search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் துரைமுருகன்"

    • நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என என்னுடைய கணிப்பு.
    • இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவு உரிமை தமிழகத்திற்கும் உள்ளது.

    வேலூர்:

    தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் இன்று காட்பாடி காந்தி நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவருடன் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

    அப்போது துரைமுருகன் கூறியதாவது:-

    தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் எங்களுக்கு வெற்றி பிரகாசமாக இருப்பதாக எனக்கு தகவல் வந்து கொண்டிருக்கிறது.

    இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடக்கிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என என்னுடைய கணிப்பு.

    வாக்காளர்கள் ஒழுங்கா வந்து வாக்கு மட்டும் போட்டால் போதும். இன்னமும் ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்தி தான். இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூளை முடுக்குகள் உள்ளன.

    தேர்தல் ஆணையம் எப்போதுமே சரியாக இருக்காது. ஆளுங்கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். எந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை.

    நதிநீர் இணைப்பிற்கு தமிழகம் எப்போதும் தயாராக உள்ளது. தற்போது மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவோம் என கர்நாடக துணை முதல்-மந்திரி சிவகுமார் கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் கர்நாடக மக்களை உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் அப்படி பேசுகிறார்.

    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவு உரிமை தமிழகத்திற்கும் உள்ளது.

    மேகதாது அணை கட்டக்கூடாது என்பது தமிழகத்தின் உரிமை. நான் 25 ஆண்டுகளாக காவிரி பிரச்சனையை கவனிக்கிறேன். இது எனக்கு சாதாரணமான செய்தி.

    புதியதாக பதவிக்கு வந்ததால் கர்நாடகா துணை முதல்- மந்திரி சிவக்குமாருக்கு இது புதுசாக தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறையில் பார்க்க வந்த மகனை பார்க்க விடாமல் காவலர்கள் தடுத்தார்கள்.
    • எனது மகனை நான் ஒரு வருடம் தொடாமல் பாசத்தை கட்டுப்படுத்தி தியாகம் செய்துள்ளேன்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பிரதமர் மோடி நாங்கள் தியாகம் செய்யவில்லை என கூறுகிறார். நாங்கள் தியாகத்திலேயே வளர்ந்தவர்கள். பலமுறை மிசாக்கு சிறை சென்றுள்ளோம். அப்படி சிறைக்கு சென்ற போது எனது மகன் எனது சட்டையை பிடித்து இழுத்து அழுது கொண்டிருந்தார். மேலும் சிறையில் பார்க்க வந்த மகனை பார்க்க விடாமல் காவலர்கள் தடுத்தார்கள்.

    மேலும் எனது மகனை நான் ஒரு வருடம் தொடாமல் பாசத்தை கட்டுப்படுத்தி தியாகம் செய்துள்ளேன். திமுக-வில் செல்வாக்குள்ள வேட்பாளர் நிற்பதால் அவரை ரெய்டு நடத்தி கைது செய்ய மேலிடம் சொன்னதாக எனக்கு தகவல் வந்துள்ளது. அதைப் பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, ராஜ்யசபாவில் அ.தி.மு.க. எதிர்த்து வாக்களித்து இருந்தால் இந்த சட்டமே வந்திருக்காது.
    • காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை முடிந்ததும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வரும்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கற்பகம் கூட்டுறவு பெட்ரோல் பங்கை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று திறந்து வைத்தார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மத்திய அரசு சொன்னாலும் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம் என்று சித்தராமையா கூறியுள்ளார்.

    கர்நாடகாவில் என்றைக்காவது, எந்த மந்திரியாவது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவோம் என்று கூறி கேள்விப்பட்டது உண்டா.


    எப்போது பார்த்தாலும் இப்படி தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றம் சென்று தான் நாம் தண்ணீரை பெற்றுக் கொண்டிருக்கிறோம். தண்ணீரை கர்நாடகாவிலிருந்து எப்படி பெறுவது என்று எங்களுக்கு தெரியும்.

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, ராஜ்யசபாவில் அ.தி.மு.க. எதிர்த்து வாக்களித்து இருந்தால் இந்த சட்டமே வந்திருக்காது. காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை முடிந்ததும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வரும்.

    ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசு தொடுத்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

    அது குறித்து வழக்கறிஞர்கள் பேசுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்றைக்கும் மக்களுக்கு இலவச சோறு போடுகிற நிலைமையில் தான் இருக்கிறோம்.
    • போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக அ.தி.மு.க.வினரின் போராட்டம் அரசியல்.

    வேலூர்:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் இன்று தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம் காட்பாடியில் வேலூர் தாலுக்கா மற்றும் காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட சுமார் 500-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. பொது செயலாளர் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவினை வழங்கினார்.

    ஒருவனுக்கு தங்க நிழல் கூட இல்லாமல் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில் விண்ணில் ஊர்திகளை செல்கிறோம், சந்திரனுக்கு அனுப்புகிறோம், சூரியனை நெருங்கிவிட்டோம் என்று பேசுவது மனிதாபிமானம் ஆகாது. அது அறிவுடைமைக்கு வேண்டுமானால் எடுத்துக்காட்டாக இருக்கலாம்.

    அதனால் தான் நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகளை வழங்கி வருகிறோம்.

    இன்றைக்கும் மக்களுக்கு இலவச சோறு போடுகிற நிலைமையில் தான் இருக்கிறோம். பிள்ளைகளுக்கு மூன்று வேளை சோறு கூட போட முடியாத சூழ்நிலையில் உள்ளது பஞ்சத்தில் உள்ளார்கள்.

    உடுக்கும் உடை கூட யாராவது கொடுக்க மாட்டார்களா என காத்துக்கொண்டி ருக்கிறார்கள். இதை மாற்றுவது தான் நமது அரசு. தேர்தல் முடிந்த உடன் 8 லட்சம் வீடுகள் கட்டி ஒப்படைக்கப்படும்.

    மக்களுக்கு தொண்டு செய்வது எங்கள் தலையாய கடமை என கருணாநிதி செய்தார் அதை அவரது மகன் மு க ஸ்டாலின் இப்போது செய்து வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் முடிவடையும்.

    மதுரை எய்ம்ஸ் அவர்கள் கொண்டு வந்த திட்டம் தான், அவர்கள் தான் செயல்படுத்தவில்லை. எங்கள் மீது பழி சொல்வது நியாயம் இல்லை. நாங்கள் தடுத்திருக்கிறோம் என்று ஒரு திட்டத்தை சொல்ல சொல்லுங்கள். மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர், நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவர் எந்த திட்டத்தை தடுத்தோமா? இல்லையா என்று சொல்ல வேண்டும்.

    பா.ஜ.க.வினர் அ.தி.மு.க. தலைவர்கள் படத்தை தவறாக பயன்படுத்து கிறார்கள் என்று அதிமுகவினருக்கு தான் ரோசம், கோபம் வர வேண்டும்.

    பிரதம மந்திரி பத்து முறை கூட வரலாம் யார் வேண்டாம் என்று சொன்னார்கள்.

    இவ்வளவு நாள் தி.மு.க.வை பற்றி பேசினாரா பிரதமர். தேர்தல் வரும்போதுதான் தி.மு.க.வை பற்றி பேசுகிறார். ஜல்லிக்கட்டு காலத்தில் வண்டி மாடு ஒரு மாறி தலையை ஆட்டும். அதுபோல தான் பிரதமரின் பேச்சு. இதெல்லாம் ஒரு அரசியல் சீசன்.

    போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக அ.தி.மு.க.வினரின் போராட்டம் அரசியல்.

    இதெல்லாம் பண்ணாமலா இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேகதாது பற்றி கர்நாடகா அரசு பேசிக் கொண்டிருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
    • கர்நாடகாவால் மேகதாதவில் அணை கட்டமுடியாது என்றார் அமைச்சர் துரைமுருகன்.

    சென்னை:

    கர்நாடக மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய முதல் மந்திரி சித்தராமையா, மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினரின் அனுமதி பெற்று அணை கட்டப்படும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கடைசியாக நடந்த கூட்டத்தில் கூட மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தை கொண்டு வந்த போது நாங்கள் எதிர்த்தோம்.

    கர்நாடக அரசு நிதியை ஒதுக்கலாம், குழுவை அமைக்கலாம். ஆனால் தமிழக அரசின் அனுமதியின்றி மேகதாது அணையை கட்ட முடியாது.

    மேகதாது பற்றி கர்நாடகா அரசு பேசிக் கொண்டிருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எந்தக் காலத்திலும் மேகதாது அணையை கர்நாடகா கட்ட முடியாது. அதுதான் சட்டம், அதுதான் நியதி என தெரிவித்தார்.

    • சென்னையை சுற்றி புதிய நீர்நிலைகளை உருவாக்குவது குறித்து நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறோம்.
    • தற்போது பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் உயரத்தை ஒரு அடி அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள திருவலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பாராளுமன்றத்தில் நேற்று நடந்த அத்துமீறல் சம்பவம் பாதுகாப்பு சரியாக இல்லை என்பதை தான் குறிக்கிறது. பாராளுமன்றத்திற்குள் ஒரு குண்டூசி கூட எடுத்துச்செல்ல முடியாது. ஆனால் எப்படி அவர்களை விட்டார்கள் என்று தெரியவில்லை.

    அங்கு அத்துமீறி சென்றவர்கள் எங்களால் முடியும் என நிரூபித்துள்ளார்கள். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.டெல்லியில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது. அதனை பலப்படுத்த வேண்டும்.

    கவர்னர் முதலமைச்சரை அழைத்தாரா என்பது எனக்கு தெரியாது. சென்னையை சுற்றி புதிய நீர்நிலைகளை உருவாக்குவது குறித்து நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறோம்.

    2 இடங்களில் அந்த சாத்தியக்கூறுகள் உள்ளது. ராமஞ்சேரி பகுதியில் பெரிய டேம் அமைக்கலாம். ஆனால் இதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

    அதேபோல் மற்றொரு இடத்திலும் கடந்த ஆட்சியில் நீர் நிலை அமைக்க பணிகள் தொடங்கபட்டது. அதுவும் பாதியில் கைவிடப்பட்டது.

    தற்போது பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் உயரத்தை ஒரு அடி அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு பணிகள் தொடங்கப்படும்.

    தமிழகத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம். பொதுமக்கள் எதிர்ப்பதால் படாதபாடு பட வேண்டிய நிலை உள்ளது. மக்களுக்கு மாற்று இடம் வழங்கி விட்டு அதற்குப் பிறகு நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மறைந்த தலைவர் கருணாநிதி, ஸ்டாலினுக்கு ஒவ்வொரு முறையும் நிறைய பரிட்சைகள் வைப்பார்.
    • தந்தையை போல மகனும் உழைப்பு உழைப்பு என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    சென்னை:

    அமைச்சர் உதயநிதியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். கூடவே அவரை துணை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்ற தங்கள் ஆசையையும் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மூத்த அமைச்சரும் கட்சியின் பொதுச் செயலாளருமான துரைமுருகன் உதயநிதி ஸ்டாலின் உயர்ந்த பொறுப்புகளுக்கு பொருத்தமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

    மறைந்த தலைவர் கருணாநிதி, ஸ்டாலினுக்கு ஒவ்வொரு முறையும் நிறைய பரிட்சைகள் வைப்பார். அவற்றில், அவர் தேறிய பின்தான் உயர்வு அளிப்பார். அப்படித்தான், கட்சியின் இளைஞர் அணி செயலராக, துணைப் பொதுச் செயலராக, பொருளாளராக, செயல் தலைவராக, தலைவராக உயர்வு பெற்றார்.

    நிர்வாகப் பொறுப்பிலும் மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக படிப்படியாக உயர்த்தப்பட்டார். தற்போது முதல்வராகி இருக்கிறார். அந்த வகையில், உதயநிதியும் போட்டியின்றி அனைவர் மனதிலும் நிறைந்திருக்கிறார். அவருக்கான உயரங்களும் விரைவில் போட்டியின்றி, அவருக்கு தானாகவே வந்து சேரும்.

    அவரது உழைப்பு என்பது சாதாரணமானது அல்ல. தந்தையை போல மகனும் உழைப்பு உழைப்பு என்று வாழ்ந்து கொண் டிருக்கிறார்.

    கருணாநிதி ஒருமுறை என்னிடம், பேரனின் புத்திக் கூர்மை மற்றும் அவர் பின்பற்றும் கொள்கை குறித்து வியந்து பாராட்டினார். அப்படி கருணாநிதியால் அன்றைக்கே அடையாளம் காட்டப்பட்டவர் தான் உதயநிதி. உயர்வுக்கு பொருத்தமானவர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சுரண்டை நகராட்சி பகுதியில் ஊரின் நடுவே, சென்னை கூவம் ஆற்றை போன்று செண்பக கால்வாய் உள்ளது.
    • அணையில் இருந்து உபரி நீர் வரும்போது அதனுடன் சாக்கடை கழிவு நீரும் சேர்ந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் நிலை உள்ளது.

    தென்காசி:

    தமிழக நீர் வளம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரும், தி.மு.க. பொதுச்செயலாளருமான துரைமுருகனை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் சென்னையில் நேரில் சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சுரண்டை நகராட்சி பகுதியில் ஊரின் நடுவே, சென்னை கூவம் ஆற்றை போன்று செண்பக கால்வாய் உள்ளது. அந்த கால்வாய் வழியாக அடவிநயினார் அணையில் இருந்து உபரி நீர் விவசாயத்திற்கு வரும்போது அதனுடன் சாக்கடை கழிவு நீரும் சேர்ந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி அங்கு கான்கிரீட் தளம் அமைத்து தருவதற்கு தனியாக நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. பண்ணாரி, “தளவாடி மலைப்பகுதி மக்களுக்கு புதிய குடிநீர் திட்ட வசதி ஏற்படுத்தி தர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
    • கோரிக்கையும் ஆய்வு செய்து நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதியில் உள்ள குடிநீர் திட்டப் பணிகள் குறித்தும், அதனை நிறைவேற்ற வலியுறுத்தியும், கோரிக்கைகளை வைத்தனர்.

    கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. சரவணன், மிருகண்டா நதி அணையை புனரமைக்க அரசு முன் வருமா? நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படுமா? என்பது போன்ற கோரிக்கைகளை எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், "இந்த கோரிக்கைகளை அரசு விரைவில் நிறைவேற்றும்" என்று தெரிவித்தார்.

    பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. பண்ணாரி, "தளவாடி மலைப்பகுதி மக்களுக்கு புதிய குடிநீர் திட்ட வசதி ஏற்படுத்தி தர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

    இந்த கோரிக்கையும் ஆய்வு செய்து நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து செங்கோட்டையன் (அ.தி.மு.க.), "அ.தி.மு.க. ஆட்சியில் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி ரூ.1650 கோடியில் அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    தற்போது 91 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. எப்போது அந்த திட்டம் மக்கள் பயனடையும் வகையில் தொடங்கி வைக்கப்படும்" என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், "அத்திக்கடவு-அவினாசி திட்டப் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள போதிலும் காளிங்கராயன் அணையில் இருந்து 1.5 டி.எம்.சி. தண்ணீரை வரவழைக்க வேண்டி உள்ளது.

    தற்போது அணையில் தண்ணீர் இல்லாததால் தாமதமாகி உள்ளது. இருப்பினும் இன்னும் 15 நாளில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைப்பார்" என்றார்.

    • மதுரைக்கு நீர் கொண்டு செல்லும் பணியை அ.தி.மு.க. ஆரம்பித்தாலும் கிணறு தோண்டும் அனுமதியை பெறாமல் இருந்தது.
    • கடந்த ஆட்சியில் 60 கிலோ மீட்டருக்கு பைப் லைன் போடாமல் விட்ட நிலையில் தற்போது அந்த பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மதுரை மாநகருக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்றும், அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் எனவும், மதுரை மாநகரில் சாக்கடை நீரும் குடிநீருடன் கலந்து வரக்கூடிய நிலையில் அரசு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ கோரிக்கை வைத்தார்.

    இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கம்பத்தில் இருந்து மதுரைக்கு நீர் கொண்டு செல்லும் பணியை அ.தி.மு.க. ஆரம்பித்தாலும் கிணறு தோண்டும் அனுமதியை பெறாமல் இருந்ததாகவும், 160 எம்.எல்.டி தண்ணீர் கொண்டு வர பணிகள் நடைபெற்று வருகிறது என்றும், கடந்த ஆட்சியில் 60 கிலோ மீட்டருக்கு பைப் லைன் போடாமல் விட்ட நிலையில் தற்போது அந்த பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும், 15 கிலோ மீட்டர் பைப் லைன் போட வேண்டிய பணிகள் உள்ளதால் அந்த பணிகளும் விரைவில் நிறைவு பெற்று முதலமைச்சர் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பார் எனவும் கூறினார்.

    அப்போது குறுக்கீட்டு பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிச்சயமாக தண்ணீர் கிடைக்கும் என்றும், அணைகள் காலியாகாமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூடி வைத்துள்ளோம். எனவே கவலைப்பட வேண்டாம் என கூறியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

    • மிருகண்டா நதி அணையை புனரமைக்க அரசு முன்வருமா? என சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கேள்வி எழுப்பினார்.
    • அணையை பாதுகாக்க செய்ய வேண்டிய வழியையும் ஆய்வறிக்கையாக கொடுத்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் பதில்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், கலசப்பாக்கம் தொகுதி, கலசப்பாக்கம் ஒன்றியம், மிருகண்டா நதி அணையை புனரமைக்க அரசு முன்வருமா எனவும், 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதலமடைந்துள்ள நிலையில் இந்த ஆண்டு அந்த பணிகள் தொடங்கப்படுமா எனவும் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மிருகண்டா நதியை சீரமைக்க உலக வங்கியின் நிதி உதவியுடன் பணிகள் மேற்கொள்ள மத்திய நீர்வளத் துறையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், Dam safety review மூலமும் அணையை பாதுகாக்க செய்ய வேண்டிய வழியையும் ஆய்வறிக்கையாக கொடுத்துள்ளோம் என்றும், அறிக்கை கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

    • தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 12,525 ஊராட்சிகளில் 4,357 இடங்கள் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
    • அனைவரும் ஓரிடத்தில் சமத்துவமாய் வாழ சமத்துவ புரங்களை உருவாக்கிய தமிழ்நாடு, சமூகநீதி மண்.

    சென்னை:

    அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டம், நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியேற்பு குறித்து மாண்பமை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவைக்கூட அறிந்துகொள்ள முயற்சிக்காமல் தமிழ்நாடு அரசின் மீது கவர்னர் திட்டமிட்டு அவதூறுப் பரப்புரையை செய்து வருவது மிகுந்த வேதனைக்குரியது. அரசியல்சட்டப் பதவியில் இருப்பவர் அரசியல் கட்சித் தலைவர் போல், குறிப்பாக பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் போல் பேசி, தமிழ்நாட்டின் சமூக நீதியால் பிறந்துள்ள அமைதிக்கும் குந்தகம் விளைவித்து வருவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

    தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 12,525 ஊராட்சிகளில் 4,357 இடங்கள் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில் திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி மட்டுமே நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் காரணமாக அங்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பொறுப்பேற்க இயலாத நிலை இருந்தது.

    இந்த நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வழக்கில், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் தனது 7-10-2021 நாளிட்ட உத்தரவில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்து உள்ளார். ஒதுக்கப்பட்ட இடத்துக்குரிய பிரிவைச் சேர்ந்தவராக இந்நபர் இல்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிற காரணத்தால் சம்பந்தப்பட்ட நபர் பொறுப்பேற்கக் கூடாது என்று தெளிவாக்குகிறோம். எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததால் ஊராட்சி மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பொறுப்பை ஏற்க இயலாத நிலை ஏற்பட்டது.

    திராவிட மாடல் அரசின் சமூகநீதிக் கொள்கை, பா.ஜ.க.வையும், அதன் அமைப்புகளையும் தமிழ் மண்ணுக்குள் செல்வாக்குப் பெற முடியாமல் தடுத்து வைத்திருக்கிறதே என்ற ஆதங்கம்தான் கவர்னர் இப்படி பேச காரணமே தவிர, பட்டியலின-பழங்குடியின மக்கள் மீது அவருக்கு இருக்கும் அக்கறை இல்லை.

    அப்படி அவருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் "அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்" என்று சட்டம் பிறப்பித்து உள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று உள்ளவர்களை கடிந்து கொண்டிருக்கலாம். அடிக்கடி டெல்லி செல்லும் அவர், உத்தரபிரதேசத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 31.8 விழுக்காடும், மத்திய பிரதேசத்தில் 63.6 விழுக்காடும் உயர்ந்திருப்பதற்குக் கவலைப்பட்டு குரல் கொடுத்திருக்கலாம். உத்தரபிரதேசத்தில் 13,146, மத்திய பிரதேசத்தில் 7214, குஜராத்தில் 1201 எனப் பட்டியலினத்தவர் கொலை செய்யப்பட்டது குறித்து வெகுண்டெழுந்து இருக்கலாம். ஏன் பழங்குடியினருக்கு எதிராக மத்திய பிரதேசத்தில் 17 விழுக்காடு அளவிற்குக் குற்றங்கள் அதிகரித்திருப்பதைக் கண்டு பதற்றப்பட்டு பேசியிருக்கலாம்.

    பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அதிகரித்து வரும் இத்தகைய கொடுமைகளை எதிர்த்து உள்துறை அமைச்சரிடம் குரல் கொடுக்காத கவர்னர், உயர்நீதிமன்ற உத்தரவில் உள்ள ஒரு ஊராட்சியை மட்டும் பற்றிப் பேசுவதன் உள்நோக்கம் என்ன? யாரை ஏமாற்ற இந்த நீலிக்கண்ணீர்?

    அனைவரும் ஓரிடத்தில் சமத்துவமாய் வாழ சமத்துவ புரங்களை உருவாக்கிய தமிழ்நாடு, சமூகநீதி மண். இங்கு தமிழ்நாடு பட்டியலின-பழங்குடியின ஆணையத்தை அமைத்து, மாநில அளவிலான கண்காணிப்புக் கூட்டங்களை நடத்தி பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவருக்கான சமூகநீதியை நிலைநாட்டி வருகிறார் எங்கள் முதலமைச்சர் . எங்கள் முதலமைச்சர் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதுதான் தேர்தலை நடத்த முடியாத ஊராட்சிகளில் தேர்தலை நடத்தி, சமூகநீதியை நிலை நாட்டினார். பட்டியலின-பழங்குடியினத்தவர் மீதான வன்முறைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் தண்டனை பெறுவது 2013-2020 வரை 7.15 விழுக்காடாக இருந்த நிலை 2021-2023-இல் 9.12 விழுக்காடாக உயர்த்தியுள்ளது இந்த சமூகநீதி அரசுதான்!

    இந்த விவரங்களும்-வரலாறும் தெரியாமல், கவர்னர் சிறப்பாகச் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி வரும் திராவிட மாடல் அரசை தொடர்ந்து விமர்சிப்பதை தவிர்ப்பது நல்லது. அரசியல் பேச வேண்டும் என்றால் "அரசியல் தலைவராக" தன்னை மாற்றிக் கொண்டு தாராளமாக கவர்னர் தன் கருத்தை தெரிவிக்கட்டும். அதற்கு பதிலடி கொடுக்க நாங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுமே தயாராக இருக்கிறார்கள்.

    எனவே, கவர்னர் உண்மைக்கு மாறான இத்தகைய பேச்சுகளைத் தவிர்த்து, மாநில சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கும், அரசு நிர்வாகத்தின் கோப்புகளிலும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களை காப்பாற்ற அவர்கள் தொடர்பான லஞ்ச வழக்குகளில் கையொப்பமிடாமல் வைத்துள்ள கோப்புகளிலும் கையெழுத்துப் போடுவதில் தனது நேரத்தை உருப்படியாகச் செலவிட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஆக்கபூர்வமாக செயல்படும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×