search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை கார் வெடிப்பு"

    • கார் வெடிப்பு சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக கோவை மாவட்ட பா.ஜ.க அறிவித்திருந்தது.
    • வியாபாரிகள், மக்களின் கோரிக்கையை ஏற்று பா.ஜ.கவினர் தங்களது கடையடைப்பு போராட்டத்தை ஒத்திவைத்தனர்.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந்தேதி கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

    கோவைக்கு வர இருந்த பெரிய ஆபத்தை கோட்டை ஈஸ்வரன் தடுத்து நிறுத்தி விட்டதாகவும், இதற்கு நன்றி கூறும் வகையில் கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க கோவை வருவதாகவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

    இன்று காலை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோவைக்கு வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அவர் கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றார். அவருடன் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சென்றனர். கோவிலில் அண்ணாமலை கோட்டை ஈஸ்வர சுவாமியை பயபக்தியுடன் வழிபட்டார். தொடர்ந்து மக்கள் நலம் பெற வேண்டி நடந்த கூட்டு பிரார்த்தனையிலும் பங்கேற்றார்.

    தொடர்ந்து கோவிலை சுற்றி வந்து அண்ணாமலை பார்வையிட்டார். அப்போது கோவிலின் தல வரலாறு உள்ளிட்ட தகவல்களை பூசாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

    பின்னர் வெளியில் வந்த அவர் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பகுதியை நேரில் பார்வையிட்டார். சம்பவம் குறித்து கோவில் பூசாரிகளிடம் கேட்டறிந்தார்.

    அண்ணாமலை வருகையை முன்னிட்டு அந்த பகுதிக்கு செல்லும் வழிகளில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாடுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. உள்ளூர், வெளிமாவட்ட போலீசார் என 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அந்த வழியாக வருபவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அடையாள அட்டை உள்ளிட்ட உரிய ஆவணங்களை கேட்டு பெற்று ஆராய்ந்து விசாரித்த பின்னரே அந்த பகுதிக்குள் அனுமதிக்கின்றனர்.

    இதுதவிர வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் அந்த பகுதி முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    கார் வெடிப்பு சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக கோவை மாவட்ட பா.ஜ.க அறிவித்திருந்தது. பின்னர் வியாபாரிகள், மக்களின் கோரிக்கையை ஏற்று பா.ஜ.கவினர் தங்களது கடையடைப்பு போராட்டத்தை ஒத்திவைத்தனர்.

    ஏற்கனவே மாவட்ட பா.ஜ.க சார்பில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜ.கவினர் மற்றும் இந்து அமைப்பினர் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் விளக்கேற்றி வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • கோவை கார்வெடிப்பு சம்பவத்தில் கைதான ஒருவருடன் அப்துல்ரசாக் ஒரு முறை பேசியதாக கூறப்படுகிறது.
    • அப்துல்ரசாக்கிடம் விசாரணை நடத்துமாறு திருப்பூர் மாநகர போலீசாருக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    திருப்பூர்:

    கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பலியான ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது தல்கா, அப்சர்கான் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டறிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    இந்தநிலையில் திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் (வயது 32) என்பவரிடம் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி விட்டு விடுவித்தனர்.

    தற்போது கோவை கார்வெடிப்பு சம்பவத்தில் கைதான ஒருவருடன் அப்துல்ரசாக் ஒரு முறை பேசியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அப்துல்ரசாக்கிடம் விசாரணை நடத்துமாறு திருப்பூர் மாநகர போலீசாருக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர போலீசார் இன்று காலை வீட்டில் இருந்த அப்துல்ரசாக்கை விசாரணைக்காக அழைத்து சென்றனர். ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணை முடிவில் அப்துல் ரசாக்கிற்கு கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? இல்லையா? என்பது தெரியவரும். அதன்பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ள உள்ளனர்.

    கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக திருப்பூர் வாலிபரிடம் விசாரணை நடத்தப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டில் ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா? என சோதனையிட்டனர்.
    • வீட்டில் இருந்தவர்களின் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் சில அமைப்புகளைச் சார்ந்தவர்கள் வீடுகளில் தமிழக போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியைச் சேர்ந்த அசல் அலி, மஞ்சகொல்லை பகுதியை சேர்ந்த ஹாரிஸ் முகமது ஆகியோரது வீடுகளில் வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர்.

    வீட்டில் ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா? என சோதனையிட்டனர். வீட்டில் இருந்தவர்களின் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தெரிகிறது. இந்த சோதனையை முன்னிட்டு அப்பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    அசன் அலி மற்றும் ஹாரிஸ் முகமது ஆகியோர் மீது தேசிய புலனாய்வு முகமை பிரிவில் வழக்கு நிலுவையில் உள்ளதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரது வீடு மற்றும் அவர்களது உறவினர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

    • கோவையில் என்.ஐ.ஏ.வுக்கு அலுவலகம் இல்லாததால் கோவை ஆயுதப்படை பயிற்சி மையத்தில் என்.ஐ.ஏ.வுக்கு புதிதாக அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் போலீசாரிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஆவணங்கள், தடயங்கள் உள்ளிட்டவற்றை பரிசோதித்து விசாரணையின் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கினர்.

    கோவை:

    கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 23-ந்தேதி அதிகாலையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தான்.

    போலீசார் நடத்திய விசாரணையில் கோவையில் நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக இறந்த ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களை தனிப்படை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில் இறந்த முபின் மற்றும் கைதானவர்கள் 3 கோவில்களை தகர்க்க ஒத்திகை பார்த்த அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.

    இதுவரை இந்த வழக்கினை கோவை மாநகர போலீசாரால் அமைக்கப்பட்ட 7 தனிப்படை போலீசார் புலன் விசாரணை நடத்தி வந்தனர்.

    தற்போது இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. தென் மண்டலங்களுக்கான டி.ஐ.ஜி.வந்தனா தலைமையிலான அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு போலீசாருடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, இதுவரை விசாரணை நடத்தி வந்த கோவை போலீசார் தாங்கள் சேகரித்த ஆவணங்களை என்.ஐ.ஏவிடம் ஒப்படைத்தனர்.

    கார் வெடிப்பு தொடர்பான அனைத்து ஆவணங்கள், கைதானவர்களிடம் நடத்திய விசாரணையின் அறிக்கைகள், கைப்பற்றப்பட்ட பொருட்கள், தடயங்கள் உள்ளிட்டவற்றையும் ஒப்படைத்தனர்.

    கோவையில் என்.ஐ.ஏ.வுக்கு அலுவலகம் இல்லாததால் கோவை ஆயுதப்படை பயிற்சி மையத்தில் என்.ஐ.ஏ.வுக்கு புதிதாக அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அங்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் போலீசாரிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஆவணங்கள், தடயங்கள் உள்ளிட்டவற்றை பரிசோதித்து விசாரணையின் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கினர்.

    போலீசாரிடம் இருந்து ஆவணங்களை பெற்றுக்கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று தங்களது விசாரணையை தொடங்கினர்.

    இன்று காலை என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் இருந்து காரில், கார் வெடிப்பு சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதிக்கு செல்கின்றனர்.

    அங்கு கார் வெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். பின்னர் கோவிலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்த உள்ளனர்.

    தொடர்ந்து கோவில் மற்றும் வெளிப்புற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, கூடுதல் தடயங்கள் கிடைக்கிறதா? என சோதனை மேற்கொள்ள உள்ளனர்.

    தொடர்ந்து கார் வந்த இடமான உக்கடத்தில் இருந்து கோட்டைமேடு பகுதி வரையிலும் ஆய்வு மேற்கொள்கின்றனர். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரின் வீடுகளுக்கும் சென்றும் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

    மேலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைதான 6 பேரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதுதவிர இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெரோஸ், இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்டு கேரளா சிறையில் இருந்த ரசித் அலி, முகமது அசாருதீனை சந்தித்துள்ளார். இது தொடர்பாக இவர்களை கேரளாவுக்கு அழைத்து சென்று விசாரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    என்.ஐ.ஏ. விசாரணை தொடங்கி உள்ளதால் இந்த வழக்கில் மேலும் புதிய தகவல்கள் கிடைக்கும் என தெரிகிறது.

    • வெடி விபத்து குறித்து மத்திய உள்துறை முன்கூட்டியே எச்சரித்ததாக கூறுவது அபத்தமானது.
    • கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து பொய்யான வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளது.

    சென்னை:

    கோவை கார் வெடிப்பு குறித்து 18-ம் தேதி அன்றே, அதாவது தற்கொலைப்படை தாக்குதல் நடந்ததற்கு 5 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் வாயிலாக, தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், கோவையில் கார் வெடிப்பு நிகழப்போவதாக மத்திய உள்துறை முன்பே எச்சரித்ததாக அண்ணாமலை கூறியது அபத்தமானது. அண்ணாமலை குறிப்பிடுவது உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்ட பொதுவான சுற்றறிக்கை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மேலும், கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து பொய்யான வதந்திகளைப் பரப்ப வேண்டாம். வெடி விபத்து குறித்து மத்திய உள்துறை முன்கூட்டியே எச்சரித்ததாக கூறுவது அபத்தமானது.

    உள்துறை அமைச்சகத்திடம் இருந்து அனுப்பப்பட்டது பொதுவான சுற்றறிக்கையே. குறிப்பிட்ட சுற்றறிக்கையில் கோவை மாநகரை பற்றி எந்த தகவலும் இல்லை.

    வழக்கு விசாரணையில் எந்தவித தாமதமும் ஏற்படவில்லை, சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை போலீசார் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக தெரிவித்தனர்.

    ×