search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் சீல்"

    • மேல்பாதி கிராமத்தில் பழமை வாய்ந்த தர்மராஜா, திரவுபதியம்மன் கோவில் உள்ளது.
    • கோவிலை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    விழுப்புரம்:

    மேல்பாதியில் 2-வது நாளாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் பழமை வாய்ந்த தர்மராஜா, திரவுபதியம்மன் கோவில் உள்ளது.

    இங்கு கடந்த ஏப்ரல் மாதம் 7-ந் தேதி நடை பெற்ற திருவிழாவில் பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வழிபட அனுமதிக்கப்படவில்லை. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த இரு சமுதாய மக்களிடையே பிரச்சினை உருவானது.

    கோவிலில் வழிபாடு மேற்கொள்ள தங்களையும் அனுமதிக்க வேண்டும் என பட்டியலின மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இரு தரப்பை சேர்ந்தவர்களும் போலீசில் புகார் அளித்தனர்.

    இதனை தொடர்ந்து விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 5 முறையும், மாவட்ட கலெக்டர் தலைமையில் 3 முறையும் பல்வேறு கட்டங்களில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதில் தீர்வு காணப்படவில்லை.

    இதனால் கிராமத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய் துறையினர் நேற்று காலை தர்மராஜா, திரவுபதியம்மன் கோவிலை பூட்டி சீல் வைத்தனர்.

    அங்கு அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கோவிலை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    மேலும் கோவில் அமைந்துள்ள பகுதியில் 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் கோவில் அருகில் இரு தரப்பினரும் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

    இன்று 2-வது நாளாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை (வெள்ளிக் கிழமை) காலை 10 மணியளவில் இரு தரப்பினரும் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை எழுத்து பூர்வமாக உரிய ஆவணங்களுடன் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் பின்னர் 2-ம் கட்டமாக விசாரணை நடத்தப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×