search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு ரெயில் ரத்து"

    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
    • மின் இணைப்பு கொடுக்கப்படாத இடங்களுக்கு துரிதமாக மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பெய்த வரலாறு காணாத மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதிப்பு சற்று குறைவாக இருந்த நிலையில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் நீரில் மூழ்கின. 2 மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட பயிர்களும் கடும் சேதம் அடைந்தன.

    நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பிவிட்டது. பஸ், ரெயில் போக்குவரத்துகள் தொடங்கியது. மின் இணைப்பு கொடுக்கப்படாத இடங்களுக்கு துரிதமாக மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றுடன் 7 நாட்களாகியும் சில இடங்களில் மக்களின் துயரம் தீரவில்லை.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாநகர், ஏரல், ஆத்தூர், முக்காணி, ஆழ்வார் தோப்பு, அகரம், வசவப்பபுரம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் இன்னும் வெள்ளம் வடியாமல் தீவுகளாகவே காட்சி அளிக்கின்றன. பழையகாயல், புன்னக்காயல், காயல்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லை-தூத்துக்குடி 4 வழிச்சாலை, புதிதாக கட்டப்பட்ட ஆற்று பாலங்கள், திருச்செந்தூர்-தூத்துக்குடி மெயின்ரோடு உள்ளிட்டவைகளும் பெருமளவில் சேதம் அடைந்துள்ளன.


    பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் உள்ள நிலையில், அரசு சார்பிலும், தன்னார்வ அமைப்புகள் சார்பிலும் நிவாரணங்கள், உணவு, உடை வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளை மத்திய குழு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தது.

    இந்நிலையில் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று முன்தினம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நெல்லையில் பாதிப்புகளை ஆய்வு செய்த பின், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகம் பாதிப்படைந்த மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணமும், இந்த மாவட்டங்களில் லேசான பாதிப்பு மற்றும் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள சேதங்கள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. வேளாண்துறை, வருவாய்த்துறையினர் இணைந்து இந்த பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.

    முதல்கட்டமாக நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, திசையன்விளை, ராதாபுரம், நாங்குநேரி, சேரன்மகா தேவி, அம்பை, மானூர் உள்ளிட்ட 8 தாலுகாக்களிலும் சுமார் 800-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. நேற்றும், இன்றும் நெற்பயிர்கள் பாதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது.


    தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம், ஏரல், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு ஆகிய 10 தாலுகாக்களில் பாதிப்புகள் கணக்கெடுப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாவட்டம் முழுவதும் 68 ஆயிரம் ஏக்கரில் பிசான பருவ நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், சுமார் 70 சதவீதம் வரை நெற்பயிர்கள் சேதம் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்று மாலைக்குள் முழுமையான சேத விபரங்கள் தெரிய வரும். கால்நடைகள் சேதம், மனித உயிரிழப்பு உள்ளிட்டவையும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த 2 மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை கணக்கெடுக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1000 பேர் வரவழைக்கப்பட்டு ள்ளனர். அவர்கள் இன்று முதல் அனைத்து பகுதிக்கும் சென்று கால்நடை சேதம், பயிர்சேதம், உயிர்சேதம், வீடு சேதம் உள்ளிட்டவைகளை கணக்கெடுக்கின்றனர். 2 அல்லது 3 நாட்களில் கணக்கெடுப்பு முடிவடையும். ஒவ்வொரு குழுக்களுக்கு ஒரு தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    வெள்ளத்தில் பாஸ்போர்ட், ஆதார் ஆட்டை, ரேஷன் அட்டை மற்றும் முக்கிய ஆவணங்களை இழந்தவர்களுக்காக 2 நாட்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்று சான்றுகளை விரைவாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வெள்ளத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.

    வெள்ளத்தில் சேதமடைந்த பெரிய மற்றும் சிறிய பாலங்கள் கிராம நிர்வாக அலுவவர்கள், போலீசார் மூலம் கணக்கெடுக்கும் பணி முடிவு பெற்றுள்ளது. கடந்த 6 நாட்களாக துண்டிக்கப்பட்ட தொலை தொடர்பை மீண்டும் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    எளிமையான முறையில் விரைவாக கணக்கெடுத்து உண்மையாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட உள்ளது. மாவட்ட கலெக்டர் பாதிப்படைந்த பகுதிகளுக்கான பட்டியலை அரசுக்கு வழங்கியவுடன் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    உயிரிழப்பு தொடர்பான கணக்கெடுப்புகளும் துரிதமாக நடந்து வருகிறது. விவசாய பாதிப்பு கணக்கெடுப்பும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • ரெயில் தண்டவாளம் மற்றும் ரெயில் நிலையம் பலத்த சேதம் அடைந்துள்ளது.
    • ரெயில்கள் நெல்லையில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அணைகளில் இருந்து சுமார் 1½ லட்சம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம் மட்டும் இன்றி அதனையொட்டி உள்ள பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் பல்வேறு குளங்களிலும் உடைப்பு ஏற்பட்டது.

    இதனால் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையம், தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியது. அப்போது ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்திற்கு வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டு அதில் இருந்த 800 பயணிகள் கடும் போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    எனினும் ரெயில் தண்டவாளம் மற்றும் ரெயில் நிலையம் பலத்த சேதம் அடைந்துள்ளது.

    குறிப்பாக ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் பகுதிகளில் ரெயில் தண்டவாளங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த வழியாக ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    ஏற்கனவே செந்தூர் எக்ஸ்பிரஸ், பாலருவி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் நெல்லையில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் தண்டவாள சீரமைப்பு பணிகள் காரணமாக நெல்லை-திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் சேவைகள் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ×