search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவர்கள் கைது"

    • பள்ளி மாணவன் பாளை போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து விட்டான்.
    • 6 பேரும் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் என்பதும், 2 பேர் சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது.

    நெல்லை:

    பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் நேற்று முன்தினம் மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றுள்ளான்.

    அப்போது அந்த சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே சென்றபோது அவனை 6 பேர் தடுத்து நிறுத்தி சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். உடனே அவன் வலி தாங்க முடியாமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளான். ஆனாலும் 6 பேர் அவனை விடாமல் துரத்தி சென்றுள்ளனர்.

    அப்போது பள்ளி மாணவன் பாளை போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து விட்டான். இதனால் 6 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அங்கிருந்த போலீசார் பள்ளி மாணவனிடம் விசாரித்தனர். பின்னர் மாணவனை தாக்கிய கும்பலை தேடினர். இதுதொடர்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர்.

    அதில் 6 பேரும் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் என்பதும், 2 பேர் சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது. கடந்த 2021-ம் ஆண்டு பள்ளியில் நடந்த பிரச்சினையில் இந்த 6 மாணவர்களும் பள்ளியில் இருந்து வெளியே அனுப்பப்பட்டுள்ளனர்.

    அதற்கு காரணம் பிளஸ்-2 மாணவர் தான் என்று ஆத்திரம் அடைந்து 6 பேரும் சேர்ந்து அடித்து உதைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். 2 சிறுவர்களை கூர்நோக்கு இல்லத்திலும், 4 பேரை பாளை மத்திய சிறையிலும் அடைத்தனர்.

    • தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 11 மாதங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக 241 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
    • 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 387 கிலோ கஞ்சா, 25 கிராம் கொகைன், ரூ.6 லட்சம் மதிப்புள்ள 142 கிராம் மெத்தபட்டமைன், ரூ.1 லட்சம் மதிப்புள்ள போதை ஸ்டாம்புகள், 37 மோட்டார் சைக்கிள்கள், 5 கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    தாம்பரம்:

    தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் கஞ்சா விற்பனையை முழுவதும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவுப்படி மதுவிலக்கு உதவி கமிஷனர் ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், சரவணன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் பல்லாவரம் ரேடியல் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது கட்டபொம்மன் நகர், கணேஷ் அவன்யூவில் சந்தேகத்துக்கிடமாக நின்ற 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் சோதனை செய்த போது கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.

    விசாரணையில் அவர்கள் விருதுநகரை சேர்த்த பிரகாஷ், விருத்தாசலத்தை சேர்ந்த நசீர்பாஷா என்பது தெரிந்தது. கல்லூரி மாணவர்களான இவர்களில் பிரகாஷ் பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் 4-ம் ஆண்டு சட்டப்படிப்பு (எல்.எல்.பி) படித்து வருவதும் நசீர்பாஷா பல்லாவரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படிப்பதும் தெரியவந்தது.

    நண்பர்களாக இருக்கும் தாங்கள் தங்கி இருக்கும் அறையில் கஞ்சா பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து மாணவர்கள் பிரகாஷ், நசீர்பாஷா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாணவர்கள் தங்கி இருந்த அறையை சோதனை செய்த போது அங்கு 12 கிலோ கஞ்சா சிக்கியது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 11 மாதங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக 241 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 387 கிலோ கஞ்சா, 25 கிராம் கொகைன், ரூ.6 லட்சம் மதிப்புள்ள 142 கிராம் மெத்தபட்டமைன், ரூ.1 லட்சம் மதிப்புள்ள போதை ஸ்டாம்புகள், 37 மோட்டார் சைக்கிள்கள், 5 கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    இதேபோல் 25 பேர் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.

    • பைக் வீலிங் சாகசம் செய்யும் போது பலர் விபத்தில் சிக்கி பலியாவதும் நடந்து வருகிறது.
    • தற்போது மதுரை நகரிலும் பைக் வீலிங் கலாச்சாரம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

    மதுரை:

    சென்னை போன்ற பெருநகரங்களில் முக்கிய சாலைகளில் கல்லூரி மாணவர்கள் "பைக் வீலிங்" சாகசத்தை ஆபத்தான முறையில் செய்து வருகின்றனர்.

    பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மாணவர்கள், இளைஞர்களின் பைக் வீலிங் இருப்பதால் இதற்கு கடிவாளம் போட வேண்டுமென பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    பைக் வீலிங் சாகசம் செய்யும் போது பலர் விபத்தில் சிக்கி பலியாவதும் நடந்து வருகிறது. தற்போது மதுரை நகரிலும் பைக் வீலிங் கலாச்சாரம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் நகரில் போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலைகளில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களின்றி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் வீலிங் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சிறுவர்களும் ஈடுபடுவது வருத்தத்தை அளிக்கிறது.

    இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்த நிலையில் பைக் வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் 12-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சம்பவத்தன்று பாண்டிகோவில் ரிங்ரோடு மேம்பாலத்தில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். பின்னர் அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் அதிக சத்தத்தை எழுப்பியவாறு மேலமடை முதல் பைபாஸ் ரோடு வரை அதிவேகத்தில் சென்றனர். இதில் சில மாணவர்கள் பைக் வீலிங் செய்ததாக தெரிகிறது.

    இது தொடர்பான வீடியோக்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோ அடிப்படையில் மேலமடை கிராம உதவியாளர் பகவதி மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில் அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனை பேரில் மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    இவர்கள் விசாரணை நடத்தியதில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை ஓட்டியது. தபால் தந்தி நகர், மாணிக்கவாசகர் தெரு, குணசேகரன் மகன் தீனதயாள பாண்டியன் (வயது 20), அனுப்பானடி, பகலவன் நகர், செந்தில்ராம் மகன் சந்தானராஜ் (வயது 19) என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் இன்றி அதிவேகமாக பயணம் செய்ததாகவும், 'வீலிங்' சாகசம் செய்ததாகவும் மேற்கண்ட 2 பேரை மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்தனர். இது தவிர தப்பி ஓடிய 10க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இது தொடர்பாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறுகையில், "இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்று 'வீலிங்' செய்து, பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டிச் செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    • கடந்த 6 மாதத்தில் கல்லூரி மாணவர்கள் ரூ.4 லட்சம் வரை பணத்தை பெற்றுக் கொண்டு உல்லாசமாக சுற்றி திரிந்தது தெரியவந்தது.
    • இதையடுத்து போலீசார் 3 மாணவர்களையும் கைது செய்து ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர். மேலும் தலைமறைவான 2 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோட்டைச் சேர்ந்த 2 வாலிபர்கள் சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் செய்தனர்.

    அந்த புகாரில் 2 இணையதள முகவரியில் ஒரு செல்போன் எண் பதிவாகி இருந்தது. அதில் உல்லாசமாக இருக்க இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நாங்கள் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டோம். முதலில் எங்களது அழைப்பை எடுக்கவில்லை.

    சிறிது நேரம் கழித்து அதே நம்பரில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசியவர்கள் நீங்கள் எங்களை உல்லாசத்துக்கு அழைத்தீர்கள் என்று கூறி எங்களை மிரட்டினார்கள். மேலும் உங்கள் மீது போலீசில் புகார் செய்ய உள்ளோம் என்று கூறினார்கள். மேலும் போலீசில் புகார் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் எங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினர். இதையடுத்து பயந்து போன நாங்கள் அவர்களுக்கு பணத்தை செலுத்தினோம். மறுநாள் வேறு ஒரு நம்பரில் இருந்து நாங்கள் போலீசார் பேசுகிறோம் உங்கள் மீது ஒரு புகார் வந்து உள்ளது. எனவே பணம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.

    இதை உண்மை என்று நம்பி அவர்கள் தெரிவித்த வங்கி கணக்குக்கு ரூ.85 ஆயிரத்தை செலுத்தினோம்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறி இருந்தனர்.

    இதையடுத்து ஈரோடு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட இணையதளத்தில் சென்று போலீசார் செல்போன் எண்ணை கைப்பற்றினர்.

    இதையடுத்து போலீசார் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்தனர். அப்போது அவர்கள் கோவையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது இந்த சம்பவத்தில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 3 மாணவர்களை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் வேறு ஒருவரின் பெயரில் போலியாக சிம்கார்டு வாங்கி பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் 2 இணையதள முகவரியில் செல்போன் எண்களை பதிவிட்டு உல்லாசத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.

    இதை உண்மை என நம்பி இந்த செல்போன் எண்களை தொடர்பு கொள்பவர்களை போலீசில் சொல்லி நடவடிக்கை எடுப்பதாக கூறி ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பணம் பறித்தது தெரிய வந்தது.

    கடந்த 6 மாதத்தில் இவர்கள் ரூ.4 லட்சம் வரை இதுபோல் பணத்தை பெற்றுக் கொண்டு உல்லாசமாக சுற்றி திரிந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 3 மாணவர்களையும் கைது செய்து ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர். மேலும் தலைமறைவான 2 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.

    இந்த கும்பலிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பலர் போலீசில் புகார் செய்யாமல் இருந்ததால் இவர்கள் இந்த வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்து உள்ளனர்.

    ×