search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஞ்சிபுரம் கலெக்டர்"

    • சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.48 ஆயிரத்து 710 மதிப்பில் இஸ்திரி பெட்டிகளை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.
    • வாலாஜாபாத் வட்டத்தை சார்ந்த 2 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 208 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் வட்டம், நெமிலி கிராமத்தை சார்ந்த நரிக்குறவர் இன 38 குடும்பங்களுக்கு ரூ.54 லட்சத்து 29 ஆயிரத்து 710 மதிப்பில் இலவச பட்டாக்களையும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.48 ஆயிரத்து 710 மதிப்பில் இஸ்திரி பெட்டிகளையும், வாலாஜாபாத் வட்டத்தை சார்ந்த 2 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும் கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் பிரகாஷ் வேல் கலந்து கொண்டனர்.

    • சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.
    • சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது.

    காஞ்சிபுரம்:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்ட சிலைகளை கரைப்பதற்கு சர்வதீர்த்த குளம் பொன்னேக்கரை ஆகிய 2 இடங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் ரசாயனம் இல்லாத விநாயகர் சிலைகளை பயன்படுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.

    களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

    சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

    ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள் பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

    சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதீர்த்த குளம் மற்றும் பொன்னேரி கரை ஆகிய இடங்களில் மட்டுமே தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

    மாவட்ட கலெக்டர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை மேலும் விவரங்களுக்கு அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
    • காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் மற்றும் சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சியிலும் தூய்மை பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய 274 கிராம ஊராட்சிகளில் எழில்மிகு கிராமங்களை உருவாக்கிட "நம்ம ஊரு சூப்பரு" சிறப்பு முனைப்பு இயக்கம் வருகிற 1.10.2022 வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆர்த்தி இதனை தொடங்கி வைத்தார்.

    அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் மற்றும் சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சியிலும் தூய்மை பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

    பின்னர் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், அனைத்து துறை அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுடன் "நம்ம ஊரு சூப்பரு" விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது தூய்மை கிராம உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, மகளிர் திட்ட அலுவலர் செல்வராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மணிமாறன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன் மற்றும் வரதராஜன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் திவ்ய பிரியா வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி கலந்து கொண்டனர்.

    • அடையாறு ஆற்றில் வரதராஜபுரம் தடுப்பணை, அடையாறு ஆற்றின் கிளையாற்றில் சோமங்கலம் கதவணை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.
    • வெள்ளத்தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    காஞ்சிபுரம்:

    கடந்த 2015-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது பெய்த கனமழையால் அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளான ஆதனூர், வரதராஜபுரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இதையடுத்து அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளில் மீண்டும் வெள்ளநீர் சூழாமல் இருக்க வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அடையாறு ஆற்றின் கிளைக்கால்வாய்கள் தூர்வா ரப்பட்டு சீரமைக்கப்பட்டது.

    அடையாறு ஆற்றுக்கு அதிகப்படியான மழைநீர் வருவதை தடுக்கும் வகையில், குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரத்தூர் பகுதியில் ஒரத்தூர் மற்றும் ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து நீர் தேக்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அடையாறு ஆற்றில் வரதராஜபுரம் தடுப்பணை, அடையாறு ஆற்றின் கிளையாற்றில் சோமங்கலம் கதவணை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.

    இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு ஆற்றில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகளையும், வரதராஜபுரம் பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் அடையாறு ஆற்றை அகலப்படுத்தவும் வரதராஜபுரம் புவனேஷ்வரி நகர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம், வரதராஜபுரம் பகுதியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மூடிய வெள்ள வடிகால் வாய்கள் அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், வெள்ளத்தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சைலேந்திரன், நீா்வளத்துறை செயற்பொறியாளர் செல்வ ராஜ், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அருண், நீா்வளத்துறை உதவி பொறியாளர் குஜராஜ் உடன் இருந்தனர்.

    • கலெக்டர் மா.ஆர்த்தி தேசியக்கொடி ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
    • கீழ்கதிர்பூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி பங்கேற்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி தேசியக்கொடியை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கீழ்கதிர்பூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள அண்ணல் காந்தியடிகள் உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் நடைபெற்ற சமபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி கலந்துகொண்டு, பொதுமக்களுடன் உணவருந்தினார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

    • இணை மானிய திட்டம் தொடர்பான வழிகாட்டி நெறிமுறை கையேட்டை காஞ்சிபுரம் கலெக்டர் வெளியிட்டு பேசினார்.
    • மின்னணு பணபரிவர்த்தனைகள் போன்ற சேவைகள் வழங்கி இணை மானிய திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் வங்கியாளர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்களுக்கு இணை மானிய திட்டம் குறித்த கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் இணை மானிய திட்டம் தொடர்பான வழிகாட்டி நெறிமுறை கையேட்டை வெளியிட்டு பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில்:-

    தமிழக அரசு உலக வங்கி நிதி உதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறையின் மூலம் செயல்படுத்தி வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஊரக பகுதிகளில் தொழில் முனைவோர்களை உருவாக்குதல், நிதி சேவைக்கு வழிவகுத்தல் மற்றும் நிலையான வேலை வாய்ப்பினை உருவாக்குதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாக கொண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 101 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் தனிநபர் மற்றும் குழு தொழில்களுக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதம் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கும் இணை மானிய திட்டம் என்ற செயல்பாடு செயல்படுத்தப்பட உள்ளது.

    மேலும் தொழில் புரிய ஆர்வமுள்ளவர்களை கண்டறிந்து வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள மகளிர் வாழ்வாதார சேவை மையம் மூலம் தொழில் முனைவோருக்கான ஆலோசனை வழங்குதல், தொழில் திட்டம் மற்றும் முன்மொழிவு தயார் செய்திட உதவி செய்தல், தொழில் தொடங்க தேவையான பதிவு சான்றுகள் மற்றும் ஆவணங்கள் பெற்று தருதல், மற்றும் மின்னணு பணபரிவர்த்தனைகள் போன்ற சேவைகள் வழங்கி இணை மானிய திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது.

    மேலும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் வழங்கப்படும் இணைமானிய திட்டத்தை ஊரக பகுதிகளில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு வங்கி கடன் வழங்கி ஊரக பகுதிகளில் தொழில் வளம் மற்றும் வேலைவாய்ப்பை பெருக்கிட வங்கியாளர்கள் தொழில் முனைவோருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் செயல் அலுவலர் தினகர் ராஜ்குமார், முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வெங்கடேசன், மகளிர் திட்ட அலுவலர் செல்வராஜ் மற்றும் வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கையில் கிடைக்கும் மாற்றுப் பொருட்களை பயன்படுத்த வேண்டும்
    • தொழிற்சாலைகள் தங்கள் வளாகத்திற்குள் இயன்றவரை மரக்கன்றுகளை வைக்க வேண்டும்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 5 சிப்காட், 2 சிட்கோ தொழிற் பூங்கா மற்றும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் 10 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுடன் இயங்கி வருகின்றன.

    அதிவேக தொழில் வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கல் காரணமாக, மாவட்டத்தில் உள்ள குளம், ஏரி, ஊரணிகளில் இருந்து தொழிற்சாலைகளின் நீர் தேவைகளுக்காக தண்ணீர் எடுக்கப்படுகின்றன. மேலும் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகின்றது.

    கடந்த ஆண்டு அதிகபடியான மழையால் காஞ்சீபுரம் மாவட்டம் பெரும் வெள்ளத்தை சந்தித்தது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தங்குவதற்கு இடம் மற்றும் மருத்துவ வசதிகள் தொழில் நிறுவனங்களின் உதவியுடன் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுத்தியது.

    மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், அனைத்து உள்ளாட்சித்துறை அலுவலர்களுடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    நீர்நிலைகளை மறுசீரமைத்தல் தொடர்பான இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி பேசியதாவது:-

    தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கையில் கிடைக்கும் மாற்றுப் பொருட்களை பயன்படுத்தவேண்டும்.

    மஞ்சப்பை போன்ற துணிப்பைகளின் பயன்பாட்டை அதிகபடுத்த வேண்டும். தொழிற்சாலைகள் தங்கள் வளாகத்திற்குள் இயன்றவரை மரக்கன்றுகளை வைத்து பசுமைபோர்வையை அதிகப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள் தங்கள் தொழிற்சாலையில் உருவாகும் திடக்கழிவுகளை திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் படி முறையாக கையாளவேண்டும்.

    தொழிற்சாலைகள் தங்கள் தொழிற்சாலையின் அருகில் உள்ள குடியிருப்புகளில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசியகொடியை வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். தொழிற்சாலைகள் அருகில் உள்ள நீர் நிலைகளை புதுப்பித்து பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆய்வு கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவர்களுக்கு பல்வேறு கடன் திட்டங்கள் வாயிலாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவர்களுக்கு பல்வேறு கடன் திட்டங்கள் வாயிலாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    தனிநபர் கடன் திட்டம், மகளிருக்கான புதிய பொற்கால கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கறவை மாடு கடன் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழ்கண்ட தேதிகளில் நடைபெற உள்ளது.

    வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று வட்டாட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் 26-ந்தேதி (செவ்வாய்கிழமை) அன்று வட்டாட்சியர் அலுவலகம், வாலாஜாபாத் 27-ந்தேதி (புதன்கிழமை) அன்று வட்டாட்சியர் அலுவலகம், ஸ்ரீபெரும்புதூர் 28-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று வட்டாட்சியர் அலுவலகம், குன்றத்தூர் 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று வட்டாட்சியர் அலுவலகம், உத்திரமேரூரில் முகாம் நடைபெறுகிறது.

    எனவே மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்கள் (கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின்) சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • எம்.பி.சி., எம்.சி.எம்., ஒ.பி.சி., ஒ.சி. பிரிவினர் 40 வயத்திற்குட்பட்டவராகவும், எஸ்.சி., எஸ்.சி.ஏ, எஸ்.டி. பிரிவினர் 45 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின்கீழ் 10-ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, (மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரை 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ரூ.600), 12-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400 (மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரை ரூ.750) மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600 (மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரை ரூ.1000) வீதம் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டு மைய அலுவலகத்தில் மேற்காணும் கல்வித் தகுதிகளை பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். (மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரை ஓராண்டு நிறைவு பெற்றிருந்தாலே போதும்).

    பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். எம்.பி.சி., எம்.சி.எம்., ஒ.பி.சி., ஒ.சி. பிரிவினர் 40 வயத்திற்குட்பட்டவராகவும், எஸ்.சி., எஸ்.சி.ஏ, எஸ்.டி. பிரிவினர் 45 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை.

    விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை. ஏற்கனவே வேலை வாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெற்றிருக்கக் கூடாது. தினசரி மாணவராக பயின்று வருவோருக்கு உதவித் தொகை பெற தகுதியில்லை.

    அனைத்து தகுதிகளும், விருப்பமும் உள்ள பதிவுதாரர்கள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பத்தினை வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வருகை புரிந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.tnvelaivaaippu.gov.in//empower என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

    மேலும் தகவலுக்கு அலுவலக தொலைப்பேசி எண்- 044-27237124யை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளான குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய ஏழு கலைப் பிரிவுகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • பயிற்சி வகுப்புகள் வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 12 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம் பயிற்சிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையால் நடத்தப்படும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியானது கோட்டைக்கால் கிராமம், (செவித்திறன குறை உடையோருக்கான அரசு உயர் நிலைப்பள்ளி அருகில்) சதாவரம், ஓரிக்கை அஞ்சல் என்கிற முகவரியில் இயங்கி வருகிறது.

    இப்பள்ளியில் தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளான குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய ஏழு கலைப் பிரிவுகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    பயிற்சி வகுப்புகள் வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 12 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம் பயிற்சிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.

    பயிற்சி முடிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. சேர்க்கை கட்டணமாக முதலாம் ஆண்டிற்கு ரூ.1500, இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு கட்டணமாக ரூ.135 மட்டும் செலுத்தப்பட வேண்டும்.

    மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பயணச்சலுகை 16, 17 வயதுடைய மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி மற்றும் மாதந்தோறும் ரூ.400 அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை அளிக்கப்படுகிறது.

    இசைப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணிபுரியவும் நாதஸ்வரம், தவில், தேவாரம் பயின்ற மாணவர்கள் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரியவும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

    • கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
    • தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசம் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினை பெற தகுதி உள்ளவர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான "கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :

    துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது.

    இந்த விருதுடன் ரூ.5 இலட்சத்திற்கான காசோலையும் ஒரு பதக்கமும் வழங்கப்படும். தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசம் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினை பெற தகுதி உள்ளவர்.

    2022 ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதுக்கான விண்ணப்பங்கள் விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ 30.6.2022-க்கு முன்பாக வரவேற்கப்படுகிறது.

    மேலும் உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 920575 முதல் தவணையும், 736058 இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
    • கொரோணா நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 920575 முதல் தவணையும், 736058 இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் புதிய வகை கொரோனா வைரஸால் BA4, BA5 strain மூலம் மக்களுக்கு கொரோணா காய்ச்சல் வர வாய்ப்புள்ளதால் தமிழக முதல்வரின் ஆணையின்படி, இன்று 12 ம் தேதி சிறப்பு மாபெரும் ஒருநாள் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.

    இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 2118 நடமாடும் முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

    பொதுமக்கள் அனைவரும் இந்த முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோணா நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×