search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைத்து கம்ப்யூட்டர்களும் கண்காணிக்கப்படும் - மத்திய அரசு அதிரடி உத்தரவு
    X

    அனைத்து கம்ப்யூட்டர்களும் கண்காணிக்கப்படும் - மத்திய அரசு அதிரடி உத்தரவு

    நாட்டில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணித்து தகவல்களை ஆய்வு செய்ய 10 அமைப்புகளுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. #CentralGovernment #ComputerMonitoring
    புதுடெல்லி:

    பயங்கரவாதிகள் தங்களது நாச வேலை திட்டங்களை செல்போன்கள் மற்றும் இ.மெயில்கள் மூலம் பரிமாறிக் கொள்வதை தடுப்பதற்காக புலனாய்வு அமைப்புகளுக்கு மத்திய அரசு அதிகாரம் வழங்கி உள்ளது.

    செல்போன் உரையாடல்களை உளவுத்துறையினர் இடைமறித்து கேட்பதன் மூலம் பல நாசவேலை திட்டங்கள் முறியடிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் உளவுத்துறை அமைப்புகளுக்கும், விசாரணை அமைப்புகளுக்கும் தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்வது மட்டுமின்றி, நாட்டில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர் பதிவுகளையும் ஆய்வு செய்யும் கூடுதல் அதிகாரம் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டது.

    நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் இதுதொடர்பான புதிய அறிவிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. உள்துறை செயலாளர் ராஜீவ் கோபா வெளியிட்டுள்ள அந்த அறிவிக்கையில் 10 அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    அந்த 10 அமைப்புகள் விவரம் வருமாறு:-

    1. உளவுத்துறை (ஐ.பி.)

    2. போதைபொருள் கட்டுப்பாட்டுத் துறை

    3. அமலாக்கத்துறை

    4. மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம்

    5. வருவாய் உளவுத்துறை

    6. சி.பி.ஐ.

    7. தேசிய விசாரணை ஆணையம்

    8. ‘ரா’ உளவு அமைப்பு

    9. சிக்னல் உளவுத்துறை

    10. டெல்லி போலீஸ் கமி‌ஷனர்

    இந்த 10 அமைப்புகளுக்கும் கம்ப்யூட்டர்களை கண்காணிக்கவும், தகவல்களை ஆய்வு செய்யவும், தகவல் பரிமாற்றங்களை இடைமறித்து பார்க்கவும், தகவல்களை அளிக்கவும், ஏற்கனவே அழிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் கண்டுபிடித்து ஆய்வு செய்வது உள்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டு உள்ளன.

    மத்திய உள்துறை வழங்கி உள்ள இந்த கூடுதல் அதிகாரங்கள் மூலம் நாட்டில் உள்ள எந்த கம்ப்யூட்டரில் வைக்கப்பட்டு உள்ள தகவல்களையும் பறிமுதல் செய்ய முடியும். மேலும் தனிநபர்கள், நிறுவனங்கள் உள்பட அனைத்து பிரிவினரின் அனைத்து கம்ப்யூட்டர்களையும் உளவு பார்க்க முடியும்.

    இது தவிர ஒரு கம்ப்யூட்டரில் இருந்து மற்றொரு கம்ப்யூட்டருக்கு அனுப்பப்படும் தகவல்களை மேற்கண்ட 10 அமைப்புகளாலும் எளிதில் பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது. அதுபோல வெளிநாடுகளில் இருந்து தனிநபர்களின் கம்ப்யூட்டர்களுக்கு வரும் அனைத்து தகவல்களையும் கண்காணித்து பறிமுதல் செய்ய மற்றும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    10 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு உள்ள இந்த அதிகாரங்கள் மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் கம்ப்யூட்டரையும் உளவு அமைப்புகளால் மிக எளிதாக உளவு பார்க்க முடியும். இதுவரை கம்ப்யூட்டர்களில் பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை கண்காணிக்கும் உரிமைகளை மட்டுமே இந்த 10 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு இருந்தது.

    தற்போது வழங்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரங்கள் மூலம் ஒருவரது தகவல் பரிமாற்றத்தை உளவு அமைப்புகள் கைப்பற்ற முடியும். மேலும் அந்த தகவல்களை உடனுக்குடன் அழிக்கவும் முடியும்.

    அமலாக்கத்துறையை பொறுத்தவரை எந்த இடத்திலும் ஆவணங்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் இல்லாமல் இருந்தது. தற்போது முதல் முறையாக அமலாக்கத்துறைக்கும் கம்ப்யூட்டர் பதிவு தகவல்களை கைப்பற்றும் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

    மேலும் அமலாக்கத்துறையினர் தகவல் பரிமாற்றங்களில் தலையிடும் அதிகாரத்தையும் பெற்று உள்ளனர். 10 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு உள்ள இந்த அதிகாரங்கள் நாடு முழுவதும் மாறுபட்ட கருத்துக்களை உருவாக்கி உள்ளன.



    தனி நபர்களின் கம்ப்யூட்டர் தகவல்களை கண்காணிக்கவும், பறிமுதல் செய்யவும் மத்திய அரசு உத்தரவிட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் இதுபற்றி கூறுகையில், “மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஏற்க இயலாது. இந்தியாவை அடக்கி ஆள மோடி முயற்சி செய்வது போல உள்ளது” என்று கூறியுள்ளார்.

    மார்க்சிஸ்டு கம்ப்யூனிஸ்டு தலைவர் சீத்தாராம் யெச்சூரி கூறுகையில், “ஒவ்வொரு இந்தியரையும் கிரிமினல் போல் நடத்துகிறீர்கள். தனி நபர்களின் விவகாரங்களில் தலையிடுவது சட்ட விரோதமானது” என்று கூறியுள்ளார்.

    தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர்அப்துல்லா, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் ஒவைசி ஆகியோரும் மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். ஒவைசி வெளியிட்டுள்ள டுவிட்டர் தகவலில், “மக்களின் தகவல் தொடர்பை மோடி முடிக்க நினைக்கிறார்” என்று கூறி உள்ளார்.

    இந்த நிலையில் கம்ப்யூட்டர் தகவல்கள் கண்காணிப்பு ஏன் என்பதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பயங்கரவாதிகள் கம்ப்யூட்டர் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்வதை கண்டுபிடிக்கவே இந்த அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்புக்கான 10 அமைப்புகளும் தங்களுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தன. அதைத்தான் தற்போது நடைமுறைப்படுத்தி உள்ளோம்.

    சாதாரண மக்களுக்கு இந்த உத்தரவால் எந்த இடையூறும் ஏற்படப்போவதில்லை. சந்தேகப்படும் நிலையில் உள்ளவர்களின் கம்ப்யூட்டர்கள் மட்டுமே ஆய்வு செய்யப்படும். எனவே இதுபற்றி பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கம்ப்யூட்டர் தகவல்களை 10 அமைப்புகளும் ஆய்வு செய்ய அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய உள்துறையின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஒத்துழைக்காத பட்சத்தில் அபராதமும், 7 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்படும் என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. #CentralGovernment
    #ComputerMonitoring
    Next Story
    ×