search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reduce rates"

    மெட்ரோ ரெயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருப்பதால் கட்டணத்தை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று இயக்குனர் நரசிம்ம பிரசாத் கூறினார்.#ChennaiMetroTrain
    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் நரசிம்ம பிரசாத், சின்னமலையில் உள்ள செக்கர்ஸ் ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.14 ஆயிரத்து 600 கோடி கடந்த 2009-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. அதன்படி, கோயம்பேடு-ஆலந்தூர் இடையே பணிகள் முடிவடைந்து 2015-ம் ஆண்டு ஜனவரி 29-ந் தேதி முதலாவதாக மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

    இதன்பின்னர், சின்னமலை-விமானநிலையம், ஆலந்தூர்-பரங்கிமலை, திருமங்கலம்-நேரு பூங்கா இடையே படிப்படியாக மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கியது. கடந்த 25-ந் தேதி நேரு பூங்கா-சென்டிரல், சின்னமலை-தேனாம்பேட்டை ஏ.ஜி.- டி.எம்.எஸ். இடையே போக்குவரத்து தொடங்கியது.

    மெட்ரோ ரெயில் போக்குவரத்தை அனைத்து தரப்பு மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் 25-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை இலவச பயணத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இதில், மொத்தம் 6 லட்சத்து 11 ஆயிரம் பேர் இலவசமாக பயணம் செய்துள்ளனர். தற்போது தினமும் சுமார் 1 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.

    இதன்மூலம் தினமும் ரூ.10 லட்சமும், பார்க்கிங் கட்டணம் மூலம் ரூ.1 லட்சமும் வருமானமாக கிடைக்கிறது. மெட்ரோ ரெயிலின் முதற்கட்ட விரிவாக்க பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும் தினமும் 6 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். முதற்கட்ட விரிவாக்க பணிகள் 2020-ம் ஆண்டுக்குள் நிறைவு பெறும். ஏ.ஜி., டி.எம்.எஸ்.-வண்ணாரபேட்டை இடையே வருகிற டிசம்பர் மாதம் பணிகள் முடிவடைந்து போக்குவரத்து தொடங்கும்.

    மாதவரம் பால்பண்ணை-சிறுசேரி சிப்காட், மாதவரம்-சோழிங்கநல்லூர், ஆயிரம்விளக்கு-கோயம்பேடு இடையேயான 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்குவது குறித்து இன்னும் 2 மாதத்துக்குள் முடிவு செய்யப்படும்.

    மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைப்பது என்பது நீண்டகால நடைமுறை ஆகும். கட்டணத்தை குறைப்பது குறித்து உரிய அதிகாரம் கொண்ட அமைப்பு தான் முடிவு செய்யும். மெட்ரோ ரெயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருப்பதால் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும் கட்டணத்தை குறைக்க ஆலோசனை செய்யப்படும்.

    மெட்ரோ ரெயிலில் அனைத்து பாதுகாப்பு வசதிகளும் உள்ளன. ஒருவேளை சுரங்கப்பாதையில் ஏதேனும் பிரச்சினை என்றால் பயணிகளை பத்திரமாக மீட்டு அடுத்த ரெயில் நிலையத்துக்கு கொண்டுவர சுரங்கப்பாதையில் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை

    சுரங்கப்பாதையில் தீ அல்லது புகை ஏற்பட்டால் கட்டுப்பாட்டு அறையில் அலாரம் ஒலிக்கும். அவ்வாறு தீ ஏற்படும்பட்சத்தில் தானாகவே அணைப்பதற்கும், புகை ஏற்படும்பட்சத்தில் வெளியேற்றவும் நவீன வசதி சுரங்கப்பாதையில் செய்யப்பட்டுள்ளது. மழைகாலங்களில் சுரங்கப்பாதைக்குள் தண்ணீர் செல்லாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கினால் ரெயில் இயங்காமல் தானாகவே நின்றுவிடும். அவ்வாறு சுரங்கப்பாதையில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கினால் தானாகவே தண்ணீரை வெளியேற்றும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயிலில் செல்லும்போது சில இடங்களில் செல்போன் சேவை முற்றிலுமாக தடைபடுகிறது. இதை சரி செய்யவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இதுபோன்ற நேரங்களில் ரெயிலில் ஏதேனும் பாதிப்பு என்றால் உடனடியாக ரெயில் டிரைவரை அழைக்க அனைத்து பெட்டிகளிலும் பொத்தான் வைக்கப்பட்டுள்ளது. அதை அமுக்கினால் தேவையான உதவியை உடனடியாக டிரைவர் செய்து கொடுப்பார். இரவு 10 மணி வரை மட்டுமே மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. இந்த நேரத்தை நீட்டிப்பது குறித்தும், குறிப்பிட்ட இடைவெளியில் ரெயில் சேவையை அதிகரிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும்.

    அனைத்து ரெயில் நிலையங்களிலும், ரெயில் பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், பெண்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் பயணம் செய்யலாம். ரெயில் நிலையம், ரெயில் பெட்டிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுகிறது. இதுதவிர அனைத்து ரெயில் பெட்டிகளிலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன்பின்பு, மெட்ரோ ரெயில் பெட்டியிலும், ரெயில் நிலையங்களிலும் உள்ள அனைத்து வசதிகளையும் இயக்குனர் நரசிம்மபிரசாத் நிருபர்களுக்கு விளக்கி கூறினார். அப்போது, தலைமை பொது மேலாளர்கள் விஜய்குமார்சிங், அரவிந்த்ராய் ஆகியோர் உடன் இருந்தனர். #ChennaiMetroTrain
    ×