search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை கார் வெடிப்பு"

    • சென்னையில் இன்று மீண்டும் 4 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
    • வேப்பேரி ரித்தர்டன் சாலையில் புகாரி என்பவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

    சென்னை:

    கோவையில் கடந்த மாதம் 23-ந்தேதி கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் வாலிபர் முபின் உயிர் இழந்தார்.

    காரில் சிலிண்டர்கள் மற்றும் வெடி பொருட்களை எடுத்துச் சென்று மிகப்பெரிய தற்கொலை படை தாக்குதலுக்கு முபின் திட்டமிட்டது என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்தது.

    கோவை கார் வெடிப்பு சம்பவம் குண்டு வெடிப்பு சம்பவம் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.

    கார் வெடிப்பு சம்பவத்தின் முழு பின்னணி தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகம் முழுவதும் தொடர் சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் சென்னையிலும் மாநகர போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த 15-ந்தேதி 5 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் வெளிநாட்டு பணம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதனை ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று மீண்டும் 4 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். வேப்பேரி ரித்தர்டன் சாலையில் புகாரி என்பவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. தலைமை செயலக காலனி போலீஸ் எல்லைக்குட்பட்ட ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் பி.பிளாக்கில் உள்ள சாகுல் அமீது வீடு, முத்தியால் பேட்டை பிடாரியார் கோவில் தெருவில் உள்ள உமர் பாரூக் வீடு மற்றும் ஏழு கிணறு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு இடம் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது.

    ஓட்டேரியில் அயனாவரம் உதவி கமிஷனர் ஜவகர் தலைமையிலும், முத்தியால்பேட்டை பகுதியில் உதவி கமிஷனர் லட்சுமணன் தலைமையிலும், சோதனை நடத்தினர்.

    கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனை, விசாரணை ஆகியவற்றில் கிடைத்த தகவலின் பேரிலேயே சென்னையில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையிலேயே கடந்த 15-ந் தேதி சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து 4 நாட்களில் இன்று மீண்டும் சோதனை நடைபெற்று உள்ளது.

    திருச்சி அருகே உள்ள இனாம்குளத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் சாகுல் அமீது, சர்புதீன். இவர்கள் இருவருக்கும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்பு முகமை அறிவுறுத்தலின் பேரில் இன்று அவர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது.

    துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிதாசன் தலைமையில் ராம்ஜிநகர் போலீசார் 50 பேர் இன்று காலை அவர்களின் வீடுகளில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் சாகுல் அமீதுவை ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை அழைத்து சென்று விசாரணை நடத்தியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த சோதனையில் சம்பந்தப்பட்ட இருவரின் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர். மேலும் அவர்களின் வீடுகளில் ஒருசில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிலையில் அவர்களின் பின்னணி மற்றும் சர்வதேச தொடர்புகளை கண்டறிவதற்காகவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் அளிக்கும் தகவலின் பேரில் தொடர் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஐ.எஸ். ஆதரவாளர் என சந்தேகிக்கப்படும் முகமது சப்ரீசின் வீட்டில் இருந்து மேலும் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவைகளை ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
    • ஏழுகிணறு, மண்ணடி, முத்தியால்பேட்டை, வடக்கு கடற்கரை உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் இன்று 5 இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொடுங்கையூர் வள்ளுவர் தெருவில் முகமது சப்ரீஸ் என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 8 செல்போன்கள் சிக்கியுள்ளன.

    முகமது சுப்ரீஸ் மற்றும் அவரது குடும்பத்தினரின் இந்த செல்போன்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    லேப்டாப் ஒன்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். ஐ.எஸ். ஆதரவாளர் என சந்தேகிக்கப்படும் முகமது சப்ரீசின் வீட்டில் இருந்து மேலும் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவைகளை ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதேபோன்று ஏழுகிணறு, மண்ணடி, முத்தியால்பேட்டை, வடக்கு கடற்கரை உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர்.

    இவைகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இன்று சோதனைக்குள்ளான 5 பேரின் வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவர்கள் யார்-யாருடன் தொடர்பில் இருந்தனர் என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் நடந்த வாகன சோதனையில் தாகூர் மீரான், ஜாகிர் உசேன், நவாஸ் ஆகிய 3 பேர் பிடிபட்டனர். இவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய வாசகங்கள் இருந்தன. இவர்களில் தாகூர் மீரானை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

    இதேபோன்று 5 பேரின் வீடுகளிலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இவர்களும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது உறுதியானால் கைது நடவடிக்கை பாயும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    • கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் யார்-யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என கண்டறிந்து அனைவரையும் கைது செய்ய அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன்.
    • தமிழகம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து சந்தேகத்துக்கிடமான நபர்களின் வீடுகளில் தொடர்ச்சியாக சோதனை நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    கோவையில் கடந்த மாதம் 23-ந்தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கார் வெடிப்பில் சிக்கி உயிரிழந்த முபினின் கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இச்சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை கார் வெடிப்பு சம்பவம் குண்டு வெடிப்பு சம்பவம் என அறிவித்துள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் முபின், மிகப்பெரிய தற்கொலை படை தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்ததாக திடுக்கிடும் தகவலையும் வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து கார் வெடிப்பு சம்பவத்தின் பின்னணி குறித்த முழுமையான விசாரணையில் தீவிரம் காட்டி வருகிறார்கள். தமிழக காவல்துறையினருடன் இணைந்து விசாரணை நடந்து வருகிறது.

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் யார்-யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என கண்டறிந்து அனைவரையும் கைது செய்ய அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன்.

    இது தொடர்பாக தமிழகம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து சந்தேகத்துக்கிடமான நபர்களின் வீடுகளில் தொடர்ச்சியாக சோதனை நடைபெற்று வருகிறது.

    கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த முபின் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து முபினை போன்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்களின் வீடுகளை கண்டுபிடித்து போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    அந்த வகையில் சென்னையில் இன்று காலையில் 5 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    சென்னை ஏழுகிணறு, சடையப்ப மேஸ்திரி தெரு, மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெரு, முத்தியால் பேட்டை சைவ முத்தையா தெரு மற்றும் வடக்கு கடற்கரை சாலை பகுதியில் ஒரு இடம் என பூக்கடை துணை கமிஷனர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் 4 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    துணை கமிஷனர் ஆல்பர்ட்வின் தலைமையிலான போலீஸ் காலை 6 மணிக்கு இந்த சோதனையை தொடங்கினர். காலை 8 மணி வரையில் சுமார் 2 மணி நேரம் சோதனை நடைபெற்றது.

    இதே போன்று புளியந்தோப்பு துணை கமிஷனரின் எல்லைக்குட்பட்ட பகுதியான கொடுங்கையூர் வள்ளுவர் தெருவிலும் சோதனை நடத்தப்பட்டது. துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

    கோவை கார்வெடிப்பு சம்பவம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் 43 இடங்களில் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் வட சென்னை பகுதியிலும் ஐ.எஸ். ஆதரவாளர்கள் பலர் இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையிலேயே இன்றைய சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    கொடுங்கையூர் வள்ளுவர் தெருவில் வசித்து வந்த முகமது சப்ரீஸ் என்பவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கி உள்ளன. இதேபோன்று மற்ற இடங்களில் நடத்தப்பட்ட சோதனையிலும் போலீசுக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக கோவை கார் வெடிப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய தகவல்கள் இன்றைய சோதனையின் போது போலீசுக்கு கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னையில் ஐ.எஸ். ஆதரவாளர்களை குறி வைத்து இன்று நடத்தப்பட்ட சோதனையில் மண்ணடி, முத்தியால்பேட்டை, ஏழுகிணறு, கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்பு நிலவியது. சோதனை நடைபெற்ற வீடுகளின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சோதனைக்குள்ளாகி இருக்கும் 5 பேரையும் தொடர்ச்சியாக கண்காணிக்க முடிவு செய்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் பின்னணி தொடர்பாக தமிழகம் முழுவதும் சந்தேக நபர்களின் வீடுகளில் நடத்தப்பட்டு வரும் இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

    கோவை சம்பவம் போன்று வேறு எங்காவது நடந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தீவிரவாத செயல்களுக்கு துணை புரிவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும் எனவும் போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்படுகிறது.

    • 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கும் போது, கார் வெடிப்பு வழக்கில் யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்ற முழு தகவலும் தெரியவரும்.
    • இன்னும் சிலர் சிக்குவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

    கோவை:

    கோவையில் கடந்த 23-ந்தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் முபின் என்ற வாலிபர் உயிரிழந்தார்.

    காரில் சிலிண்டர், ஆணி உள்ளிட்ட பொருட்களை நிரப்பி தீபாவளியை முன்னிட்டு கோவையில் நாச வேலையை அரங்கேற்ற முபின் சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது.

    தற்போது இந்த வழக்கினை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு முபின் மற்றும் கைதானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்களின் வீடுகள் என தமிழகம் முழுவதும் 43 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையின் போது பலரது வீடுகளில் இருந்து செல்போன், டிஜிட்டல் கருவிகள் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்களும் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது.

    தற்போது கைப்பற்றிய ஆவணங்களில் உள்ள விவரங்களின் முழுமையான தகவல்களை சேகரிக்கும் பணியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    முழுமையான தகவல்கள் கிடைத்த பின்னர் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மேலும் சிலர் இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்காக இந்த வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகமது அசாருதீன், முகமது தல்கா, அப்சர்கான், பெரோஸ் இஸ்மாயில், முகமது ரியாஸ், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    காவலில் எடுத்து விசாரிக்கும் போது, அவர்களிடம் இந்த சம்பவத்தில் இவர்கள் மட்டும் தான் ஈடுபட்டார்களா ? வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    மேலும் அவர்களின் வீடுகளில் சோதனை நடத்துவதற்கும் அனுமதி கேட்க உள்ளனர்.

    6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கும் போது, கார் வெடிப்பு வழக்கில் யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்ற முழு தகவலும் தெரியவரும்.

    அப்போது இந்த வழக்கில் இன்னும் சிலர் சிக்குவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

    • 6 பேரும் காவலில் எடுத்து விசாரிக்கப்படும் பட்சத்தில் அவர்களது வீடுகள் மற்றும் சதித்திட்டம் தீட்டிய இடங்களுக்கு அவர்களை நேரில் அழைத்துச் சென்று விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டம் வகுத்துள்ளனர்.
    • கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கேட்கவும் முடிவு செய்துள்ளனர்.

    கோவை:

    கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் முபின் என்ற வாலிபர் பலியானார். முபினுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். முதல்கட்டமாக அவர்கள் கார் வெடித்த கோட்டைமேடு ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து முபின் மற்றும் கைதானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். கோவையில் 33 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 43 இடங்களில் இந்த சோதனை நடந்தது. இதில் சில முக்கிய ஆவணங்கள், செல்போன்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

    அடுத்தக்கட்டமாக கைதான 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் ஒரு கட்டமாக 6 பேரையும் சென்னை அழைத்துச் சென்று பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் மீண்டும் அவர்களை கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    இதையடுத்து காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றால் அதற்கு போதுமான காரணங்கள், ஆதாரங்களை என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். அப்போது தான் காவல் அனுமதி கிடைக்கும். அதனால் அதற்கான ஏற்பாடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    அனேகமாக அவர்கள் நாளை கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய அதிகம் வாய்ப்புள்ளது. அல்லது வியாழக்கிழமைக்குள் காவலில் எடுத்து விசாரித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    6 பேரும் காவலில் எடுத்து விசாரிக்கப்படும் பட்சத்தில் அவர்களது வீடுகள் மற்றும் சதித்திட்டம் தீட்டிய இடங்களுக்கு அவர்களை நேரில் அழைத்துச் சென்று விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டம் வகுத்துள்ளனர். இதற்காக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கேட்கவும் முடிவு செய்துள்ளனர்.

    • சென்னை உள்பட தமிழகம் முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • கோயம்புத்தூர் மக்கள் கடவுளின் கருணையால் காப்பாற்றப்பட்டதாக அண்ணாமலை தகவல்

    சென்னை:

    கோவையில் கார் வெடித்து சிதறியதில் ஜமேஷா முபின் என்ற வாலிபர் பலியானார். இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு, 6 பேர் உபா சட்டத்தின்கீழ் (சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம்) கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடமும், அவர்களது வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று கோவை, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழக பாஜக கடந்த 2 வாரங்களாக கூறுவதை தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) செய்திக்குறிப்பு இன்று மீண்டும் உறுதிப்படுத்தியது. எனவே, திமுக அரசு இனியும் இதை சிலிண்டர் வெடிப்பு என்று சொல்ல முடியாது. பயங்கரவாதி மரணமடைந்த இந்த விபத்து ஒரு தெளிவான 'தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவம்'. இந்த சம்பவத்தை "வெடிகுண்டு வெடிப்பு வழக்கு" என்று என்ஐஏ கூறியுள்ளது.

    சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்ட குற்றஞ்சாட்டக்கூடிய ஆதாரங்களைத் தவிர, கைது செய்யப்பட்ட 6 பேரும் ஜமேஷா முபினுடன் பல தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்காக வாகனங்களில் கொண்டு செல்லும் வெடிகுண்டுகளை தயாரிக்க சதி செய்ததாக என்ஐஏ இன்று உறுதிப்படுத்துகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள 8 மாவட்டங்களில் 43 இடங்களில் என்ஐஏ நடத்திய இன்றைய சோதனைகள், நெட்வொர்க் எவ்வளவு ஆழமாக வேரூன்றி இயங்கியது என்பதை காட்டுகிறது. கோயம்புத்தூர் மக்கள் கடவுளின் கருணையால் காப்பாற்றப்பட்டனர்.

    இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.

    • சென்னை மற்றும் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து வந்த 30-க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள், கோவை மாநகர போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
    • சோதனையின் போது வீடுகளில் இருந்தவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

    கோவை:

    கோவையில் நாச வேலைக்கு திட்டமிட்ட ஜமேஷா முபின் என்ற வாலிபர் கார் வெடித்து சிதறி பலியானார்.

    காரில் வெடி பொருட்களை நிரப்பி கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி தீபாவளிக்கு முந்தைய நாள் மக்கள் நெருக்கம் நிறைந்த இடத்தில் அதனை வெடிக்கச் செய்து பெரும் உயிரிழப்பை ஏற்படுத்த முபின் திட்டமிட்டு இருந்தார்.

    ஆனால் முபின் திட்டம் பலிக்காமல் அவரது சதித்திட்டத்தில் அவரே சிக்கி உயிரிழந்தார். அவரது வீட்டில் இருந்து 75 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்களை போலீசார் கைப்பற்றினர்.

    இது தொடர்பாக போலீசார் அவரது கூட்டாளிகளான முகமது அசாருதீன், முகமது தல்கா, அப்சர்கான், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

    இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு (தேசிய புலனாய்வு முகமை) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

    முதற்கட்டமாக கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடமான கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், கோவில் பூசாரியிடமும் விசாரித்தனர்.

    வழக்கில் கைதான 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த 6 பேரையும் நேற்றுமுன்தினம் சென்னை அழைத்து சென்று பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    கார் வெடிப்பு தொடர்பாக விசாரித்த போது தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக கோவை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 100-க்கும் அதிகமானோர் செயல்படுவது தெரிய வந்தது. இதனால் அவர்களை கண்காணிப்பதுடன் அவர்களின் வீடுகளில் சோதனையிடவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டனர்.

    இந்த நிலையில் சென்னை, கோவை உள்பட தமிழகம் முழுவதும் 45 இடங்களில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காலை 6 மணிக்கு இந்த சோதனை தொடங்கியது.

    கார் வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த ஆதரவாளர்களின் பட்டியல்களை தயாரித்து உளவுத்துறை, என்.ஐ.ஏ.விடம் அளித்து உள்ளது. அதன் அடிப்படையிலேயே தமிழகம் முழுவதும் இன்று இந்த சோதனை நடந்தது.

    கோவையில் கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர், புல்லுக்காடு, ரத்தின புரி, ஜி.எம்.நகர் உள்பட 33 இடங்களில் சோதனை நடந்தது.

    பலியான முபின் மற்றும் கைதான 6 பேரின் உறவினர்கள், நண்பர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்களின் வீடுகள் என 33 இடங்களில் அதிகாலை முதலே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    சென்னை மற்றும் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து வந்த 30-க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள், கோவை மாநகர போலீசாருடன் இணைந்து இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    சோதனையின் போது வீடுகளில் இருந்தவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. வீடுகளில் உள்ள அனைத்து அறைகளிலும் அதிகாரிகள் சல்லடை போட்டு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    வீடுகளில் இருந்த லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு அதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் ஏதாவது தகவல்கள் இருக்கிறதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தினர்.

    சோதனை நடந்த சில இடங்களில் இருந்து அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

    காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனையானது மாலை வரை நீடிக்கும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் இந்த சோதனையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இருப்பினும் சோதனை முடிவிலேயே என்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும்.

    என்.ஐ.ஏ. சோதனை நடந்த இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க அந்த இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சென்னையில் புதுப்பேட்டை, மண்ணடி, பெரம்பூர், ஜமாலியா உள்பட 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நெல்லையில் 2 இடங்களிலும், திருப்பூரில் ஒரு இடத்திலும், மதுரையில் 2 இடத்திலும், கயல்பட்டினத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடந்தது.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திரு முல்லைவாசல் சொக்கலிங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த அல்பாஷித் (22) என்பவர் வீட்டில் சோதனை நடந்தது. காலை 5 மணிக்கு 6 பேர் கொண்ட அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர். அப்போது அல்பாஷித் வீட்டில் தான் இருந்தார். ஆம்புலன்ஸ் டிரைவாக பணியாற்றும் அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது.

    கார் வெடிப்பு தொடர்பாக கோவையில் கைதானவர்கள் வீடுகள் மற்றும் பல இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தி இருந்தனர். தற்போது 2-வது முறையாக என்.ஐ.ஏ. சோதனை நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கார் வெடிப்பு சம்பவத்தின் போது முபின் வைத்திருந்த ஒரு செல்போன் உடைந்து நொறுங்கி விட்டது.
    • முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு செல்போன் போலீசாருக்கு கிடைத்தது. இதேபோல் கைதான மற்றவர்களின் வீடுகளில் இருந்தும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கடந்த மாதம் 23-ந்தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான்.

    போலீஸ் விசாரணையில் முபின் தனது கூட்டாளிகளுடன் கோவையில் நாச வேலைக்கு திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இறந்த முபினின் கூட்டாளிகளான 6 பேரை கைது செய்தனர்.

    முபின் வீட்டில் இருந்து வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் ரசாயனங்கள், ஐ.எஸ். ஆதரவு வாசகங்கள் அடங்கிய பொருட்கள், செல்போன்கள், சிம்கார்டுகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கார் வெடிப்பு வழக்கினை தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த முபின் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

    கோவில்கள் மற்றும் அங்கு நடக்கும் உருவ வழிபாடுகள் மீது முபினுக்கு வெறுப்புணர்வு இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாகவே அவர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுவதற்காக திட்டமிட்டு வந்த தகவலையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

    2019-ம் ஆண்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முபின் வீட்டில் சோதனை நடத்தினர். அதன்பின்னர் அவரை தொடர்ந்து கண்காணிக்க உளவுத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. உளவுத்துறையினரும் அவரை கண்காணித்து வந்தனர்.

    ஆனால் அவர்களின் கண்காணிப்பையும் மீறி அடுத்தடுத்து முபின் 3 வீடுகளுக்கு மாறியதும், இதை மத்திய, மாநில உளவுத்துறையினர் கண்காணிக்க தவறியதும் தெரியவந்தது.

    இந்த நிலையில் போலீசாரின் தொடர் விசாரணையில், முபின் தனது கூட்டாளிகளுடன் பேசுவதற்கு பிரத்யேகமாக செயலி ஒன்றை பயன்படுத்தியது தற்போது தெரியவந்துள்ளது.

    கார் வெடிப்பு சம்பவத்தின் போது முபின் வைத்திருந்த ஒரு செல்போன் உடைந்து நொறுங்கி விட்டது.

    தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு செல்போன் போலீசாருக்கு கிடைத்தது. இதேபோல் கைதான மற்றவர்களின் வீடுகளில் இருந்தும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    பறிமுதல் செய்த செல்போன்களை போலீசார் ஆய்வு செய்த போது, முபின் தனது கூட்டாளிகளுடன் பேசுவதற்காக ஐ.எம்.ஓ. என்ற பிரத்யேக செயலியை பயன்படுத்தியது தெரியவந்தது.

    இந்த செயலியை பயன்படுத்தி இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ளவர்களுடனும் பேசலாம். மேலும் செல்போனில் சிம்கார்டுகளை பயன்படுத்தி பேசினால் ஏதாவது ஒரு வகையில் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்பதை அறிந்து ஐ.எம்.ஓ. எனப்படும் பிரத்யேக செயலியை பயன்படுத்திருக்கலாம்.

    இந்த செயலியில் வீடியோ அழைப்பு, வாய்ஸ் கால் எனப்படும் குரல்பதிவு அழைப்பு, சாட் எனப்படும் எழுத்து பரிமாற்றம் மூலமாகவும் பேச முடியும்.

    இதில் முபின் மற்றும் அவரது கூட்டாளிகள் சாட்களை பயன்படுத்தாமல் வீடியோ, வாய்ஸ் கால் அழைப்புகள் மூலம் பேசி வந்துள்ளனர். இவற்றை ரெக்கார்டு செய்ய முடியாது. மேலும் பேசியவுடன் அந்த தகவல்களை உடனுக்குடன் அழித்தும் உள்ளனர்.

    மேலும் முபின் ஐ.எ.ம்.ஓ. செயலி மூலம் வெளிநாட்டு நபர்களுடன் பேசியிருக்க வாய்ப்புள்ளது. அவர்கள் முபினை மூளைச்சலவை செய்தததுடன், அவருக்கு வெடிபொருட்கள் வாங்க பணம் உதவி செய்திருக்கலாம் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, வாட்ஸ்அப் அழைப்பு, ஐ.எம்.ஓ. போன்ற செயலிகளில் இருதரப்பினரின் ரகசியம் காக்கப்படும் என்பதாலும், போலீசாரால் கண்காணிக்க முடியாது என்பதாலும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

    இதுபோன்ற செயலிகளின் தலைமையை தொடர்பு கொண்டு கேட்டாலும் தகவல்கள் எளிதாக கிடைப்பதில்லை. சட்டவிரோத செயல்களை தடுக்க இதுபோன்ற செயலிகளின் பயன்பாட்டை கண்காணிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுப்பது ஒன்றே தீர்வாகும் என்றனர்.

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கோவையில் யாரெல்லாம் இதுவரை ஆன்லைனில் வெடி பொருட்கள் வாங்கி உள்ளனர் என்ற பட்டியலை தயாரிக்கும் பணியில் போலீசார் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த வழக்கில் கைதான 6 பேரும் நாளை சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

    இதற்காக இன்று 6 பேரும் கோவை மத்திய ஜெயிலில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். நாளை காலை என்.ஐ.ஏ. கோர்ட்டில் 6 பேரும் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

    அதன்பின்னர் அவர்கள் 6 பேரும் புழல் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது.

    இதையடுத்து என்.ஐ.ஏ. கோர்ட்டில் அனுமதி பெற்று கைதான 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும், அவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    • கோட்டைமேடு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த முபின் அங்குள்ள புத்தக கடையில் வேலைக்கு சேர்ந்தார்.
    • முபினுக்கு 2 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு முபின் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரிடமும் பேசுவதில்லை.

    கோவை:

    கோவை கோட்டைமேட்டில் கடந்த 23-ந்தேதி கார் சிலிண்டருடன் வெடித்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் தினமும் புதுப்புது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் முபின் தனது மனைவியிடம் வெடி பொருட்களை பழைய துணி என கூறி ஏமாற்றிய தகவலும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த முபின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். படித்து முடித்ததும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.

    அப்போது வீட்டில் அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்த போது, ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.

    அதன்படி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவை அல் அமீன் காலனியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான நஸ்ரத்தை(23) முபின் திருமணம் செய்து கொண்டார்.

    பின்னர் கோட்டைமேடு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த அவர் அங்குள்ள புத்தக கடையில் வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு 2 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு முபின் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரிடமும் பேசுவதில்லை.

    இந்த நிலையில் திடீரென தான் வேலை பார்த்து வந்த புத்தக கடை வேலையை முபின் விட்டு விட்டார். இதுகுறித்து நஸ்ரத் கணவரிடம் கேட்டதற்கு, தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் தன்னால் வேலை பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்து வீட்டில் இருந்தார்.

    ஆனால் கடந்த சில மாதங்களாக முபின் வீட்டில் இருக்காமல் வெளியில் சென்றதால் ஏதாவது வேலை பார்க்கிறீர்களா என விசாரித்துள்ளார். அப்போது தான் தேன் மற்றும் நறுமண பொருட்கள் விற்பனை செய்வதாகவும், நாட்டு மருந்து கடையில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு முபின் தனது மனைவியிடம் நாம் வேறு வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார்.

    அதன்படி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து மனைவி, குழந்தைகளுடன் குடியேறி உள்ளார். அப்போது முபின் வீட்டிற்குள் 4 பெட்டிகளை எடுத்து வந்தார். இதனால் நஸ்ரத்துக்கு சந்தேகம் ஏற்படவே எதற்காக இந்த 4 பெட்டிகள். அதில் என்ன உள்ளது என கேட்டுள்ளார். அதற்கு முபின், இந்த பெட்டிகளில் பழைய துணிகள் தான் உள்ளது என கூறியுள்ளார்.

    ஆனால் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பிறகே அந்த பெட்டிகளில் வெடி மருந்து இருந்த தகவல் நஸ்ரத்துக்கு தெரிய வந்துள்ளது.

    கடந்த மாதம் 20-ந்தேதி, முபினின் மனைவி நஸ்ரத்துக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    முபின் எப்போதும் யாரிடமும் பேசாமல் தனியாகவே இருப்பார். மேலும் எந்நேரமும் செல்போனில் ஏதாவது பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

    ஆனால் சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு நஸ்ரத்தின் வீட்டிற்கு சென்ற முபின் வழக்கத்திற்கு மாறாக அனைவரிடமும் சகஜமாக பேசியுள்ளார். மேலும் குடும்பத்தினர் அனைவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டும் உள்ளார்.

    அன்று மாலையே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியில் சென்று உள்ளார். அப்போது குழந்தைகளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றையும் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டு, முபின் மட்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

    சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு தண்ணீரை சேமிப்பதற்கு டிரம் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார். அப்போது 3 நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

    22-ந் தேதி இரவு நஸ்ரத் கணவருக்கு எப்போது வீட்டிற்கு வருவாய் என மெசேஜ் அனுப்பினார். அதற்கு நாளை வருவதாக கூறியுள்ளார். அப்போது நஸ்ரத் குழந்தைகள் உன்னை தேடுகின்றனர். வீடியோ காலிலாவது பேசு என மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதன்பின்னர் முபின் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் முபினை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிகிறது. இதுவே முபின் அவரது மனைவியிடம் கடைசியாக பேசியது. ஆனால் தற்போது வரை முபினுக்கு என்ன நடந்தது என்று அவரது குழந்தைகளுக்கு தெரியவில்லை.

    மேலும் முபின் சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு வீட்டிற்கு சென்று உடல் முழுவதும் முடிகளை மழித்து அகற்றி சேவ் செய்து விட்டு, தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி விட்டு வேறு சட்டை அணிந்து கொண்டு காரில் வெடிபொருட்களுடன் சதி திட்டத்தை நிறைவேற்ற புறப்பட்டதும் தெரியவந்தது.

    பொதுவாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்கள் தான் தங்கள் திட்டத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு உடல் முழுவதும் உள்ள முடிகளை முழுமையாக மழித்து சேவ் செய்வர். முபினும் அது போன்று செய்துள்ளது போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இதுதொடர்பாகவும் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

    இந்த நிலையில் ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்தியபோது அவரது வீட்டில் இருந்து 'சிலேட்' ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த சிலேட் தொடர்பான தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன. அந்த சிலேட்டில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் அரபு மொழியில் சில வாசகங்கள் இருந்தன.

    மேலும் தமிழ்மொழியில் எழுதப்பட்டிருந்த வாசகத்தில், 'அல்லாவின் இல்லத்தின் மீது கைவைத்தால் வேரறுப்போம்' என்று கூறி இருந்தார். மேலும் முபின் வெள்ளைத்தாளில் எழுதிய வாசகங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள்.

    அதில் ஒரு தாளில், 'ஜிகாத்தின் கடமைக்கான அழைப்பு' என்று எழுதி இருந்தார். மேலும் 'புனிதப் போரை நடத்துவது இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் கடமை' என்றும் எழுதி இருந்தார். இந்த வாசகங்கள் ஜமேஷா முபின் தனது கைப்பட எழுதியுள்ளதாக தெரிகிறது. எனவே முபின் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்பது உறுதியாகி உள்ளது.

    இதற்கிடையே கோவையில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் என சந்தேகப்படும் 900 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அவர்களின் பெயர் விவரங்கள் கொண்ட பட்டியலையும் சேகரித்துள்ளனர். அந்த பட்டியலை வைத்து அவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு கிஷோர் கே.சுவாமி என்பவர் இரு தரப்பினருக்கிடையே மோதலை உருவாக்கும் வகையிலான கருத்துக்களை தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
    • கோவை சைபர் கிரைம் போலீசார் கிஷோர் கே.சுவாமி என்பவர் மீது 153 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    கோவை:

    கோவையில் கடந்த 23-ந்தேதி உக்கடம் கோட்டைமேடு பகுதியில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக அளவில் பரபரப்பு ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கிஷோர் கே.சுவாமி என்பவர் இரு தரப்பினருக்கிடையே மோதலை உருவாக்கும் வகையிலான கருத்துக்களை தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

    இதுபற்றி கண்காணித்து வந்த கோவை சைபர் கிரைம் போலீசார் கிஷோர் கே.சுவாமி என்பவர் மீது 153 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இவர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவை நகரில் உள்ள சில அமைப்புகளின் தரவுகளை சேகரிக்கும் பணியில் மாநகர போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
    • 25 கேள்விகள் அடங்கிய கேள்விதாள் தயாரிக்கப்பட்டு சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் கொடுக்கப்பட்டு அதற்கான பதில்கள் பெறப்பட்டு வருகிறது.

    கோவை:

    கோவையில் கடந்த மாதம் 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பில் ஜமேஷா முபின் உயிரிழந்தான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றதில் இருந்து தற்போது வரை தமிழகம் முழுவதும் 137 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    கோவையில் நேற்று மட்டும் எஸ்.டி.பி.ஐ. மற்றும் த.மு.மு.க. பிரமுகர்கள் வீடு உள்ள 18 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.

    கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் அனுதாபிகள், ஆதரவாளர்கள், சந்தேகத்திற்கு இடமானவர்கள் என 900 பேரை போலீசார் கண்டறிந்துள்ளனர். அது தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இவர்கள் அனைவரும் போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்களை தொடர்ந்து கண்காணிக்கும் பணியையும் போலீசார் தொடங்கி உள்ளனர்.

    இந்த பட்டியல் அடிப்படையில் இவர்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் இவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்துவதற்கு தேவையான அனைத்து பணிகளும் போலீஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனிடையே கோவை நகரில் உள்ள சில அமைப்புகளின் தரவுகளை சேகரிக்கும் பணியில் மாநகர போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 25 கேள்விகள் அடங்கிய கேள்விதாள் தயாரிக்கப்பட்டு சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் கொடுக்கப்பட்டு அதற்கான பதில்கள் பெறப்பட்டு வருகிறது.

    அதில் பெயர், முகவரி, கல்வி தகுதி, சமூக வலைதள கணக்குகள், வங்கி கணக்குகள் என பல விதமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதேபோன்று கோவை புறநகர் பகுதிகளிலும் தரவுகள் தயாரிக்கப்பட இருக்கின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோட்டைமேடு பகுதியில் உள்ள அனைத்து செல்போன் கோபுரங்களிலும் கார் வெடிப்பு சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக பதிவான செல்போன் எண்களின் விபரமும் சேகரிக்கப்பட்டுள்ளது.
    • செல்போன் எண்களின் உரிமையாளர்கள் விபரம், அவர்கள் பின்னணி குறித்து விசாரிக்கப்படுகிறது.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந்தேதி நடந்த கார் வெடிப்பில் ஜமேஷா முபின்(29) என்பவர் உயிரிழந்தார்.

    விசாரணையில், முபின் தனது கூட்டாளிகளுடன் கோவையில் நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து முபினுடன் தொடர்பில் இருந்த அவரது கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது என்.ஐ.ஏ. போலீசார் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று என்.ஐ.ஏ அதிகாரிகள் இறந்த முபின் வசித்த கோட்டைமேடு, கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இறந்த முபின் கோட்டைமேடு பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். அவர் வசித்த வீடு, கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்து 350 மீட்டர் தொலைவில் உள்ளது.

    கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு முன்பு முபின் பல முறை அந்த பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். இதனால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முபினின் வீட்டில் இருந்து கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதி வரை உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் இறந்த முபினின் நடமாட்டம் குறித்தும், முபின் காரில் எத்தனை முறை அவரது வீட்டில் இருந்து கோவில் வரை சுற்றி திரிந்துள்ளார். காரில் அவர் மட்டும் சுற்றி திரிந்தாரா? அல்லது அவருடன் வேறு யாராவது இருந்தார்களா? என்பதையும் கண்காணிப்பு கேமிராவை பார்த்து போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த வீடியோ ஆதாரங்களையும் சேகரித்துள்ளனர். மேலும் ஹார்டு டிஸ்க்குகளையும் என்.ஐ.ஏ. போலீசார் கைப்பற்றி சென்றனர்.

    இறந்த முபினின் செல்போனை போலீசார் கைப்பற்றியுள்ளனர். தற்போது அந்த செல்போனில் முபின் பதிந்து வைத்திருந்த செல்போன் நம்பர்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதில் அவர் யார்-யாரிடம் அடிக்கடி போன் பேசியுள்ளார்? என்ற தகவல்களையும் சேகரித்து வருகின்றனர். அவருடன் செல்போனில் தொடர்பில் இருந்த அனைவரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அவர்களிடம் முபின் குறித்தும், கார் வெடிப்பு சம்பவம் குறித்து உங்களுக்கு தெரியுமா? அது தொடர்பாக ஏதாவது உங்களிடம் முபின் பேசினாரா? என பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர். அவர்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்கள் அனைத்தையும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    அவர்கள் கூறிய தகவல்களை போலீசார் வீடியோ மற்றும் ஆடியோவாக பதிவும் செய்து கொண்டனர். தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதவிர கோட்டைமேடு பகுதியில் உள்ள அனைத்து செல்போன் கோபுரங்களிலும் கார் வெடிப்பு சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக பதிவான செல்போன் எண்களின் விபரமும் சேகரிக்கப்பட்டுள்ளது. செல்போன் எண்களின் உரிமையாளர்கள் விபரம், அவர்கள் பின்னணி குறித்து விசாரிக்கப்படுகிறது.

    கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்துவதற்கு தேவையான வெட பொருட்களை வாங்குவதற்கு முபினுக்கு ஆன்லைன் மூலம் பணம் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. இதற்கான ஆதாரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    இதையடுத்து போலீசார் ஜமேஷா முபின் மற்றும் கைதான 6 பேரின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது.

    அவர்களுக்கு யார்-யார் பணம் அனுப்பி உள்ளனர். எந்த வங்கி கிளையில் இருந்து பணம் அனுப்பப்பட்டுள்ளது. பணம் அனுப்பியவர்களின் விவரங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களது உறவினர்களின் வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதில் ஏதாவது பணபரிமாற்றம் நடந்துள்ளதா? என்பது குறித்து என்.ஐ.ஏ. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வெளிநாடுகளில் இருந்தும் இவர்களுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

    ×