search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kottai mariamman temple"

    • அம்மனுக்கு மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் சாத்துப்படி செய்தல் நடந்தது.
    • கொடியில் உள்ள அம்மன் படத்திற்கு கண் திறப்பு நடந்தது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசித்திருவிழா கடந்த 16-ந்தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. அடுத்த நாள் 17-ந் தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. அதைத்தொடர்ந்து மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் நேற்று நடந்தது.

    இதையொட்டி திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் அம்மனுக்கு மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் சாத்துப்படி செய்த பின் கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா தலைவர் ஏ.கந்தசாமி தலைமையில் சபா மண்டபத்தில் இருந்து அம்மனுக்கு சாத்துப்படி செய்யப்படும் மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் ஆகியவை எடுத்து வரப்பட்டது. பின்னர் அவை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து ரத வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தது.

    அதன்பிறகு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் சாத்துப்படி செய்தல் நடந்தது. அதேபோல் திண்டுக்கல் டவுன் மார்க்கெட் குமரன் தெரு சாம்பான் குலத்தினர் சார்பில் பாலக்கொம்பு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ரதவீதிகள் வழியே சுற்றி கோவிலை வந்தடைந்தது. அதன்பிறகு ஊன்றப்பட்டது. இதையடுத்து பாலக்கொம்புக்கு மஞ்சள் நீர் ஊற்றினர். அதன் பிறகு கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சுபாஷினி மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் சார்பில் கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி மஞ்சள் வண்ண துணியில் சிங்க வாகனத்தில் கோட்டை மாரியம்மன் அமர்ந்து இருப்பதை போன்று வரையப்பட்ட கொடி தயார் நிலையில் இருந்தது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு கொடியில் உள்ள அம்மன் படத்திற்கு கண் திறப்பு நடந்தது.

    அதைத்தொடர்ந்து பகல் 12 மணியளவில் கோவில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது சுற்றி இருந்த பெண்கள் பக்தி பரவசத்தில் "ஓம் சக்தி, பராசக்தி" என்று கோஷம் எழுப்பினர். இதில் விஸ்வகர்ம அறக்கட்டளை செயலாளர் ஆனந்தன், சங்கச் செயலாளர் சந்தானம், பொருளாளர் பொன்னலங்காரம், இணைச் செயலாளர் சின்னு, சங்க நிர்வாகிகள் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பிறகு விஸ்வகர்ம அறக்கட்டளை இயக்குனர் குமரேசன் மற்றும் நண்பர்கள் சார்பில் அன்னதானம் நடந்தது.

    மாலை 6 மணியளவில் கோவிலில் உள்ள கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7 மணி அளவில் அம்மனின் மின்தேர் வீதி உலா தொடங்கி ரதவீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது.

    இரவு கோவில் கலையரங்கில் திண்டுக்கல் விஸ்வகர்ம இளைஞர் சங்கம் சார்பில் இன்னிசை கச்சேரி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சங்கத் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்களை காணிக்கையாக கொடுத்து அம்மனை வழிபட்டனர்.
    • இந்த பூத்தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசித்திருவிழா பூத்தமலர் பூ அலங்காரத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று பூச்சொரிதல் விழா நடந்தது. இதையொட்டி காலை 9 மணியளவில் கோவில் பரம்பரை அறங்காவலர்கள் பூத்தட்டுகளை சுமந்து கோவிலை 3 முறை வலம் வந்தனர். அதன்பிறகு பூக்களை அம்மனுக்கு படைத்து அந்த பூக்களை கோவில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேருக்கு கொண்டு வந்து கொடுத்தனர்.

    அதைத்தொடர்ந்து தேரின் முன்பு 21 வாழைத்தண்டுகளில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழிக்கப்பட்டு பூத்தேரோட்டம் தொடங்கியது. இதில் கோட்டை மாரியம்மனின் பூத்தேருக்கு முன்பாக விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, முருகன் சாமி பூத்தேர்கள் அணி வகுத்து சென்றன. இந்த பூத்தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது வழியெங்கும் அமைக்கப்பட்டு இருந்த பூக்காணிக்கை மையங்களில் இருந்து பூக்கள் பெறப்பட்டன.

    அதேபோல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்களை காணிக்கையாக கொடுத்து அம்மனை வழிபட்டனர். இந்த காட்சி பக்தர்கள் வெள்ளத்தில் பூத்தேர் மிதந்து வருவதை போன்று இருந்தது. அதைத்தொடர்ந்து மதியம் சுமார் 2 மணியளவில் பூத்தேர்கள் கோவிலை வந்தடைந்தன. அதன்பிறகு பக்தர்களிடம் காணிக்கையாக பெறப்பட்ட பூக்கள் அனைத்தும் அம்மனின் கருவறையில் கொட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    • அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    • இன்று பூச்சொரிதல் விழா நடக்கிறது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசித்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மாசித்திருவிழா பூத்தமலர் பூ அலங்கார மண்டகப்படியுடன் நேற்று தொடங்கியது.

    இதையொட்டி காலையில் அம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்பட 21 வகையான பொருள்களால் மகா அபிஷேகம், அலங்காரம், பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாலையில் மூலஸ்தான அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் கோவில் மண்டபத்தில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி அலங்காரம் மற்றும் ரோஜா, மல்லிகை, சம்பங்கி உள்பட பல்வேறு மலர்களால் சிவன், முருகன், ஆண்டாள், வாராகி அம்மன் கோலங்கள் போடப்பட்டது. இதேபோல் பூத்தமலர் பூ அலங்காரத்தில், கரகங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    மாசித்திருவிழாவில், இன்று (வெள்ளிக்கிழமை) பூச்சொரிதல் விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • அம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

    திருப்பூர் தாராபுரம் ரோட்டில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா மற்றும் பல்வேறு விழாக்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் கும்பாபிஷேக 12-ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு தம்பதி சங்கல்பம், புண்யாக பஞ்ச கவ்ய பூஜை, ஆத்மசுத்தி, வேதிகார்ச்சனை, வேதபாராயணத்துடன் கணபதி பூஜை நடந்தது. 8 மணிக்கு யாக பூஜை, திரவிய யாகம், மகாபூர்ணாகுதியுடன் கோட்டை மாரியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது.

    இந்த சிறப்பு வழிபாட்டில் அம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். ஆண்டு விழாவையொட்டி கோவில் உட்பிரகாரம் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர், திருப்பூர் கொங்கு வேளாளக்கவுண்டர்கள் சமூக நலச்சங்கத்தினர் செய்திருந்தனர்.

    • 1-ம் தேதி விடையாற்றி ஊஞ்சல் வனத்திடை அம்மன் காட்சி கொடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 2-ந் தேதி அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    திண்டுக்கல்லில் உள்ள பிரசித்திபெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையன்று அம்மன் நகர்வலம் தொடங்கி திண்டுக்கல் நகர் பகுதிகளில் 4 நாட்கள் வீதிஉலா வருவது வழக்கம். அதன்படி ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையான நேற்று கோட்டை மாரியம்மன் வீதிஉலா தொடங்கியது.

    இதையொட்டி காலை 5 மணி அளவில் விநாயகர் வழிபாடு, அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்று 6.30 மணியளவில் வீதி உலா தொடங்கியது. இந்த வீதிஉலா மேற்கு ரதவீதி, கச்சேரி தெரு உட்பட பல்வேறு பகுதிகளில் வலம் வந்து நந்தவனம் ரோட்டில் உள்ள தரகுமண்டி குமாஸ்தாக்கள் சங்க மண்டபத்தில் இரவு தங்கல் நடைபெற்றது. பகலில் வழியெங்கும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (சனிக்கிழமை) அம்மன் அங்கிருந்து புறப்பட்டு சொசைட்டி தெரு, பாண்டியன் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் வலம் வந்து இரவு நாராயண அய்யர் கல்யாண மண்டபத்தில் தங்கல் நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) அங்கிருந்து நகர்வலம் தொடங்கி மேட்டு ராஜக்காபட்டி, ரவுண்டு ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் வலம் வந்து மேட்டுராஜக்காபட்டி காளியம்மன் கோவிலில் சுவாமி இரவு தங்கல் நடக்கிறது.

    4-ம் நாளில் அங்கிருந்து அம்மன் புறப்பாடாகி பல்வேறு பகுதிகளில் வலம் வந்து சன்னதி சேருகிறார். அன்று மாலை விடையாற்றி ஊஞ்சல் வனத்திடை அம்மன் காட்சி கொடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 5-ம் நாள் நிகழ்ச்சியாக அடுத்த மாதம் 2-ந் தேதி மாலை மூலஸ்தான அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஆடி 2-வது வெள்ளி வீதிஉலா நிகழ்வுகள் நிறைவு பெறுகிறது.

    திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் கோட்டை மாரியம்மனுக்கு பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசித்திருவிழா வருடந்தோறும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் அம்மனுக்கு பொட்டு கட்டுதல் செய்து விழாவை தொடங்கினர். அதேபோல் இந்த சமூகத்தார் சார்பில் மஞ்சள் நீராட்டு நடத்தப்பட்ட பின்பு கோவிலில் கொடியிறக்கம் செய்யப்படுகிறது.

    அதன்படி இந்த வருட மஞ்சள் நீராட்டு விழா நேற்று நடந்தது. இதையொட்டி திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதனை சபா தலைவர் ஏ.கந்தசாமி ஆச்சாரி தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் நகரின் 4 ரதவீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது.

    அங்கு, அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு செய்யப்பட்டது. இதனையொட்டி அனைவரின் மீதும் மஞ்சள்நீர் தெளிக்கப்பட்டது. அதன்பிறகு அம்மன் அழைத்தல் நடைபெற்று வீதிஉலா தொடங்கியது. இதில் பக்தர்கள் அனைவரும் மஞ்சள் நீராடி அம்மனை சபா மண்டபத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு, மஞ்சள் நீராடி அழைத்து வந்தவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு, பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதன்பிறகு இரவு 7 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன.

    அதனைத்தொடர்ந்து இரவு 9 மணியளவில் அம்மனின் மின்தேர் வீதிஉலா தொடங்கியது. இதில் விஸ்வகர்ம இளைஞர் சங்கம் சார்பில் தாரை, தப்பட்டை, கரகாட்டம், கிராமிய நிகழ்ச்சிகள் நடந்தன. அதைபோல விஸ்வகர்ம இளைஞர் சபா சார்பில் அக்கசாலை விநாயகர் மின்தேர் முன்செல்ல, அடுத்ததாக விஸ்வ பிரம்மா மின்தேர், 3-வதாக கோட்டை மாரியம்மன் சிறப்பு அலங்கார மின்தேர் வீதிஉலா ரதவீதிகள் வழியே வலம் வந்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணியளவில் கோவிலை அடைந்தது. அதன்பிறகு கொடியிறக்கம் செய்யப்பட்டது. முன்னதாக கோவில் கலையரங்கில் இன்னிசை கச்சேரி நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை விஸ்வகர்ம மகாஜன சபா பொது செயலாளர் சந்தானம், பொருளாளர் பொன்னலங்காரம், அறக்கட்டளை செயலாளர் ஆனந்தன், இயக்குனர்கள் குமரேசன், பாண்டி, இணை செயலாளர் சின்னு, துணை செயலாளர் முத்து, காளிராஜ், சண்முகம் உள்பட அனைத்து நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு திருவிழா வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.
    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலும் ஒன்று. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலின் மாசித்திருவிழா வருடந்தோறும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி அம்மனுக்கு பூத்தமலர் பூ அலங்காரம், பூச்சொரிதல், கொடியேற்றம் உள்பட பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு திருவிழா வருகிற 31-ந்தேதி(வியாழக்கிழமை) பூத்தமலர் அலங்காரத்துடன் தொடங்குகிறது. அடுத்தநாள் 1-ந் தேதி மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூச்சொரிதல் விழா நடக்கிறது. அதனைத்தொடர்ந்து 3-ந் தேதி சாட்டுதல், 5-ந் தேதி கொடியேற்றம், 8-ந்தேதி நாகல்நகர் புறப்பாடு நடைபெறுகிறது.

    அதனைத்தொடர்ந்து 15-ந் தேதி காலை 6 மணியளவில் பூக்குழி இறங்குதல், அன்று இரவு 8 மணியளவில் அம்மன் திருத்தேர் உலாவும், 16-ந் தேதி இரவு தசாவதாரம், 17-ந் தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுதல், 18-ந்தேதி அதிகாலையில் கொடியிறக்கம், அன்று இரவு ஊஞ்சல் உற்சவம், 19-ந் தேதி இரவு 7 மணியளவில் தெப்பஉற்சவம் நடைபெற்று திருவிழா நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சண்முக முத்தரசப்பன், பரம்பரை அறங்காவலர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் கட்டுமான பணிகள் முடியாததால் எளிமையாக ஆடித்திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையொட்டி வருகிற 24-ந் தேதி பூச்சாட்டுதல் நடக்கிறது.
    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் மிகவும் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். கோவிலின் உள்மண்டபம் பழுதடைந்த காரணத்தினால் கோவில் முழுவதும் இடிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கோவில் திருப்பணிகளுக்காக அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் இதுவரை சுமார் 40 சதவீதம் பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக, கோவில் எதிரே உள்ள மண்டபத்தில் உற்சவர் அம்மனுக்கு தினமும் அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. மூலவர் அம்மன் சிலை பத்திரமாக எடுத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா 20 நாட்களுக்கு மேல் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக பெரிய அளவில் இல்லாமல் மிகவும் எளிமையான முறையில் ஆடித்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி ஆடி மாதம் பிறக்க இன்னும் ஒருவாரமே உள்ளநிலையில், கோட்டை மாரியம்மன் கோவிலில் இந்தாண்டு ஆடித்திருவிழாவை நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் வருகிற 24-ந் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது.


    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் கட்டுமான பணிகள் பாதியில் நிற்பதை படத்தில் காணலாம்

    இதுகுறித்து சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் மாலா கூறியதாவது:-

    கோவிலில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தினால் கடந்தாண்டு மாதிரி இந்தாண்டும் எளிமையான முறையில் ஆடித்திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதாவது, கம்பம் நடுதல், உற்சவர் ஊர்வலம், பக்தர்களின் உருளுதண்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறாது. வருகிற 24-ந் தேதி கோவிலில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு தினமும் அபிஷேகம், பூஜைகள் நடைபெறும். அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7, 8, 9-ந் தேதிகளில் 3 நாட்கள் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்யலாம். 8-ந் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி வைக்க உள்ளோம்.

    கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெறும் ஆடித்திருவிழா மிகவும் பிரபலமானது. ஆனால் கட்டுமான பணிகள் நடப்பதால் மிக எளிமையாக நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. அடுத்த ஆண்டுக்குள் கோவிலில் திருப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு ஆடித்திருவிழா சிறப்பாக நடத்த அனைத்து விதமான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×