search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தனக்கூடு"

    • 24-ந்தேதி கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • ஜனவரி 2-ம்தேதி சந்தன கூடு ஊர்வலம் நடக்கிறது.
    • 3-ம் தேதி சந்தனம் பூசும் நிகழ்வு நடக்கிறது.

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் புகழ் பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடை பெறுவது வழக்கம்.

    அதன்படி வருகிற 24-ந்தேதி 466-ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை ஆண்டவர் தர்காவில் பரம்பரை கலிபா தலைமையில் சிறப்பு துவா ஓதப்பட்டது. பின்னர் மங்கள வாத்தியங்கள், அதிர்வேட்டுக்கள் முழங்க 5 மினாராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்பட்டது.

    அப்போது, கூடியிருந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கந்தூரி விழாவை சிறப்பிக்கும் விதமாக அனைவருக்கும் கற்கண்டு மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான 24ம் தேதி கொடியேற்று வைபவமும், அதனைத் தொடர்ந்து ஜனவரி 2-ம் தேதி நாகையில் இருந்து சந்தன கூடு ஊர்வலமும் 3-ம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெறுகிறது.

    • கமுதி அருகே சந்தனக்கூடு திருவிழா நடந்தது.
    • இதில் பாரம்பரிய நடனம் ஆடி இளைஞர்கள் அசத்தினர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் அமைந்துள்ள மகான் ஜிந்தா மதார் வலியுல்லாஹ் தர்ஹாவில் சந்தனக்கூடு விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு பள்ளி வாசல் தர்ஹா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டு இருந்தது.நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு மேல் தொடங்கிய சந்தனக்கூடு ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சந்தனக்கூடு நகரின் முக்கிய வீதிகள் வழி யாக வந்தது. அப்போது இளைஞர்கள், பெரிய வர்கள், சிறுவர்கள் சந்தன கூடு விழாவிற்கு ஒன்றுகூடி மேள சத்தம் மற்றும் இறைபாடலுக்கு ஏற்றவாறு தமிழர்களின் பாரம்பரிய களிகம்பு நடனம் ஆடி ஊர்வலமாக சென்றனர்.

    களிகம்பு நடனத்தில் முத்தாய்ப்பாக வட்டமாக நின்று கயிறு பிடித்து ஆடி ஒருவருக்கொருவர் சிக்காத வகையில் கயிறு போல திரித்து பின்னர் கயிறை விரித்தும், களிகம்பு நடனமாடி சந்தனக்கூட்டை வரவேற்று சென்றனர்.

    • அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெறும்.
    • நிறைவு நாளில் கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஜாம்புவானோடையில் சுமார் 721 ஆண்டுகளாக மதங்களை கடந்து மனங்கள் சங்கமிக்கும் தர்காவாக ஹக்கீம் ஷெக்ய்கு தாவூது தர்கா அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த தர்கா விளங்கி வருகிறது. புகழ்பெற்ற தர்காவின் கந்தூரி விழா நடைபெற இருப்பதால் அதற்கான கொடி மரம் நடுவிழா நேற்று நடைபெற்றது.

    தொடந்து, வருகிற 25-ம் தேதி புனித கொடி ஏற்றப்பட்டு அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெறும். நிறைவு நாளில் கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். விழாவில் ஜாதி, இன, மொழி வேறுபாடின்றி அனைத்து மக்களும் கலந்து கொண்டு விழாவை சீரும் சிறப்புமாக செய்து வருகின்றனர்.

    இங்கு மதங்களை கடந்து மனங்கள் சங்கமிப்பதும், மனித நேயம் உயிரோடு இருப்பதும், தர்காவில் உள்ள மகானின் சிறப்பம்சம் என கூறப்படுகிறது. மேலும், இந்த விழாவிற்கு விஷ்வகர்மா சங்கம் மூலம் புனித கொடி வழங்கப்படுகிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் 14 நாட்கள் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    கந்தூரி விழாவிற்கு மாவட்டம் நிர்வாகம் சார்பில் சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், போலீசாரும் உரிய பாதுகாப்பு வழங்குவதாகவும் தெரிவித்தனர். எனவே, அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு முத்துப்பேட்டை தர்கா நிர்வாகத்தினர், பாரம்பரிய முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாஸ்கர் அலி தெரிவித்துள்ளனர்.

    • ஆயிரக்கணக்கானோருக்கு நெய் சோறு அன்னதானம் வழங்கப்பட்டது.
    • பாடகர் சீனி முகமது இஸ்லாமிய கீதம் பாடினார்.

    ராமநாதபுரம் வெளிப்பட்டணம் பாசிப்பட்டறைதெரு முஸ்லிம் ஜமாத் சார்பில் நபிகள் நாயகம் பிறந்ததின மீலாது விழா மற்றும் முகைதீன் அப்துல் காதர் ஜெய்லானி நினைவு கந்தூரி மற்றும் மவுலிது விழா ஜமாத் டிரஸ்டி காதர் முகைதீன் தலைமையில் நடைபெற்றது.

    நிர்வாக டிரஸ்டி அசரப் அலி, டிரஸ்டிகள் காதர், உஸ்மான் அலி, ஜபருல்லா, சைரூஸ் அலி, செய்யது அபுதாகிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதரசா ஆசிரியர் சம்சுதீன் ஆலிம் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். பாடகர் சீனி முகமது இஸ்லாமிய கீதம் பாடினார். தலைமை இமாம் அப்துல்காதர் வரவேற்றார். ராமநாதபுரம் நகர் வட்டார உலமா சபை தலைவர் முகமது யாசின், சேலம் தலைமை இமாம் முகமது இப்ராஹிம் ஆகியோர் பேசினர்.

    கந்தூரி விழாவையொட்டி ஆயிரக்கணக்கானோருக்கு நெய் சோறு அன்னதானம் வழங்கப்பட்டது. மவுலிது நிகழ்ச்சியில் ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல் இமாம்கள், ஆலிம்கள், உலமாக்கள், ஜமாத் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மவுலவி சேக் அப்துல் காதிர் உலக நன்மைக்காக பிரார்த்தனை துவா ஓதினார். முடிவில் துணை இமாம் அன்வர் அலி நன்றி கூறினார்.

    • சந்தன குட ஊர்வலம், சந்தனம் பூசுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • முடிவில் பொதுமக்களுக்கு விருந்து வழங்கப்பட்டது.

    கோபால்பட்டி அருகே கணவாய்பட்டியில் பக்கீர் செய்யது சாயுபு தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு திருவிழா தர்காவில் கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து சந்தன குட ஊர்வலம், சந்தனம் பூசுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கந்தூரி ஊர்வலம் நேற்று நடைபெற்றது. முடிவில் பொதுமக்களுக்கு விருந்து வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம், நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன், சாணார்பட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தர்மராஜன், நத்தம் பேரூராட்சி தலைவர் ஷேக்சிக்கந்தர் பாட்ஷா, கணவாய்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நிஷா ராமகிருஷ்ணன், கணவாய்பட்டி ஜமாத் தலைவர் ராஜ்கபூர், செயலாளர் பாட்ஷா, பொருளாளர் ஷாஜகான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • துதிபாடும் நிகழ்ச்சி தினமும் நடந்து வருகிறது.
    • பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    தாராவியில் 57-வது சந்தன கூடு திருவிழா கடந்த 2-ந் தேதி முதல் வருகிற 13-ந் தேதி வரை தாராவி 90 அடி சாலை சங்கம் கல்லியில் உள்ள அஸ்தானா தர்கா மற்றும் சன்னி ஜிலானி மசூதியில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 5-ந்தேதி நீராட்டு விழாவும், மறுநாள் கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடந்தது.

    இதனை தொடர்ந்து துதிபாடும் நிகழ்ச்சி தினமும் மாலை 6 மணி அளவில் நடந்து வருகிறது.

    இந்த நிகழ்ச்சியில் எம்.பி, ராகுல் செவாலே, சயான் கோலிவாடா பா.ஜனதா எம்.எல்.ஏ. கேப்டன் தமிழ்ச்செல்வன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சந்தன கூடு ஊர்வலமாக சங்கம் கல்லி, 90 அடிசாலை, கும்பர்வாடா, ஷாகுநகர், ஜாஸ்மின் மில் ரோடு, மாகி பாடக், படி மஸ்ஜித், ஹோலி மைதானம், காலக்கில்லா எடுத்து செல்லப்பட்டு மீண்டும் சங்கம் கல்லி வந்தடைந்தது.

    அதன்பின்னர் சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற்றது. தொழுகைக்கு பின்னர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • நாள்தோறும் இரவில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
    • தர்கா முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    மதுரை தெற்குவாசல் முகைதீன் ஆண்டவர் தர்காவில் சந்தனக்கூடு விழாவானது கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து நாள்தோறும் இரவில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

    இதற்காக மின் விளக்குகளால் கப்பல் போன்று அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ரதமானது, ஊர்வலமாக சிலம்பாட்டம், மேளதாள வாத்தியங்கள் முழங்க, தெற்குமாரட் வீதி, காஜிமார்தெரு, நேதாஜி ரோடு, சிம்மக்கல், நெல்பேட்டை வழியாக கொண்டு செல்லப்பட்டது.

    இந்த விழாவில் மதுரை மட்டுமின்றி விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்தனர். சந்தனகூடுவிழாவினை முன்னிட்டு தர்கா முழுவதிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    • தினமும் மஹபூபே சுபஹானி பயான் வரலாறு படிக்கப்பட்டது.
    • ஏராளமான முஸ்லிம்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    திருச்செங்கோடு மஜித் தெருவில் உள்ள ஹஜ்ரத் மஹபூபே சுபஹானி தர்காவில் 140-ம் ஆண்டு சந்தனக்குட உரூஸ் கந்தூரி விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தர்காவில் தினமும் மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மஹபூபே சுபஹானி பயான் வரலாறு படிக்கப்பட்டது. இதில் இந்து, முஸ்லிம்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சந்தனக்குட உரூஸ் கந்தூரி விழா முஸ்லிம் மஜீத் முத்தவல்லி முபாரக் அலி தலைமையில் நடைபெற்றது. நிர்வாக கமிட்டியினர் முன்னிலை வகித்தனர். கவுஸ் மைதீன் கொடியேற்றி சந்தனக்கூடு விழாவை தொடங்கி வைத்தார். ஷேக் உசேன் சந்தனக்குடத்தை தலையில் தாங்கி கொண்டு ஊர்வலமாக சென்றார்.

    சந்தனக்குடம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு 4 ரத வீதிகளில் ஊர்வலமாக சென்று தர்கா வந்தடைந்தது. விழாவில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ் பாபு, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சரவணன் முருகன் மற்றும் திருச்செங்கோடு, சேலம், நாமக்கல், ஈரோடு பகுதிகளில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மேலும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது.

    • சுல்தான் கலிபா சாஹிப் சமாதிக்கு பலர் சந்தனம் பூசினர்.
    • இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    நாகூர் யூசுப் நெய்னா தெருவில் சுல்தான் கலிபா சாஹிப் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி நேற்று மாலை நேர தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. தொடர்ந்து சுல்தான் கலிபா சாஹிப் சமாதிக்கு, தர்கா டிரஸ்டி ஷேக் ஹஸன் சாஹிப் உள்ளிட்ட பலர் சந்தனம் பூசினர்.

    இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    • அய்யம்பேட்டை அருகே வழுத்தூரில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது.
    • நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    அய்யம்பேட்டை அருகே வழுத்தூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில், நாலு கொடி கந்தூரி விழா நடைபெற்றது. இதைமுன்னிட்டு பக்கீர்மார்கள் மற்றும் பொதுமக்கள் ஊர்வலமாக புறப்பட்டு இரவு முழுவதும் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தனர்.

    அப்போது உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த பக்கீர்மார்கள், பொது மக்கள் சிலம்பாட்டம், வீர விளையாட்டுகள் விளையாடி ஆன்மிக பாடல்கள் பாடி மீண்டும் பள்ளிவாசலை வந்தடைந்தனர். நிகழ்ச்சியில் வழுத்தூர், அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை தொழிலதிபர் அப்துல் ரவூப் முன்னிலையில் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஹாஜா மைதீன், ஓ.பி.பசீர் அகமது, கமாலுதீன் பைஜி, முகம்மது நஜீர், ராஜம்மா மற்றும் ஜமாத்தார்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.

    • 5-ந்தேதி அரண்மனை கொடி ஊர்வலம் வந்து கொடியேற்றம் நடைபெறுகிறது.
    • 8-ந்தேதி 14-வது இரவு ராத்திபு ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

    தமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற தர்காக்களில் பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் தர்காவும் ஒன்று. தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் கந்தூரி விழாவிற்கு வருவது வழக்கம்.

    கந்தூரி விழாவையொட்டி நேற்று கீழூர் ஜமாத்தின் நிறைபிறை கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று கொடியேற்றம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வருகிற 4-ந் தேதி பச்சை களை ஊர்வலம், 5-ந்தேதி அரண்மனை கொடி ஊர்வலம் வந்து கொடியேற்றம் நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து மேலூர் ஜமாத்தின் பத்தாம் இரவு கொடி ஊர்வலம் கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு சந்தனக்கூடு ஊர்வலம் ரவண சமுத்திரத்தில் இருந்து புறப்பட்டு, 6-ந் தேதி அதிகாலையில் பள்ளிவாசல் வந்தடைகிறது.

    இனாம்தார் எஸ்.பி.ஷா மூலஸ்தானத்தில் சந்தனம் மெழுகுவார். அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு தீப அலங்கார திடலில் தீப அலங்காரம் நடைபெறும். 8-ந் தேதி 14-வது இரவு ராத்திபு ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இனாம்தார் எஸ்.பி.ஷா, வக்கீல் முகமது ரபி, முகமது சலீம் மற்றும் பள்ளிவாசல் மேலாண்மை கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    • 23-ந்தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றுதல் நடக்கிறது.
    • 24-ந்தேதி சிறப்பு துவா மற்றும் நேர்ச்சை வினியோகம் நடைபெறுகிறது.

    நெல்லை மாவட்டம் ஆத்தங்கரை பள்ளிவாசல் ஹசரத் சையதலி பாத்திமா (ரலி) தர்கா கந்தூரி ஆண்டு விழா வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது.

    ஹசரத் சையதலி பாத்திமா (ரலி), கணவர் ஹசரத் சேகு முகம்மது (ஒலி) பெயரால் நடைபெறும் இந்த விழாவில் வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் மறுநாள் (திங்கட்கிழமை) வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    23-ந்தேதி காலை 5.30 மணிக்கு கத்முல் குர்ஆன் தொடக்கம், 7 மணிக்கு குர்ஆன் தமாம் செய்தல் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு இமாம் முகம்மது யூசுப் ஆலிம் தலைமை தாங்குகிறார். காலை 8 மணிக்கு அரண்மனை புலிமான்குளத்தில் இருந்து யானை மீது கொடி, சந்தனக்குடம் தர்காவுக்கு கொண்டு வருதல், 9 மணிக்கு கொடியேற்றுதல் நடக்கிறது.

    10 மணிக்கு சந்தனம் மெழுகுதல் நடைபெறுகிறது. இதில் பரம்பரை டிரஸ்டிகள் வ.நயாஸ் அஹ்மத் பிஜிலி, எச்.ஹபிபுர் ரஹ்மான் பிஜிலி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    மாலை 3.30 மணிக்கு மவ்லூது ஹரீப் ஓதுதல், 5.30 மணிக்கு ராத்திப்புத்துல் காதிரிய்யா திக்ரு மஜ்லிசில் காயல்பட்டினம் எஸ்.ஏ.எம்.சலாஹூத்தீன் பங்கேற்கிறார். இரவு 7.30 மணிக்கு ஹதீஸ் தொடங்குகிறது. இதில் பெட்டைக்குளம் காதர் மீரா சாகிப் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஹாஜி ஹபீலுல் காதர், சென்னை கோடம்பாக்கம் மஸ்ஜிதே ரஹூமா தலைமை இமாம் சதக்கத்துல்லாஹ் பாகவி, மேலப்பாளையம் அலிய்யா அரபிக்கல்லூரி பேராசிரியர் சேக் அப்துல் காதர், நெல்லை மேலச்செவல் சேக் மதார் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைமை இமாம் காஜா ஹூசைன் ஆலிம் உஸ்மானி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    இரவு 12 மணி முதல் டாக்டர் நெல்லை ஜி.எஸ்.அபுபக்கர், டாக்டர் ஏ.ரகிமா பேகம் குழுவினரின் இஸ்லாமிய கச்சேரி நடக்கிறது. 24-ந்தேதி காலை 5.45 மணிக்கு சிறப்பு துவா மற்றும் நேர்ச்சை வினியோகம் நடைபெறுகிறது.

    ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டிகள் வ.நயாஸ் அஹ்மத் பிஜிலி, எச்.ஹபிபுர் ரஹ்மான் பிஜிலி ஆகியோர் செய்துள்ளனர்.

    ×