search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரையில் 2 வாரம் தங்கியிருந்து உளவு பார்த்த ஷாரிக்- போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
    X

    மதுரையில் 2 வாரம் தங்கியிருந்து உளவு பார்த்த ஷாரிக்- போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

    • ஷாரிக் மதுரையில் எங்கெல்லாம் சென்றார்? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது
    • இணையதளம் மூலம் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்தி உள்ளார்.

    மதுரை:

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குக்கர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இதில் முக்கிய மூளையாக செயல்பட்டதாக, சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த ஷாரிக்(வயது 22) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    ஷாரிக்கின் மைசூர் வீடு மற்றும் உறவினர்-நண்பர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு ஒரு டைரி சிக்கியது. அதில் தீவிரவாதி ஷாரிக் தமிழகத்தில் கோவை, சேலம், மதுரை, நாகர்கோவில் ஆகிய 4 நகரங்களுக்கு வந்து சென்ற விவரம் உள்ளது.

    எனவே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இது தொடர்பாக மதுரை மண்டல மத்திய உளவுத்துறை ஏஜென்சிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதன் அடிப்படையில் போலீசார் இங்கு உள்ள 40-க்கும் மேற்பட்ட அடிப்படை மதவாத அமைப்புகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகள் உள்பட பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஷாரிக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு வந்து தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. அப்போது அவர் இங்கு உள்ள ஒரு வீட்டில் 2 வாரங்கள் தங்கி உள்ளார். அவரை அடிப்படை மதவாத அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உடையவர்கள் சந்தித்து பேசி உள்ளனர்.

    அப்போது தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உடைய இளைஞர்களுக்கு ஷாரிக் மூளைச்சலவை செய்து ஏதேனும் சதி திட்டங்களை வகுத்துக் கொடுத்தாரா? என்பது பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.

    மதுரைக்கு ஷாரிக் வந்தபோது எங்கெல்லாம் சென்றார்? அவரை எத்தனை அமைப்புகளின் நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள்? தனி அறையில் ரகசிய ஆலோசனை நடத்தியது யார்? அவர்கள் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்? என்பது தொடர்பாக மத்திய உளவுத் துறை ரகசிய விசாரணை நடத்தி வருகிறது.

    ஷாரிக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட்டாளிகளுடன் அல் ஹிந்த் ஐ.எஸ். என்ற அமைப்பை பெங்களூருவில் தொடங்கி உள்ளார். இந்த அமைப்பை தமிழகத்தில் வேரூன்ற வைப்பது தொடர்பாக அவர் இணையதளம் மூலம் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்தி உள்ளார்.

    எனவே அல்ஹிந்த் ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு உடையவர்கள் பட்டியலில் மதுரையைச் சேர்ந்தவர்கள் உள்ளனரா? என்பது தொடர்பாக புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மைசூர் ஷாரிக் கடந்த செப்டம்பர் மாதம் கோவை வந்து சிலிண்டர் குண்டு வெடிப்பு குற்றவாளி முபின் உடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன. இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி அம்ஜத் அலி ஒரே நாளில் 7 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி பரபரப்பை உருவாக்கினார்.

    அதே மாதிரியான நாச வேலைகளில் ஈடுபடுவது என்று ஷாரிக் தலைமையிலான கும்பல் முடிவு செய்து இருந்ததாக தெரிய வந்துள்ளது. இதற்காக தான் ஷாரிக் கோவை, சேலம், மதுரை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கு சென்றிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் உள்ளது.

    இதற்கிடையே மதுரையில் புதிதாக வாஹ்தத்-இ-இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பு உருவெடுத்து உள்ளது. இது முன்னாள் சிமி நிர்வாகிகள் தோற்றுவித்தது என்று கூறப்படுகிறது. வாஹ்தத்-இ-இஸ்லாமி ஹிந்த் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் இப்போது தென் மாவட்டங்களில் வலுவாக வேரூன்றி திரை மறைவு வேலைகளில் ஈடுபட்டு வருவதாக மத்திய புலனாய்வு துறைக்கு சந்தேகம் உள்ளது.

    எனவே அந்த அமைப்பு ஷாரிக்கை மதுரைக்கு அழைத்து வந்ததா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

    Next Story
    ×