search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிக்கெட் வீராங்கனை"

    • உடலில் காயங்கள் மற்றும் கண்கள் சேதமடைந்து இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
    • போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

    புவனேஸ்வர்:

    ஒடிசாவைச் சேர்ந்த பெண் கிரிக்கெட் வீராங்கனை ராஜஸ்ரீ ஸ்வைன் என்பவர், கடந்த 11ம் தேதி முதல் காணாமல் போனதாக அவரது பயிற்சியாளர் கட்டாக்கில் உள்ள மங்களபாக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் போலீசார், ராஜஸ்ரீயை தேடி வந்தனர். இந்நிலையில், கட்டாக் நகருக்கு அருகே அதாகர் பகுதியில் உள்ள குருதிஜாதியா வனப்பகுதியில் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கட்டாக் காவல் துணை ஆணையர் பினாக் மிஸ்ரா தெரிவித்தார். அவரது மரணத்திற்கான காரணத்தை போலீசார் இன்னும் கண்டறியவில்லை. எனினும், உடலில் காயங்கள் மற்றும் கண்கள் சேதமடைந்து இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

    மேலும், அவரது ஸ்கூட்டர் வனப்பகுதியில் கிடந்ததுடன், அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிக்காக பஜ்ரகபட்டி பகுதியில் ஒடிசா கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி முகாமில் ராஜஸ்ரீ உட்பட சுமார் 25  கிரிக்கெட் வீராங்கனைகள் பங்கேற்றதாகவும், இவர்கள் அனைவரும் அப்பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்ததாகவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

    ஒடிசா மாநில மகளிர் கிரிக்கெட் அணி ஜனவரி 10ஆம் தேதி அறிவிக்கப்பட்ட போது ராஜஸ்ரீ இறுதிப் பட்டியலில் இடம் பெறவிவில்லை. மறுநாள், ராஜஸ்ரீ தனது தந்தையை சந்திக்க பூரிக்கு செல்வதாக தனது பயிற்சியாளரிடம் தெரிவித்துவிட்டு சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    போலீசார், தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். ராஜஸ்ரீ ஸ்வைனின் குடும்பத்தினர், ஒடிசா கிரிக்கெட் சங்கம் (ஓசிஏ) மற்றும் மகளிர் அணியின் பயிற்சியாளர் புஷ்பாஞ்சலி பானர்ஜி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

    ×