search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mysterious fever"

    • மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே பெரிய மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் இவரது மகன் பரமாத்மா (வயது31) இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி செந்தாமரை என்கிற மனைவியும், கனிஷ்கா (வயது 3), யோகஸ்ரீ (10 மாத குழந்தை) உள்ளனர்.

    இந்நிலையில் யோகஸ்ரீக்கு கடந்த மாதம் 15-ந்தேதி திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் பெற்றோர் வாணியம்பாடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை அளித்தும் குணமாகாததால் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த யோகஸ்ரீ, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

    இது குறித்து தந்தை பரமாத்மா ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவக் மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே வக்கம்பட்டியில், பல குடும்பத்தினர், மர்மக்காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், செம்பட்டி, சின்னாளபட்டி உள்ளிட்ட பகுதிகளில், தனியார் டேங்கர் லாரிகளில் விற்பனையாகும் தரமற்ற தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலை நீடிக்கிறது. இத்தண்ணீரை சிலர் காய்ச்சி பயன்படுத்துகின்றனர். பெரும்பாலானோர், 6 முதல் 10 நாட்கள் வரை சேமித்து பயன்படுத்துகின்றனர்.

    இச்சூழலில், வக்கம்பட்டி, வீரக்கல், வண்ணம்பட்டி பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்மக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளிலும் சில நாட்களாக காய்ச்சல் நோயாளிகள் அதிகளவில் வருகின்றனர். வக்கம்பட்டியில், பெரும்பாலான வீடுகளில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல நபர்கள் காய்ச்சல் பாதிப்பால் அவதிப்படுகின்றனர்.

    இக்காய்ச்சல் பாதிப்பால், முதியோர் கை, கால்களை முடக்கும் நிலையில் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சுகாதாரத்துறையினர், மேலும் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

    கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தவும் சுகாதார நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தேவகோட்டையில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் அலைமோதுகின்றனர்.
    தேவகோட்டை:

    தேவகோட்டையில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் அலைமோதுகின்றனர். அங்கு போதிய டாக்டர்கள் இல்லாததால், கூடுதல் டாக்டர்களை நியமிக்க பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    தேவகோட்டையில் பரவி வரும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், காய்ச்சல் வந்த பின்பும் தனியார் மருத்துவமனைகளை விட அரசு மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின் றனர். இதனால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    தற்போது பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும், அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சையால் தான் காய்ச்சல் குணமடைவதாக பொதுமக்கள் பெரிதும் நம்பி உள்ளனர். இதனால் தினமும் ஆயிரக்கணக்கானோர் அரசு மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். தேவகோட்டை தாலுகாவில் 700-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் குவிந்து வருகின் றனர்.

    இந்தநிலையில் இங்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் மருத்துவமனையில் டாக்டர் ராமு தலைமையில் டாக்டர்கள் குழுவினர் தகுந்த சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் டாக்டர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில், தற்போது உள்ள டாக்டர்கள் குழுவினர் நோயாளிகளை பரிசோதித்து உடனுக்குடன் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    எனவே தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    தியாகதுருகம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 2 வயது சிறுமி பலியானாள்.
    தியாகதுருகம்:

    தியாகதுருகம் அருகே உள்ள கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுடைய மகள் தன்யா (வயது 2). கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள். இதையடுத்து சசிகுமார் தன்யாவை சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

    அங்கு தன்யாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து விட்டு, வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள்.

    இதனால் சசிகுமார் மற்றும் அவரது உறவினர்கள் தன்யாவை சிகிச்சைக்காக கடலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தன்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் தன்யாவின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரின் நெஞ்சை கரைய வைப்பதாக இருந்தது. மர்ம காய்ச்சலால் சிறுமி பலியான சம்பவம் கூத்தக்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் மருத்துவக்குழுவினர் முகாமிட்டு பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்றனர்.
    ராசிபுரம் அருகே, மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 கிராமங்களில் மருத்துவக்குழுவினர் முகாமிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டது.
    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகேயுள்ள கூனவேலம்பட்டி புதூர் ஊராட்சியில் கூனவேலம்பட்டி, பாலப்பாளையம், பெரும்பாலி உள்பட 9 கிராமங்கள் உள்ளன. கூனவேலம்பட்டிபுதூர் மற்றும் பாலப்பாளையம் கிராமங்களில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் நெசவு மற்றும் விவசாயி கூலி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்த கிராமங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதற்கு அவர்கள் சிகிச்சை அளித்தும் சரிவர பலன் இல்லை. மர்ம காய்ச்சல் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என மக்கள் மத்தியில் கருத்து இருந்தது.

    இதையொட்டி மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவின்பேரில் ராசிபுரம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கிருஷ்ணமூர்த்தி, தனபால், ராசிபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வி தலைமையில் பிள்ளாநல்லூர் சமுதாய சுகாதார நிலையத்தின் மருத்துவர்கள் ஜெயப்பிரகாஷ், கோபி, பிரணவ், சித்தா டாக்டர் பாலாமணி மற்றும் நோய் தடுப்பு நிபுணர் டாக்டர் மோகனவேல், மாவட்ட நுண்ணுயிரியல் துறை டாக்டர் மோகனசுந்தரி, சுகாதார பணியாளர்கள் உள்பட மருத்துவ குழுவினர் கூனவேலம்பட்டி புதூர், பாலப்பாளையம் ஆகிய 2 கிராமங்களில் 2 நாட்கள் முகாமிட்டு பொதுமக்கள் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. நடமாடும் மருத்துவமனையும் செயல்பட்டது.

    மேலும் 30 சுகாதார பணியாளர்கள் வீடுகள் மற்றும் தெருக்களில் கொசு மருந்து அடித்தனர். டெங்கு கொசு புழு அழிப்பு, அபேட் மருந்து அடிக்கும் பணி முழு வீச்சில் நடந்தன. டாக்டர் செல்வி தலைமையில் சுகாதார துறையினர் வீடு வீடாக சென்று தேவையில்லாத டப்பாக்கள், பாத்திரங்களில் உள்ள தண்ணீரில் கொசு புழுக்கள் இருப்பதை கண்டறிந்து அவற்றை அப்புறப்படுத்தும்படி அறிவுறுத்தினர். சுகாதார துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் முகாமை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

    2 நாட்கள் நடந்த முகாமில் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுவரை நடந்த முகாமில் டெங்கு மற்றும் சிக்குன் குனியா காய்ச்சல் இருப்பதாக தெரியவில்லை. வைரஸ் காய்ச்சல் வந்தாலே கை, கால்கள் வலி எடுக்கும். எனவே இதை வைத்து சிக்குன்குனியா காய்ச்சல் என்று தீர்மானிக்க கூடாது என டாக்டர்கள் தெரிவித்தனர். 15-க்கும் மேற்பட்டவர்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. வைரஸ் காய்ச்சல் சிலருக்கு ஏற்பட்டுள்ளது என்றும் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
    ×