search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chithirai festival"

    • சித்திரை பெருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 6.30 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடைபெறுகிறது.
    • 2-ம் நாளான நாளை காலை 8 மணிக்கு மேல் பல்லக்கில் விநாயகர் புறப்பாடும், மாலை 6.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் விநாயகர் புறப்பாடும் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி நடப்பட்டது.

    இந்த நிலையில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு சந்திரசேகரர் பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.

    முன்னதாக, கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் பல்லக்கில் எடுத்து வந்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் அடுத்த மாதம் (மே) 1-ந்தேதி காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெறுகிறது.

    கொடியேற்ற விழாவில் அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், ரெங்கராஜ், முருகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சித்திரை பெருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 6.30 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடைபெறுகிறது.

    2-ம் நாளான நாளை (செவ்வாய்கிழமை) காலை 8 மணிக்கு மேல் பல்லக்கில் விநாயகர் புறப்பாடும், மாலை 6.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் விநாயகர் புறப்பாடும் நடைபெறுகிறது.

    3-ம் நாளான 19-ந்தேதி காலை 8 மணிக்கு பல்லக்கில் விநாயகர் புறப்பாடும், மாலை 6.30 மணிக்கு மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் புறப்பாடும் நடைபெற உள்ளது.

    4-ம் நாளான 20-ந்தேதி காலையில் விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மாலையில் மேஷ வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பாடு நடக்கிறது.

    இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து வரும் நாட்களில் நாள்தோறும் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகளுடன் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. மே 1-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவின் கடைசி நாளான மே 4-ந்தேதி தீர்த்தவாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது.

    • குலசேகரன்பட்டினம் வீரமனோகரி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • தொடர்ந்து கொடிமரத்துக்கு சந்தனம் உட்பட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெறும்.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் வீரமனோகரி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினம் வடக்கூர் வீர மனோ கரிஅம்மன் கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் வருடம் தோறும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டா டப்படும். இந்த ஆண்டு திருவிழா வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு தொடங்குகிறது. தொடர்ந்து கொடி மரத்துக்கு சந்தனம், பன்னீர், குங்குமம் ,விபூதி, இளநீர் உட்பட பல்வேறு வகையான அபிஷே கங்களும், தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெறும்.

    திருவிழா தொடங்கியதை யொட்டி தினசரி காலை யிலும், மாலையிலும் சுவாமி எழுந்தருளி தெருவீதி உலா வருகின்ற நிகழ்ச்சியும், 10-ம் திருநாளான 23-ந் தேதி அன்று திருவிழா நிறைவு பூஜை நடைபெறும். திருவிழா வில் ஆயிர க்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் வீரபாகு வல்லவராயர் செய்து வருகிறார்.

    • வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் வசிக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சித்திரை திருவிழாவுக்காக ஊர்திரும்புவார்கள்.
    • திரு விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்து சமய அறநிலை யத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தகோவிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாதம் நடைபெறும்.

    இதில் தேனி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மேலும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் வசிக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சித்திரை திருவிழாவுக்காக ஊர்திரும்புவார்கள்.

    அக்னிசட்டி, ஆயிரம் கண்பானை, பால்குடம், காவடி என பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். மே மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுவதால் சிறுவர் சிறுமிகளை மகிழ்விக்கும் வண்ணம் ராட்டிணம் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெற்று வருகிறது.

    இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற ஏப்.18ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் பக்தர்கள் மஞ்சள் காப்பு அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கோவிலில் கம்பம் நடுதல், பல்லக்கில் வீதி உலா, அம்மன் புறப்பாடு, தேரோட்டம் ஆகியவை மே 5ந் தேதி முதல் 16ந் தேதி வரை நடைபெறுகிறது. திரு விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள்-சேரகுல வல்லி தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    குலசேகர ஆழ்வார் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பெருமாள் திருமொழி என்ற பகுதியை பாடியுள்ளார். குலசேகர ஆழ்வார் மன்னராக இருந்த போதிலும், பெருமாள் மீது கொண்டிருந்த பக்தி காரணமாக தனது ஒரே மகளான சேரகுலவல்லியை ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு திருமணம் செய்து வைத்தார்.

    அன்று முதல் சேரகுலவல்லி, ரெங்கநாதரின் நாயகிகளில் ஒருவராக வணங்கப்பட்டு வருகிறார். இவருக்கு பெரிய சன்னதியின் 2-ம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தின் மேற்கு பகுதியில் சன்னதி உள்ளது. குலசேகர ஆழ்வார், சேரகுலவல்லியை பெருமாளுக்கு ராமநவமி நாளில் திருமணம் செய்து கொடுத்ததாக ஐதீகம். இதனால், ஆண்டுதோறும் ராமநவமி அன்று ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள்-சேரகுலவல்லி தாயார் திருக்கல்யாண உற்சவம் எனப்படும் சேர்த்தி சேவை நடைபெறும். இந்த ஆண்டு ராமநவமி உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 7.30 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைந்தார். பின்னர், சேரகுலவல்லி தாயாருடன் காலை 9 மணி முதல் காலை 11 மணிவரை சேர்த்தி சேவை கண்டருளினார்.

    அங்கிருந்து பிற்பகல் 3 மணிக்கு அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு வசந்த மண்டபம் சென்றடைந்தார். பின்னர் இரவு 9.15 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
    ஸ்ரீரங்கம் கோவிலில் ராமானுஜரின் திருநட்சத்திர பெருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உடையவர் சன்னதியில் ஸ்ரீமத் ராமானுஜர் 1002-வது திருநட்சத்திர பெருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் உபன்யாசம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ராமானுஜரின் 1002-வது திருநட்சத்திர தினமான நேற்று உற்சவர் ராமானுஜர் காலை 6.30 மணிக்கு 4 சித்திரைவீதிகளில் உலா வந்தார். பின்னர் ராமானுஜர் சன்னதி முன் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். மதியம் 2 மணியளவில் பெருமாளிடம் இருந்து கொண்டு வரப்பட்ட வஸ்திரங்கள் மற்றும் மாலைகளால் ராமானுஜருக்கு உச்சாத்து அலங்காரம் நடைபெற்றது.

    பின்னர் கோஷ்டி பூஜை நடைபெற்றது. மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை பொதுஜன சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர்குழு தலைவர் வேணுசீனிவாசன். இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர், அறங்காவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர். 
    மதுரை வந்த கள்ளழகரை மூன்றுமாவடியில் பக்தர்கள் எதிர்சேவை கொண்டு வரவேற்றனர். இந்த எதிர்சேவை நிகழ்ச்சியை காண ஏராளமானோர் திரண்டு நின்றனர்.
    மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை காணவும், மண்டூக மகரிஷிக்கு சாபவிமாசனம் அளிக்கவும் அழகர்மலையில் இருந்து கள்ளழகர் மதுரை வரும், வைகை ஆற்றில் எழுந்தருளுவதும் சிறப்பு வாய்ந்த ஒன்று.

    ஆண்டுதோறும் கோலா கலமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் மதுரையில் திரள்வது உண்டு.

    இந்த ஆண்டும் விழா தொடங்கியது முதல் மதுரை நகரில் மக்கள் குவிய தொடங்கினர். நேற்று அழகர்மலையில் இருந்து கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் புறப்பட்டது முதல் அவரது பின்னால் தொண்டர்படையாக பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது. கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் துள்ளலாட்டம் போட்டு அழகரின் முன்பு வலம் வந்தனர். வழிநெடுக பல்வேறு மண்டகப்படிகளிலும் அழகருக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப் பதி, சுந்தரராஜன்பட்டி வழியாக மதுரை நகருக்கு வரும் கள்ளழகர் இன்று காலை 6 மணிக்கு மூன்று மாவடி வந்தார். அங்கு அவரை பக்தர்கள் எதிர் கொண்டு வரவேற்றனர். இந்த எதிர்சேவை நிகழ்ச்சியை காண ஏராளமானோர் திரண்டு நின்றனர்.

    கள்ளழகர் வீதிஉலா வந்த போது அவருக்கு முன்னால் ஏராளமான உண்டியல்கள் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன. அவற் றில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். இன்று இரவு 9 மணிக்கு கள்ளழகர் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் எழுந்தருளுகிறார். அங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண் டாள் சூடிகொடுத்த மங்கல மாலை மற்றும் பொருட் களை அணிந்து கொள்கிறார்.

    இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து நேற்று இரவு ஆண்டாளுக்குரிய விசே‌ஷ மாலை, கிளி, புதுவஸ்திரம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் சிறப்பு வழிபாடுக்கு பின்னர் மதுரைக்கு புறப்பட்டது.

    இந்த மங்கல பொருட்களை சூடிக்கொள்ளும் கள்ளழகர் நாளை (வெள்ளிக் கிழமை) அதிகாலை 3 மணிக்கு தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் ஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.

    பின்னர் அங்கிருந்து தங்ககுதிரை வாகனத்தில் புறப்பட்டு காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார்.
    சித்திரை திருவிழா தேரோட்டத்தின் போது பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற உள்ளதால் கூடுதலாக 3,700 போலீசாரை பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று டி.ஜி.பி.க்கு மதுரை கலெக்டர் கடிதம் எழுதியுள்ளார். #LSPolls
    மதுரை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் மதுரையில் காலை சித்திரை திருவிழா தேரோட்டமும், மாலை கள்ளழகர் எதிர்சேவையும் நடைபெறுவதால் மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தலை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    இது தொடர்பாக கலெக்டர் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்திலும் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலை வேறு தேதிக்கு நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

    இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன், மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    அதில், வழக்கமாக ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழாவின் போது 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    இந்த ஆண்டு சித்திரை திருவிழா தேரோட்டத்தின் போது பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. எனவே கூடுதலாக 3,700 போலீசாரை பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. #LSPolls #MaduraiConstituency
    கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடைபெற உள்ளதால் தேனி தொகுதி வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என அனைத்து கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #ParliamentElection #Theniconstituency
    தேனி:

    17-வது மக்களவை தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதம் 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மதுரை சித்திரை திருவிழாவின் தேரோட்டம் நடைபெற உள்ளதால் வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

    அதேபோல் தேனி தொகுதியிலும் வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என அனைத்து கட்சி பிரதிநிதிகளும் மாவட்ட கலெக்டர், பல்லவி பல்தேவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவிக்கையில், மதுரையை போலவே தேனி மாவட்டத்திலும் சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவிலில் ஏப்ரல் 19-ந் தேதி சித்ரா பவுர்ணமி விழா நடைபெறுகிறது.

    இதற்காக முதல் நாளே தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். இதனால் வாக்குப்பதிவு பாதிக்கப்படும். 2 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின்போது பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள். இரு மாநில எல்லையில் இக்கோவில் அமைந்துள்ளதால் பிரச்சினையை தவிர்க்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இதுபோன்ற சூழ்நிலையில் தேர்தல் நடைபெற்றால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். எனவே தேனி பாராளுமன்ற தேர்தல் தேதியை ஒத்திவைக்க வேண்டும் என்றனர்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    சித்ரா பவுர்ணமி விழா 19-ந் தேதிதான் நடக்கிறது. அதற்கு முதல் நாளான 18-ந் தேதி வாக்குப்பதிவு முடிந்து விடும். எனவே அதற்கும் தேர்தலை தள்ளி வைப்பதற்கும் சம்பந்தம் இருப்பதாக ஏற்றுக்கொள்ள முடியாது. இருந்தபோதும் அனைத்து கட்சியினர் தெரிவித்த கருத்துக்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் இதுகுறித்து பரிசீலனை செய்து உரிய முடிவு எடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #ParliamentElection #Theniconstituency

    ×