search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆந்திர அதிகாரிகள்"

    கண்டலேறு அணையில் தண்ணீர் இல்லாததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன.

    மேலும் வீராணம் ஏரிகளில் சேமித்து வைக்கும் தண்ணீர், மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திலிருந்து பெறப்படும் தண்ணீர், பூண்டி அருகே உள்ள புல்லரம்பாக்கம், சிறுவானூர் கண்டிகை உள்பட 10 பகுதிகளில் உள்ள ராட்சத ஆழ்துளை கிணறுகளில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படும் தண்ணீரும் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றி வருகிறது.

    கோடை வெயில் மற்றும் பருவ மழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 பிரதான ஏரிகளில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்தது. அதே போல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் கண்டலேறு அணையிலும் தண்ணீர் இருப்பு குறைந்தது.

    தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் இருப்பில் உள்ள தண்ணீரை கொண்டு சென்னையில் சுமார் 30 நாட்கள் தான் குடிநீர் சப்ளை செய்யும் நிலை உள்ளது. எனவே கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட ஆந்திர அரசை வலியுறுத்த தமிழக அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

    இந்த நிலையில் தமிழக பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர்கள் முரளீதரன், பக்தவத்சலம் தலைமையில் அதிகாரிகள் குழு நேற்று ஐதராபாத் சென்று கிருஷ்ணா நதி மேலாண்மை வாரிய கூட்டத்தில் பங்கேற்றனர்.

    கிருஷ்ணா நதி மேலாண்மை வாரியக்குழு தலைவர் ஆர்.கே. ஜெயின் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த பொதுப் பணித்துறை உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதி நீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதற்கு பதில் அளித்து ஆர்.கே.ஜேயின் பேசியதாவது:-

    பருவ மழை நீர் மட்டும் ஸ்ரீசைலம், சோமசிலா அணைகளில் இருந்து கண்டலேறு அணைக்கு வருடந்தோறும் 50 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேரும். பருவ மழை பொய்த்து போனதால் 2018-ல் கண்டலேறு அணைக்கு 16 டி.எம்.சி. தண்ணீர் தான் கிடைத்துள்ளது.

    தற்போது கண்டலேறு அணையில் 7. 50 டி.எம்.சி. தண்ணீர் மட்டும்தான் இருப்பில் உள்ளது. இது ஆந்திராவில் உள்ள விவசாயிகளுக்கு மற்றும் குடிநீருக்காக எப்போதும் சேமித்து வைப்போம்.

    ஆகையால் தற்போதைக்கு பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடமுடியாது. அதிர்ஷ்டவசமாக மழை பெய்து அணைக்கு தண்ணீர் வந்தால் மார்ச் மாதத்தில் தண்ணீர் திறப்புக்கு பரிசீலனை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையே ஆந்திர அதிகாரிகளும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக அதிகாரிகள் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினர். இதனால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது.

    செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு, துப்பாக்கிச்சூட்டில் பலியான ஜவ்வாது மலையை சேர்ந்தவரின் குடும்பத்தினரை, நீதி விசாரணைக்காக வரவழைத்து, விசாரணை நடத்தாமல் அவர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.
    ஸ்ரீகாளஹஸ்தி:

    ஸ்ரீகாளஹஸ்தி அடுத்த கொல்லப்பள்ளி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக, ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி நள்ளிரவு திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அருகே உள்ள கானமலை கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் (வயது 48) என்பவரை வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

    இதுபற்றி வனத்துறையினர், அவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு, உறவினர்கள் ஸ்ரீகாளஹஸ்திக்கு வருவதற்கு முன்பே காமராஜின் பிணத்தை ஸ்ரீகாளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து, பிணத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் பிணத்தைப் பெற்றுக்கொள்ளாமல், ஆந்திர ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.

    துப்பாக்கிச்சூட்டில் பலியான காமராஜின் பிணத்தை மறு பிரேத பரிசோதனைச் செய்ய வேண்டும், வனத்துறையினர் காமராஜை பிடித்து வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர், அவரின் சாவில் எங்களுக்குச் சந்தேகம் உள்ளதாக கூறி, நீதி கேட்டு வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி, காமராஜின் பிணத்தை மறு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.

    மேலும் திருப்பதி தாசில்தார் தலைமையில் குழு அமைத்து, சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் மற்றும் வனத்துறையினர் ஆகியோரை விசாரித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என ஆந்திர ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து நேற்று நீதி விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என காமராஜின் குடும்பத்தை சேர்ந்த ராமராஜ் உள்பட 7 பேருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது.

    நேற்று விசாரணைக்காக வந்த ராமராஜ், மக்கள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரவிசெந்தில்ராஜ் உள்பட 7 பேர் திருப்பதி தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து காலை முதல், மதியம் வரை காத்திருந்தனர்.

    ஆனால் தாசில்தார் வராததால், அவரின் உதவியாளர்கள் தற்போது இதுகுறித்து விசாரிக்க முடியாது, தாசில்தார் வேறு பணியில் இருப்பதால் இன்னொரு முறை வாருங்கள், அதற்கான தேதியை தாசில்தாரிடம் பெற்று, உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறோம் எனக்கூறி திருப்பி அனுப்பி விட்டனர். இதனால் தமிழகத்தில் இருந்து வந்திருந்த ராமராஜ் உள்பட 7 பேரும் என்ன செய்வதென்று தெரியாமல் திரும்பிச் சென்றனர். #tamilnews
    ×