search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Firecrackers Explosion"

    • நாங்கள் கிருஷ்ணகிரி, காந்தி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு ஓட்டல் நடத்தி வருகிறோம்.
    • காந்தி சாலை ஓட்டலில் இருந்து உணவுப்பொருட்கள் இங்கு எடுத்து வருவோம்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி, பழையபேட்டை நேதாஜி சாலையில் பட்டாசு குடோனில் கடந்த 29-ந் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில், 9 பேர் பலியாகினர். இந்த விபத்திற்கு பட்டாசு குடோன் அருகில் ஓட்டலில் சிலிண்டர் வெடித்ததே காரணம் என தடயவியல் நிபுணர்கள் கூறி இருந்தனர்.

    இந்த நிலையில் விபத்து குறித்து விசாரிக்க சிப்காட் நில எடுப்பு பிரிவின் தனி மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி, சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது 1884 வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    பட்டாசு குடோன் விபத்து நடந்த இடத்தில் அதிகாரி பவணந்தி தலைமையிலான அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள். அப்போது விபத்தில் இறந்த ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரியின் மகள் சரண்யா, மருமகள் வினிதா ஆகியோர் விபத்துக்கு சிலிண்டர் வெடிப்பு காரணம் இல்லை என மனுவை அளித்தனர்.

    பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் கிருஷ்ணகிரி, காந்தி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு ஓட்டல் நடத்தி வருகிறோம். தற்போது கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை, போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் வியாபாரம் குறைந்தது. இதையடுத்து பழையபேட்டையில் ஒரு ஓட்டல் கடை தொடங்கினோம்.

    காந்தி சாலை ஓட்டலில் இருந்து உணவுப்பொருட்கள் இங்கு எடுத்து வருவோம். அவசர தேவைக்கு டீ, ஆம்லெட் போடுவதற்கு கியாஸ் சிலிண்டர் அடுப்புகளை பயன்படுத்துவோம். விபத்தில் ராஜேஸ்வரிக்கு சிறு தீக்காயம் கூட ஏற்படவில்லை சிலிண்டர்களை வெடிக்காத நிலையில் எடுத்துள்ளார்கள். ஆனால் ஓட்டல் சிலிண்டர் வெடித்ததாக கூறுகிறார்கள்.

    இது தொடர்பாக அதிகாரிகளே விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு கூற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கண்ணீருடன் கூறினார்கள்.

    • பட்டாசு குடோன் வெடிவிபத்தில் 9 பேர் பலியானார்கள். 15-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
    • நியமனம் செய்யப்பட்டுள்ள 30 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு சென்ற விசாரணை அலுவலர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த 29-ந் தேதி காலை பட்டாசு குடோனில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 9 பேர் பலியானார்கள். 15-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, தமிழக கவர்னர் ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பிரதமரும், முதல்-அமைச்சரும் விபத்தில் பலியானவர்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் நிவாரண நிதி உதவி அறிவித்துள்ளார்கள்.

    இந்த நிலையில் விபத்து தொடர்பாக நீது விசாரணை நடத்திட (கிரிமினல் ப்ரொசீஜர் கோட் 21-ன்படி) சிறப்பு கூடுதல் மாவட்ட நிர்வாக நீதிபதியாக குருபரப்பள்ளி சிப்காட் நிலம் எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தியை நியமித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு உத்தரவிட்டுள்ளார்.

    நியமனம் செய்யப்பட்டுள்ள 30 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு சென்ற விசாரணை அலுவலர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும் விபத்து நடந்த இடத்தின் அருகில் வசிக்கக்கூடிய குடியிருப்புவாசிகளிடமும், கடைகளின் உரிமையாளர்களிடமும் விபத்து குறித்து கேட்டறிந்து அதை எழுத்துபூர்வமாக பதிவு செய்து வருகிறார்கள்.

    இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை கலெக்டரிடம் அவர்கள் தாக்கல் செய்ய உள்ளனர்.

    • ஆலையில் வெடி மருந்து தயாரிக்கும் கூடமானது சிறிய கட்டிடத்தில் இயங்கி வந்தது.
    • வெடி விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து வெடி சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே பூங்குடி கிராமத்தில் கோவிலூரை சேர்ந்த வைரமணி (வயது 44) என்பவர் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். கோவில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வாண வேடிக்கைக்கு வெடிகள் மற்றும் நாட்டு வெடிகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

    இந்த ஆலையில் வெடி மருந்து தயாரிக்கும் கூடமானது சிறிய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த கட்டிடத்தில் நேற்று 7 பேர் வெடிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் இந்த கட்டிடத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வெடிகள் வெடித்து சிதறின. இதில் அங்கு பணியாற்றிய 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் தீக்காயத்தில் அலறி துடித்தனர். இதற்கிடையே வெடி விபத்தில் வெடிகள் நாலாபுறமும் வெடித்து சிதறின. இந்த பயங்கர சத்தம் அக்கம் பக்கம் கிராமங்கள் வரை கேட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    தீக்காயமடைந்து கிடந்தவர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்து வரவழைத்தனர். புதுக்கோட்டை, சிப்காட் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.

    வெடி விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து வெடி சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு வெடிகளாக வெடித்தபடி இருந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்த இடத்தின் அருகே செல்ல முடியவில்லை. இதனிடையே வெடி விபத்து நடந்த இடத்தின் அருகே தைல மரக்காடுகள் உள்ளன. இதிலும் தீப்பற்றி எரிந்தது. இதில் ஏற்பட்ட தீயையும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். வெடி விபத்து நடந்த இடத்திலும் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

    இந்த விபத்தில் கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. மேலும் கட்டிடத்தில் இருந்த வெடி பொருட்கள் சிதறின. தீயணைப்பு கருவிகள் தூக்கி வீசப்பட்டு கட்டிடத்தின் வெளிப்பகுதியில் கிடந்தன. தண்ணீர் நிரப்பப்பட்ட டிரம்கள் சிதறி கிடந்தன.

    தீக்காயமடைந்தவர்களுக்கு பட்டாசு ஆலை உரிமையாளர் வைரமணி உள்ளிட்ட 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த வெடி விபத்து தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி விபத்திற்கான காரணம் என்ன? முதலில் தீ எங்கு பிடித்தது, வெடி விபத்து ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த சில வாரங்களாக ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • மருந்துகள் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து நிகழ்ந்தது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியை சேர்ந்தவர் ரகு (வயது40). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சாத்தூர் அருகே உள்ள ராமலிங்காபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    கடந்த சில வாரங்களாக ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆலை உரிமையாளர் ரகு மற்றும் அவரது உறவினர் முகேஷ்(20) ஆகியோர் கடந்த 6-ந்தேதி இரவு விதிகளை மீறி பட்டாசு ஆலை வெளியே பேன்சி ரக வெடிகளை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

    அப்போது மருந்துகள் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து நிகழ்ந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடிக்க தொடங்கின. இந்த வெடி விபத்தில் ரகு, முகேஷ் ஆகியோர் உடல் கருகினர். விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பநாயக்கன்பட்டி போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பேரையும் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு ஆபத்தான நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பட்டாசு ஆலை உரிமையாளர் ரகு, முகேஷ் ஆகியோர் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

    • சேலம் அருகே சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் கந்தசாமி என்பவர் பட்டாசு ஆலை வைத்து நடத்தி வந்தார்.
    • சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பிரபாகரன், மோகனா ஆகியோர் உயிரிழந்தனர்.

    சேலம்:

    சேலம் அருகே சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் கந்தசாமி என்பவர் பட்டாசு ஆலை வைத்து நடத்தி வந்தார். இந்த ஆலையில் கடந்த 1-ந்தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இதில் உடல் கருகி கந்தசாமி மகன் சதீஷ்குமார் தொழிலாளர்கள் நடேசன், பானுமதி ஆகியோர் பலியானார்கள்.

    பலத்த காயம் அடைந்த 6 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பிரபாகரன், மோகனா ஆகியோர் உயிரிழந்தனர்.

    இந்தநிலையில் நேற்று மகேஸ்வரி (32) என்பவர் இறந்தார். இதையடுத்து பட்டாசு ஆலை வெடி விபத்தில் இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • பட்டாசு ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
    • பட்டா சாலையில் பங்குதாரர்களான கந்தசாமி, வீரமணி, மகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டியை சேர்ந்தவர்கள் கந்தசாமி (வயது 63), வீரமணி (54), சடையாண்டி ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி மகேஸ்வரி (40). இவர்கள் பங்குதாரராக சேர்ந்து பூத நாச்சியார் கோவில் பின்புறம் பட்டாசு தயாரிக்கும் ஆலை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 10-க்கும் மேற்பட்டோர் இந்த ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் சதீஷ்குமார் (41), நடேசன் (50), பானுமதி (60) ஆகியோர் உடல் சிதறி பலியாகினர். மேலும் காயமடைந்த மோகனா (38), வசந்தா (45), மகேஸ்வரி (34), மணிமேகலை (36), பிரபாகரன் (30), பிருந்தா (28) ஆகியோர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இவர்களை நேற்று சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அரசு அறிவித்த தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். மேலும் இறந்து போன 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் காசோலையையும் வழங்கினார்.

    இந்த நிலையில் பட்டா சாலையில் பங்குதாரர்களான கந்தசாமி, வீரமணி, மகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர். மகேஸ்வரிக்கு காயம் அதிக அளவில் இருந்ததால் போலீஸ் பாதுகாப்புடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கந்தசாமி மற்றும் வீரமணியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிரபாகரன் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இருந்தார்.

    இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களில் மகேஸ்வரி நிலமை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
    • சிறுவனுக்கு கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

    தருமபுரி:

    தருமபுரி அருகே நடுப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் ரித்திக் (வயது15). இந்த சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

    நேற்று வீட்டின் அருகே வெடிக்காமல் கிடந்த ஒரு பட்டாசை எடுத்துள்ளார். அதனை தீ வைத்து பற்ற வைத்துள்ளார். அப்போது சரியாக வெடிக்கவில்லை என்று தவறாக நினைத்து பட்டாசை சிறுவன் கையில் எடுத்தபோது திடீரென்று வெடித்தது.

    இதில் சிறுவனுக்கு கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து மதிகோண்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
    • பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    சென்னை:

    சிவகாசி அருகே ஊராம்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் , உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஊராம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் குமரேசன், சுந்தர்ராஜ் மற்றும் அய்யம்மாள் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இருளாயி என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

    உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் இருளாயிக்கு 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    • வெப்பம் காரணமாக மருந்துகள் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது.
    • விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் கடற்கரை. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஊராம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. 20-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த ஆலையில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதே பகுதியை சேர்ந்த இருளாயி (வயது48), குமரேசன்(30), அய்யம்மாள்(54), சுந்தர்ராஜ்(27) ஆகியோர் ஒரு அறையில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது வெப்பம் காரணமாக மருந்துகள் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பரவி பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கியது. இதில் 2 அறைகள் தரைமட்டமானது. விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

    தொடர்ந்து பட்டாசு விபத்தில் உடல் கருகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 பேரும் மீட்கப்பட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிறிது நேரத்திலேயே 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் உள்ள 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து தொடர்பாக மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு கடையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் செந்தில்குமார் என்பவர் பலியானது குறிப்பிடத்தக்கது. சிவகாசி பகுதியில் தொடர்ந்து அடுத்தடுத்து பட்டாசு வெடி விபத்துக்கள் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×