துள்ளிக்குதித்தது. தென்னாடு செழிக்க உருவான இந்த நதிக்கு காவிரி என்று அகத்திய மாமுனிவர் பெயர் சூட்டினார். பொன்னி நதி, காவிரி என்று பெயர் பெற்ற இடமான ஒகேனக்கல்லில் ஆற்றங்கரையில் ஒரு சிவலிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்தார். அந்த லிங்கத்தை பிரம்மதேவர் தினமும் வழிபட்ட இடம்தான் தற்போது ஒகேனக்கல்லில் தேசநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ள இடமாகும்.

    ஒகேனக்கல் ‘மத்திய ரங்கம்’ என்றும் அழைக்கப்படுகிறது. அகத்தியர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த இடத்தில் 13-ம் நூற்றாண்டில் தேசநாதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. மைசூர் மன்னர்கள் மற்றும் விஜயநகர மன்னர்கள் இந்த கோவிலை சிறப்பான முறையில் பராமரித்தனர். காவிரி ஆறு உருவானது தொடர்பான புராணத்தில் விநாயகருக்கு முக்கிய இடம் உள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி ‘கணேச தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு குளித்தால் விநாயகரின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    தேசநாதேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு பிரம்மா பூஜைகள் செய்து வழிபட்டதாகவும், இதனால் இந்த கோவில் ‘தென்னகத்தின் காசி’ என பொருள்படும் ‘தட்சிணகாசி’ என்றும் அழைக்கப்படுகிறது. தேசநாதீஸ்வரர் கோவில் வளாகத்தில் காவேரி அம்மனுக்கு தனிக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒகேனக்கல் தவிர வேறு எங்கும் காவிரித்தாய்க்கு தனிக்கோவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    காவிரி ஆற்றின் பிறப்பிடமான குடகு மலையில் பெண் குழந்தை போன்ற வடிவில் உள்ள காவிரி அம்மன், ஒகேனக்கல்லில் உள்ள கோவிலில் குமரி பெண்ணாக 3½ அடி உயரத்தில் காட்சி அளிக்கிறார். இங்கு வந்து வணங்குபவர்களுக்கு திருமண தடைகள் நீங்கும், குழந்தை பேறு உள்பட கேட்ட வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பல வகையான தோஷபரிகாரங்கள் மற்றும் கடன் தொந்தரவுகள் நீங்க இங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    குருச்சேத்திர போரில் பயன்படுத்திய ஆயுதங்களை பாண்டவர்கள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கழுவி பாவங்கள் போக நீராடிய நாள் ஆடி மாதம் 18-ம் நாள் என்று கூறப்படுகிறது. இதனால் ஆடி 18 பண்டிகையின்போது காவேரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழா நடக்கிறது. அப்போது காவிரி ஆறு உற்பத்தியாகும் இடமான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் அம்மனுக்கு தாய்வீட்டு சீதனமாக அரிசி, பருப்பு, வளையல், புடவை, ரவிக்கை மற்றும் அச்சுவெல்லம் ஆகியவற்றை கொண்டு வந்து படைத்து செல்லும் வழக்கம் இன்றைக்கும் உள்ளது. 
    ×