search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Excavation"

    • 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கான ஆயத்த பணிகள் தொடக்கங்கப்பட்டது.
    • தமிழகத்தில் இருந்து கடல் வழியாக வாணிபம் செய்ததற்கான சான்றுகளும் இந்த ஆராய்ச்சியில் கிடைத்தன.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட விஜயகரிசல்குளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தன.

    இதில் பழங்கால சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள், சுடுமண்ணால் ஆன தொங்கட்டான், பகடைக்காய் உள்ளிட்ட 3,254 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

    மேலும் விஜயகரிசல் குளத்தில் சங்கு வளையல் தயாரிப்பு கூடம் இருந்த தற்கான சாத்தியக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இருந்து கடல் வழியாக வாணிபம் செய்ததற்கான சான்றுகளும் இந்த ஆராய்ச்சியில் கிடைத்தன. அத்தோடு முதற்கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் முடிவடைந்தன.

    தமிழர்களின் நாகரீகம் மற்றும் பழமைகள் குறித்து மேலும் கண்டறிய வெம்பக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வுப்பணி நடத்தப்பட வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதன் அடிப்படையில் 2-ம் கட்ட அகழாய்வு பணியை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகள் நேற்று தொடங்கின.

    அகழ்வாரா ய்ச்சிக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சுத்தம் செய்யும் பணியும், குழிகள் தோண்டுவதற்கு அளவீடு செய்யும் பணி போன்றவை நடந்து வருகிறது.

    • கடந்த 2 மாதங்களாக நடந்துவரும் இந்த அகழாய்வில் வரலாற்று கால தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டது.
    • கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மைகள், சூடுமண்ணாலான பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வடக்குப்பட்டு ஊராட்சியில் உள்ள நத்தமேடு பகுதியில் அகழாய்வு பணி தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் கடந்த ஜூலை மாதம் 3-ந் தேதி தொடங்கப்பட்டது. கடந்த 2 மாதங்களாக நடந்துவரும் இந்த அகழாய்வில் வரலாற்று கால தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அகழாய்வு பணியானது தொல்லியல் மேட்டின் தென்கிழக்கு பகுதியில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த பகுதியில் வண்ணம் பூசிய பானை ஓடுகள் மற்றும் குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள், ரோமானிய பானை ஓடுகள் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் 1½ கிராம் தங்கத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள் 2 கிடைத்துள்ளது.

    மேலும் கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மைகள், சூடுமண்ணாலான பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளது. அகழாய்வு குறித்து தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து கூறும்போது, நத்தமேடு தென்கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வு பணியில் கிடைத்த பொருட்கள் 4 ஆயிரம் ஆண்டுகள் முதல் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்களாக இருக்கலாம் என அவர் கூறினார்.

    • ஆதிச்சநல்லூரை பொறுத்தவரை இதுவரை 5-க்கும் மேற்பட்ட தொல்லியல் அகழாய்வுகள் நடந்துள்ளது.
    • கிராமங்களில் உள்ள கோவில்களில் கல்வெட்டுகளை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

    செய்துங்கநல்லூர்:

    தாமிரபரணி நதிக்கரையோரப்பகுதிகளில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளது.

    இந்த பகுதிகளில் அனைத்தும் தற்போது தொல்லியல் வரலாறுகளில் முக்கியப்பகுதிகளாக உள்ளது. குறிப்பாக ஆதிச்சநல்லூரில் தான் இந்தியாவிலேயே முதன் முதலில் அகழாய்வு பணிகள் நடந்தது.

    ஆங்கிலேய ஆய்வாளர் அலெக்சாண்டர் ரியா என்பவர் ஆதிச்சநல்லூர், கொற்கை உள்பட 38 இடங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் தொல்லியல் இடங்கள் உள்ளதாகவும், அதில் 21 இடங்கள் இறந்தவர்களை புதைக்கப்பயன்படுத்திய பரம்பு பகுதிகளாகவும், 17 இடங்கள் மக்கள் வாழந்ததை உறுதிப்படுத்தும் வாழ்விடப்பகுதிகளாக இருந்தாகவும் அவரது அறிக்கைகளிலும், குறிப்புகளிலும் கூறியுள்ளார்.

    ஆதிச்சநல்லூரை பொறுத்தவரை இதுவரை 5-க்கும் மேற்பட்ட தொல்லியல் அகழாய்வுகள் நடந்துள்ளது. இதில் மத்திய அரசு சார்பில் மூன்று முறையும் தமிழக தொல்லியல் துறை சார்பில் 2 முறையும் நடந்தது. பலமுறை வெளிநாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்களும் இந்த பகுதியில் ஆய்வுப் பணிகள் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் தான் கடந்த வருடம் தமிழக அரசு தொல்லியல் ஆய்வாளர் தங்கதுரை தலைமையில் ஒரு குழுவினரை கொண்டு பாபநாசத்தில் இருந்து புன்னக்காயல் வரை தாமிரபரணி நதி பாயும் பகுதியின் இருபுறமும் உள்ள கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டு எந்தெந்த கிராமங்களில் தொல்லியல் அடையாளங்கள் உள்ளது என்பதை அறிக்கையாக சமர்பிக்கும்படி தெரிவித்திருந்தது.

    அதன் பணிகள் கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக நடந்து வரும் நிலையில் தற்போது அந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது கிராமங்களில் உள்ள கோவில்களில் கல்வெட்டுகளை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

    இதற்கிடையில் பாபநாசம் தொடங்கி தாமிபரணி ஆறு கடலில் கலக்கும் புன்னக்காயல் வரை 100-க்கும் மேற்பட்ட தொல்லியல் இடங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதில் அதிக அளவில் வாழ்விடப்பகுதிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    ஏற்கனவே தாமிரபரணிக்கரை நாகரீகம் மிகவும் தொன்மையான நாகரீகம் என்பதை சிவகளை அகழாய்வின் அறிக்கைகள் மூலம் வெளி உலகத்திற்கு கொண்டு வந்தது. தற்போது இந்த கள ஆய்வும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

    தொடர்ந்து கள ஆய்வுப்பணிகள் நிறைவு பெற்றவுடன் இதனை தமிழக அரசு அறிக்கையாக விரைவில் வெளியிடும் என்று தெரிவித்துள்ளது.

    • ஆதிச்சநல்லூர் அகழாய்வில் இதுவரையிலும் ஒரு மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழியே கண்டறியப்பட்டு உள்ளது.
    • கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த 3 பேர் கொண்ட குழுவினரும் ஆதிச்சநல்லூருக்கு வந்தனர்.

    தூத்துக்குடி:

    மத்திய தொல்லியல் துறை மண்டல இயக்குனர் அருண்ராஜ் தலைமையிலான குழுவினர் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆதிச்சநல்லூர் பரும்பு, பாண்டியராஜா கோவில் அருகில், கால்வாய் ரோடு, புளியங்குளம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 8 பிரிவுகளாக அகழாய்வு செய்யப்படுகிறது.

    இங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள், இரும்பாலான ஆயுதங்கள், தங்கத்தாலான காதணி, நெற்றிப்பட்டயம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சங்ககால மக்களின் வாழ்விட பகுதிகளும் கண்டறியப்பட்டது.

    இந்த நிலையில் ஆதிச்சநல்லூர் தாமிரபரணி ஆற்றங்கரையில் பாண்டியராஜா கோவில் அருகில் தொல்லியல் துறையினர் 8 இடங்களில் குழிகள் தோண்டி அகழாய்வு செய்தனர். அவற்றில் ஒரு குழியில் 2 மூடிகளுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் அருகில் சில மண்பாண்ட பொருட்களும் இருந்தன.

    ஆதிச்சநல்லூர் அகழாய்வில் இதுவரையிலும் ஒரு மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழியே கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது 2 மூடிகளுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது தொல்லியல் ஆய்வாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    2 மூடிகளுடன் கூடிய முதுமக்கள் தாழியை தொல்லியல் துறையினர் திறந்து ஆய்வு செய்தனர். அதில் மனித மண்டை ஓடு, கை, கால் எலும்புகள் போன்றவை இருந்தன.

    இதற்கிடையே, மகாராஷ்டிர மாநிலம் புனே டெக்கான் கல்லூரி மானுடவியல் துறை ஆய்வாளர் வீனா முன்சீப், ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த மனித எலும்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மனித எலும்புகளை ஆய்வகத்துக்கு எடுத்து சென்று சோதனை நடத்தி, அவற்றின் தொன்மையை உறுதி செய்ய முடியும் என்று தெரிவித்தார்.

    இதேபோன்று கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த 3 பேர் கொண்ட குழுவினரும் ஆதிச்சநல்லூருக்கு வந்தனர். இங்கு அகழாய்வில் கிடைத்த உலோக பொருட்களின் வகைகள், அவற்றின் கலந்துள்ள தனிமங்கள், தொன்மையை கண்டறிவதற்காக 'லாண்டா' என்ற கருவி மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.

    • அகழாய்வில் வேலைபாடுகளுடன் கூடிய சுடுமண் பொம்மை கண்டுபிடிக்கப்பட்டது.
    • கலைத்திறன் மற்றும் தொன்மையையும் அறிய முடிகிறது என்று இப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பேசினர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16-ந் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகிறது.

    வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து மேற்கொள்ளப்பட்ட மேற்பறப்பு அகழாய்வின் மூலம் இந்த தொல்லியல் மேட்டில் நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளன.

    இங்கு அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தமிழக அரசு இங்கு அகழாய்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வெம்பக்கோட்டை அகழாய்வு பணியில் அவ்வப்போது பல்வேறு பொருட்கள் கிடைத்த நிலையில் இதற்கு முன்பு சுடு களிமண்ணால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய குடுவை மற்றும் யானைத்தந்தத்தினால் செய்யப்பட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கழுத்தில் அணியப்பட்ட பதக்கம், புகைக்கும் குழாய், அழகிய வேலைபாடுகளுடன் கூடிய தங்க அணிகலன் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டறிப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து பழங்காலத்தில் பண்டைய கால மக்கள் கலை ஆர்வத்தை அறிந்து கொள்ளும் வகையில் நுனுக்கமான வேலைப்பாடுகள் அடங்கிய சுடு மண்ணால் செய்யப்பட்ட அழகிய ஆண் பொம்மை கண்டறியப்பட்டுள்ளது. இது அமர்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பொம்மையின் தலை கிடைக்கவில்லை. இங்கு நடக்கும் அகழாய்வு பணியின் போது பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்து வருகிறது.

    இதன் மூலம் இந்த பகுதியில் வாழ்ந்த மனிதர்கள் கலைநயம் மிக்கவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது. இந்த பொருட்கள் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திற்குட்பட்ட பொருளாக இருக்கும் என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர். அடுத்தடுத்து பல கலைநயம் மிக்க பொருட்கள் கண்டறியப் படுவது இந்த பகுதியின் கலைத்திறன் மற்றும் தொன்மையையும் அறிய முடிகிறது என்று இப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பேசினர்.

    • அகழாய்வில் கண்ணாடி வளையல்கள், பாசிமணிகள் உள்ளிட்ட 1,700-க்கும் மேற்பட்ட அரிய வகையான பொருட்கள் கிடைத்துள்ளன.
    • மண்பாண்டகளாக பயன்படுத்தப்பட்ட ஓடுகள் குவியல் குவியலாக கிடைத்தது.

    விருதுநகர்:

    சிவகாசி அருகே அகழாய்வில் 11-வது குழி தோண்டும் பணி தொடங்கியது. இங்கு குவியல் குவியலாக மண்பாண்ட பொருட்கள் கிடைத்தன.

    சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் அகழாய்வு பணிகள் கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 10 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டன. இதில் ஏராளமான கண்ணாடி வளையல்கள், பாசிமணிகள், புகைபிடிக்கும் கருவிகள், யானை தந்தம், சுண்ணாம்பு நிரப்பப்பட்ட பெரிய அளவிலான பானைகள், சிறிய அளவிலான 20-க்கும் மேற்பட்ட மண்குடங்கள் உள்ளிட்ட 1,700-க்கும் மேற்பட்ட அரிய வகையான பொருட்கள் கிடைத்துள்ளன. இந்தநிலையில் நேற்று புதிதாக 11-வது அகழாய்வு குழி தோண்டப்பட்டது. அதில் ஏராளமான மண்பாண்டகளாக பயன்படுத்தப்பட்ட ஓடுகள் குவியல் குவியலாக கிடைத்தது.

    வேலைபாடுகளுடன் கூடிய மண்பாண்ட பொருட்கள், மண்குடங்கள், அதிக அளவில் கிடைத்ததை பார்க்கும்பொழுது பண்டைய காலத்தில் மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலை பிரதானமாக செய்து இருக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் வீட்டின் சுவர் பகுதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் சமையலறையும், சமையலறை பாத்திரமும் சேதமடையாமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இங்கு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    ×