search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajiv Gandhi Assassination case"

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். #RajivMurderCase #Mutharasan

    சேலம்:

    சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்காமல் மத்திய அரசு கபட நாடகம் ஆடுகிறது. ஒரு பக்கம் மாநில அரசிடம் கொலையாளிகள் குறித்த விபரங்களை கேட்கிறது. மறுப்பக்கம் உள்துறை மூலம் விடுதலை செய்ய மறுப்பு தெரிவிக்கிறது.

    ஆயுள் கைதி என்றால் ஆயுள் முழுவதும் சிறையில் இருப்பது அல்ல. காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை 13 ஆண்டுகளில் நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை அரசு விடுதலை செய்யாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.

     


    விசாரணை அதிகாரிகளே சிலரின் பெயரை தவறுதலாக சேர்த்து விட்டதாக கூறியிருக்கிறார்கள். சோனியா காந்தியும் இவர்களை மன்னித்து விட்டதாக கூறியுள்ளார். எனவே மத்திய, மாநில அரசுகள் இனியும் காலம் தாழ்த்தாமல் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூடி வெளியிட்டுள்ள அரசாணை போதுமானது அல்ல என்று மதுரை கிளை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. இதனை மாநில அரசு கவனத்தில் கொள்ளாமல் தாங்கள் செய்ததே சரி சரி என திரும்ப கூறி வருகிறது. கடந்த சில தினங்களாக அமைதி திரும்பி உள்ள தூத்துக்குடியில் அடக்குமுறை மீண்டும் கையில் எடுத்து 100-க்கணக்கானவர்களை கைது செய்து வருவது கண்டனத்திற்குரியது. அடக்குமுறையை போலீசார் கைவிட வேண்டும்.

    ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படும் 8 வழி பசுமை சாலைக்காக வனங்களையும், நிலங்களையும் அழிப்பது மக்கள் விரோத செயலாகும். வின் ஸ்டார் இந்தியா நிறுவனர் சிவகுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.4 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்துள்ளார்.

    இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #RajivMurderCase #Mutharasan

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 27 வருடங்களாக சிறையிலிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்ய முடியாது என்று மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்திருப்பது ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் தருகிறது.

    அ.தி.மு.க. அரசு இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய 19.2.2014 அன்றே முடிவு எடுத்து மத்திய அரசின் கருத்தையும் கேட்டிருந்த நிலையில், ஏறக்குறைய 4 வருடத்திற்கும் மேலாக அமைதியாக இருந்த மத்திய அரசு, இப்போது திடீரென்று விடுதலையை நிராகரித்து இருப்பது சிறிதும் மனிதநேயமற்ற முடிவாகவே தி.மு.க. கருதுகிறது.


    குறிப்பாக சிறையில் வாடும் 7 பேரும் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் “3 மாதங்களுக்குள் தமிழக அரசின் கோரிக்கை மீது உங்கள் முடிவை தெரிவியுங்கள்” என்று கடந்த ஜனவரி மாதமே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில், வழக்கம்போல் தாமதம் செய்து, நேற்று (நேற்று முன்தினம்) இப்படியொரு முடிவை ஜனாதிபதி மூலம் அறிவித்திருப்பது மத்திய அரசு தனக்கு உள்ள பொறுப்பை தட்டி கழிப்பது போல் அமைந்துள்ளது.

    குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டத்தின்படி, மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் விசாரிக்கும் வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை மாநில அரசு விடுதலை செய்யும் முன்பு மத்திய அரசின் கருத்தை கேட்கவேண்டும் என்றுதான் இருக்கிறதே தவிர, ஜனாதிபதிக்கு அனுப்பவேண்டும் என்று கூறப்படவில்லை. ஆனாலும் தமிழக அரசின் அமைச்சரவை முடிவிற்கு மத்திய அரசு கருத்து தெரிவிப்பதற்கு பதிலாக, ஜனாதிபதி மூலம் மாநில அரசின் கோரிக்கையை நிராகரித்திருப்பது, உள்நோக்கம் கொண்டதாகவும் விடுதலை செய்வதை சிக்கலாக்குவதாகவும் தோன்றுகிறது.

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் பிரச்சினையில், பொறுப்பை தட்டிக்கழிப்பதிலும் குழப்பம் ஏற்படுத்துவதிலும், மாநில அரசும், மத்திய அரசும் போட்டி போட்டுக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. ஆகவே தமிழக அரசின் அமைச்சரவை 7 பேரையும் விடுதலை செய்ய ஏற்கனவே எடுத்த முடிவின் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம் தனது கருத்தை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் என்றும், 27 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தமிழக அரசு ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுவிப்பதற்காக தொடர்ந்து முயற்சித்து வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். #RajivMurderCase #TNMinister #CVeShanmugam
    சென்னை:

    ராஜீவ் கொலையாளிகளான முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரும் நீண்ட நாட்களாக ஜெயில் தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். இதனால் இவர்களை விடுவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

    பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தனது மகனின் விடுதலைக்காக போராடி வருகிறார். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் 7 பேரின் விடுதலையும் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே செல்கிறது.

    இந்த நிலையில் ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் மத்திய அரசு விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாக 2 நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியானது.

    இது தொடர்பாக மத்திய உள்துறை, தமிழக அரசிடம் தகவல்களையும் கேட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கும் எண்ணம் ஏதும் இல்லை என்று ஜனாதிபதி மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன. இது 7 பேரின் விடுதலை விவகாரத்தில் புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.


    இந்தநிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் சென்னையில் இன்று இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர். இதற்கு விளக்கம் அளித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    ராஜீவ் கொலையாளிகள் விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இருப்பினும் தமிழக அரசு அவர்களை விடுவிப்பதற்காக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது அதுபற்றி உரிய விளக்கத்தை அளிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.#RajivMurderCase  #TNMinister #CVeShanmugam
    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #RajivMurderCase
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

    இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும் மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர் 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

    20 ஆண்டுகளுக்கும் மேலாக 7 பேரும் சிறை தண்டனை அனுபவித்து விட்டதால் அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு எடுத்து மத்திய அரசின் அனுமதி கேட்டது.

    இதை ஏற்க முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு மறுத்ததுடன் தமிழக அரசின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால உத்தரவு பிறப்பித்ததுடன் வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.

    இந்த முடிவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனுதாக்கல் செய்தது. இதற்கிடையே நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரும் தாங்கள் 20 ஆண்டுக்கு மேல் தண்டனை அனுபவித்து விட்டதால் விடுதலை செய்யக்கோரி தமிழக அரசிடம் மனு கொடுத்தனர். இதேபோல் சென்னை ஐகோர்ட்டில் நளினி ஒரு மனுதாக்கல் செய்தார்.

    அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு 7 பேரும் 24 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விட்டதால் அவர்களை விடுதலை செய்ய அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடந்த 2016-ம் ஆண்டு மீண்டும் 2 கடிதங்கள் எழுதியது. அதற்கு மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை.

    இந்த நிலையில் தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனு மீதான விசாரணையில் 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு 3 மாதத்துக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் 23-ந்தேதி கெடு விதித்து உத்தரவிட்டது.

    இதையடுத்து மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 7 பேரின் உடல்நிலை, குடும்ப சூழல், பொருளாதார பின்னணி உள்ளிட்ட விவரங்களை கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது. அதற்கு தமிழக அரசு உரிய பதில் அளித்தது.

    இந்த வி‌ஷயத்தில் ஜனாதிபதியின் கருத்தையும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கேட்டு இருந்தது. இதற்காக தமிழக அரசு அனுப்பிய 7 குற்றவாளிகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது. வழக்கு விவரங்களும் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதை பரிசீலித்த ஜனாதிபதி 7 பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று கூறி தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். இந்த தகவலை அவர் தமிழக அரசுக்கும் முறைப்படி தெரியப்படுத்தி உள்ளார்.


    இந்த விவகாரம் தொடர்பான மத்திய மந்திரிகளின் ஆலோசனையை ஏற்று ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

    தமிழக அரசு விடுவிக்க கோரிய 7 பேர் மீதான வழக்கு சி.பி.ஐ. சம்பந்தப்பட்டதாகும். இது மாநில அரசின் வரம்புக்குள் வராது என்றும் தீவிரவாதம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் மாநில அரசு தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு முன்பு வாதாடியது.

    சாதாரண கைதிகளுக்கும் முன்னாள் பிரதமர் ஒருவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதற்கும் வேறுபாடு உள்ளது. சாதாரண கைதிகளை தண்டனை காலத்துக்கு முன்பே விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இல்லை. ஆனால் சி.பி.ஐ. வழக்கு தொடர்பான கைதிகளை விடுவிக்க இயலாது என்றும் மத்திய அரசு வாதாடியது.

    இந்த காரணங்களை வைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 7 கைதிகளையும் விடுவிக்க முடியாது என்று கூறி தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.

    சில நாட்களுக்கு முன்பு வரை 7 பேரும் விடுதலையாக கூடிய சாதகமான வாய்ப்புகள் இருந்தது. தற்போது ஜனாதிபதியே திட்டவட்டமாக அறிவித்து விட்டதால் 7 பேர் விடுதலையாவதில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

    ஜனாதிபதி உத்தரவை மீறி சுப்ரீம் கோர்ட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாத நிலை இருப்பதாகவும் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். #RajivMurderCase
    ×