search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொசஸ்தலை ஆறு"

    • கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் 20 கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
    • முதியவர்கள், பெண்கள், வேலைக்கு செல்பவர்கள் என பலதரப்பட்ட மக்களும் மிகவும் அவதியுற்று வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    வடகிழக்கு பருவமழையின் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆறு, ஏரி, குளங்கள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் அருகே விடையூர்-கலியனூர் இடையே செல்லும் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மேல்விளாகம், கலியனூர், கலியனூர் காலனி, மணவூர், நெமிலியகரம், குப்பம் கண்டிகை, இராஜபத்மாபுரம், மருதவல்லிபுரம், ஒண்டிகுடிசை, சின்னம்மாபேட்டை, ஜாகீர் மங்கலம், பழையனூர், காபுல் கண்டிகை, உள்ளிட்ட 13 கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் 20 கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

    விடையூர் கலியனூர் இணைக்கும் வகையில் கடந்த 2016- 017-ம் ஆண்டு ரூ.3 கோடி 60 லட்சம் திட்டம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த மேம்பால பணி கடந்த 5 ஆண்டுகளாக பாதியில் நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டு உள்ளது. தற்போது கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்கள் விடையூர் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு ஆற்றின் குறுக்கே பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மேம்பால ஏணியில் ஏறி ஆபத்தான முறையில் சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் முதியவர்கள், பெண்கள், வேலைக்கு செல்பவர்கள் என பலதரப்பட்ட மக்களும் மிகவும் அவதியுற்று வருகிறார்கள்.

    வருடா வருடம் பருவமழை காலங்களில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் 13 கிராமங்கள் துண்டிக்கப்படுவதும், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், வேலைக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கி வருவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இத்தகைய அவல நிலையை போக்க கிடப்பில் போடப்பட்டுள்ள மேம்பாலத்தை அரசு விரைந்து முடித்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மழை மேலும் தீவிரம் அடைந்தால் அம்மப்பள்ளி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும்.
    • கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து, வெள்ளப்பெருக்கை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    திருத்தணி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலையும் நீடித்து வருகிறது.

    சென்னையில் இன்று காலை பலத்த மழை கொட்டியது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீடிக்கிறது. ஆந்திராவிலும் கனமழை கொட்டி வருகிறது.

    ஆந்திர பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சித்தூர் மாவட்டம் கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அம்மப்பள்ளி அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 33 அடி உயரம் உள்ள இந்த அணை முழுவதும் நிரம்பியது.

    இந்த நிலையில் மழை நீடித்து வருவதால் அம்மப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளது.

    இதையடுத்து அம்மப்பள்ளி அணையில் இருந்து 200 கன அடி உபரி நீர் 2 மதகுகள் வழியாக திறக்கப்பட்டு உள்ளது.

    இந்த தண்ணீர் தமிழக எல்லையில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் பாய்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    கொசஸ்தலை ஆற்றில் அதிகம் தண்ணீர் பாயும்போது திருத்தணி அருகே உள்ள சமந்தவாடா, நெடியம், கனகம்மாசத்திரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள தரைப்பாலங்கள் மூழ்கும். எனவே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பா லங்களை பொதுமக்கள் கடக்கும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    வழக்கமாக அம்மப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பள்ளிப்பட்டு, சமந்தவாடா, நெடியம், திருத்தணி பகுதி வழியாக கொசஸ்தலை ஆற்றில் பாய்ந்து பூண்டி ஏரிக்கு வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மழை மேலும் தீவிரம் அடைந்தால் அம்மப்பள்ளி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று தெரிகிறது. இதையடுத்து கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து, வெள்ளப்பெருக்கை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    கொசஸ்தலையாறு ஆற்றுப்படுகை மற்றும் கொசஸ்தலையாறு ஆகிய இரண்டும் மாநிலங்களுக்கு இடையே உள்ளன.

    சென்னை:

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள முக்களகண்டிகை மற்றும் கதரப்பள்ளி கிராமங்களுக்கு அருகில் கொசஸ்தலையாற்றின் குறுக்கே இரண்டு அணைகள் கட்ட ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் ஆற்று நீரை நம்பி வாழும் மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    கொசஸ்தலையாறு ஆற்றுப்படுகை மற்றும் கொசஸ்தலையாறு ஆகிய இரண்டும் மாநிலங்களுக்கு இடையே உள்ளவை என்பது தாங்கள் அறிந்ததே. மாநிலங்களுக்கு இடையேயான நதியாக இருப்பதால், கீழ் கரையோர மாநிலத்தின் அனுமதியின்றி, கொசஸ்தலையாற்றின் குறுக்கே மேல் கரையோர மாநிலம் எந்த புதிய கட்டமைப்பையும் திட்டமிடவோ, ஒப்புதல் அளிக்கவோ, கட்டவோ முடியாது.

    கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை கட்டுவதற்காக ஆந்திர அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீர் வழங்கலைப் பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, இவ்வாறு அணைகள் கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துங்கள்.

    இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • மொன்னவேடு-ராஜபாளையம் ஆகிய 2 கிராமங்களையும் இணைக்கும் விதமாக கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கடந்த 2020-ம் ஆண்டு சுமார் 13.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது.
    • பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்கள் இறையூர், மொன்னவேடு, மெய்யூர், ராஜபாளையம்.

    இந்த கிராமங்களுக்கு இடையே கொசஸ்தலை ஆறு ஓடுகிறது. இப்பகுதி மக்கள் கொசஸ்தலை ஆற்றை கடந்து தான் மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும். மேலும் அங்கிருந்த தரைப்பாலம் கடந்த 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தின் போது சேதமடைந்தது.

    இதையடுத்து அப்பகுதியில் தற்காலிக பாலம் அமைத்து கிராமமக்கள் பயன்படுத்தி வந்தனர். கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது இறையூர், மொன்னவேடு உள்ளிட்ட கிராமமக்கள் சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றி செல்லும்நிலை உள்ளது.

    இந்த நிலையில் மொன்னவேடு-ராஜபாளையம் ஆகிய 2 கிராமங்களையும் இணைக்கும் விதமாக கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கடந்த 2020-ம் ஆண்டு சுமார் 13.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது.

    இந்த பாலம் கட்டும் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறும் பணிகள் இன்னும் முடியவில்லை. இதனால் பள்ளி மாணவிகளும், பொதுமக்களும் ஆற்றுக்குள் இறங்கி செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது.

    மேலும் கட்டுமானப்பணிகள் நடைபெறுவதால் பாலத்தின் ஓரத்தில் ஆற்றுக்குள் கிடக்கும் இரும்பு கம்பிகள் குத்தி பலர் காயம் அடைவதாகவும், வாகனங்கள் பழுது ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

    எனவே பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×