search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mangaluru Blast"

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் ஷாரிக் 2 நாட்கள் தங்கி இருந்து உள்ளான்.
    • மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை:

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ந் தேதி குக்கர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த ஷாரிக் (வயது 22) என்பது தெரியவந்தது.

    குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்த ஷாரிக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் போலீசார் மைசூரில் உள்ள ஷாரிக் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு டைரி சிக்கியது. அதில் தீவிரவாதி ஷாரிக் தமிழகத்தில் கோவை, மதுரை, நாகர்கோவில் ஆகிய நகரங்களுக்கு வந்து சென்ற விவரம் இருந்தது.

    இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் நவீன சாதனங்கள் உதவியுடன், ஷாரிக் செல்போன் நம்பரை ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். இதில் அவர் மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் நவம்பர் முதல் வாரம் 2 நாட்கள் தங்கி இருந்தது தெரியவந்தது.

    ஷாரிக் மதுரைக்கு ஏன் வந்தார்? அவர் 2 நாட்கள் தங்கி இருக்க வேண்டிய அவசியம் என்ன? என்பது தொடர்பாக விசாரணை நடத்த மங்களூரு தனிப்படை போலீசார் முடிவு செய்தனர்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நிரஞ்சன்குமார் தலைமையில் 10 பேர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று மதியம் மதுரைக்கு வந்தனர். அவர்கள் மதுரை நேதாஜி ரோடு, டவுன்ஹால் ரோடு, கட்ராபாளையம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இங்கு 30-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் உள்ளன.

    தனிப்படை போலீசார் 2 குழுக்களாக பிரிந்து, மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதி மற்றும் உணவகங்களில் அதிரடி விசாரணை நடத்தினார்கள். சூர்யா நகரில் உள்ள ஓட்டல்களிலும் சோதனை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக ஓட்டல்களில் உள்ள வருகை பதிவேடு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது சந்தேகத்துக்கிடமான சிலரின் ஆதார் பதிவுகள் உண்மைதானா? என்று அதிநவீன கருவிகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.

    மேலும் தனிப்படை போலீசார் ஓட்டலுக்கு அருகில் உள்ள ரெஸ்டாரண்டுகளிலும் விசாரணை நடத்தினர். அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். ஓட்டல் அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தங்களில் டிரைவர்களிடமும் சந்தேக நபர்கள் நடமாட்டம் குறித்து விசாரணை நடத்தினர்.

    மதுரையில் தனிப்படை போலீசார் 4 மணி நேரம் அதிரடி விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்து நாகர்கோவில் புறப்பட்டு சென்றனர்.

    மதுரையில் போலீசாரின் விசாரணையின்போது லோக்கல் போலீசார் மட்டுமின்றி மத்திய புலனாய்வு அதிகாரிகளும் உடனிருந்தனர்.

    ஷாரிக் ஏற்கனவே போலி ஆவணங்கள் மூலம் பிரேம்ராஜ் என்ற பெயரில் ஆதார் கார்டு பெற்றுள்ளார். அவற்றை பயன்படுத்தி மதுரை ஓட்டலில் தங்கி இருந்தாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி உள்ளனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் ஷாரிக் 2 நாட்கள் தங்கி இருந்து உள்ளான். எனவே அவன் எந்த நோக்கத்துக்காக மதுரை வந்து இருந்தான்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர்.

    மேலும் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒரு சிலர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். அவர்கள் மதுரை ஓட்டலில் தங்கி இருந்த ஷாரிக்கை நேரில் சந்தித்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் தனிப்படை போலீசார் மதுரை உயர் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இதற்கிடையே ஷாரிக் ஓட்டலில் இருந்து எந்ததெந்த இடங்களுக்கு சென்றார்? அவரை யாரெல்லாம் சந்தித்தனர்? என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தனிப்படை பிரிவு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

    கர்நாடக தனிப்படை போலீசார் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் உள்ள நேதாஜி ரோட்டில் உள்ள ஓட்டல் மற்றும் உணவகங்களில் அதிரடி விசாரணை நடத்திய சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஷாரிக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களுக்கு சென்றுள்ளார்.
    • 4 மாநிலங்களில் இருந்தும் தலா 50 பேர் முதல் 100 பேரை சேர்க்கவும் ஷாரிக் திட்டமிட்டுள்ளார்.

    மங்களூரு:

    மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ. விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பயங்கரவாதி ஷாரிக்கின் செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில் மங்களூருவில் கத்ரி கோவில் உள்பட 6 இடங்களில் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.

    இந்த நிலையில், ஷாரிக்கின் செல்போனில் சர்ச்சைக்குரிய பேச்சாளர் ஜாகீர் நாயக்கின் பேசிய 50-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்துள்ளன. யூ-டியூப்பில் இருந்து அந்த வீடியோக்களை ஷாரிக் பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துள்ளார். ஜாகீர் நாயக்கின் பேச்சு, அவரை பயங்கரவாத செயலில் ஈடுபட தூண்டுகோலாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் அவர் வெடிப்பொருட்களை வாங்கவும், பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பில் இருக்கவும் 'டார்க்நெட்' என்ற இணையதளத்தை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. ஏனெனில் தங்களது இருப்பிடம், சுயவிவரங்கள் இந்த இணையதளத்தில் பதிவாகாது. இதனால் டார்க்நெட் இணையதளத்தை அவர் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

    மேலும் ஷாரிக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களுக்கு சென்றுள்ளார். அங்குள்ள வனப்பகுதிக்கும் சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்மூலம் கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் பயங்கரவாத அமைப்பை நிறுவ ஷாரிக் முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த 4 மாநிலங்களில் இருந்தும் தலா 50 பேர் முதல் 100 பேரை சேர்க்கவும் ஷாரிக் திட்டமிட்டுள்ளார். அவர்களுக்கு அந்தந்த மாநில வனப்பகுதிகளில் பயிற்சி அளிக்கப்பட்டு ஒரு மதத்தின் அமைப்புகள், வழிபாட்டு தலங்கள் மீது நாசவேலைகளை அரங்கேற்றவும், அந்த அமைப்பின் தலைவர்களை கொல்லவும் சதி திட்டம் தீட்டி உள்ளார்.

    மேலும் தென்னிந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவர்களுடனும் ஷாரிக்கிற்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    • கோவை கார் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஒருவருடன் சதாம் உசேன் தொடர்பில் இருந்ததால் அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்த சென்றுள்ளனர்.
    • இருவரும் வாடகைக்கு என சரக்கு வாகனங்களை பெற்றும், வாகனங்களை திருடியும் மோசடியாக விற்பனை செய்து வந்துள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பாண்டியர் சந்தையை சேர்ந்த ஜாபர் அலி(வயது43), அப்பாவு வீதியை சேர்ந்த சதாம் உசேன் (30) ஆகியோர் வாடகைக்கு என சரக்கு வாகனங்களை பெற்றும், வாகனங்களை திருடியும் மோசடியாக விற்பனை செய்து வந்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் விசாரணை நடத்தி 2 பேரையும் கைது செய்தனர்.

    இதில் கோவை கார் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஒருவருடன் சதாம் உசேன் தொடர்பில் இருந்ததால் அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் உடுமலை வந்து விசாரணை நடத்தி சென்றுள்ளனர்.

    தற்போது வாகன திருட்டு வழக்கில் கைதான சதாம்உசேன், ஜாபர் அலி ஆகியோர் திருடிய வாகனங்களை பயங்கரவாதிகளுக்கு விற்பனை செய்தார்களா? என போலீசார் மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 45 சதவீதம் அளவுக்கு தீக்காயம் அடைந்துள்ள பயங்கரவாதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
    • மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கை உபா சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துமாறு என்.ஐ.ஏ.வுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    மங்களூருவில் கடந்த 19-ந் தேதி ஓடும் ஆட்டோவில் திடீரென குக்கர் குண்டு வெடித்தது. இதில் அந்த ஆட்டோ டிரைவர் மற்றும் குக்கர் குண்டுடன் பயணித்த பயங்கரவாதி ஷாரிக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அந்த 2 பேரும் அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 45 சதவீதம் அளவுக்கு தீக்காயம் அடைந்துள்ள பயங்கரவாதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இந்த பயங்கரவாத செயல் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த பயங்கரவாதியின் சதித்திட்டம் குறித்து புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த சம்பவம் குறித்து கர்நாடக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து உபா சட்டத்தின் கீழ் விசாரிக்குமாறு கோரி தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ.) கர்நாடக அரசு ஒப்படைத்துள்ளது. இதுகுறித்து போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மங்களூரு கங்கனாடி அருகே சமீபத்தில் குக்கர் குண்டு வெடித்தது. இதுகுறித்து கர்நாடக போலீசார் முதல்கட்ட விசாரணையை மேற்கொண்டனர். இதில் கிடைத்த தகவல்கள், ஆதாரங்கள், பிற விவரங்கள் அடிப்படையில் இந்த வழக்கை உபா சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துமாறு என்.ஐ.ஏ.வுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது.

    இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.

    • இலக்கை அடையவில்லை என்றாலும் இதை வெற்றியாக கருதுகிறோம் என குறிப்பிட்டு கடிதம் எழுதி உள்ளனர்.
    • காத்ரி மஞ்சுநாத் கோவிலை தாக்க இந்த அமைப்பு குறிவைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    பெங்களூரு:

    மங்களூருவின் நாகுரி பகுதியில் கடந்த 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் அந்த ஆட்டோவில் பயணித்த ஷாரிக், ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஷாரிக், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும், அவர் மங்களூருவில் பெரிய அளவில் குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.

    இந்த நிலையில் மங்களூரு குண்டுவெடிப்புக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் கவுன்சில் (ஐஆர்சி) என்ற அமைப்பு பொறுப்பேற்று உள்ளது என கர்நாடகா காவல்துறை தகவல் தெரிவித்து உள்ளது. இலக்கை அடையவில்லை என்றாலும் இதை வெற்றியாக கருதுகிறோம் என குறிப்பிட்டு கடிதம் எழுதி உள்ளனர். அந்த கடிதம் உளவுத்துறைக்கு கிடைத்துள்ளது. காத்ரி மஞ்சுநாத் கோவிலை தாக்க இந்த அமைப்பு குறிவைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    அந்த கடிதத்தை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் என்ற பெயரை தாங்கள் இதுவரை கேள்விப்பட்டதில்லை என்று காவல்துறை கூறி உள்ளது.

    • குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஷாரிக் கோவை வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்றது உறுதியானது.
    • ஷாரிக் ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலையை புகைப்படம் எடுத்ததை நேரில் பார்த்ததாக கோவையை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

    கோவை:

    கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்தவர் முகமது ஷாரிக்(27).

    இவன் கர்நாடக மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டை வெடிக்க வைத்து தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டுள்ளான்.

    குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஷாரிக் கோவை வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்றது உறுதியானது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு முன்பு குக்கர் வெடிகுண்டை கையில் வைத்து போட்டோ எடுத்து கொண்ட முகமது ஷாரிக், ஈஷா சென்றதற்கான காரணம் என்ன? ஒருவேளை போலீசாரை வழக்கில் இருந்து திசை திருப்புவதற்காக இப்படி செய்தானா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பதும் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் முகமது ஷாரிக் ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலையை புகைப்படம் எடுத்ததை நேரில் பார்த்ததாக கோவையை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

    இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அவரிடம், நீங்கள் பார்த்தது முகமது ஷாரிக் தானா? அவரை எப்படி தெரியும்? அங்கு புகைப்படம் மட்டும் தான் எடுத்தாரா? என பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரித்தனர்.

    மேலும் உங்களுக்கு அவன் தான் ஷாரிக் என்பது எப்படி தெரியும் எனவும் விசாரணை நடத்தினர். அதற்கு அவர் 2 நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் அவன் போட்டோவுடன் செய்தி வெளியானதை பார்த்தேன். அப்போது தான் எனக்கு நினைவுக்கு வந்தது என்று தெரிவித்தாக கூறப்படுகிறது.

    மேலும் ஈஷா யோகா மையத்தில் உள்ள சி.சி.டிவி கேமராக்களில் தீபாவளி தினத்தில் பதிவாகி உள்ள காட்சிகளை பார்த்தால் தெரியும் என்றும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். ஆனால் அன்றைய தினம் ஷாரிக் கர்நாடகாவில் இருந்தது அவரது செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்தது.

    இவர் கூறும் தகவல்கள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இவர் கூறுவது உண்மைதானா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஷாரிக் மதுரையில் எங்கெல்லாம் சென்றார்? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது
    • இணையதளம் மூலம் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்தி உள்ளார்.

    மதுரை:

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குக்கர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இதில் முக்கிய மூளையாக செயல்பட்டதாக, சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த ஷாரிக்(வயது 22) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    ஷாரிக்கின் மைசூர் வீடு மற்றும் உறவினர்-நண்பர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு ஒரு டைரி சிக்கியது. அதில் தீவிரவாதி ஷாரிக் தமிழகத்தில் கோவை, சேலம், மதுரை, நாகர்கோவில் ஆகிய 4 நகரங்களுக்கு வந்து சென்ற விவரம் உள்ளது.

    எனவே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இது தொடர்பாக மதுரை மண்டல மத்திய உளவுத்துறை ஏஜென்சிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதன் அடிப்படையில் போலீசார் இங்கு உள்ள 40-க்கும் மேற்பட்ட அடிப்படை மதவாத அமைப்புகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகள் உள்பட பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஷாரிக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு வந்து தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. அப்போது அவர் இங்கு உள்ள ஒரு வீட்டில் 2 வாரங்கள் தங்கி உள்ளார். அவரை அடிப்படை மதவாத அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உடையவர்கள் சந்தித்து பேசி உள்ளனர்.

    அப்போது தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உடைய இளைஞர்களுக்கு ஷாரிக் மூளைச்சலவை செய்து ஏதேனும் சதி திட்டங்களை வகுத்துக் கொடுத்தாரா? என்பது பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.

    மதுரைக்கு ஷாரிக் வந்தபோது எங்கெல்லாம் சென்றார்? அவரை எத்தனை அமைப்புகளின் நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள்? தனி அறையில் ரகசிய ஆலோசனை நடத்தியது யார்? அவர்கள் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்? என்பது தொடர்பாக மத்திய உளவுத் துறை ரகசிய விசாரணை நடத்தி வருகிறது.

    ஷாரிக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட்டாளிகளுடன் அல் ஹிந்த் ஐ.எஸ். என்ற அமைப்பை பெங்களூருவில் தொடங்கி உள்ளார். இந்த அமைப்பை தமிழகத்தில் வேரூன்ற வைப்பது தொடர்பாக அவர் இணையதளம் மூலம் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்தி உள்ளார்.

    எனவே அல்ஹிந்த் ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு உடையவர்கள் பட்டியலில் மதுரையைச் சேர்ந்தவர்கள் உள்ளனரா? என்பது தொடர்பாக புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மைசூர் ஷாரிக் கடந்த செப்டம்பர் மாதம் கோவை வந்து சிலிண்டர் குண்டு வெடிப்பு குற்றவாளி முபின் உடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன. இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி அம்ஜத் அலி ஒரே நாளில் 7 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி பரபரப்பை உருவாக்கினார்.

    அதே மாதிரியான நாச வேலைகளில் ஈடுபடுவது என்று ஷாரிக் தலைமையிலான கும்பல் முடிவு செய்து இருந்ததாக தெரிய வந்துள்ளது. இதற்காக தான் ஷாரிக் கோவை, சேலம், மதுரை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கு சென்றிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் உள்ளது.

    இதற்கிடையே மதுரையில் புதிதாக வாஹ்தத்-இ-இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பு உருவெடுத்து உள்ளது. இது முன்னாள் சிமி நிர்வாகிகள் தோற்றுவித்தது என்று கூறப்படுகிறது. வாஹ்தத்-இ-இஸ்லாமி ஹிந்த் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் இப்போது தென் மாவட்டங்களில் வலுவாக வேரூன்றி திரை மறைவு வேலைகளில் ஈடுபட்டு வருவதாக மத்திய புலனாய்வு துறைக்கு சந்தேகம் உள்ளது.

    எனவே அந்த அமைப்பு ஷாரிக்கை மதுரைக்கு அழைத்து வந்ததா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

    • 3-ந் தேதி கோவைக்கு வந்த ஷாரிக், 6-ந் தேதி வரை விடுதியிலேயே தங்கி இருந்துள்ளான்.
    • ஆதார் அட்டையில் கவுரி என்றும், அதில் ஷாரிக்கின் புகைப்படமும் இருந்துள்ளது.

    கோவை:

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஆட்டோவில் பயணித்த முகமது ஷாரிக் என்பவன் தான் வெடிகுண்டை எடுத்து சென்று நாச வேலையில் ஈடுபட திட்டமிட்டதும், அவனுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் இந்த சம்பவத்தில் இவனை தவிர வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    விசாரணையில், ஷாரிக் கோவையில் தங்கியிருந்த தகவல் கிடைத்தது. கர்நாடக தனிப்படை போலீசார் உடனடியாக கோவைக்கு வந்தனர்.

    கோவை காந்திபுரத்தில் ஷாரிக் தங்கிய விடுதிக்கு கோவை மாநகர போலீசாருடன் இணைந்து, கர்நாடக போலீசார் சென்றனர். அங்கு விடுதி முழுவதும் சோதனை மேற்கொண்ட போலீசார், விடுதி உரிமையாளர், மேலாளர் ஆகியோரிடம் விசாரித்தனர்.

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-

    மங்களூரு குண்டு வெடிப்பு குற்றவாளியான முகமது ஷாரிக் கடந்த செப்டம்பர் மாதம் 3-ந் தேதி காலை கர்நாடகாவில் இருந்து கோவை காந்திபுரத்திற்கு பஸ்சில் வந்தான்.

    பஸ்சை விட்டு இறங்கியதும், பஸ் நிலையம் அருகே உள்ள விடுதிக்கு சென்றான். அங்கு தனக்கு தங்குவதற்கு ஒரு அறை வேண்டும் என கேட்டுள்ளான். பணியில் இருந்த ஊழியர், உங்களது பெயர் என்ன, எங்கிருந்து வருகிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அவன், தனது பெயர் கவுரி என்றும், கர்நாடகாவில் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளான்.

    என்ன விஷயமாக இங்கு வந்துள்ளீர்கள் எனவும் ஊழியர்கள் கேட்டுள்ளனர். அதற்கு தான் இங்கு வேலை தேடி வந்துள்ளதாக தெரிவித்துள்ளான்.

    இதையடுத்து ஊழியர், அடையாள அட்டை ஏதாவது இருந்தால், அதன் நகை கொடுங்கள் என கேட்டனர். இதையடுத்து அவன் ஆதார் அட்டையை எடுத்து கொடுத்துள்ளார். அதில் கவுரி என்றும், அந்த ஆதார் கார்ட்டில் ஷாரிக்கின் புகைப்படமும் இருந்துள்ளது. கவுரி என்று கூறியதால் அதுதானே அவரது பெயர் என அங்கிருந்த ஊழியர்கள் நம்பியுள்னர். அதனை நம்பியே அறையும் ஒதுக்கி கொடுத்துள்ளனர்.

    3-ந் தேதி கோவைக்கு வந்த ஷாரிக், 6-ந் தேதி வரை விடுதியிலேயே தங்கி இருந்துள்ளான். 6-ந் தேதி மாலைக்கு பிறகே விடுதியை காலி செய்துள்ளான்.

    4 நாட்கள் கோவையில் விடுதியில் தங்கி இருந்த அவன் இரவில் மட்டுமே அறையில் தங்கி உள்ளான். பகல் நேரங்களில் அறையில் இருப்பதே இல்லை. வெளியிலேயே சுற்றி திரிந்துள்ளான். யாராவது கேட்டால் வேலை தேடுவதாக கூறியுள்ளான். மற்றபடி அவன் குறித்த எந்த தகவலும் அங்கிருந்தவர்களுக்கு தெரியவில்லை.

    போலீசார் விசாரணை நடத்திய பிறகே விடுதியில் தங்கியிருந்தவன் பெயர் கவுரி இல்லை ஷாரிக் என்பதும், குண்டு வெடிப்பில் தொடர்புடையவன் என்பதும் விடுதி உரிமையாளர் மற்றும் அங்கு தங்கி இருந்தவர்களுக்கு தெரியவந்தது.

    ஷாரிக் பகலில் அறையில் தங்காமல் வெளியிலேயே சுற்றி திரிந்ததால் அவன் கோவையில் பலரை சந்தித்திருக்க வாய்ப்புள்ளது. இதனால் அவர் எந்த பகுதிகளுக்கு சென்றார். யாரை சந்தித்து பேசினார். அவர்களிடம் குண்டு வெடிப்பு தொடர்பாக ஏதாவது பேசினரா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே கோவையில் தங்கும் விடுதிகளுக்கு போலீசார் கடும் கட்டுபாடுகளை விதித்துள்ளனர். கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், செல்போன் எண்ணை வாங்கியவுடன் மிஸ்டுகால் கொடுத்து அந்த எண் செயல்பாட்டில் உள்ளதா? எனவும் சோதித்து பார்க்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து கோவையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், லாட்ஜூகள், ஓட்டல் உரிமையாளர்கள் போலீசார் விதித்த நிபந்தனைகளை கடைபிடிக்க தொடங்கியுள்ளனர்.

    மேலும் போலீசார் ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் தங்கி இருப்பவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியை தொடங்கி உள்ளனர். அதில் யாராவது சந்தேகப்படும்படி உள்ளனரா என்றும் கண்காணித்து வருகின்றனர்.

    • நெடுங்காடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மாவட்டம் முழுவதும் உள்ள தமிழக மற்றும் காரைக்கால் எல்லைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காரைக்கால்:

    கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பை அடுத்து, பெங்களூருவில் குக்கர் வெடிவிபத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அம்மாநிலத்தில் குண்டு வெடிப்பை ஏற்படுத்தியவர்கள், அண்டை மாநிலமான தமிழகம், புதுச்சேரியில் அடைக்கலமாகலாம் என்ற முன்னெச்சரிக்கை அடிப்படையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக உள்ள காரைக்கால் மாவட்ட எல்லைகளில், சாலைகளில், காரைக்கால் திரு.பட்டினம் போலீசார், போலீஸ் சூப்பிரண்ட் சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதேபோல், காரைக்கால் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகம், திருநள்ளாறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அறிவிச்செல்வன், நெடுங்காடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மாவட்டம் முழுவதும் உள்ள தமிழக மற்றும் காரைக்கால் எல்லைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில், காரைக்கால் அம்மையார் கோவில், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், லாட்ஜ்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மங்களூரூ போலீசார் நடத்திய விசாரணையில், தமிழகம் மற்றும் கேரளாவுக்கு ஷாரிக் கடந்த செப்டம்பர் மாதம் வந்து சென்றிருப்பது தெரிய வந்தது.
    • தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் குற்ற சம்பவங்களை நடத்த ஷாரிக் சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    நாகர்கோவில்:

    கர்நாடகா மாநிலம் மங்களூரூ நாகுரி பகுதியில் கடந்த 18-ந் தேதி ஆட்டோவில் குண்டு வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்டுத்தியது. ஆட்டோவில் வெடித்தது குக்கர் வெடிகுண்டு என போலீசார் விசாரணையில் தகவல் கிடைத்தது.

    குண்டு வெடித்ததில் ஆட்டோவில் வந்த ஒருவரும், டிரைவரும் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆட்டோவில் காயத்துடன் மீட்கப்பட்டவன் தான் குக்கர் குண்டு கொண்டு வந்தவன் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    அவனைப் பற்றி விசாரித்ததில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஷாரிக் என்ற முகமது ஷாரிக் (வயது 22) என்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவனது செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அவன் தனது அடையாளத்தை மறைத்து செல்போனில் பிரேம்ராஜ் என்ற பெயரில் சிவன் 'ஸ்டேட்டஸ்' வைத்து பலருடன் பழகி உள்ளான்.

    ஷாரிக் யார்? யாருடன் பேசி உள்ளான் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது பல பெண்களுடன் அவன் பேசியிருப்பது தெரிய வந்தது. நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பேசியது குறித்து தகவல் கிடைத்ததும், அந்தப் பெண்ணை குமரி மாவட்ட போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தினர்.

    ஆனால் அது தவறுதலாக வந்த அழைப்பு என தெரிய வந்தது. அந்தப் பெண் மொழி தெரியாததால், தனது 'பாஸ்ட் புட்' கடையில் வேலை பார்த்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜிம் ரகுமான் என்பவரை வைத்து போனில் பேசியதாக தெரிவித்தார். எனவே அஜிம் ரகுமானுக்கு, ஷாரிக்குடன் தொடர்பு இருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    நாகர்கோவில் கோட்டாரில் தங்கியிருந்த அஜிம் ரகுமானை நள்ளிரவில் பிடித்த போலீசார், ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். சுமார் 30 மணி நேரம் அவனிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் அவனுக்கும் ஷாரிக்குக்கும் தொடர்பு இல்லை என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து 30 மணி நேர விசாரணைக்கு பிறகு அஜிம் ரகுமானை போலீசார் விடுவித்தனர்.

    இதற்கிடையில் மங்களூரூ போலீசார் நடத்திய விசாரணையில், தமிழகம் மற்றும் கேரளாவுக்கு ஷாரிக் கடந்த செப்டம்பர் மாதம் வந்து சென்றிருப்பது தெரிய வந்தது.

    ஏற்கனவே கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்திருப்பதால், அதற்கும் ஷாரிக்குக்கும் தொடர்பு இருக்கலாமா? அவன் தமிழகத்திலும் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட சதி திட்டம் தீட்டினானா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    கோவை போலீசாருடன் இணைந்து நடத்திய இந்த விசாரணையில், கடந்த செப்டம்பர் 3-ந் தேதி, ஷாரிக் கோவை வந்திருப்பது தெரியவந்தது. கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் அவன் அறை எடுத்து தங்கி உள்ளான். அப்போது கவுரி என பெண் பெயரை கொடுத்து அறை எடுத்துள்ளான்.

    கோவையில் சில நாட்கள் தங்கியிருந்த அவன், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றுள்ளான். அங்கு அவன் யாரை சந்தித்தான்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவையில் இருந்து மதுரை வந்த ஷாரிக், அங்கு ஒரு நாள் தங்கிவிட்டு, குமரி மாவட்டம் வந்துள்ளான். நாகர்கோவிலில் 4 நாட்கள் அவன் அறை எடுத்து தங்கி இருந்ததாக, மங்களூரூ போலீசார் தெரிவித்து உள்ளனர். ஆனால் அவன் எந்த விடுதியில் தங்கினான்? என்ன பெயரில் தங்கினான் என்பது தெரியவில்லை.

    இதுகுறித்து குமரி மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில், கடந்த செப்டம்பர் மாதம் குமரி மாவட்ட விடுதிகளில் தங்கியவர்கள் யார்? யார்? அவர்கள் கொடுத்த முகவரி சரியானதுதானா? என போலீசார் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

    குமரி மாவட்டத்தில் இருந்து தான், ஷாரிக் கேரளா சென்றுள்ளார். எனவே அவன் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் குற்ற சம்பவங்களை நடத்த சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதன் முதல் கட்டமாகத்தான் மங்களூரூ ரெயில் நிலையத்தில் தாக்குதல் நடத்த குக்கர் வெடிகுண்டுடன் ஆட்டோவில் சென்று இருக்கலாம். ஆனால் எதிர்பாராதவிதமாக பயணத்தின் போது ஆட்டோவிலேயே குக்கர் குண்டு வெடித்ததால், சதி செயல் திட்டமிட்டபடி நடைபெறவில்லை என போலீசார் கருதுகின்றனர்.

    ஷாரிக் தற்போது மருத்துவமனையில் இருந்தாலும், அவன் கடந்த சில மாதங்களாகவே சதி செயலுக்கு திட்டம் தீட்டி இருப்பதால், அவனது கூட்டாளிகள் வேறு ஏதும் திட்டம் வைத்துள்ளார்களா? அவர்கள் யார்? எங்கு உள்ளார்கள்? என்பது குறித்து தேசிய புலனாய்வு முகமையினரும், 'ரா' உள்ளிட்ட உளவுத்துறையினரும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஷாரிக் தன்னை யாரும் எளிதில் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதிலும் மிக கவனமாக செயல்பட்டுள்ளார்.
    • கோவை மாநகர போலீசார் ஆன்லைனில் வெடி மருந்துகள் வாங்கியவர்களின் விபரங்களையும் சேகரிக்க தொடங்கி உள்ளனர்.

    கோவை:

    மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான ஷாரிக், சம்பவத்திற்கு முன்பாக பல்வேறு ஊர்களில் சுற்றி திரிந்துள்ளான்.

    ஊர் ஊராக சுற்றி திரிந்தபோது தான் தங்கிய இடங்களில் எல்லாம் தனது பெயரை மாற்றி மாற்றி தெரிவித்துள்ளான்.

    மேலும் ஷாரிக் தன்னை யாரும் எளிதில் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதிலும் மிக கவனமாக செயல்பட்டுள்ளார்.

    இதற்காக தனது செல்போன் வாட்ஸ்-அப்பில் காட்சி படமாக(டி.பி.) ஆதியோகி சிவன் படத்தை வைத்துள்ளார். அத்துடன் அதில் தனது பெயரை பிரேம்ராஜ் என்று குறிப்பிட்டுள்ளார்.

    தன்னை யாராவது செல்போனில் தொடர்பு கொண்டாலும் தனது மத அடையாளம் இதுதான் என்பதை யாரும் அறியாதபடி தான் ஒரு மாற்று மதத்தை சேர்ந்தவன் என்றே அனைவரும் நம்பும்படி பல ஊர்களிலும் உலா வந்திருக்கிறான்.

    ஆதியோகி படத்தை வாட்ஸ்-அப்பில் வைத்திருந்ததால், ஷாரிக் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்றிருக்கலாம் என்று ஒரு தகவல் பரவியது.

    இதையடுத்து கோவை மாநகர போலீசார் ஷாரிக் ஈஷா யோகா மையம் சென்றாரா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், ஷாரிக் ஈஷா யோகா மையத்திற்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் கோவையில் எந்த பகுதிகளுக்கு சென்றார்? அங்கு யாரை சந்தித்தார்? என விசாரணை நடக்கிறது.

    இதற்கிடையே கோவை மாநகர போலீசார் ஆன்லைனில் வெடி மருந்துகள் வாங்கியவர்களின் விபரங்களையும் சேகரிக்க தொடங்கி உள்ளனர். இதுதொடர்பாக கோவையில் உள்ள 2 ஆன்லைன் விற்பனை நிறுவன குடோன்களின் பிரநிதிகளிடம் தகவல்களை கேட்டுள்ளனர். மேலும் வெடிமருந்து யாராவது ஆர்டர் செய்தால் உடனடியாக தகவல் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஷாரிக் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • ஷாரிக் நாகர்கோவிலில் 4 நாட்கள் முகாமிட்டு இருந்தது ஏன்? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    நாகர்கோவில்:

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள நாகுரி பகுதியில் கடந்த 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஆட்டோ டிரைவரும், ஆட்டோவில் பின் இருக்கையில் பயணம் செய்த பயங்கரவாதியும் படுகாயம் அடைந்தனர். நாச வேலையில் ஈடுபட பயங்கரவாதி வெடிகுண்டை எடுத்து சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஷாரிக் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவரது செல்போனும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு முன்பு ஷாரிக் எங்கெல்லாம் சென்றார்? யார் யாருடன் பேசினார்? என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் குக்கர் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதியான ஷாரிக் 4 நாட்கள் நாகர்கோவிலில் தங்கி இருந்தது உளவுத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதாவது ஆகஸ்டு மாத இறுதியில் அவர் நாகர்கோவிலில் இருந்துள்ளார். ஆனால் எதற்காக தங்கி இருந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. இங்கு தங்கியிருந்த போது யாரிடமும் அவர் செல்போன் மூலம் பேசவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பின்னர் இங்கிருந்து கேரளாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் ஷாரிக் நாகர்கோவிலில் 4 நாட்கள் முகாமிட்டு இருந்தது ஏன்? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    எனவே, நாகர்கோவிலில் ஷாரிக் தங்கி இருந்தபோது அவரை யாரேனும் நேரில் வந்து பார்த்தார்களா? குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுடன் ஷாரிக்குக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். பயங்கரவாதி ஷாரிக் நாகர்கோவிலில் தங்கி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×