search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plus 2"

    10, பிளஸ்-2 துணைதேர்வு எழுத உள்ள அனைத்து தனித்தேர்வர்களும் வரும் 17-ந்தேதி முதல் இணையதளத்தின் மூலம் தேர்வுக்கு நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
    புதுச்சேரி:

    புதுவை பள்ளி கல்விதுறை இணை இயக்குனர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ள பிளஸ்-2 துணைதேர்வு எழுத அரசு தேர்வு துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் இணையதளத்தின் மூலம் தேர்வுக்கு நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இணையதளத்தில் நுழைவு சீட்டு என்பதனை கிளிக் செய்து தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்தால் அவர்களுடைய தேர்வு கூட அனுமதிசீட்டு திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    எழுத்து தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத்தேர்வில் 40 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறை தேர்வினை மீண்டும் செய்வதோடு எழுத்து தேர்விற்கும் வருகை புரிய வேண்டும். அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறை தேர்விற்கு வருகைதர வேண்டும்.

    இதேபோல் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ள 10-ம்வகுப்பு துணைத்தேர்வு எழுத அரசுதேர்வு துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் முதல் இணையதளத்தின் மூலம் தேர்வுகூட அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய தேர்வு கூட அனுமதி சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    அடுத்த கல்வி ஆண்டில் 2, 7, 10 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு அமல்படுத்தப்பட இருக்கும் புதிய பாடத்திட்டம் டிசம்பர் மாதத்திற்குள் தயாராகி விடும் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் க.அறிவொளி தெரிவித்தார்.
    சென்னை:

    1-வது வகுப்பு, 6-வது வகுப்பு, 9-வது வகுப்பு, பிளஸ்-1 வகுப்பு ஆகியவற்றுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு அந்த பாடத்திட்டம் இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இதேபோல் 2, 7, 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு ஆகியவற்றுக்கு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய பாடத்திட்டம் அடுத்த கல்வியாண்டில் (2019-2020) நடைமுறைக்கு வரும்.

    இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று புதிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள கலைத்திட்ட வடிவமைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது. குழுவின் தலைவர் பேராசிரியர் எம்.அனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் ஆர்.ராமானுஜம், ஈ.சுந்தரமூர்த்தி, கு.ராமசாமி, ஆர்.பாலசுப்பிரமணியன் மற்றும் கலா விஜயக்குமார், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் க.அறிவொளி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    2, 7, 10, பிளஸ்-2 பாடநூல்கள் தயாரிக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இதற்காக அரசு வழங்கியுள்ள திட்டத்தின்படி பணிகள் துரிதமாக நடைபெற்று வருவது குறித்தும், பாடநூல்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு மாணவர்களிடம் சென்று சேர்ந்திருப்பது பற்றியும் கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க.அறிவொளி பாடநூல் தயாரித்தல் பணிகளின் முன்னேற்றம் குறித்த விவரங்களை விளக்கினார். முதற்கட்டமாக வெளியிடப்பட்ட பாடநூல்களை மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்றுவிப்பது சார்ந்து அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளின் 2 லட்சத்து 25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இதுவரை பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது.

    மேலும், 80 ஆயிரம் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு முதன்முறையாக பிளஸ்-1 பாடநூல் பயிற்றுவித்தலில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

    பாடநூல்களைத் தாண்டியும் மாணவர்களின் அறிவுத்திறம் வளரும் நோக்கில் பாடப்பகுதிகள் காணொலி வகுப்புகளாகவும், இணைய வளங்களாகவும் தயாரிக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.

    திட்டமிட்டபடி, அனைத்து வகுப்புகளுக்கும் பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு மாணவர்களிடம் சென்றடையும் வகையில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன என்பதையும் இயக்குனர் விளக்கினார்.

    வருகிற கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும் பாடத்திட்டம் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் தயார் ஆகி விடும்.

    இந்த தகவலை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க.அறிவொளி தெரிவித்துள்ளார்.
    பிளஸ்-2 விடைத்தாள் நகல் ஜூன் மாதம் 2-ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், மறு கூட்டல், மறு மதிப்பீட்டுக்கு 4-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2018-ம் ஆண்டு மார்ச் மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள்களின் நகல்கோரி விண்ணப்பித்த மாணவர்கள் அடுத்த(ஜூன்) மாதம் 2-ந் தேதி அன்று பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்தபிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து ஜூன் 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரையிலான தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×