search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bakrid festival"

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு பக்ரீத்தொழுகை நடத்தப்பட்டது.
    ஈரோடு:

    இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த இறைத் தூதர் இப்ராகிமின் தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் உன்னத நாள் தான் பக்ரீத் திருநாள் ஆகும்.

    இறைவனின் அருளை பெறுவதற்காக அனைத்தையும் தியாகம் செய்யும் உயர்ந்த எண்ணத்தை விதைக்கும் நன்னாளாகவும் இந்நாள் விளங்குகிறது.

    இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் அவர்கள் பகுதிக்கு உட்பட்ட பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையில் ஈடுப்பட்டனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் இன்று பக்ரீத் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதிகாலையிலயே எழுந்து குளித்து, புத்தாடைகள் அணிந்து பள்ளிவாசல்களுக்கு சென்று சிறப்பு தொழுகைகளில் ஈடுப்பட்டனர்.

    பக்ரீத்தையொட்டி ஆட்டை பலியிட்டு அதை மூன்று பங்குகளாக பிரித்து ஒரு பங்கை ஏழைகளுக்கு கொடுத்தனர். இரண்டாவது பங்கை உறவினர்களுக்கு கொடுத்தனர். மூன்றாவது பங்கை தங்களுக்கு வைத்து கொண்டனர்.

    ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் ஈரோடு மாவட்ட அரசு காஜி முகமது கிபாயத்துல்லா தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    இதே போன்று ஈரோடு மாநகரில் உள்ள ஜானகியம்மாள் லே-அவுட் பள்ளிவாசல்,புது மஜித் வீதியில் உள்ள சுல்தான் பேட்டை பள்ளிவாசல், அசோகபுரம் , திருநகர் காலனி, கே.எஸ்.நகர், சம்பத்நகர், டவுண் போலீஸ் நிலையம் எதிரே உள்ள பள்ளிவாசல், மரப்பாலம், ரெயில்வே காலனி, முத்தம்பாளையம், திண்டல் புதுகாலனி, பெரிய அக்ரஹாரத்தில் உள்ள ஈத்கா மைதானம் என மாநரில் உள்ள 43 பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

    இதே போன்று சத்தியமங்கலத்தில் உள்ள போட்டு வீராம்பாளையத்தில் 1,500 இஸ்லாமியர்கள் பங்கேற்ற சிறப்பு தொழுகை நடந்தது. அந்தியூர் பர்கூர் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகையும் நடந்தது. புளியம்பட்டி மெயின் ரோட்டில் உள்ள பெரிய பள்ளிவாசல், சின்ன பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

    இதே போன்று பெருந்துறை, கோபி, அம்மாபேட்டை, மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 250 பள்ளிவாசல்களிலும் , 42 ஈத்கா மைதானத்திலும் சிறப்பு தொழுகை நடந்தது.

    கொடுமுடியில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.

    இதனையொட்டி ஈரோடு- கரூர் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள மசூதியில் இருந்து ஹஸ்ரத் முகமது யாசின், ஹஸ்ரத் சாதிக் பாட்சா தலைமையில் முத்தவல்லி அபுபக்கர் முன்னிலையில் இஸ்லாமியர்கள் ஊர்வலமாக சென்றனர்.

    ஊர்வலம் கொடுமுடி பழைய பஸ் நிலையம் வழியாக சென்று சுல்தான் பேட்டையில் உள்ள சுல்தான் மாகல்லா பள்ளிவாசலுக்கு வந்தனர். பள்ளிவாசல் பின்புறம் அமைந்துள்ள மண்டபத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    பக்ரீத் பண்டிகையையொட்டி கோபியில் முஸ்லிம்கள் பங்கேற்ற ஊர்வலம் இன்று நடந்தது. ஈரோடு- சத்தி மெயின் ரோட்டில் உள்ள பெரிய பள்ளி வாசல் முன்பு இந்த ஊர்வலம் தொடங்கியது.

    கடை வீதி, மார்க்கெட் வழியாக சென்ற இந்த ஊர்வலம் ஈத்கா பள்ளி வாசலில் முடிவடைந்தது. அங்கு முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு பக்ரீத்தொழுகை நடத்தப்பட்டது.

    பெருந்துறையில் குன்னத்தூர் ரோட்டில் உள்ள மஜித் வீதியில் உள்ள மசூதியிலும். இதேபோல் புதிய மசூதியிலும் இன்று முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

    பெருந்துறை சிப்காட் தொழில் பேட்டையில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களில் பெரும் பாலோனோர் முஸ்லிம்கள் ஆவார்கள்.

    இவர்களும் இன்று பக்ரீத்தையொட்டி சிறப்பு தொழுகை நடத்த திரண்டனர். ஆனால் மசூதியில் போதிய இடம் இல்லாததால் இந்த 2 மசூதியிலும் ஷிப்டு முறையில் முஸ்லீம்கள் தொழுகை நடத்தினர்.

    ஒரு ஷிப்டுக்கு 1000 பேர் என அவர்கள் சிறப்பு பக்ரீத் தொழுகையில் ஈடுபட்டனர்.  #tamilnews
    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தஞ்சையில் ஆத்துபாலம் அருகே உள்ள ஜிம்மா பள்ளிவாசலில் அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது.

    தஞ்சாவூர்:

    தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் இன்று சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை இன்று கொண்டாடி வருகின்றனர்.

    பக்ரீத் நாளில் புத்தாடை அணிந்தும், ஏழை எளிய மக்களுக்கு இறைச்சியை தானம் செய்யும் நாளாக இதனை இஸ்லாமிய மக்கள் கொண்டாடுகின்றனர்.

    இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த இறைத் தூதர் இப்ராகிமின் தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் உன்னத நாள் இப்பக்ரீத் திருநாள் ஆகும்.

    இந்த நாளில் இஸ்லாமியப் பெருமக்கள் இறை உணர்வோடும், தியாகச் சிந்தனையோடும் பக்ரீத் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.

    இதைத் தொடர்ந்து தஞ்சையில் ஆத்துபாலம் அருகே உள்ள ஜிம்மா பள்ளிவாசலில் அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. ஈஸ்வரி நகரில் அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் இன்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. கீழ வாசலில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்தி கொண்டனர்.

    இதேபோல் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, பூதலூர், வல்லம், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வார சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் ஆட்டு சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தைக்கு விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் ஆடு மற்றும் மாடுகளை விற்பனைக்கு கொண்டுவந்து விற்பனை செய்வார்கள்.

    இந்த சந்தையில் ஒரு நாளைக்கு ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்படும். இன்று வெள்ளிக்கிழமை சந்தை கூடியது. வருகிற 22-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி இன்று அதிகாலை முதலே விவசாயிகள் செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகளை விற்பனை செய்ய கொண்டு வந்தனர். மேலும் வியாபாரிகள் சிலர் வெளியூர்களில் இருந்து ஆடுகளை வாங்கி, இங்கு அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு வந்தனர்.

    இதனால் சந்தை முழுவதும் ஆடுகளாக காணப்பட்டது. இதனால் ஆடு விற்பனை சூடுபிடித்தது. ஆடுகளை வாங்க விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, மதுரை, புதுவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்து குவிந்தனர்.

    அவர்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர். ஒரு குட்டி ஆடு ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. நன்கு வளர்ச்சி அடைந்த ஆடுகள் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. ஆடுகளை மொத்தமாக சில வியாபாரிகள் வாங்கி சென்றனர். அதுபோல் மாடுகளும் அதிக அளவில் விற்பனை ஆனது.

    இன்று மட்டும் 15 ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும், ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன என ஆடு வியாபாரி ஒருவர் கூறினார்.

    ஆடுகளை வாங்கிய வியாபாரிகள் அனைவரும் வேன்கள், மினி லாரிககளில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.
    வருகிற 22-ந்தேதி பக்ரீத் பண்டிகையை கொண்டாடப்படுவதையொட்டி அய்யலூர் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
    வடமதுரை:

    திண்டுக்கல் அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை கூடுவது வழக்கம். மாவட்டத்தில் மிகப்பெரிய ஆட்டுச்சந்தை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்த வியாபாரிகள் வருகின்றனர். வருகிற 22-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக முஸ்லீம்கள் கூட்டு குர்பானிக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். ஆடுகளை வாங்கிச் சென்று ஒருவாரம் வளர்த்து பண்டிகை நாளில் பலிகொடுத்து வழிபடுவார்கள். இதற்காக கரூர், அரவக்குறிச்சி, நத்தம், புத்தாநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான முஸ்லீம்கள் அய்யலூர் சந்தைக்கு வந்திருந்தனர்.

    விவசாயிகளும் அதிகளவில் கால்நடைகளை சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர். செம்மறி ஆட்டுக்கிடா ரூ.10ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது. விலை அதிகரித்துகாணப்பட்ட போதும் ஆட்டுக்கிடாய்களை வாங்க போட்டிபோட்டனர். இதனால் விரைவாகவே ஆடுகள் விற்றுத்தீர்ந்தது. நாட்டுக்கோழி விலையும் அதிகரித்து கிலோ ரூ.350-க்கு விற்பனையானது.
    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், வழக்கத்தைவிட இந்த ஆண்டு ஆடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்திருந்தன. இருந்தபோதும் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது சந்தையில் விளக்கு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் சந்தைக்கு வருவோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதிகாலை நேரத்தில் இருள் சூழ்ந்து காணப் படுவதால் கொள்ளை பயமும் உள்ளது. எனவே அய்யலூர் சந்தைக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்றனர்.

    ×