search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mangaluru Blast"

    • தன்னை யாரும் அடையாளம் கண்டு பிடித்து விடக்கூடாது என்பதில் ஷாரிக் மிகவும் கவனமாக இருந்துள்ளார்.
    • ஷாரிக் செல்போனை யார் தொடர்பு கொண்டாலும் தனது மதம் அடையாளம் தெரியாதபடி மாற்று மதத்தைச் சேர்ந்தவன் என்று தெரியும் படி வைத்து உலா வந்திருக்கிறார்.

    கர்நாடக போலீசாரால் தேடப்பட்டு வந்த தீவிரவாதி ஷாரிக், தமிழகத்துக்கு தப்பி வந்துள்ளார். இங்கு கோவையில் 3 நாட்கள் தங்கியிருந்தார். பின்னர் மதுரை, நாகர்கோவில், கேரளா போன்ற இடங்களுக்கு சென்று விட்டு செப்டம்பர் மாத இறுதியில் தான் மீண்டும் கர்நாடகாவுக்குள் நுழைந்துள்ளார்.

    தன்னை யாரும் அடையாளம் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதில் ஷாரிக் மிகவும் கவனமாக இருந்துள்ளார். அதனால் தனது செல்போன் வாட்ஸ்-அப் டி.பி.யில் ஆதியோகி சிவன் படம் ஒன்றை வைத்து, அதில் பிரேம்ராஜ் என்ற பெயரை பதிவிட்டுள்ளார்.

    கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தான் இந்த ஆதியோகி சிவன் சிலை உள்ளது. அந்த ஆதியோகி சிலையை தான், ஷாரிக் தனது வாட்ஸ்-அப்பில் வைத்திருந்தார்.

    அவரது செல்போனை யார் தொடர்பு கொண்டாலும் தனது மதம் அடையாளம் தெரியாதபடி மாற்று மதத்தைச் சேர்ந்தவன் என்று தெரியும்படி வைத்து உலா வந்திருக்கிறார்.

    குக்கர் வெடிகுண்டு வெடித்ததும் மைசூர் சைபர் கிரைம் போலீசார் ஷாரிக்கின் செல்போனை ஆய்வு செய்ததில் வாட்ஸ்-அப்பில் ஆதியோகி சிவன் படமும், பெயர் பிரேம்ராஜ் என்று இருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர்.

    பெயர் மாற்றம் செய்யும் நோக்கில் தான் அவ்வாறு ஆதியோகி படத்தை வைத்திருந்தாரா அல்லது வேறு எதாவது சதி செயலுக்கு திட்டமிட்டு அவ்வாறு படத்தை வைத்திருந்தாரா என்பது பற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு காயம் அடைந்து உள்ள ஷாரிக் தீவிரவாத இயக்கத்தில் தொடர்புடையவர் என போலீசார் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
    • குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்பு ஷாரிக் பை ஒன்றை தனது தோளில் சுமந்து செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் பேருந்து நிலையம் அருகே இருந்த கடையில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

    பெங்களூரு:

    மங்களூரு வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கர்நாடக மாநில போலீசார் மற்றும் என்.ஜ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தீவிரவாத தாக்குதல் என உறுதி செய்யப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு காயம் அடைந்து உள்ள ஷாரிக் தீவிரவாத இயக்கத்தில் தொடர்புடையவர் என போலீசார் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்பு ஷாரிக் பை ஒன்றை தனது தோளில் சுமந்து செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் பேருந்து நிலையம் அருகே இருந்த கடையில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அந்த பையில் குக்கர் வெடிகுண்டு இருந்ததா? என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்த காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பயங்கரவாதி ஷாரிக் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்துவதற்கு முன்பு கோவையில் 3 நாட்கள் தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.
    • மதுரை, நாகர்கோவிலிலும் ஷாரிக் தங்குவதற்கு பலர் உதவி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    மங்களூருவில் குக்கர் வெடிகுண்டை வெடிக்க செய்த பயங்கரவாதி ஷாரிக் மிகப்பெரிய நாசவேலைக்கு திட்டம் தீட்டி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அவனது பின்னணி தொடர்பாக கர்நாடக மாநில போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் தமிழக காவல் துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு விசாரணையை வேகப்படுத்தி இருக்கிறார்கள்.

    பயங்கரவாதி ஷாரிக் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்துவதற்கு முன்பு கோவையில் 3 நாட்கள் தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது. மதுரை மற்றும் நாகர்கோவிலிலும் அவன் போய் தங்கியுள்ளான். பின்னர் கேரளா சென்றும் சதி திட்டத்துக்கான வேலைகளில் ஷாரிக் ஈடுபட்டது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

    கோவையில் கடந்த மாதம் கார் குண்டு வெடிப்பு நடந்த நிலையில் ஷாரிக் கோவையில் தங்கி இருந்து பலரை சந்தித்து பேசி உள்ளான். மதுரை, நாகர்கோவிலிலும் ஷாரிக் தங்குவதற்கு பலர் உதவி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் பின்னணி பற்றிய விசாரணையிலேயே தமிழக போலீசார் இறங்கியுள்ளனர்.

    மங்களூருவில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது போல தமிழகத்திலும் நாசவேலையில் ஈடுபட பயங்கரவாதி ஷாரிக் சதி திட்டத்தில் ஈடுபட்டிருக்கலாமோ? என்கிற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அது தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    குறிப்பாக கோவையில் ஷாரிக் 3 நாட்கள் தங்கி இருந்தது போலீசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் ஷாரிக்குக்கு மிகப்பெரிய அளவில் பலர் உதவிகளை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதை தொடர்ந்து அது தொடர்பான தகவல்களை திரட்டும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதன் முடிவில் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பெங்களூரு, மங்களூருவை சேர்ந்த 5 பேரை பிடித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • தென் மாநிலங்களில் பல நகரங்களில் பயங்கரவாதிகள் நாசவேலைக்கு ஓசையின்றி சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி ஷாரிக் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் என்.ஐ.ஏ. விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    கர்நாடகாவின் சிவ மொகா மாவட்டம் சொப்புகுட்டோ என்ற கிராமத்தில் பிறந்த ஷாரிக்குக்கு இப்போது 27 வயதாகிறது. சிறு வயதிலேயே தாய் இறந்து விட்டதால் இவனை சபானாபானு என்பவர் எடுத்து வளர்த்து வந்தார்.

    பி.காம் படித்துள்ள இவன் அதன் பிறகு தனது தந்தையின் சிறிய துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். 2 மாதங்களுக்கு முன்பு தந்தை இறந்த பிறகு அவனது நடவடிக்கைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது. கல்லூரியில் படிக்கும் போதே வாட்ஸ்அப், டெலிகிராம், பேஸ்புக், மெசேஞ்சர் ஆகிய சமூக வலைதளங்களில் இவன் தீவிரமாக தன்னை ஈடுபடுத்தி இருந்தான்.

    சமூக வலைதளங்கள் மூலம் அவனுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் தொடர்பு ஏற்பட்டது. அதன்பிறகுதான் அவன் வெடிகுண்டு தயாரிக்க வேண்டும் என்பதில் தீவிரமாகி இருக்கிறான். ஐ.எஸ். தீவிரவாதிகளின் தூண்டுதல் காரணமாக தற்கொலை படை தீவிரவாதிகளில் ஒருவனாகவும் மாறி இருந்தான்.

    பி.காம் படிப்பை 2-வது ஆண்டிலேயே அவன் கை விட்டு விட்டான். தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டதால் அவனால் படிப்பை தொடர முடியவில்லை என்பது தெரிய வந்தது. கல்லூரியில் படிக்கும் போதே நவீன வெடிகுண்டுகளை தயாரிக்கும் முயற்சியில் அவன் ஈடுபட்டுள்ளான்.

    ஆனால் குக்கர் வெடிகுண்டுகளை தயாரிக்கும் தொழில்நுட்பங்கள் அவனுக்கு தெரியவில்லை. இதனால் கல்லூரியில் எம்.டெக் படிக்கும் மாணவர்களிடம் இதுபற்றி ஷாரிக் கேட்டு தெரிந்து கொண்டது தெரிய வந்தது. எம்.டெக் மாணவர்கள் கொடுத்த பயிற்சியின் அடிப்படையில் அவன் குண்டுகளை தயாரிக்க தொடங்கி உள்ளான்.

    இதற்கிடையே அவன் மீது மங்களூருவில் 3 போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவானது. தேச துரோக வழக்குகள் பதிவானதால் அவன் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டு இருந்தான். இதன் காரணமாகவே அவன் சொந்த ஊரில் இருந்து வெளியேறி மைசூர், கோவை, மதுரை, நாகர்கோவில் மற்றும் கேரள மாநிலங்களில் சுற்றி திரிந்துள்ளான்.

    மைசூரில் வாடகை வீட்டில் தங்கியிருந்தபோது தான் குண்டுகளை தயாரித்துள்ளான். அவன் வசித்த வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள கிரைண்டர்கள், கீ பேடுகள், போன்கள், ஆணி மற்றும் பேட்டரிகள், கேபிள் வயர்கள், சல்பைடு, பொட்டாசியம் குளோரைடு, கண்ணாடி துகள்கள் ஆகியவை இதை உறுதிப்படுத்தி உள்ளன.

    அவன் இருந்த வீட்டில் குக்கர் படம் வரைந்து அதை வெடிக்க வைப்பதற்கான நடைமுறைகள் கொண்ட புத்தகத்தையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட குக்கர் வெடிகுண்டைதான் மைசூரில் இருந்து மங்களூருக்கு ஷாரிக் பஸ்சில் கொண்டு சென்றது தெரிய வந்துள்ளது.

    குக்கர் குண்டை பயன்படுத்தி கர்நாடகாவில் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் ஷாரிக்கின் இலக்கு ஆகும். இதற்காக டெலிகிராம் சமூக வலைதளத்தில் கிடைத்த பி.டி.எப். பைல்கள் மூலமாக குக்கர் வெடிகுண்டுகளை தயாரித்து இருக்கிறான். அந்த வெடிகுண்டுகளை அவன் வெடிக்க வைத்து ஒத்திகையும் பார்த்து இருக்கிறான்.

    சிவமொகா மாவட்டத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத வன பகுதிகளில் குக்கர் வெடிகுண்டை ஷாரிக் வெடிக்க வைத்து ஒத்திகை பார்த்து இருக்கிறான். இந்த ஒத்திகை சம்பவத்தின்போது அவனுக்கு அவனது நண்பர்கள் யாஷின், மாஸ் இருவரும் உதவி செய்துள்ளனர்.

    ஒத்திகையின்போது குக்கர் வெடிகுண்டுகள் திட்டமிட்டபடி வெடித்தன. அதன்பிறகுதான் ஷாரிக் சக்தி வாய்ந்த குக்கர் வெடி குண்டை தயாரித்து இருக்கிறான். அதன் பிறகு அதை மைசூரில் இருந்து மங்களூருவில் பஸ்சில் கொண்டு சென்று இருக்கிறான். மங்களூரு அருகே சாலையில் சென்றபோது குக்கர் தானாக வெடித்ததால் சிக்கிக் கொண்டான்.

    குக்கர் வெடிகுண்டுடன் புறப்படும் முன்பு ஐ.எஸ். தீவிரவாதிகள் போல உடை அணிந்து வெடிக்க வைக்க போகும் குக்கருடன் புகைப்படம் எடுத்துள்ளான். அந்த படத்தை நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் வெளியிட்டனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் பொதுவாக நாசவேலை செய்யும் முன்பு இப்படி படம் எடுத்துக்கொள்வது வழக்கமாகும். அதே பாணியை ஷாரிக்கும் கடைபிடித்துள்ளான்.

    இதன் மூலம் அவனை இயக்கியது சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு என்பது தெரிய வந்துள்ளது.

    ஐ.எஸ். தீவிரவாதிகளின் தூண்டுதல் பேரில்தான் ஷாரிக் கொஞ்சம் கொஞ்சமாக ஆன்லைன் மூலம் வெடிபொருட்களை சேகரித்து இருக்கிறான். அந்த வெடிபொருட்களை எப்படி கையாள வேண்டும் என்பது பற்றி அவனுக்கு சொல்லி கொடுத்தது அப்துல் மதீன் தகா என்ற தீவிரவாதி ஆவான்.

    அப்துல் மதீன் தகா தீவிரமான ஐ.எஸ். தீவிரவாதி ஆவான். இவனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏற்கனவே தேடப்படும் தீவிரவாதியாக அறிவித்துள்ளனர். தென் இந்தியாவில் ஐ.எஸ். மாகாணத்தை உருவாக்க வேண்டும் என்பதே இவனது இலக்கு ஆகும். இதற்காகவே இவன் பலரை மூளை சலவை செய்து ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்த்து வந்தான்.

    அந்த வகையில் அப்துல் மதீன் தகா வலையில் அர பாத்அலி என்பவன் சிக்கினான். இந்த அரபாத் அலி தற்போது துபாயில் இருக்கிறான். இவன் மூலம்தான் ஷாரிக் தீவிரவாத செயல்களை மறைமுகமாக செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

    ஷாரிக்குக்கு கர்நாடகா தவிர தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மாநிலங்களிலும் ஏராளமானவர்களுடன் தொடர்பு இருந்தது. இதன் மூலம் அவனும் அவனது கூட்டாளிகளும் தென் மாநிலங்கள் முழுக்க நாசவேலைக்கு திட்டமிட்டு இருந்ததாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

    கோவையில் நடந்த கார் வெடிப்புக்கு அவர்கள் உதவி செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஷாரிக்குடன் தொடர்பில் இருந்த மற்றவர்கள் யார் யார் என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரவாத விசாரணையை மேற்கொண்டுள்ளனர். ஷாரிக்கின் செல்போன் மூலம் அவனது நட்பு வட்டாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

    அவர்களை வேட்டையாடும் நடவடிக்கைகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஓசையின்றி தொடங்கி உள்ளனர்.

    ஷாரிக் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பல தடவை தமிழ்நாடு, கேரளாவுக்கு வந்து சென்றது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. பல்வேறு நகரங்களில் அவன் பலரை சந்தித்து பேசி இருக்கிறான். அவர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பேஸ் மூவ்மென்ட் என்ற ரகசிய அமைப்பில் இடம் பெற்றவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    குக்கர் வெடிகுண்டை நடத்துவதற்காக ஷாரிக் வெளியே ஒரு இடத்தில் மது அருந்தி உள்ளான். அப்போது அவனிடம் 2 பேர் பேசிக் கொண்டு இருந்துள்ளனர். அவர்கள் யார் என்பதும் மர்மமாக உள்ளது.

    இந்த நிலையில் பெங்களூரு, மங்களூருவை சேர்ந்த 5 பேரை பிடித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஷாரிக் மைசூரில் வாடகை வீட்டில் இருந்தபோது அங்கே ஒரு பெண் வந்து சென்றுள்ளார். அதுபோல நாகர்கோவிலிலும் அவன் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. எனவே ஷாரிக்கை சுற்றி பெண் பயங்கரவாதிகளும் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

    இதன் மூலம் தென் மாநிலங்களில் பல நகரங்களில் பயங்கரவாதிகள் நாசவேலைக்கு ஓசையின்றி சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரையும் வேட்டையாட என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • இந்த வழக்கை, தேசிய புலனாய்வு அமைப்பு, மாநில காவல்துறையுடன் இணைந்து விசாரிக்கிறது.
    • இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ள நெட்வொர்க், முறியடிக்கப்படும்.

    பல்லாரி:

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று ஆட்டோவில் இருந்து மர்ம பொருள் வெடித்து சிதறிய சம்பவத்தில் காயமடைந்த பயணி மற்றும் ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில வெடிகுண்டை வெடிக்க செய்ய டெட்டனேட்டர், கம்பிகள் மற்றும் பேட்டரிகள் பொருத்தப்பட்ட குக்கர் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில் காயமடைந்த பயணி போலி ஆதார் அட்டை, போலியான முகவரி, போலியான பெயர் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்தி கோவையில் இருந்து சிம் கார்டு வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக உதகை அருகே உள்ள குந்தசப்பை கிராமத்தைச் சேர்ந்த நபரிடம் கர்நாடகா போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இந்நிலையில் மங்களூரு சம்பவத்தில் பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். பல்லாரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியுள்ளதாவது:

    முதற்கட்ட தகவல்களின்படி, வெடித்த பொருள் எல்இடி இணைக்கப்பட்ட கருவி என தெரிய வந்துள்ளது. சம்ப இடத்தில் கண்டு பிடிக்கப்பட்ட ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரும், அதை எடுத்துச் சென்ற நபரின் பெயரும் வெவ்வேறானது என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.

    சந்தேகப்படும் நபரிடம் டூப்ளிகேட் ஆதார் அட்டை இருந்தது. அதில் ஹூப்ளி முகவரி இருந்தது. இது ஒரு பயங்கரவாதச் செயல், கோயம்புத்தூர் மற்றும் வேறு இடங்களுக்கும் அவர் பயணம் செய்துள்ளது, பயங்கரவாதத் தொடர்பைத் தெளிவாகக் காட்டுகின்றன. தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மற்றும் புலனாய்வுப் பணியகம் (ஐபி) அதிகாரிகளும், மாநில காவல்துறையுடன் இணைந்து இந்த வழக்கை விசாரிக்கிறது..

    தேசிய புலனாய்வு அமைப்பின் 4 பேர் கொண்ட குழு, சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையுடன் ஒருங்கிணைத்து செயல்படுகிறது. சந்தேகப்படும் நபர் மருத்துவமனையில் உள்ளார். அவர் சுயநினைவு திரும்பிய பிறகு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணையில் மேலும் விவரங்கள் தெரியவரும்.

    இந்த சம்பவத்தில் பரந்த நெட்வொர்க் உள்ளது, அது முறியடிக்கப்படும். தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணையில் உண்மை தெரிய வரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், மங்களூரு சம்பவத்தை தொடர்ந்து கோயம்புத்தூர் புறநகர்ப் பகுதிகள் மற்றும் கர்நாடகாவில் முதல் கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லையான ஆனைகட்டி வரை வாகனச் சோதனையை போலீஸார் தீவிரப் படுத்தியுள்ளனர்.

    ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் அதிக மக்கள் கூடும் இடங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுபவர்களின் உடமைகள் சோதனை செய்யப்படுகின்றன. மங்களூருவில் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • கோவையில் தீபாவளிக்கு முந்தைய நாள் கார் வெடித்து முபின் என்பவர் பலியானார்.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி உள்ளனர்.

    கோவை:

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்து 2 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அவர்கள் வைத்திருந்த உடமைகளை கர்நாடக போலீசார் சோதனை செய்து வெடிகுண்டை இயக்குவதற்கான சில பொருட்களை கைப்பற்றி உள்ளனர். மேலும் அவர்களது செல்போனில் இருந்து சிம்கார்டை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அந்த சிம்கார்டு கோவை முகவரியில் வாங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    அந்த முகவரி பற்றி விசாரித்தபோது அது போலியான ஒரு முகவரி என்பது தெரிய வந்துள்ளது. போலி ஆவணங்களை கொடுத்து அந்த நபர்கள் செல்போன் சிம்கார்டு வாங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ஏற்கனவே கோவையில் தீபாவளிக்கு முந்தைய நாள் கார் வெடித்து முபின் என்பவர் பலியானார். அவரது கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் மேலும் பலர் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி உள்ளனர்.

    இந்தநிலையில் தான் மங்களூருவில் குக்கர் குண்டு வெடித்துள்ளது. இதனால் மங்களூருவில் நாசவேலைக்கு திட்டமிட்டு காயம் அடைந்தவர்கள் கோவை கும்பலுடன் தொடர்புடையவர்களா? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இங்குள்ள நபர்கள் அவர்களுக்கு சிம்கார்டு வாங்கிக்கொடுத்தார்களா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகர் நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென்று அந்த ஆட்டோ 'டமார்' என்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இதில் ஆட்டோவில் மளமளவென தீப்பிடித்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஆட்டோவில் எரிந்த தீயை அணைத்தனர்.

    இதில் ஆட்டோ டிரைவரும், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரையும் மீட்டு மங்களூரு வென்லாக் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் மூத்த போலீஸ் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். ஆட்டோ வெடித்தது எப்படி? என்பது பற்றி ஆய்வு செய்தனர். அப்போது ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

    குக்கரில் வெடிபொருள் வைக்கப்பட்டிருந்த அடையாளங்கள் இருந்தன. குக்கரை வெடிகுண்டாக செய்து வெடிக்க செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய வயர்கள், பேட்டரிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    மேலும் ஆட்டோவில் பயணித்த பயணி தன் அடையாளங்களை மறைத்து உள்ளார். தன் பெயர் பிரேம் ராஜ் என்று கூறினாலும் அடையாள அட்டையில் வேறு பெயராக உள்ளது. அவர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது பின்னணி என்ன? என்பது தெரியவில்லை.

    அவர் அருகில் உள்ள மங்களூரு ரெயில் நிலையத்துக்கு செல்வதற்காக ஆட்டோவில் சவாரி செய்து உள்ளார். அப்போதுதான் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து உள்ளது.

    குக்கரில் வெடிகுண்டு வைத்து அவர் ரெயில் நிலையத்துக்கு செல்ல என்ன காரணம்? அவரது உண்மையான பெயர் என்ன? எந்த ஊரை சேர்ந்தவர்? ரெயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு நடத்தி நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டாரா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் கட்டிடத்தின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்துச் சிதறிய காட்சிகள் பதிவாகியுள்ளது.

    இதுகுறித்து மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் கூறுகையில், மங்களூரு நாகுரி பகுதியில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து தீப்பிடித்துள்ளது. இதுபற்றி யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். ஆட்டோவில் என்ன பொருள் வெடித்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதனால் மக்கள் யாரும் பயப்பட தேவையில்லை என்றார்.

    மங்களூருவில் ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் வெடித்தது விபத்து அல்ல என்றும், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு தீவிரவாதிகள் தயார் ஆனதற்கான அடையாளம் போல் தெரிகிறது என்றும் மாநில டிஜிபி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

    இருப்பினும் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவையில் கடந்த மாதம் வெடிபொருட்களுடன் சென்ற கார் வெடித்து ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.

    இது தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவை மாவட்டத்தில் உள்ள வாளையார், வேலந்தாவளம், பொள்ளாச்சி மீனாட்சிபுரம், வாளையார் உள்ளிட்ட சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • மக்கள் அதிகம் கூடக்கூடிய பஸ் நிலையம், ரெயில் நிலையம், வழிபாட்டு தலங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை:

    கோவையில் கடந்த மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இதில் ஜமேஷா முபின் என்ற வாலிபர் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் அடங்குவதற்குள், கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் வெடித்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அனைத்து மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து கோவை மாவட்டத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் இருந்த ஆனைகட்டி, மாங்கரை வழியாக கர்நாடகாவுக்கு பஸ்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள் தினந்தோறும் சென்று வருகின்றன.

    இந்த நிலையில் குக்கர் வெடிப்பை தொடர்ந்து, ஆனைகட்டி, மாங்கரை, அட்டப்பாடி சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    3 சோதனை சாவடிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வழியாக கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்கள், பஸ்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

    வாகனங்கள் முழுவதும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும் அதில் இருந்தவர்களிடமும் உரிய ஆவணங்கள் உள்ளதா? எங்கிருந்து வருகிறீர்கள்? எந்த காரணத்திற்காக வருகிறீர்கள் எனவும் விசாரிக்கின்றனர்.

    இதேபோன்று கோவையில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

    இதேபோல் கோவை மாவட்டத்தில் உள்ள வாளையார், வேலந்தாவளம், பொள்ளாச்சி மீனாட்சிபுரம், வாளையார் உள்ளிட்ட சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடக்கூடிய பஸ் நிலையம், ரெயில் நிலையம், வழிபாட்டு தலங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    மாநகரில் 500 போலீசார், புறநகரில் 500 போலீசார் என மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை ரெயில் நிலையத்திற்கு மங்களூருவில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து கோவை ரெயில் நிலையத்தில், டி.எஸ்.பி. யாஸ்மின் தலைமையில், இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர் அடங்கிய போலீசார் ரெயில் நிலையம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ரெயில் முழுவதும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்ட போலீசார், ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடமைகளையும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர். தீவிர சோதனைக்கு பின்னரே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    • மர்ம பொருள் வெடித்ததால் தீப்பிடித்த ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று எடுக்கப்பட்டது.
    • மத்திய அரசின் விசாரணை ஆணையங்களுடன் சேர்ந்து விசாரணை நடத்த உள்ளதாக டிஜிபி தகவல்

    மங்களூரு:

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று மாலை சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்தது. சிறிது நேரத்தில் ஆட்டோவிலும் தீப்பிடித்தது. இதில் ஆட்டோ டிரைவரும், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் மர்ம பொருள் வெடித்ததால், அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர். தடயவியல் நிபுணர்கள், ஆட்டோவில் ஆய்வு செய்தனர். அப்போது ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று எடுக்கப்பட்டது. இதனால் குக்கர் வெடித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆனாலும், ஆட்டோவில் வெடிபொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட போது வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

    இந்நிலையில் மங்களூருவில் ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் வெடித்தது விபத்து அல்ல என்றும், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு தீவிரவாதிகள் தயார் ஆனதற்கான அடையாளம் போல் தெரிகிறது என்றும் மாநில டிஜிபி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், மத்திய அரசின் விசாரணை ஆணையங்களுடன் சேர்ந்து விசாரணை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    ×