search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cemetery"

    திருவாரூர் மாவட்டம் ஆப்பரக்குடி கிராமத்தில் மயானத்திற்கு பாதை இல்லாததால் பிணத்தை வயல்கள் வழியாக தூக்கி செல்லும் மக்கள் பெருந்துன்பப்பட்டு வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் ஆப்பரக்குடி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆதியன் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கான மயானமானது ஆப்பரக்குடியில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக வயல் வெளிகளுக்கு நடுவே உள்ளது .

    இந்த நிலையில் ஊரில் யாரேனும் உயிரிழந்தால் அப்பகுதி மக்கள் இறந்தவர்களை நினைத்து துயர படுகிறார்களோ இல்லையோ இந்த சடலத்தை மயானத்துக்கு தூக்கிச் செல்ல நாம் என்ன பாடுபட வேண்டும் என்ற கவலை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. அந்த அளவுக்கு பயணத்துக்கான பாதை இல்லாமல் ஆப்பரக்குடி குடிமக்கள் பெருந்துன்பப்பட்டு வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் யாரேனும் உயிரிழந்தால் அவரது பிரேதத்தை வயல் வழியாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்துச் செல்கின்றனர் அப்பொழுது பிரேதம் பலமுறை வயலில் விழுந்தும் அல்லது வயல்களுக்கு நடுவில் உள்ள வாய்க்காலில் விழுந்தும் பல சிரமங்களை தாண்டி தான் மயானத்துக்கு செல்ல வேண்டி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    நேற்று அப்பகுதியை சேர்ந்த அய்யனார் என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது உடலை தூக்கி கொண்டு சென்ற இறுதி ஊர்வலமானது விவசாயிகளும் , விவசாய தொழிலாளர்களும் பாடுபட்டு வளர்த்த சம்பா பயிரின் நடுவே சென்றது. பிணத்தை தூக்கி சென்ற பலரும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் என்பதால் இறந்த அய்யனாருக்காக வருந்துவதா? அல்லது தாங்கள் வளர்த்த பயிர்கள் தங்கள் காலிலேயே மிதிபடு வதைக் கண்டு வருந்துவதா? என்று வேதனைப்பட்டு கொண்டே விளைநிலங்களில் இறங்கி மயானத்துக்கு சென்றனர்.

    இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தோம். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர் . உடனடியாக மயானத்துக்கு செல்வதற்கு உரிய பாதை அமைத்து தர வேண்டும் என்பது உயிரோடு உள்ள எங்களின் கோரிக்கை மாத்திரமல்ல , இடுகாட்டை நோக்கிப் பயணிக்கும் பல ஆத்மாக்களின் கோரிக்கை என்கின்றனர், ஆப்பரக்குடி பொதுமக்கள்.

    சுடுகாட்டுக்கு பாதை கேட்டு மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்திட மார்க்சிஸ்டு கம்யூ. கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பாகூர்நெட்டப்பாக்கம் கொம்யூன் குழு கூட்டம் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தமிழ்மாநில குழு உறுப்பினர் பெருமாள், கொம்யூன் செயலாளர் தமிழ்செல்வன், பிரதேசக்குழு உறுப்பினர்கள் கலியன், இளவரசி உள்ளிட்டு கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    பாகூர் கொம்யூனில் குருவிநத்தம் பெரியார் நகர் மக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. தற்போது தென்பெண்ணையாற்றின் கரையோரம் அவ்வப்போது எழும் சர்ச்சைகளுக்கு இடையே சவ அடக்கம் செய்யப்படுகிறது. இவர்களுக்கு நிரந்தர சுடுகாடு இல்லை.

    குருவிநத்தம், சோரியாங்குப்பம், இருளன்சந்தை ஆகிய 2 கிராம பஞ்சாயத்தில் சுமார் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். இப்பகுதி மக்கள் தென்பெண்ணையாற்றின் சிறுகரையில்தான் சவ அடக்கம் செய்கிறார்கள். ஆற்றைக் கடந்துதான் சவ அடக்கம் செய்ய வேண்டியுள்ளது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட தரைப்பாலம் வெள்ளப் பெருக்கால் காணாமல் போய்விட்டது. அதனைத் தொடர்ந்து புதியதாக அமைக்கப்பட்ட பாலம் 2017 நவம்பரில் பெய்த கன மழையால் அடித்து செல்லப்பட்டு விட்டது. இதனால் சவ அடக்கம் செய்வதற்கு ஆற்றுக்குள் இறங்கி போக வேண்டியுள்ளது. மழைக்காலங்களில் சவ அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

    ஆற்றின் குறுக்கே புதிய தரமான பாலம் கட்டித் தந்திட வேண்டும். சுடுகாட்டில் மின்விளக்கு, குடிநீர் இணைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவும் வலியுறுத்தி கிராமங்களில் மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்திடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    மாநில அரசும், சம்மந்தப்பட்ட துறையும் தலையிடாத பட்சத்தில் சுடுகாடு வசதி கேட்டு மக்கள் பங்கேற்போடு போராட்டத்தை நடத்திடவும் முடிவெடுத்துள்ளது.

    நடப்பு பட்ஜெட்டில் 100 நாள் வேலைத்திட்டத்தில் 10 லட்சம் மனித வேலைநாட்கள் உருவாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 15 நாட்கள் மட்டும் வேலை கிடைக்கும். மத்திய, மாநில அரசுகள் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நிதியை குறைத்து வேலை நாட்களையும் குறைத்து வருகிறது.

    இதனால் கிராமப்புற வறுமை, ஒழிப்பு, பிழைப்புக்காக புலம் பெயருதலை தடுத்தல் ஆகிய நோக்கம் சிதைக்கபட்டு விடும். ஆகவே, மத்திய, மாநில அரசுகள் 65 ஆயிரம் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் அடிப்படையில் 65 லட்சம் மனித வேலை நாட்களை உருவாக்கவும், அதற்கான நிதி ஒதுக்கவும் வேண்டும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×