search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் பைக் வீலிங் சாகசம் செய்த கல்லூரி மாணவர்கள் கைது- போலீசார் நடவடிக்கை
    X

    மதுரையில் "பைக் வீலிங்" சாகசம் செய்த கல்லூரி மாணவர்கள் கைது- போலீசார் நடவடிக்கை

    • பைக் வீலிங் சாகசம் செய்யும் போது பலர் விபத்தில் சிக்கி பலியாவதும் நடந்து வருகிறது.
    • தற்போது மதுரை நகரிலும் பைக் வீலிங் கலாச்சாரம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

    மதுரை:

    சென்னை போன்ற பெருநகரங்களில் முக்கிய சாலைகளில் கல்லூரி மாணவர்கள் "பைக் வீலிங்" சாகசத்தை ஆபத்தான முறையில் செய்து வருகின்றனர்.

    பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மாணவர்கள், இளைஞர்களின் பைக் வீலிங் இருப்பதால் இதற்கு கடிவாளம் போட வேண்டுமென பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    பைக் வீலிங் சாகசம் செய்யும் போது பலர் விபத்தில் சிக்கி பலியாவதும் நடந்து வருகிறது. தற்போது மதுரை நகரிலும் பைக் வீலிங் கலாச்சாரம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் நகரில் போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலைகளில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களின்றி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் வீலிங் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சிறுவர்களும் ஈடுபடுவது வருத்தத்தை அளிக்கிறது.

    இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்த நிலையில் பைக் வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் 12-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சம்பவத்தன்று பாண்டிகோவில் ரிங்ரோடு மேம்பாலத்தில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். பின்னர் அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் அதிக சத்தத்தை எழுப்பியவாறு மேலமடை முதல் பைபாஸ் ரோடு வரை அதிவேகத்தில் சென்றனர். இதில் சில மாணவர்கள் பைக் வீலிங் செய்ததாக தெரிகிறது.

    இது தொடர்பான வீடியோக்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோ அடிப்படையில் மேலமடை கிராம உதவியாளர் பகவதி மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில் அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனை பேரில் மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    இவர்கள் விசாரணை நடத்தியதில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை ஓட்டியது. தபால் தந்தி நகர், மாணிக்கவாசகர் தெரு, குணசேகரன் மகன் தீனதயாள பாண்டியன் (வயது 20), அனுப்பானடி, பகலவன் நகர், செந்தில்ராம் மகன் சந்தானராஜ் (வயது 19) என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் இன்றி அதிவேகமாக பயணம் செய்ததாகவும், 'வீலிங்' சாகசம் செய்ததாகவும் மேற்கண்ட 2 பேரை மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்தனர். இது தவிர தப்பி ஓடிய 10க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இது தொடர்பாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறுகையில், "இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்று 'வீலிங்' செய்து, பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டிச் செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    Next Story
    ×