search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய ஆந்திர அதிகாரிகள்
    X

    பலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய ஆந்திர அதிகாரிகள்

    செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு, துப்பாக்கிச்சூட்டில் பலியான ஜவ்வாது மலையை சேர்ந்தவரின் குடும்பத்தினரை, நீதி விசாரணைக்காக வரவழைத்து, விசாரணை நடத்தாமல் அவர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.
    ஸ்ரீகாளஹஸ்தி:

    ஸ்ரீகாளஹஸ்தி அடுத்த கொல்லப்பள்ளி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக, ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி நள்ளிரவு திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அருகே உள்ள கானமலை கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் (வயது 48) என்பவரை வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

    இதுபற்றி வனத்துறையினர், அவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு, உறவினர்கள் ஸ்ரீகாளஹஸ்திக்கு வருவதற்கு முன்பே காமராஜின் பிணத்தை ஸ்ரீகாளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து, பிணத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் பிணத்தைப் பெற்றுக்கொள்ளாமல், ஆந்திர ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.

    துப்பாக்கிச்சூட்டில் பலியான காமராஜின் பிணத்தை மறு பிரேத பரிசோதனைச் செய்ய வேண்டும், வனத்துறையினர் காமராஜை பிடித்து வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர், அவரின் சாவில் எங்களுக்குச் சந்தேகம் உள்ளதாக கூறி, நீதி கேட்டு வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி, காமராஜின் பிணத்தை மறு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.

    மேலும் திருப்பதி தாசில்தார் தலைமையில் குழு அமைத்து, சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் மற்றும் வனத்துறையினர் ஆகியோரை விசாரித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என ஆந்திர ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து நேற்று நீதி விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என காமராஜின் குடும்பத்தை சேர்ந்த ராமராஜ் உள்பட 7 பேருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது.

    நேற்று விசாரணைக்காக வந்த ராமராஜ், மக்கள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரவிசெந்தில்ராஜ் உள்பட 7 பேர் திருப்பதி தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து காலை முதல், மதியம் வரை காத்திருந்தனர்.

    ஆனால் தாசில்தார் வராததால், அவரின் உதவியாளர்கள் தற்போது இதுகுறித்து விசாரிக்க முடியாது, தாசில்தார் வேறு பணியில் இருப்பதால் இன்னொரு முறை வாருங்கள், அதற்கான தேதியை தாசில்தாரிடம் பெற்று, உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறோம் எனக்கூறி திருப்பி அனுப்பி விட்டனர். இதனால் தமிழகத்தில் இருந்து வந்திருந்த ராமராஜ் உள்பட 7 பேரும் என்ன செய்வதென்று தெரியாமல் திரும்பிச் சென்றனர். #tamilnews
    Next Story
    ×