search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர் கைது"

    • பிளஸ்-2 படிக்கும் மாணவிக்கு கடந்த சில நாட்களாக சகாய டோனிவளவன் பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார்.
    • மாணவியின் பெற்றோர் முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை 100 அடி சாலை அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    இப்பள்ளியில் விலங்கியல் ஆசிரியராக கண்டமங்கலம் இந்திரா நகரை சேர்ந்த சகாய டோனிவளவன் என்பவர் பணிபுரிகிறார். இவர் இப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவிக்கு கடந்த சில நாட்களாக பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். இது குறித்து அந்த மாணவி எதிர்ப்பு தெரிவித்தும் டோனி வளவன் தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்தார். மேலும் அந்த மாணவியின் செல்போனுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. அதற்கு அந்த மாணவி எந்த பதிலும் அளிக்காத போதிலும் டோனிவளவன் தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி டார்ச்சர் செய்துள்ளதாக தெரிகிறது.

    இந்த தகவல் கிடைத்ததும் சமூக அமைப்பினர் பள்ளி தாளாளரிடம் முறையிட்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து மாணவியின் பெற்றோர் முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் போக்சோவில் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஆசிரியரை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் பிரபாகரனை கைது செய்தனர்.
    • கலெக்டர் சமீரனின் பரிந்துரையின் பேரில் ஆசிரியர் பிரபாகரனை, மாவட்ட கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    குனியமுத்தூர்:

    கோவை குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பிரபாகரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் முன்னதாக வால்பாறையில் உள்ள பள்ளியில் பணியாற்றி வந்தார். பின்னர் அங்கிருந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் இந்த பள்ளிக்கு வந்தார்.

    பள்ளிக்கு வந்த நாளில் இருந்தே இவர் அங்கு படிக்கும் மாணவிகளிடம் தொட்டு பேசுவது, என பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து அவரது தொல்லை அதிகரிக்க மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் முறையிட்டனர். இதை கேட்டு மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் இன்று காலை பள்ளி முன்பு திரண்டனர்.

    அவர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை உடனே பணியை விட்டு நீக்க வேண்டும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பள்ளி மாணவிகள் கூறுகையில், இந்த ஆசிரியர் வந்ததில் இருந்தே மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருகிறார். 5 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து நாங்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தோம். அவர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பெற்றோரிடம் சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

    இதற்கிடையே போராட்டம் பற்றி அறிந்ததும் உதவி கமிஷனர் ரகுபதி, குனியமுத்தூர் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர்கள் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போலீசார் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் பிரபாகரனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே கலெக்டர் சமீரனின் பரிந்துரையின் பேரில் ஆசிரியர் பிரபாகரனை, மாவட்ட கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு, போலீசாருக்கும், கோட்டாட்சியருக்கும் கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

    • ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி குழந்தைகள் நல அலுவலர் தாராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியர் பிரகாசம் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் போலீஸ் நிலையம் அருகே தனியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவர் ஒருவர் தேர்வை சரியாக எழுதவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து சமூக அறிவியல் ஆசிரியர் பிரகாசம் ஜெயக்குமார் (வயது 50) என்பவர் வகுப்பறையில் வைத்து சக மாணவர்கள் முன்னிலையில் அந்த மாணவரை திட்டியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அந்த மாணவர் பள்ளி விடுதியில் வைத்து பிளேடால் தனது இடதுகையில் அறுத்துக் கொண்டார்.

    இதையடுத்து மற்ற மாணவர்கள் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது சம்பந்தமாக மாணவரின் பெற்றோர் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தினர். இதில் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த மாணவர் கையை அறுத்துக் கொண்டது உண்மை என தெரியவந்தது.

    மேலும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி குழந்தைகள் நல அலுவலர் தாராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியர் பிரகாசம் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர். பிறகு அவரை கைது செய்த போது நெஞ்சுவலியால் திடீரென அவர் மயங்கினார். உடனே அவரை போலீசார் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×