search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்ணாடி"

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பஸ்சை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வருமாறு கூறிச் சென்றார்.
    • பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை பஸ் நிலையத்தில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் அரசு டவுன் பஸ் ஒன்று காங்கயம் செல்ல வந்தது. பஸ்சின் கண்டக்டர் மற்றும் டிரைவர் இருவரும் அருகில் இருந்த கடைக்கு டீ சாப்பிடுவதற்காக சென்றனர்.

    அந்த சமயத்தில் அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர் நிறுத்தப்பட்டிருந்த அரசு டவுன் பஸ் மீது கல்லை வீசி எறிந்ததால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. உடனே இதுகுறித்து தகவல் அறிந்து ஓடி வந்த கண்டக்டர் மற்றும் டிரைவர் இருவரும் போதை ஆசாமியை பிடித்தனர். பின்னர் அவ்வழியே ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் இது குறித்து புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பஸ்சை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வருமாறு கூறிச் சென்றார். அந்த போதை ஆசாமியையும் பஸ்சில் அழைத்துச் சென்றனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த போதை ஆசாமி கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பதும், ஓட்டலில் வேலை பார்க்கும் தொழிலாளி என்பதும் தெரிந்தது.

    மேலும் நேற்று இரவு பஸ் நிலையத்தில் யாரோ ஒருவரிடம் ஏற்பட்ட தகராறில் அவரது சட்டை கிழிந்துள்ளது. அந்த கோபத்தில் அங்கு நின்ற டவுன் பஸ் மீது கல்லை எறிந்ததாக அவர் தெரிவித்தார்.

    பின்னர் இச்சம்பவம் குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு பஸ் டிரைவர் தகவல் தெரிவித்தார். இதனால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • அரியலூரில் பிளேடு கண்ணாடி துகள்களை விழுங்கிய கைதியால் பரபரப்பு ஏற்பட்டது
    • திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது

    அரியலூர்

    அரியலூர், சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டியை சேர்ந்த சத்தியாவின் மகன் வல்லவராஜ்(வயது 25). இவரும், இவரது சகோதரர் தர்மராஜ்(23) மற்றும் நண்பர் குமார் ஆகியோர் அரியலூர் மாவட்டம், வாலாஜா நகரத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் வீட்டில் பூஜை செய்வதாகவும், செய்வினை எடுப்பதாகவும் கூறி, பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து விஜயகுமார் அரியலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வல்லவராஜ், தர்மராஜ், குமார் ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் தர்மராஜ், குமார் ஆகியோருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. இந்நிலையில் வல்லவராஜை வழக்கு விசாரணைக்காக அரியலூர் குற்றவியல் கோர்ட்டில் ேபாலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, தான் ஆக்சா பிளேடு பாகங்கள் மற்றும் கண்ணாடி துகள்களை விழுங்கிவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் உடனடியாக அவரை அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, அவரது வயிற்றில் இரும்பு துண்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அரசு பஸ் ஒன்று புளியம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • மயில் பஸ்ஸில் உள்ளே விழுந்து இறந்தது.

    திருப்பூர் :

    பல்லடம் பஸ் நிலையத்திலிருந்து இன்று காலை அரசு பஸ் ஒன்று புளியம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் சக்திகுமார் ஓட்டி சென்றார். பஸ் பல்லடம் அடுத்த சின்னிய கவுண்டன் பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே மயில் ஒன்று பறந்து வந்து பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ்ஸில் முன்பக்க கண்ணாடி உடைந்து தூள் தூளானது.

    மேலும் மயில் பஸ்ஸில் உள்ளே விழுந்து இறந்தது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் இது குறித்து டிரைவர் சக்திவேல் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் வனத்துறையினருடன் இறந்த மயிலை மீட்டு சென்றனர். பின்னர் பயணிகளை வேறொரு பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    • கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் - திருவள்ளுவர் சிலை இடையே அமைகிறது
    • அமைச்சர் ஏ.வ.வேலு 22-ந்தேதி நேரில் ஆய்வு

     

    கன்னியாகுமரி, மே.9-

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வருடத்துக்கு 75 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

    கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று அவர்கள் பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இயற்கையாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகுதளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது. ஆனால் திருவள்ளுவர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவாகவும், படகு நிறுத்தும் இடத்தில் அதிகப்படியான பாறைகளும் உள்ளன. இதனால் கடலில் நீரோட்டம் குறைவான காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படுவதில்லை.

    இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளும் பல்வேறு தமிழ் அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியினை சென்னையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது.

    இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படு கிறது. பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் போது தாங்கள் நடந்து செல்லும் பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக வெளி நாடு களில் அமைக் கப்பட்டு உள்ளது போல இந்த கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப் பட உள்ளது.

    இதற்கான முதற்கட்ட ஆய்வு பணி கடந்த ஜூன் மாதம் நடந்தது. அப்போது விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகிய 2 பாறைகளின் மாதிரிகளை சேகரித்து சென்னை ஐ.ஐ.டி.க்கு அனுப்பி பாறை களின் திரத்தன்மையை ஆய்வு செய்யும் பணி நடந்தது. இந்த ஆய்வுகளின் முடிவு களை பொறுத்து விரைவில் பாலத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் ஒரு வருடத்திற்குள் பாலப் பணிகள் நிறைவடை யும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு வருகிற 22-ந்தேதி கன்னியா குமரி வருகிறார். அவர் 2 நாட்கள் கன்னியா குமரியில் தங்கி இருந்து கண்ணாடி கூண்டு பாலம் அமைப்பது குறித்த இடத்தை நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்ய இருப்பதாக தெரி கிறது. மேலும் மாவட்டத்தில் பல்வேறு திட்ட பணிகளை யும் அவர் ஆய்வு செய்வார் என்றும் கூறப்படுகிறது.

    • 2 வாலிபர்கள் தப்பி ஓட்டம்
    • தனிப்படை போலீசார் வாலிபர்களை பிடிக்க நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு மிடாலத்திற்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் ராபின்சன் ஓட்டினார்.

    இரணியல் அருகே மட விளாகம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது 2 வாலிபர்கள் பஸ்ஸை தடுத்து நிறுத்தி னார்கள். திடீரென அவர்கள் அந்த பகுதியில் கிடந்த கற்களை எடுத்து பஸ்ஸின் மீது வீசினார்கள்.

    இதில் பஸ்ஸின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதையடுத்து அந்த வாலி பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து டிரைவர் ராபின்சன் இரணியல் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் தனிஷ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    முதல் கட்ட விசாரணை யில் குடிபோதையில் வாலிபர்கள் பஸ் மீது கல்வீசி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களைப் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் வாலிபர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    போலீசார் தேடுவதை அறிந்த அந்த வாலிபர்கள் தலைமறைவாகி விட்டனர்.

    • செல்போன் பேசியதை கண்டித்ததால் கார் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    • சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை வசந்தநகரை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் (வயது 27). இவர் நேற்று நள்ளிரவு வீட்டின் முன்பாக காரை நிறுத்தியிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்தார். இதற்கு கோபிகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கல்வீசி தாக்கினார்.

    இதில் காரின் கண்ணாடி கள் உடைந்து நொறுங்கி யது. இது தொடர்பாக கோபி கிருஷ்ணன், சுப்பிரமணிய புரம் போலீசில் புகார் செய்தார்.

    மதுரை அனுப்பானடி பகலவன் நகர், பூக்காரத் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (52). இவர் எல்லீஸ் நகர், போடி லைனில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் வாலிபர் ஒருவர் கம்பெனியின் கேட் முன்பாக போஸ்டரை ஒட்டினார். இதற்கு கண்ணன் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர், கல் வீசி தாக்கினார். இதில் கம்பெனியின் முன்பக்க கண்ணாடி நொறுங்கி விழுந்தது. இது தொடர்பாக கண்ணன் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் கொடுத்தார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மேற்கண்ட 2 சம்பவங்களிலும், ஒரே வாலிபர் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் எல்லீஸ் நகர், போடி லைனைச் சேர்ந்த முத்து கருப்பன் என்பவரை கைது செய்து அவரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நன்கொடை தரவேண்டுமென கேட்டதாக கூறப்படுகிறது.
    • ஆத்திரமடைந்தவர்கள் கடையின் முன்பு இருந்த அலமாரியின் கண்ணாடியை உடைத்துள்ளனர்.

     பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அருள்புரம் உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 31). அதே பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சிலர் நன்கொடை கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.சந்திரமோகன் இப்போது இல்லை பிறகு வாருங்கள் என கூறியுள்ளார். மீண்டும் வரமுடியாது, இப்போதே நன்கொடை தரவேண்டுமென அவர்கள் கேட்டதாக கூறப்படுகிறது .இதற்கு அவர் மறுக்கவே ஆத்திரமடைந்த அவர்கள் கடையின் முன்பு இருந்த அலமாரியின் கண்ணாடியை உடைத்துள்ளனர். இதையடுத்து சந்திரமோகன் கொடுத்த புகாரின்பேரில் பல்லடம் போலீசார் அருள்புரத்தை சேர்ந்த சரவணன் (28) என்பவரை கைது செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மினி பஸ்களை இயக்குவதில் டைமிங் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிய வருகிறது.
    • மினி பஸ் கண்ணாடிகளை கல்லால் அடித்து உடைத்தனர்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள நக்கம்பாடி வடக்கு தெருவில் வசிப்பவர் அன்பழகன் மகன்வந்தியதேவன் (வயது 26). இவர் ஒரு மினி பஸ்சில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். சத்தியமங்கலம் ஊராட்சி வாழ்க்கை கிராமம் வடக்கு தெருவில் வசிக்கும் மாரிமுத்து மகன் விக்னேஷ் (24). தட்டுமால் நடுபடுகை செல்வராஜ் மகன் முனுசாமி (29) ஆகிய இருவரும் வேறு ஒரு மினி பஸ்ஸில் நடத்துனராக பணியாற்றி வருகின்றனர்.

    இவர்களுக்குள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மினி பஸ்களை இயக்குவதில் டைமிங் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிய வருகிறது. இதனால் சம்பவத்தன்று நக்கம்பாடி வந்தியதேவன் நடத்துனராக பணியாற்றும் மினி பஸ்சில் இரவு மினி பஸ்சை நிறுத்திவிட்டு உள்ளே படுத்து தூங்கி உள்ளார்.

    அப்போது அங்கே வந்த விக்னேஷ், முனுசாமி ஆகிய இருவரும் மினி பஸ் கண்ணாடிகளை கல்லால் அடித்து உடைத்தனர். இதில் உள்ளே படுத்து உறங்கிய வந்தியதேவன் படுகாயம் அடைந்த கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வந்தியதேவன் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு பகவதி சரணம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விக்னேஷ், முனுசாமியை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலத்தில் அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.

    சேலம்:

    சேலத்தில் இருந்து எடப்பாடிக்கு ஒரு அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. பஸ்சை பூலாம்பட்டியைச் சேர்ந்த டிரைவர் ராஜா (வயது48) என்பவர் ஓட்டினார்.

    பஸ் கந்தம்பட்டி பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அதன் மீது கல் வீசினர். இதில் பஸ்சின் பின்புற கண்ணாடி உடைந்தது.

    இதனையடுத்து டிரைவர் ராஜா சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் மீது கல் வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • ராமநாதபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
    • இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இலவச கண் கண்ணாடியை பெற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பி. வி.எம். அறக்கட்டளை மருத்துவ சேவை அணி சார்பில் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாம் மற்றும் ஆசி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வழங்கிய ரூ.900 மதிப்புள்ள தைராய்டு மற்றும் சர்க்கரை இலவச ரத்த பரிசோதனை முகாம் நடந்தது.

    இலவச மருத்துவ பரிசோதனை முகாமிற்கு பி.வி.எம். அறக்கட்டளை மருத்துவ சேவை அணி மாவட்ட தலைவர் யாசர் அராபத் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அன்வர் அலி வரவேற்றார்.

    பி.வி.எம். அறக்கட்டளை சேர்மன் அப்துல் ரசாக் அறிமுக உரை நிகழ்த்தினார். முகாமை முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி, ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் கார்மேகம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பி.வி எம். அறக்கட்டளை தலைவர் மற்றும் புதுமடம் வடக்கு தெரு ஜமாத் முன்னாள் தலைவர் பக்கீர் முகமது, பொதுச்செயலாளர் ஹமீது, திட்ட இயக்குனர் சித்தார்கோட்டை ஜமாத் முன்னாள் தலைவர் அல்தாப் உசேன் முன்னிலை வகித்தனர். செய்யது முகம்மது அறக்கட்டளை சேர்மன் சுல்தான் தொகுத்து வழங்கினார். இதில் ராமநாதபுரத்தில் முதன் முறையாக கண் பரிசோதனை செய்யப்பட்டவர்களில் கண்ணாடி தேவை என டாக்டர் பரிந்துரை செய்தவர்களுக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது.

    சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இலவச கண் கண்ணாடியை பெற்றனர். இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு கண் மற்றும் தைராய்டு சர்க்கரை பரிசோதனை செய்து கொண்டனர்.

    ராமநாதபுரம் நகராட்சி துணை சேர்மன் பிரவீன் தங்கம், ஆசி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சேர்மன் டாக்டர் ஆசிக் அமீன், டாக்டர் புரோஸ்கான், பொட்டகவயல் ஊராட்சி மன்ற தலைவர் முகமது ஹக்கீம், தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, நகராட்சி தி.மு.க.கவுன்சிலர்கள் முகமது ஜஹாங்கீர், காளி, ராமநாதன், எஸ்.டி.பி.ஐ, மாவட்ட பொருளாளர் நஜிமுதீன், சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமமூர்த்தி, கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு நிர்வாகி சீனி இப்ராஹிம், பா.ம.க, மாவட்ட செயலாளர் ஹக்கீம், ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் புவனேஸ்வரன், எஸ்.டி.பி.ஐ.மாவட்ட தொண்டரணி தலைவர் சகுபர் சாதிக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை பி.வி.எம் அறக்கட்டளை மருத்துவ அணி தலைவர் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் செய்திருந்தனர். முகமது கனி நன்றி கூறினார்.

    ×