search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inscription"

    • அபிராமம் அருகே 15-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
    • இந்த கல்வெட்டு எழுத்தின் அமைப்பை வைத்து பார்க்கும்போது 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள கீழக்கொடு மலூரில் பழமையான எழுத்து பொறித்த கல்வெட்டு இருப்பதாக அந்த ஊரைச் சேர்ந்த கருப்புராஜா கொடுத்த தகவலின்பேரில், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன், மீனாட்சி சுந்தரம், ஸ்ரீதர் ஆகியோர் அங்கு சென்று கள ஆய்வு செய்தனர். அது விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு என்பது தெரிய வந்தது.

    இது குறித்து கள ஆய்வு செய்தவர்கள் கூறியதாவது:-

    இந்த கல்வெட்டு கீழக்கொடுமலூரில் வடக்கு பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் தேங்காய் உடைக்கும் படிக்கல்லாக இருந்து வந்துள்ளது. இதனால், கல்வெட்டின் மையப்பகுதி முற்றிலுமாக சிதைந்து காணப்படுகிறது.

    இந்த கல்வெட்டில் 9 வரிகள் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலான வரிகள் சிதைந்து விட்டது. அவற்றில் சில வரிகள் மட்டும் தெளிவாக தமிழ் எழுத்துகள் இருந்தன. அதில் அந்தராயம் உபயம், மேற்கு, காடு, உட்பட்ட நிலத்தில் பழந்தே அராய்ச்சியும் வெட்டிபாட்ட என்ற வார்த்தைகள் மட்டும் தெளிவாக தெரிகிறது.

    இவற்றை வைத்து பார்க்கும்போது கல்வெட்டில் ஆரம்பமும் முடிவும் இல்லாத ஒரு துண்டு கல்வெட்டில், ஊரின் பெயரும் திசையின் பெயரும் இடத்தின் பெயரும் இடம்பெற்று இருப்பதால், நிலத்தின் 4 எல்லையைக் குறிக்கும் விதமாகவும், அந்த நிலத்தை இறையிலியாக கொடுத்ததற்கான ஆதாரமாக உபயம் என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கிறது.

    மேலும், கல்வெட்டு இந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு விஜயநகர பேரரசு காலத்தில் நிவந்தம் கொடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த கல்வெட்டு எழுத்தின் அமைப்பை வைத்து பார்க்கும்போது 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மகாத்மா காந்தி சிலைக்கு சந்தன மாலை அணிவித்து அங்கு அமைக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்தார்.
    • விழாவில் பூதலூர் சரக வட்டார தொடக்க கல்வி அலுவலர் ரமாபிரபா கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடந்தது. இதில் பேரூராட்சி தலைவர் மெய்யழகன், செயல் அலுவலர் நெடுஞ்செழியன், துணைத் தலைவர் ரமணி, மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்கள், கலந்து கொண்டனர்.

    முன்னதாக திருக்காட்டுப்பள்ளி கடை வீதியில் புதுப்பிக்கப்பட்டு அமைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி சிலை, திருவள்ளுவ சிலை, தினமும் மணிக்கொருமுறை திருக்குறள் சொல்லும் புதிய கடிகாரம் அமைந்த மணிக்கூண்டு ஆகியவற்றை துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ திறந்து வைத்துமகாத்மா காந்தி சிலைக்கு சந்தன மாலை அணிவித்து அங்கு அமைக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்தார்.

    பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழாவில் ஒன்றிய குழு தலைவர் அரங்கநாதன், தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் பிரேமா, பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் மெய்யழகன், செயல் அலுவலர் நெடுஞ்செழியன், துணைத் தலைவர் ரமணி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    திருக்காட்டுபள்ளி தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில் பூதலூர் சரக வட்டார தொடக்க கல்வி அலுவலர் ரமாபிரபா கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

    தலைமையாசிரியர் முருகானந்தம், ஓய்வுபெற்ற தலைமைஆசிரியர் தங்கதிருஞானசம்பந்தம் மற்றும்பலர் கலந்து கொண்டனர்.

    • முதன்முறையாக யூதர் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
    • எழுத்தமைதியைக் கொண்டு இதை கி.பி.1200-1250க்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகக் கூறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் பழமையான கல்வெ ட்டு இருப்பதாக அந்த ஊரைச் சேர்ந்த சதீஷ் அளித்த தகவலின் பேரில் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு அதை படி எடுத்து ஆய்வு செய்தார். இதுபற்றி கல்வெட்டு ஆய்வாளர் ராஜகுரு கூறியதாவது:-

    சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு வாலாந்தரவை புல்லாணி என்பவரின் தந்தை கிணறு வெட்டுவதற்காக கடற்கரை பாறைக் கற்களை பெரியபட்டினத்திலிருந்து வாங்கி வந்துள்ளார். அதனுடன் கல்வெட்டு உள்ள இந்த கல்லும் வந்துள்ளது. துணி துவைக்கப் பயன்படுத்தியதால் இது வெளியில் கிடந்துள்ளது. 3 அடி நீளமும் 1 அடி அகலமும் கொண்ட இந்த கல் தூணில் 50 வரிகளில் 4 பக்கத்திலும் கல்வெட்டு உள்ளது. இது கி.பி. 13-ம் நூற்றாண்டைசேர்ந்த கல்வெட்டு ஆகும்.

    ஸ்வஸ்திஸ்ரீ எனத் தொடங்கும் கல்வெட்டில் சூதபள்ளியான ஐந்நூற்று வன் பெரும்பள்ளிக்கு தானமாக வழங்கப்பட்ட காணியாவதுக்கு (உரிமை நிலத்தின்) எல்லை சொல்லும்போது, அங்கிருந்த பள்ளிகள், நிலங்கள், தோட்டங்கள் குறிப்பிடப்படுகின்றன. கிழக்கு எல்லையில் வளைச்சேரி, முடுக்கு வழி சொல்லப்படுகிறது. தெற்கு எல்லையில் திருமுதுச்சோழசிலை செட்டியார், பதிநெண்பூமி செயபாலன், கூத்தன் தேவனார் ஆகியோரின் தோட்டங்களும், மேற்கு எல்லையில் நாலு நாட்டாநி சோணச்சந்தி, ஸ்ரீசோழப்பெருந்தெரு, தரிசப்பள்ளி மதிளி, பிழார் பள்ளி, தரிசாப்பள்ளி தென்மதில் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.

    நாலு நாட்டாநி என்ற சொல் நானாதேசி என்பதன் தமிழ் வடிவமாக உள்ளது. இங்கு ஐந்நூற்றுவர், பதிநெண்பூமி, நானாதேசி ஆகிய வணிகக்குழுக்களுக்குச் சொந்தமான இடங்கள், தோட்டங்கள் இருந்துள்ளன.

    பெரியபட்டினத்தில் சூதபள்ளி, தரிசப்பள்ளி, பிழார்பள்ளி ஆகிய பள்ளிகள் இருந்ததாக கல்வெட்டில் குறிப்பிடப்ப ட்டுள்ளது. சைவ, வைணவக் கோயில்கள் தவிர்த்த பிற மத வழிபாட்டிடங்கள் பள்ளி என அழைக்கப்பட்டுள்ளது.

    இதில் சூதபள்ளி என்பது யூதர்களின் பள்ளி ஆகும். தமிழில் 'ய' எனும் எழுத்து மேற்கத்திய மொழிகளில் 'ச' வாக திரியும். சூதபள்ளி என்பது யூதர்களின் பள்ளி ஆகும். ஐந்நூற்றுவர் எனும் வணிகக்குழுவினர் யூதர்களுக்கு பெரியபட்டி னத்தில் பள்ளி கட்டிக் கொடுத்துள்ளனர். பெரியபட்டினத்தில் இருந்த மரியம் என்ற யூதப் பெண்ணின் ஹீப்ரு மொழி கல்லறை கல்வெட்டு மத்திய தொல்லியல் துறையின் 1946-47ம் ஆண்டறிக்கையில் ஏற்கனவே குறிப்பிடப்ப ட்டுள்ளது.

    கேரளா மாநிலம் கோட்டயம் செப்பேடுகளில் குறிப்பிடப்படும் தரிசப்பள்ளி சிரியன் கிறிஸ்தவப்பள்ளியாகக் கருதப்படுகிறது. அதேபோல் வாலாந்தரவை கல்வெட்டிலும் தரிசப்பள்ளி குறிப்பிடப்படுகிறது. இதை பெரியபட்டினத்தில் இருந்த சிரியன் கிறிஸ்தவப்பள்ளி எனலாம்.

    மேலும் கல்வெட்டில் உள்ள பிழார்ப்பள்ளி என்ற சொல்லில் 'பி' என்ற எழுத்து இருந்த இடம் சேதமடைந்துள்ளது. ழ-ம வாகத் தேய்ந்துள்ளது. கல்வெட்டில் மார்ப்பள்ளி என உள்ளதை பிழார்ப்பள்ளி என படிக்கலாம்.

    பெரியபட்டினம் ஜலால் ஜமால் என்ற முஸ்லிம் பள்ளி பிற்காலப் பாண்டியர்களின் வெட்டுப் போதிகைகள், சதுரத் தூண்களுடன் கி.பி.13-ம் நூற்றாண்டு கட்டடக்கலை அமைப்பில் கடற்கரைப் பாறைகளால் கட்டப்பட்டுள்ளது.

    வாலாந்தரவை கல்வெட்டு, கட்டடக்கலை அமைப்பு மூலம் பெரியபட்டினம் ஜலால் ஜமால் பள்ளிதான் திருப்புல்லாணி கோவில் கல்வெட்டில் சொல்லப்படும் பிழார்ப்பள்ளி என்பதை உறுதிப்படுத்தலாம்.

    சோழநாட்டு வணிகர்கள் பெரியபட்டினத்தில் தங்கியிருந்த தெரு ஸ்ரீசோழப்பெருந்தெரு எனப்படுகிறது. தானமாக வழங்கிய நிலத்துக்கு காணி கல் வெட்டி நாட்டிக் கொள்ள சொல்லப்பட்டுள்ளது. இறையிலி, மனைவரி, பெரு நாங்கெல்லைக்கு ஆகிய சொற்களும், தொன்றுதொட்டு வரும் வழக்கம் என்ற பொருளில் பண்டாடு பழநடை என்ற சொல்லும் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. எழுத்தமைதியைக் கொண்டு இதை கி.பி.1200-1250க்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகக் கூறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • கலுங்கில் நீர் பங்கீட்டை வலியுறுத்தும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
    • கி.பி. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நீர் பங்கீடு முறை குறித்த கல்வெட்டு என்பதை அறிய முடிந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் வில்லூர் அருகே உவரி பெரிய கண்மாய் கலுங்கில் 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டறியப்பட்டது.

    வில்லூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலமுருகன் கொடுத்த தகவல்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளருமான முனீஸ்வரன் தலைமையில் வரலாற்று ஆர்வலர்கள் அனந்தகுமரன், தங்கப்பாண்டி, அஜய் ஆகியோர் உவரி பெரிய கண்மாயில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் உதவி பேராசிரியர் முனீஸ்வரன் கூறியதாவது:-

    உவரி பெரிய கண்மாய் கலுங்கில் 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டறியப்பட்டது. கண்மாய் நீர் நிரம்பி வெளியேறும் பளிங்கு பகுதியில் லிங்க வடிவத்தில் தனி தூணில் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்தது. இதை படி எடுத்து ஆய்வு செய்தபோது கி.பி. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நீர் பங்கீடு முறை குறித்த கல்வெட்டு என்பதை அறிய முடிந்தது.

    உவரி பெரிய கண்மாய் நீர் நிரம்பி வெளியேறும் கிழக்கு பகுதியில் லிங்க வடிவம் கொண்ட தனி தூண் கல்லில் 5 அடி உயரம், 1 அடி அகலம், 6 வரி எழுத்து பொறிக்கப்பட்டு இருந்தது. இதை ஆய்வு செய்தபோது முதல் 2 வரிகள் முற்றிலும் தேய்மானம் ஏற்பட்டு காணப்படுகிறது. காணியம் நீர் அளித்த பாணிக்கர் செய்த என்ற எழுத்து மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது.

    உவரி பெரிய கண்மாயில் இருந்து நீர் நிரம்பிய பிறகு அருகே உள்ள தென்னமநல்லூர், புளியங்குளம் கண்மாய்க்கு நீரோடை வழியாக செல்லும். இவ்வூர்க்கு நீரை பணிக்கர் என்ற இனக்குழுவினர் சரிபாதியாக பிரித்து கொடுக்கப்பட்டது என்பதை களல்வெட்டு மூலம் அறியலாம். தற்போது கண்மாயில் இருந்து கலுங்கு வழியாக மறுகால் பாய்ந்தாலும் ஒரே மாதிரியான நீர் வெளியேறும் கட்டுமானம் அமைந்து இருப்பது மற்றொரு சிறப்பு ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • மதுரை திருமலைநாயக்கர் வழங்கிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
    • வலையங்குளம் நாடக குழுவினரை பாராட்டி வழங்கப்பட்டது.

    திருமங்கலம்

    திருப்பரங்குன்றம் வட்டம் வலையங்குளம் கிராமத்தில் மன்னர் திருமலை நாயக்கர் வழங்கிய "திருமலை மெச்சினார்" என்ற பெயர் கொண்ட கல்வெட்டு கண்டறியப்பட்டது.

    வலையங்குளத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் வேல்முருகன் இங்கு பழமையான கல்வெட்டு இருப்பதாக கொடுத்த தகவலின்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளருமான முனீஸ்வரன் தலைமையில் மாணவர்கள் அஜித்குமார், தினேஷ்குமார், சூரிய பிரகாஷ் , தர்மர் ஆகியோர் கொண்ட குழுவினர் கள ஆய்வு செய்தனர்.

    அப்போது வலையங்குளம் கண்மாய் கரை அருகில் விநாயகர் கோவில் முன்பு திருமலை மெச்சினார் என்ற பெயர் பறைச்சாற்றும் கல்வெட்டு கண்டறியப்பட்டது. இதை படி எடுத்து ஆய்வு செய்த போது 312 ஆண்டுக்கு முன்பு சேர்ந்தது என்பதை அறிய முடிந்தது. இதுகுறித்து உதவி பேராசிரியர் முனீஸ்வரன் கூறியதாவது:-

    தமிழரின் தொன்மையான கலைகளில் ஒன்று நாடகம். கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால் நாடகம் என பெயர் பெற்றது. குறிப்பாக தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களின் தமிழ் நாடகக்கலை பற்றிய சான்றுகள் உள்ளது.

    மதுரையை ஆண்ட நாயக்கர்கள் கி.பி. 1526 முதல் 1736 வரை நிர்வாகத்திலும் கலாச்சாரத்திலும் சிறப்பு பெற்று விளங்கினர். திருமலை நாயக்கர் ஆட்சி காலம் பொற்காலம். இவர் திருவிழா மற்றும் கலாச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். குறிப்பாக வலையங்குளம் பகுதியில் திருவிழா காலத்தில் 98 நாட்கள் தொடர்ச்சியாக புராணம் மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் நாடகம் நடைபெறுவது வழக்கம்.

    வலையங்குளத்தை சேர்ந்த நாடகக் குழுவினர் திருப்பரங்குன்றம் கோவில் ராஜ வீதியில் வீர அபிமன்யு சுந்தரி நாடகம் நடத்தினர். திருமலை நாயக்கர் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வருகை தந்த போது நாடகத்தை பார்த்து வியந்தார். நாடகக்குழுவினரை அழைத்து பாராட்டி "திருமலை மெச்சினார்" என்ற சிறப்பு பட்டமாக தன் கையால் செம்பு பட்டயம், 64 உப்பில்லா கட்டிகள் வழங்கினார்.

    மேலும் குதிரை தன் ஆட்சி பகுதி எல்லையில் ஓட விட்டு அந்த குதிரை நிற்குமிடம் வரை நிலத்தில் விளையும் பொருட்களில் ஒரு பங்கு நாடக குழுவினருக்கு வழங்கும்படி கட்டளையிட்டார். குதிரை ஓடிய இடத்தை எல்லையாக குறிக்கப்பட்ட பகுதி தற்போது குதிரை குத்தி என்று அழைக்கப்படுகிறது.

    வலையங்குளம் கண்மாய் அருகே ராணி மங்கம்மாள் சாலையின் ஓரமாக ஆலமரத்தின் அடியில் 3 அடி நீளம் 2 அடி அகலம் 10 வரிகள் கொண்ட தனி கருங்கல்லில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தோம். இதை படி எடுத்து ஆய்வு செய்தோம்.

    இதில் சாலிய வாகன சகாப்தம் 1710 வருடம் 15 திங்கட்கிழமை பூரண நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் வலையங்குளத்தில் இருக்கும் திருமலை மெச்சினார் பெருமை பெற்ற நாடகக்கலை சங்கமறிய விநாயகர் கோவிலுக்கு திருப்பணி செய்து கட்டி கும்பாபிஷேகம் செய்தது, திருமலை மெச்சன் உபயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மூலம் திருமலை மெச்சினார் வம்சம் வலையங்குளம் விநாயகர் கோவிலுக்கு திருப்பணிகள் செய்ததை அறியமுடிகிறது. தற்போது வரை வலையங்குளத்தில் மட்டுமல்ல சுற்றி இருக்கின்ற கிராமத்தில் நடக்கும் விசேஷங்களில் திருமலை மெச்சினார் வம்சத்திற்கு தனி மரியாதை உண்டு.

    தொடர்ந்து தொன்று தொட்டு 5-வது தலைமுறையாக வலையங்குளத்தில் முதல் நாள் நாடகம் திருமலை மெச்சினார் நாடகக் குழுவினர் தான் அரங்கேற்றி வருகின்றனர்.தற்போது தான் 428-வது நாடகம் நடைபெற்றது. தமிழகத்தில் அதிகமான நாட்களில் நாடகம் நடக்கும் இடம் வலையங்குளம் என்பது மற்றொரு சிறப்பு.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×