என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூறைக்காற்றுடன் பலத்த மழை- சென்னையில் 31 விமான சேவை பாதிப்பு
    X

    சூறைக்காற்றுடன் பலத்த மழை- சென்னையில் 31 விமான சேவை பாதிப்பு

    • சென்னை விமான நிலைய பகுதியிலும் நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை சூறைக்காற்றுடன் மழை கொட்டியது.
    • மழை ஓய்ந்ததும் அதன் பின்னர் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது. விமான நிலைய பகுதியிலும் நேற்று இரவு 10 மணிமுதல் இன்று அதிகாலை 4 மணி வரை சூறைக்காற்றுடன் மழை கொட்டியது.

    இதனால் நேற்று இரவு திருச்சியில் இருந்து சென்னைக்கு 68 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் தரை இறங்க முடியாமல், வானில் தொடா்ந்து வட்டமடித்து கொண்டிருந்தது.

    இதைப்போல் ஐதராபாத்தில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், டெல்லியில் இருந்து வந்த விஸ்தாரா மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள், வாரணாசி,மங்களூரில் இருந்து வந்த இண்டிகோ ஏன்லைன்ஸ் விமானங்கள் மற்றும் மலேசியாவிலிருந்து வந்த மலேசியன் ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா ஆகிய 2 விமானங்களும், தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானம் உட்பட 12 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்டநேரமாக வானிலே வட்டமடித்துக் கொண்டிருந்தன.

    இரவு 11.50 மணிக்கு 286 பயணிகளுடன் ஜொ்மன் நாட்டின் பிராங்க்பாா்ட் நகரில் இருந்து வந்த லுப்தான்ஷா ஏா்லைன்ஸ் விமானம் சென்னையில் தரையிறங்க வந்தது. மழை, சூறைக்காற்று காரணமாக தரையிறங்க முடியாமல் ஐதராபாத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

    நள்ளிரவு 12 மணிக்கு மேல் மழை ஓய்ந்ததும் அதன் பின்னர் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின.

    அதிகாலை 2.10 மணிக்கு மும்பையில் இருந்து சென்னை வந்த ஏா் இந்தியா விமானம் பெங்களூருக்கும், அதிகாலை 2.20 மணிக்கு தோகாவிலிருந்து வந்த கத்தாா் ஏா்லைன்ஸ் விமானம் ஐதராபாத்திற்கும், அதிகாலை 2.40 மணிக்கு துபாயில் இருந்து வந்த எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம், பெங்களூருக்கும் திருப்பி அனுப்பப்பட்டன.

    இதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சிங்கப்பூர், துபாய், பக்ரைன், தோகா, உட்பட சர்வதேச விமானங்கள், டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, புனே, உட்பட 6 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 15 புறப்பாடு விமானங்கள், சென்னையில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

    சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவில் பெய்த திடீர் சூறைக்காற்று, இடி மின்னல் மழை காரணமாக மொத்தம் 31 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

    Next Story
    ×