search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊராட்சி ஒன்றியம்"

    • காங்கயம் காவல் துறையினரிடம் கண்காணிப்பில் ஈடுபட வலியுறுத்தியுள்ளோம்.
    • ஒப்பந்தப்புள்ளி நிறைவுற்ற பின்னரும் கூட தகவல் தெரிவிப்பதில்லை.

    காங்கயம் :

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜீவிதா முன்னிலை வகித்தாா்.

    கூட்டத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் மகேஷ்குமாா் பேசியதாவது:- காங்கயம் அருகே, ஆலாம்பாடி ஊராட்சிக்குட்பட்ட நெய்க்காரன்பாளையம் அரசுப் பள்ளி அருகே போதைப் பொருள் பயன்பாடு உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, காங்கயம் காவல் துறையினரிடம் கண்காணிப்பில் ஈடுபட வலியுறுத்தியுள்ளோம்.மேலும் இப்பள்ளி மாணவா்களின் கற்றல் தொடா்பாக பிரச்சினை எதுவும் உள்ளதா என வட்டாரக்கல்வி அலுவலகம் கண்காணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தின் முன்பு காங்கேயம் காளை சிலை அமைப்பதற்கு அனுமதி கேட்டிருந்தோம். இப்போதைக்கு அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டரிடம் இருந்து பதில் வந்துள்ளது. காளை சிலை அமைப்பது தொடா்பாக மீண்டும் அனுமதி கேட்கவுள்ளோம்.காங்கயம் ஒன்றியத்துக்குட்பட்ட 15 ஊராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதற்கென தினக்கூலி பணியாளர்களுக்கு ஊதியமாக மாதந்தோறும் ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து ரூ.2 லட்சம் செலவிட வேண்டியுள்ளது. பிரதமா் சாலை மேம்பாட்டு திட்டத்தில் நடைபெறும் சாலைப்பணிகள் குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிப்பதில்லை. ஒப்பந்தப்புள்ளி நிறைவுற்ற பின்னரும் கூட தகவல் தெரிவிப்பதில்லை.ஊராட்சி பகுதிகளில் பிரதமா் திட்டத்தின்கீழ் சாலை அமைக்கப்படும்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

    இதில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஒன்றியக் கவுன்சிலா்கள் மற்றும் குடிநீா் வடிகால் வாரியம், வட்டாரக் கல்வி அலுவலகம், மின்சார வாரியம், வேளாண்மைத் துறை உள்ளிட்ட துறைரீதியான அதிகாரிகள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

    • இதனை தொடர்ந்து சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி காலியாக இருந்து வந்தது.
    • காலியாக இருந்த சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடந்த 9 -ந்தேதி தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தவர் தேவசேனா ராஜேந்திரன். இவர் உடல்நலக்குறைவால் சில மாதங்களுக்கு முன் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி காலியாக இருந்து வந்தது.

    காலியாக இருந்த சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடந்த 9 தேதி தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.

    தேர்தலில் மறைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவசேனா ராஜேந்திரன் மகள் நிலா (வயது22) ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.அவரை எதிர்த்து வேறு எவரும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யாததால் சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவராக நிலா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்தராஜ் அறிவித்தார்.

    போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் நிலாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பொறியியல் பட்டதாரியான நிலா 22 வயது உள்ள தமிழகத்தில் மிகவும் குறைந்த வயது ஊராட்சி மன்ற தலைவர் என்பது குறிப்பிடதக்கதாகும்.

    • தற்செயல் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது.
    • அந்தியூர் ஊராட்சியில் 2-வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு அடுத்த மாதம் 9-ந் தேதி தற்செயல் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட உள்ளது.

    திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியத்தில் 16-வது வார்டு உறுப்பினர், பல்லடம் ஒன்றியத்தில் 1-வது வார்டு உறுப்பினர், ஊத்துக்குளி ஒன்றியத்தில் இச்சிப்பாளையம் ஊராட்சி தலைவர், அவினாசி ஒன்றியத்தில் அய்யம்பாளையம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர், குடிமங்கலம் ஒன்றியம், குடிமங்கலம் 1-வது வார்டு உறுப்பினர், காங்கயம் ஒன்றியம் ஆலாம்பாடி ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர், பொங்கலூர் ஒன்றியம் வடக்கு அவினாசிபாளையம் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர், உடுமலை ஒன்றியம் அந்தியூர் ஊராட்சியில் 2-வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    ×