search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Computers"

    • முன்னாள் மாணவர்கள் சார்பில் கணினி மற்றும் இலவச ஜெராக்ஸ் எந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது.
    • அன்பு கரங்கள் சார்பில் மரக்கன்றுகள் பள்ளிக்கு வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் அடைக்கலப்பட்டணம் அருகே உள்ள மாதாப்பட்டணம் சற்குண சத்திய வித்யாலயா மேல் நிலைபள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் நடத்தும் அன்புக்கரங்கள் அறக்கட்டளை சார்பில் கணினி மற்றும் இலவச ஜெராக்ஸ் எந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் சசிகலா தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியை செல்லம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் அமிர்த சிபியா வரவேற்று பேசினார்.

    நிகழ்சியில் முன்னாள் மாணவர்கள் நடத்தும் அன்பு கரங்கள் அமைப்பின் உறுப்பினர் டாக்டர் ராஜசேகர் மாணவர்கள் பள்ளியில் ஒழுக்கத்துடனும் சுயகட்டுப்பாட்டு நிறைந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்று மாணவர்களிடையே உரையாற்றினார். டாக்டர் புஷ்பலதா மாணவர்கள் ஆசிரியர்களிடம் மரியாதையோடும், கண்ணியத் தோடும் இருக்க வேண்டும் என்றும் மாணவர்கள் தங்களின் தனித்திறமையை வளர்த்துகொள்ள வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் அன்பு கரங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் ஆல்பர்ட், எஸ்.ஆர் .சுப்பிரணியன், தங்கத்துரை,அருணாசலம்,வெள்ளத்துரை ஆகியோர் மாணவர்களிடையே உரைநிகழ்தினர். அறிவியல் ஆசிரியர் கலைசெல்வன் நன்றி கூறினார். முன்னதாக அன்பு கரங்கள் சார்பில் மரக்கன்றுகள் பள்ளிக்கு வழங்கப்பட்டது.

    கம்ப்யூட்டர்களை கண்காணிக்க அதிகாரம் வழங்கப்பட்ட 10 அமைப்புகளும் தாங்கள் நினைத்தபடி செயல்படுவதற்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணிக்க சி.பி.ஐ., உளவு அமைப்பு (ஐ.பி.), போதைப்பொருள் தடுப்பு அமைப்பு, அமலாக்க இயக்குனரகம், மத்திய நேரடி வரிகள் வாரியம் உள்பட 10 அமைப்புகளுக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு கடந்த 20-ந் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின. கண்காணிப்பு நிலையை மத்திய அரசு பிரகடனம் செய்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

    ஆனால், இந்த 10 அமைப்புகளும் தாங்கள் நினைத்தபடி செயல்படுவதற்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், “கம்ப்யூட்டர்களை கண்காணிக்க, அதில் நடத்தப்படுகிற தகவல் பரிமாற்றத்தை இடைமறிக்க 10 அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இதில் புதிய சட்டம் இயற்றவில்லை. புதிய விதிகளை உருவாக்கவில்லை. புதிய நடைமுறைகள் கிடையாது. நினைத்தபடி செயல்பட அதிகாரம் வழங்கவில்லை. தற்போது நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்களில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.

    10 அமைப்புகளும், முறைப்படி முன்கூட்டியே அனுமதி பெற்றுத்தான் செயல்பட முடியும். மேலும், மத்திய அரசு வெளியிட்ட ‘கெசட்’ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 10 அமைப்புகளும், மின்னணு தகவல் தொடர்புகளை இடைமறிப்பதற்கு 2011-ம் ஆண்டு முதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 
    நாட்டில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணித்து தகவல்களை ஆய்வு செய்ய 10 அமைப்புகளுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. #CentralGovernment #ComputerMonitoring
    புதுடெல்லி:

    பயங்கரவாதிகள் தங்களது நாச வேலை திட்டங்களை செல்போன்கள் மற்றும் இ.மெயில்கள் மூலம் பரிமாறிக் கொள்வதை தடுப்பதற்காக புலனாய்வு அமைப்புகளுக்கு மத்திய அரசு அதிகாரம் வழங்கி உள்ளது.

    செல்போன் உரையாடல்களை உளவுத்துறையினர் இடைமறித்து கேட்பதன் மூலம் பல நாசவேலை திட்டங்கள் முறியடிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் உளவுத்துறை அமைப்புகளுக்கும், விசாரணை அமைப்புகளுக்கும் தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்வது மட்டுமின்றி, நாட்டில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர் பதிவுகளையும் ஆய்வு செய்யும் கூடுதல் அதிகாரம் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டது.

    நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் இதுதொடர்பான புதிய அறிவிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. உள்துறை செயலாளர் ராஜீவ் கோபா வெளியிட்டுள்ள அந்த அறிவிக்கையில் 10 அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    அந்த 10 அமைப்புகள் விவரம் வருமாறு:-

    1. உளவுத்துறை (ஐ.பி.)

    2. போதைபொருள் கட்டுப்பாட்டுத் துறை

    3. அமலாக்கத்துறை

    4. மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம்

    5. வருவாய் உளவுத்துறை

    6. சி.பி.ஐ.

    7. தேசிய விசாரணை ஆணையம்

    8. ‘ரா’ உளவு அமைப்பு

    9. சிக்னல் உளவுத்துறை

    10. டெல்லி போலீஸ் கமி‌ஷனர்

    இந்த 10 அமைப்புகளுக்கும் கம்ப்யூட்டர்களை கண்காணிக்கவும், தகவல்களை ஆய்வு செய்யவும், தகவல் பரிமாற்றங்களை இடைமறித்து பார்க்கவும், தகவல்களை அளிக்கவும், ஏற்கனவே அழிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் கண்டுபிடித்து ஆய்வு செய்வது உள்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டு உள்ளன.

    மத்திய உள்துறை வழங்கி உள்ள இந்த கூடுதல் அதிகாரங்கள் மூலம் நாட்டில் உள்ள எந்த கம்ப்யூட்டரில் வைக்கப்பட்டு உள்ள தகவல்களையும் பறிமுதல் செய்ய முடியும். மேலும் தனிநபர்கள், நிறுவனங்கள் உள்பட அனைத்து பிரிவினரின் அனைத்து கம்ப்யூட்டர்களையும் உளவு பார்க்க முடியும்.

    இது தவிர ஒரு கம்ப்யூட்டரில் இருந்து மற்றொரு கம்ப்யூட்டருக்கு அனுப்பப்படும் தகவல்களை மேற்கண்ட 10 அமைப்புகளாலும் எளிதில் பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது. அதுபோல வெளிநாடுகளில் இருந்து தனிநபர்களின் கம்ப்யூட்டர்களுக்கு வரும் அனைத்து தகவல்களையும் கண்காணித்து பறிமுதல் செய்ய மற்றும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    10 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு உள்ள இந்த அதிகாரங்கள் மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் கம்ப்யூட்டரையும் உளவு அமைப்புகளால் மிக எளிதாக உளவு பார்க்க முடியும். இதுவரை கம்ப்யூட்டர்களில் பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை கண்காணிக்கும் உரிமைகளை மட்டுமே இந்த 10 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு இருந்தது.

    தற்போது வழங்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரங்கள் மூலம் ஒருவரது தகவல் பரிமாற்றத்தை உளவு அமைப்புகள் கைப்பற்ற முடியும். மேலும் அந்த தகவல்களை உடனுக்குடன் அழிக்கவும் முடியும்.

    அமலாக்கத்துறையை பொறுத்தவரை எந்த இடத்திலும் ஆவணங்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் இல்லாமல் இருந்தது. தற்போது முதல் முறையாக அமலாக்கத்துறைக்கும் கம்ப்யூட்டர் பதிவு தகவல்களை கைப்பற்றும் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

    மேலும் அமலாக்கத்துறையினர் தகவல் பரிமாற்றங்களில் தலையிடும் அதிகாரத்தையும் பெற்று உள்ளனர். 10 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு உள்ள இந்த அதிகாரங்கள் நாடு முழுவதும் மாறுபட்ட கருத்துக்களை உருவாக்கி உள்ளன.



    தனி நபர்களின் கம்ப்யூட்டர் தகவல்களை கண்காணிக்கவும், பறிமுதல் செய்யவும் மத்திய அரசு உத்தரவிட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் இதுபற்றி கூறுகையில், “மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஏற்க இயலாது. இந்தியாவை அடக்கி ஆள மோடி முயற்சி செய்வது போல உள்ளது” என்று கூறியுள்ளார்.

    மார்க்சிஸ்டு கம்ப்யூனிஸ்டு தலைவர் சீத்தாராம் யெச்சூரி கூறுகையில், “ஒவ்வொரு இந்தியரையும் கிரிமினல் போல் நடத்துகிறீர்கள். தனி நபர்களின் விவகாரங்களில் தலையிடுவது சட்ட விரோதமானது” என்று கூறியுள்ளார்.

    தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர்அப்துல்லா, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் ஒவைசி ஆகியோரும் மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். ஒவைசி வெளியிட்டுள்ள டுவிட்டர் தகவலில், “மக்களின் தகவல் தொடர்பை மோடி முடிக்க நினைக்கிறார்” என்று கூறி உள்ளார்.

    இந்த நிலையில் கம்ப்யூட்டர் தகவல்கள் கண்காணிப்பு ஏன் என்பதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பயங்கரவாதிகள் கம்ப்யூட்டர் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்வதை கண்டுபிடிக்கவே இந்த அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்புக்கான 10 அமைப்புகளும் தங்களுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தன. அதைத்தான் தற்போது நடைமுறைப்படுத்தி உள்ளோம்.

    சாதாரண மக்களுக்கு இந்த உத்தரவால் எந்த இடையூறும் ஏற்படப்போவதில்லை. சந்தேகப்படும் நிலையில் உள்ளவர்களின் கம்ப்யூட்டர்கள் மட்டுமே ஆய்வு செய்யப்படும். எனவே இதுபற்றி பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கம்ப்யூட்டர் தகவல்களை 10 அமைப்புகளும் ஆய்வு செய்ய அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய உள்துறையின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஒத்துழைக்காத பட்சத்தில் அபராதமும், 7 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்படும் என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. #CentralGovernment
    #ComputerMonitoring
    குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்ய 434 அலுவலர்களுக்கு கம்ப்யூட்டர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #EdappadiPalaniswami

    சென்னை:

    கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் போன்ற பயனாளிகளின் ஊட்டச்சத்து நிலையினை தொடர்ந்து கண்காணித்திட அங்கன்வாடி பணியாளர்களுக்கு 59 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவிலான பொதுவான மென்பொருள் பயன்பாடு என்ற செயலி பொருத்தப்பட்ட ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    மேலும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் நிரந்தர ஆதார் பதிவு வசதியை ஏற்படுத்தி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பொதுமக்கள் ஆதார் பதிவு செய்திட, 13 கோடியே 61 லட்சம் ரூபாய் செலவில் கணினிகள், மடிக்கணினிகள், கைக்கணினிகள், பயோ மெட்ரிக் இயந்திரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 1302 ஆதார் கிட்ஸ்களை 434 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கும் திட்டத்தினையும் அவர் தொடங்கி வைத்தார்.

    இதன்மூலம், பிறந்த குழந்தையின் முதல் 1000 நாட்களை கண்காணித்தல், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற அனைத்து வகையான பதிவுகளும் மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்டு, தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.

    இதன்மூலம், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுடைய இல்லங்களுக்கே நேரில் சென்று ஆதார் எண் பெறுவதற்கான பதிவுகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அவர்கள் வசிக்கும் கிராமத்திலேயே முகாம்கள் அமைத்து ஆதார் எண் பதிவுகள் செய்யும் வசதியும் மற்றும் பொதுமக்கள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் ஆதார் எண் பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படும்.

    பூந்தமல்லியில் 2 கோடியே 48 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    மேலும் 10 கோடியே 59 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகக் கட்டடம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் கட்டடங்கள், பகுதி அலுவலகக் கட்டடங்கள் மற்றும் சோதனை சாவடி கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    சென்னை ஆர்.கே. நகரில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சென்னை (வடகிழக்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் கட்டடம்; வேலூர் சரக துணைப் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்திற்கு வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் முதல் தளத்தில் 98 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணைப் போக்குவரத்து ஆணையர் அலுவலகக் கட்டடம், சேர்காட்டில் 16 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கணினி அறை, வரி மற்றும் இணக்கக் கட்டணம் செலுத்தும் கட்டண மேடை, வாகனம் நிறுத்துமிடம் ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள சேர்காடு சோதனைச் சாவடி கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

    தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் கீழ் செயல்படும், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களை மறுசீரமைத்து புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். #EdappadiPalaniswami

    ×