search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "speed limit"

    • விபத்தை தடுக்க வேகத்தடைகள் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தின் வழியாக விக்கிரவாண்டி-தஞ்சாவூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக இந்த பகுதியில் உள்ள பாண்டியன் ஏரியில் இருந்து மண் எடுக்கப்பட்டு விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் சிதம்பரம்-திருச்சி 2 வழிச்சாலை அமைக்கும் பணிக்காக கொண்டு செல்லப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மதியம் நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள புறவழிச்சாலையில் மண் ஏற்றப்பட்ட லாரி சென்றது. அதேநேரத்தில் மீன்சுருட்டி அருகே உள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் ஒரு ேமாட்டார் சைக்கிளில், ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையில் இருந்து வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் வீரராகவன், ராகுல் காந்தி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் அடிக்கடி இந்த சாலையில் விபத்துகள் ஏற்படுவதால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலையின் 2 புறமும் வேகத்தடை அமைக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து முத்துசேர்வாமடம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தை தடுக்க வெள்ளியணை பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு செல்கின்றனர்

    கரூர் :

    கரூர் அடுத்த வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. அதனருகே அரசு மேல்நிலைப் பள்ளியும் செயல்படுகிறது. 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி எதிரே வெள்ளியணை போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. அங்கு வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி இல்லை. இதனால் சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதால் பிரிவு சாலையில் விபத்து ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    இதுகுறித்து மாணவ மாணவியரின் பெற்றோர் கூறுகையில், போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வருபவர்கள் வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு செல்கின்றனர். மேலும் வாகன சோதனையின் போது லாரி போன்ற கனரக வாகனங்களும் போலீஸ் ஸ்டேஷன் நிறுத்தப்பட்டுள்ளன.

    இதனால் பள்ளிக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இந்த இடத்தில் மூன்று பிரிவுகளில் இருப்பதால் கனரக வாகனங்கள் நிறுத்தும் போது எதிரில் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. துவக்கப் பள்ளி மாணவ மாணவியர் சமையல் கூடம் பள்ளி எதிரில் உள்ளது. அங்கு செல்ல பிரிவு சாலையை கடந்து செல்ல வேண்டும்.

    அப்போது மின்னல் வேகத்தில் வரும் வாகனங்கள் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பள்ளி துவங்கும் நேரம், உணவு இடைவேளை, முடியும் நேரங்களில் மாணவர்கள் பாதுகாப்பு கருதி ஆசிரியர்கள் சாலை நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டி உள்ளது. இதனை போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இந்த நேரத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தை தேர்வு செய்வதோடு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.

    திருவனந்தபுரத்தில் சாலை விதியை மீறி வேகமாகச் சென்ற கவர்னர் அலுவலக ஊழியர்கள் பயன்படுத்திய காருக்கு அபராத தொகை வசூலிக்கப்பட்டது.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் கவடியார்- வெள்ளையம்பலம் இடையேயான சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

    வாகன நெருக்கடி காரணமாக அடிக்கடி இந்த சாலையில் விபத்துக்கள் நடப்பது வழக்கம். எனவே போக்குவரத்து போலீசார் இச்சாலையில் வாகனங்கள் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தனர்.

    ஆனாலும் சிலர் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிச் செல்வதால் விபத்துக்கள் தொடர்ந்து கொண்டே இருந்தது.

    இதையடுத்து இச்சாலையில் போக்குவரத்து போலீசார் வாகனங்களின் வேகத்தை கண்டு பிடிக்கும் தானியங்கி கண்காணிப்பு கருவியை பொருத்தினர். கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி இந்த கருவி செயல்பாட்டுக்கு வந்தது.

    அதன்பிறகு இச்சாலையில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்திற்கு அதிகமாக செல்லும் அனைத்து வாகனங்களும் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி இந்த சாலையில் சென்ற கவர்னரின் காரும் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகத்தில் சென்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் கவர்னர் அலுவலகத்துக்கு இத்தகவலை தெரிவித்து அபராதம் கட்டுவதற்கான செல்லானையும் அனுப்பி வைத்தனர்.

    கடந்த வாரம் தான் இந்த தகவல் கவர்னர் சதாசிவத்தின் கவனத்திற்கு சென்றது. அந்த காரை கவர்னர் பயன்படுத்துவதில்லை. அது கவர்னரின் செயலாளர் பயன்படுத்தும் காராகும். இருந்தும் போக்குவரத்து விதியை மீறி இருப்பதால் அபராதத்தை உடனடியாக செலுத்தும்படி அலுவலக ஊழியர்களுக்கு கவர்னர் சதாசிவம் உத்தரவிட்டார். அதன்படி அபராதமும் செலுத்தப்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே சாலையில் வேகமாகச் சென்ற ஐகோர்ட்டு நீதிபதிக்கும் இது போல அபராதம் விதிக்கப்பட்டது. அவரும் அபராதம் செலுத்தினார்.

    கவடியார்- வெள்ளையம்பலம் சாலையில் தானியங்கி கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்ட பின்பு தினமும் 3 ஆயிரம் வாகனங்கள் போக்குவரத்து விதியை மீறி செல்வது தெரிய வந்துள்ளது. இதனை கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் கண்டு பிடித்து அபராதம் விதித்து வருகிறார்கள்.

    இதுவரை அபராத தொகையாக ரூ. 1 கோடியே 10 லட்சம் வரை வசூலாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
    ×