search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flight service"

    • இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.
    • இன்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 64 இருக்கைகள் உடைய சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது.

    இந்தியாவில் இருந்து இலங்கையில் உள்ள கொழும்பு விமான நிலையத்திற்கு மட்டுமே விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன.

    இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்திலும் விமான நிலையம் உள்ளது. ஆனால் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவைகள் இல்லாத நிலை இருந்தது.

    இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும், யாழ்ப்பாணத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து விமான சேவையை நடத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகள் வைத்தன.

    இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது. வாரத்தில் மூன்று நாட்கள் அந்த விமான சேவைகள் இருந்தன. அலையன்ஸ் ஏர் நிறுவனம் சிறிய விமானங்களை இயக்கி வந்தது.

    இதற்கிடையே கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவு பரவியது. இதைத்தொடர்ந்து சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

    தற்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவு குறைந்து சகஜ நிலைக்கு திரும்பி உள்ளதால் சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.

    ஏற்கனவே விமான சேவைகளை இயக்கி வந்த அலையன்ஸ் ஏர் நிறுவனம், சென்னை- யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவைகளை தொடங்கி உள்ளது.

    இன்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 64 இருக்கைகள் உடைய சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. முதல் நாள் என்பதால் இன்று மிகவும் குறைவான பயணிகளாக 12 பேர் மட்டுமே சென்றனர். முதல் விமானம் காலை 10.15 மணிக்கு தாமதமாக யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டு சென்றது.

    வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்பட்டு இருந்த யாழ்ப்பாணத்திற்கான விமான சேவைகள், தற்போது திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய 4 நாட்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    காலை 9.25 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த விமானம், காலை 10.50 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் சென்றடைகிறது. மீண்டும் காலை 11.50 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு பகல் 1.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வருகிறது.

    சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவை தொடங்கி உள்ளதால், சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். மேலும் இலங்கையில் அதிகமாக வசிக்கும் தமிழ் மக்களுக்கும், இந்த விமான சேவைகள் பெரும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    • யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு முதல் சர்வதேச விமானம் சென்னையில் இருந்து வந்து தரையிறங்கியது.
    • தற்போதுள்ள ஓடுபாதையில் 75 இருக்கை கொண்ட விமானங்களை மட்டுமே கையாள முடியும் என்று அமைச்சர் கூறினார்.

    கொழும்பு:

    இலங்கையின் வடக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமானங்களை இயக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறுவதுடன், நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் உதவியாக இருக்கும்.

    இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய ஆதாரமாக சுற்றுலாத்துறை விளங்குகிறது. எனினும், 2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்று பரவி, சுற்றுலாத் துறையை கடுமையாக முடக்கியது. அத்துடன், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று.

    தற்போது யாழ்ப்பாணத்தின் பலாலியில் இருந்து இந்தியாவுக்கான விமானங்கள் விரைவில் இயக்கப்படும், அநேகமாக டிசம்பர் 12ம் தேதிக்குள் விமான சேவை தொடங்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா தெரிவித்தார். ஓடுபாதையை விரிவாக்கம் செய்யும் பணிகள் செய்யவேண்டியிருப்பதாகவும், தற்போதுள்ள ஓடுபாதையில் 75 இருக்கை கொண்ட விமானங்களை மட்டுமே கையாள முடியும் என்றும் அவர் கூறினார்.

    இந்த விமான நிலையம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என 2019ல் பெயர் சூட்டப்பட்டது. முதல் சர்வதேச விமானம் சென்னையில் இருந்து வந்து தரையிறங்கியது. 2019ல் இந்தியா மற்றும் இலங்கை இணைந்து இந்த விமான நிலையத்தை மறுசீரமைப்பு செய்தது. முன்னதாக, இந்தியாவின் அலையன்ஸ் நிறுவனம், சென்னையில் இருந்து பலாலிக்கு வாரந்தோறும் மூன்று விமானங்களை இயக்கியது.

    2019 நவம்பரில் இலங்கையின் ஆட்சிமாற்றத்திற்குப் பின்னர், விமான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • திருச்சியிலிருந்து கண்ணூருக்கு புதிய விமான சேவை தொடங்கப்பட உள்ளது
    • டிசம்பர் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது

    திருச்சி:

    திருச்சியிலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, பகரீன், இலங்கை உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, புதுடெல்லி, ஹைதராபாத், பெங்களூர், உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் உள்நாட்டு விமான சேவைகளை அதிகரிக்கும் விதமாக இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் புதிய விமான சேவையாக கேரள மாநிலம் கண்ணூருக்கு புதிய விமான சேவை இயக்கப்பட உள்ளது.

    இந்த விமான சேவையானது தினம் தோறும் மாலை 3.40 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு மாலை 6:45 மணிக்கு கண்ணூர் விமான நிலையத்தை அடையும் எனவும் கண்ணூர் விமான நிலையத்திலிருந்து இரவு07.05 மணிக்கு புறப்பட்டு இரவு10.05 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும் என தெரியவருகிறது. இந்த சேவை டிசம்பர் மாதத்திலிருந்து தொடங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுவதாக விமான நிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே திருச்சியிலிருந்து கொச்சிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் சார்பில் விமான சேவை இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கொழும்பிலிருந்து திருச்சிக்கு தனியார் நிறுவனம் புதிய விமான சேவை தொடங்கப்படுகிறது
    • இந்த மாதம் முதல் வாரத்தில் 3 நாள் இயக்கப்படுகிறது

    திருச்சி:

    சர்வதேச நாடுகளில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருப்பதால் விமான போக்குவரத்து மீண்டும் புத்துயர்வு பெற்று வருகிறது. திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வாரத்தில் 7 முறை கொழும்பிலிருந்து திருச்சிக்கு விமான சேவையை வழங்கி வருகிறது.

    இந்த நிலையில் சுற்றுலா பயணிகளிடம் திருச்சி- கொழும்பு விமான சேவை மிகுந்த வரவேற்பை பெற்று வரும் நிலையில் ஸ்ரீலங்காவை சேர்ந்த பிட்ஸ் ஏர் என்ற புதிய தனியார் ஏர்லைன் நிறுவனம் முதல் சேவையாக கொழும்பு திருச்சிக்கு இடையே விமான போக்குவரத்தை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த விமானம் நடப்பு மாதத்தில் கடைசி வாரத்தில் இருந்து வாரத்தில் 3 நாட்கள் இயக்க இருக்கின்றார்கள்.

    ஏற்கனவே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் குவைத்,தோகா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ரியாத் ஆகிய நாடுகளுக்கு விமான சேவை வழங்கி வருகிறது. இதனைப் பின்பற்றி இந்த தனியார் நிறுவனமும் விமான சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

    அடுத்து வரக்கூடிய கோடை கால அட்ட வணையில் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை வழங்க அந்த தனியார் நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக திருச்சி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கோடைகால விமான சேவை 2023 மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கப்பட உள்ளது அது மட்டும் அல்லாமல் மதுரையில் இருந்து கொழும்பு நகருக்கு விமான சேவை வழங்கவும் மேற்கண்ட நிறுவனம் உத்தேசித்துள்ளது.

    இதற்கிடையே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் குளிர் காலம் நெருங்கி விட்டதால் வருகிற 31 -ம் தேதி முதல் மேலும் வாரத்தில் 7 முறை கூடுதலாக திருச்சியில் இருந்து கொழும்புக்கு விமானங்களை இயக்க உள்ளது. இதனால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் புதிய பிட்ஸ் ஏர் ஆகிய நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சென்னையில் இருந்து பெங்களூருக்கு தற்போது தினமும் 9 விமானங்களும், பெங்களூருலிருந்து சென்னைக்கு 9 விமானங்களுமாக ஒரு நாளுக்கு 18 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
    • சென்னையில் இருந்து மைசூருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மட்டும் ஒரு புறப்பாடு, ஒரு வருகை இரு சேவைகளை இயக்கி வருகிறது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் கொரோனா கட்டுப்பாடு தளர்வுக்கு பின்னர் பயணிகள் எண்ணிக்கை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. தொடர்ந்து உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் மும்பையை தலைமையிடமாக வைத்து ஆகாசா ஏர் விமான நிறுவனம் மும்பை, அகமதாபாத் ஆகிய இடங்களுக்கு புதிய விமான சேவைகளை தொடங்கி உள்ளது. அந்த நிறுவனம் தற்போது சென்னையையும் மையமாக வைத்து அதிகமான உள்நாட்டு விமான சேவைகளை இயக்க முடிவு செய்துள்ளது.

    சென்னையில் இருந்து பெங்களூருக்கு தற்போது தினமும் 9 விமானங்களும், பெங்களூருலிருந்து சென்னைக்கு 9 விமானங்களுமாக ஒரு நாளுக்கு 18 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    இனிமேல் 22 விமான சேவைகளாக அதிகரிக்கின்றன. இதனால் பயணிகளுக்கு கூடுதல் விமான சேவை வசதிகள் கிடைக்கும்.

    இதேபோல் இந்த மாதம் 15-ந் தேதியில் இருந்து மாலை 6:10 மணிக்கு மும்பையில் இருந்து புறப்படும் ஆகாசா ஏர் விமானம் இரவு 7:55 மணிக்கு சென்னை வந்து சேர்கிறது. அதன்பின்பு அதே விமானம் மீண்டும் இரவு 8:50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, இரவு 10:45 மணிக்கு மும்பை சென்றடைகிறது.

    இதுவரை சென்னை மும்பை இடையே 19 புறப்பாடு விமானங்கள்,19 வருகை விமானங்கள் மொத்தம் 38 விமானங்கள் உள்ளன. அது இனிமேல் 40 விமானங்களாக அதிகரிக்கப்படுகிறது.

    வருகிற 26-ந் தேதியில் இருந்து ஆகாசா ஏர் விமானம், சென்னையில் இருந்து கொச்சிக்கும், கொச்சியில் இருந்து சென்னைக்கும் தினசரி விமானங்களை புதிதாக இயக்குகிறது.

    மாலை 5 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானம், மாலை 6 மணிக்கு கொச்சி சென்றடைகிறது. மாலை 6:15 மணிக்கு கொச்சியிலிருந்து புறப்படும் விமானம் இரவு 7:15 மணிக்கு சென்னை வந்தடையும்.

    சென்னை கொச்சி இடையே இதுவரை தினமும் 4 புறப்பாடு, 4 வருகை, தினமும் 8 விமான சேவைகள் உள்ளன. இனிமேல் இது 10 விமான சேவைகளாக அதிகரிக்கப்படுகிறது.

    இதேபோல் சென்னையில் இருந்து மைசூருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மட்டும் ஒரு புறப்பாடு, ஒரு வருகை இரு சேவைகளை இயக்கி வருகிறது. சென்னை-மைசூரு, மைசூரு-சென்னை இடையே பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், தற்போது அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் புதிதாக சென்னை-மைசூரு-சென்னை இடையே விமான சேவைகளை தொடங்கி உள்ளது.

    வாரத்தில் 3 நாட்கள் இந்த சேவைகள் இயக்கப்படுகின்றன. ஞாயிறு, புதன், மற்றும் வெள்ளி ஆகிய 3 தினங்களில் இந்த விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. காலை 9:25 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, காலை 11 மணிக்கு மைசூரு சென்றடைகிறது. பின்பு மைசூரில் இருந்து காலை 11:30 க்கு அதே விமானம் புறப்பட்டு பகல் ஒரு மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேருகிறது. இந்த விமானம் ஏ.டி.ஆர் எனப்படும் சிறிய ரக விமானம் ஆகும். 74 பயணிகள் வரை இதில் பயணிக்கலாம். இதில் சலுகை கட்டணமாக ஒரு வழி பயணத்திற்கு ரூ.4,678 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமான சேவைகள் அதிகரித்துள்ளது பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    இதற்கிடையே சென்னையில் இருந்து மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விமான கட்டணம் வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது.

    சென்னையில் இருந்து மும்பைக்கு-ரூ.9ஆயிரம், பெங்களூரு-ரூ.6.500, டெல்லி-ரூ.9500, கொல்கத்தா-ரூ.8 ஆயிரம் கட்டணமாக உள்ளது.

    இதேபோல் சென்னையில் இருந்து மதுரை, கோவை, தூத்துக்குடிக்கு ரூ.6 ஆயிரம் வரை விமான கட்டணமாக இருக்கிறது.

    • சென்னை விமான நிலைய பகுதியிலும் நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை சூறைக்காற்றுடன் மழை கொட்டியது.
    • மழை ஓய்ந்ததும் அதன் பின்னர் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது. விமான நிலைய பகுதியிலும் நேற்று இரவு 10 மணிமுதல் இன்று அதிகாலை 4 மணி வரை சூறைக்காற்றுடன் மழை கொட்டியது.

    இதனால் நேற்று இரவு திருச்சியில் இருந்து சென்னைக்கு 68 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் தரை இறங்க முடியாமல், வானில் தொடா்ந்து வட்டமடித்து கொண்டிருந்தது.

    இதைப்போல் ஐதராபாத்தில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், டெல்லியில் இருந்து வந்த விஸ்தாரா மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள், வாரணாசி,மங்களூரில் இருந்து வந்த இண்டிகோ ஏன்லைன்ஸ் விமானங்கள் மற்றும் மலேசியாவிலிருந்து வந்த மலேசியன் ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா ஆகிய 2 விமானங்களும், தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானம் உட்பட 12 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்டநேரமாக வானிலே வட்டமடித்துக் கொண்டிருந்தன.

    இரவு 11.50 மணிக்கு 286 பயணிகளுடன் ஜொ்மன் நாட்டின் பிராங்க்பாா்ட் நகரில் இருந்து வந்த லுப்தான்ஷா ஏா்லைன்ஸ் விமானம் சென்னையில் தரையிறங்க வந்தது. மழை, சூறைக்காற்று காரணமாக தரையிறங்க முடியாமல் ஐதராபாத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

    நள்ளிரவு 12 மணிக்கு மேல் மழை ஓய்ந்ததும் அதன் பின்னர் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின.

    அதிகாலை 2.10 மணிக்கு மும்பையில் இருந்து சென்னை வந்த ஏா் இந்தியா விமானம் பெங்களூருக்கும், அதிகாலை 2.20 மணிக்கு தோகாவிலிருந்து வந்த கத்தாா் ஏா்லைன்ஸ் விமானம் ஐதராபாத்திற்கும், அதிகாலை 2.40 மணிக்கு துபாயில் இருந்து வந்த எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம், பெங்களூருக்கும் திருப்பி அனுப்பப்பட்டன.

    இதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சிங்கப்பூர், துபாய், பக்ரைன், தோகா, உட்பட சர்வதேச விமானங்கள், டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, புனே, உட்பட 6 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 15 புறப்பாடு விமானங்கள், சென்னையில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

    சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவில் பெய்த திடீர் சூறைக்காற்று, இடி மின்னல் மழை காரணமாக மொத்தம் 31 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

    ×