search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆதிச்சநல்லூரில் 2 மூடிகளுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு
    X

    ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட 2 மூடிகளுடன் கூடிய முதுமக்கள் தாழியை காணலாம்

    ஆதிச்சநல்லூரில் 2 மூடிகளுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

    • ஆதிச்சநல்லூர் அகழாய்வில் இதுவரையிலும் ஒரு மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழியே கண்டறியப்பட்டு உள்ளது.
    • கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த 3 பேர் கொண்ட குழுவினரும் ஆதிச்சநல்லூருக்கு வந்தனர்.

    தூத்துக்குடி:

    மத்திய தொல்லியல் துறை மண்டல இயக்குனர் அருண்ராஜ் தலைமையிலான குழுவினர் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆதிச்சநல்லூர் பரும்பு, பாண்டியராஜா கோவில் அருகில், கால்வாய் ரோடு, புளியங்குளம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 8 பிரிவுகளாக அகழாய்வு செய்யப்படுகிறது.

    இங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள், இரும்பாலான ஆயுதங்கள், தங்கத்தாலான காதணி, நெற்றிப்பட்டயம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சங்ககால மக்களின் வாழ்விட பகுதிகளும் கண்டறியப்பட்டது.

    இந்த நிலையில் ஆதிச்சநல்லூர் தாமிரபரணி ஆற்றங்கரையில் பாண்டியராஜா கோவில் அருகில் தொல்லியல் துறையினர் 8 இடங்களில் குழிகள் தோண்டி அகழாய்வு செய்தனர். அவற்றில் ஒரு குழியில் 2 மூடிகளுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் அருகில் சில மண்பாண்ட பொருட்களும் இருந்தன.

    ஆதிச்சநல்லூர் அகழாய்வில் இதுவரையிலும் ஒரு மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழியே கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது 2 மூடிகளுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது தொல்லியல் ஆய்வாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    2 மூடிகளுடன் கூடிய முதுமக்கள் தாழியை தொல்லியல் துறையினர் திறந்து ஆய்வு செய்தனர். அதில் மனித மண்டை ஓடு, கை, கால் எலும்புகள் போன்றவை இருந்தன.

    இதற்கிடையே, மகாராஷ்டிர மாநிலம் புனே டெக்கான் கல்லூரி மானுடவியல் துறை ஆய்வாளர் வீனா முன்சீப், ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த மனித எலும்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மனித எலும்புகளை ஆய்வகத்துக்கு எடுத்து சென்று சோதனை நடத்தி, அவற்றின் தொன்மையை உறுதி செய்ய முடியும் என்று தெரிவித்தார்.

    இதேபோன்று கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த 3 பேர் கொண்ட குழுவினரும் ஆதிச்சநல்லூருக்கு வந்தனர். இங்கு அகழாய்வில் கிடைத்த உலோக பொருட்களின் வகைகள், அவற்றின் கலந்துள்ள தனிமங்கள், தொன்மையை கண்டறிவதற்காக 'லாண்டா' என்ற கருவி மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.

    Next Story
    ×