search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "authorities"

    மவுலிவாக்கம் சம்பவம் நடந்த பின்னரும், அடையாறு ஆற்றங்கரையோரம் அடுக்குமாடி குடியிருப்பை கட்ட அனுமதி வழங்குவதா? என்று அதிகாரிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை, அனகாபுத்தூரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியதை எதிர்த்து ஐகோர்ட்டில் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் சார்பில் வி.டி.பாலாஜி ஆஜராகி வாதிட்டார். விசாரணையின்போது, சைதாப்பேட்டை, அடையாறு ஆற்றங்கரை அருகில் தனியார் கட்டுமான நிறுவனம் 11 அடுக்குமாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தை கட்டி வருவதாக நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

    இதையடுத்து, இந்த வழக்கில் அந்த தனியார் நிறுவனத்தை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்தனர். பின்னர், இந்த நிறுவனம் கட்டி வரும் அடுக்குமாடி கட்டிடத்துக்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்று சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.,) பொதுப்பணித்துறை, வருவாய்துறை அதிகாரிகள் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் கட்டுமான நிறுவனமும் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.எம்.டி.ஏ. சார்பில் ஆஜரான வக்கீல் திருவேங்கடம், ‘அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் நிலம் பட்டா நிலம். அந்த நிறுவனத்திடம் 1903-ம் ஆண்டு இந்த நிலத்துக்குரிய ஆவணங்கள் எல்லாம் உள்ளன. எல்லா துறைகளிடமும் முறையான அனுமதியை பெற்ற பின்னரே, சி.எம்.டி.ஏ. கட்டிட திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதில் எந்த விதிமீறலும் இல்லை’ என்று கூறினார்.

    பொதுப்பணித்துறை சார்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளடர் உதயகுமாரும், இதேபோல வாதிட்டார்.

    அப்போது அதிகாரிகள் சார்பில், அந்த அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படும் இடம், அந்த கட்டிடம் குறித்த புகைப்படங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த புகைப்படத்தை பார்த்த நீதிபதிகள், ‘அடையாறு ஆற்றங்கரைக்கு மிக அருகில், இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை கட்ட எப்படி அனுமதி வழங்கப்பட்டது? அந்த ஆற்றின் அகலம் எவ்வளவு?. மவுலிவாக்கம் சம்பவம் நடந்த பின்னரும், இதுபோன்ற அனுமதி எப்படி வழங்கப்பட்டது?’ என்று சரமாரியாக அரசு வக்கீல்களிடம் கேள்வி எழுப்பினர்.

    மேலும், இந்த புகைப்படத்தை நிபுணர்கள் பார்க்க வேண்டாம். சாதாரண மனிதர்களிடம் காட்டுங்கள். அவர் கள் இதில் விதிமீறல் இல்லை என்று கூறட்டும் என்று கூறி, அந்த புகைப்படத்தை கோர்ட்டில் இருந்தவர்கள் எல்லாரும் பார்க்கட்டும் என்று கூறி வழங்கினார்கள்.

    இதன்பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:-

    முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்காதீர்கள். தமிழ்நாட்டில் தான் அரசு புறம்போக்கு நிலம், நீர்நிலைகளை எல்லாம் விருப்பம் போல ஆக்கிரமிக்க முடியும். பணம் இருந்தால் போதும் எதுவேண்டுமானாலும் இங்கு செய்யலாம் எனற நிலை உள்ளது.

    அடையாறு ஆற்றின் அகலம் என்ன? இந்த விவரம் கூட இல்லாமல், அரசு அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜராகி உள்ளனர்.

    எங்களை பொறுத்தவரை யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. இன்னொரு மவுலிவாக்கம் சம்பவம் நடக்கக்கூடாது என்பதுதான் எங்களது நோக்கம்.

    2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இந்த அதிகாரிகளுக்கு பாடத்தை தரவில்லையா?, ஆற்றங்கரையோரம் எப்படி அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி வழங்குகிறீர்கள்?

    இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    இந்த அடுக்கு மாடி கட்டிடம் கட்டும் இடத்தில், மண் பரிசோதனை செய்யப்பட்டதா?, அவ்வாறு பரிசோதனை செய்திருந்தால், அந்த அறிக்கையை எங்கே?’ என்று நீதிபதிகள் கேட்டனர். இதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் பதில் சொல்ல வில்லை.

    இதையடுத்து, ‘இந்த வழக்கில் கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் மற்றும் சென்னை நதிகள் மீட்பு அறக்கட்டளையின் அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம். அவர்கள் அனைத்து ஆவணங்களுடன் நாளை (வெள்ளிக்கிழமை) ஆஜராக வேண்டும்’ என்று கூறி விசாரணையை தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். #tamilnews
    எருமப்பட்டி அருகே கோவில் திருவிழாவை நடத்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
    எருமப்பட்டி:

    எருமப்பட்டி அருகே கஸ்தூரிபட்டியில் பகவதியம்மன் கோவில் திருவிழா நடைபெறுகிறது. ஒரு தரப்பினர் மட்டும் தனியாக இந்த கோவிலை கட்டி தற்போது முதன்முதலாக திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதையொட்டி நேற்று காலை அவர்கள் மாவிளக்கு பூஜை, பூந்தேர் ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

    இதனிடையே அந்த கிராமத்தில் மற்றொரு தரப்பை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, பூந்தேரை ஊர்வலமாக சாலைக்கு எடுத்து வர திடீரென எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

    இது குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், சேந்தமங்கலம் தாசில்தார் பிரகாசம், எருமப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது திருவிழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்ற தரப்பை சேர்ந்த பொதுமக்கள் கூறும் போது, ‘ஊருக்கு சொந்தமான பொது கோவிலாக பாலாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானதாகும். அதை திறக்க விடாமல் தனியாக கோவில் கட்டி ஒரு தரப்பினர் மட்டும் திருவிழா நடத்து கிறார்கள். ஊருக்கு சொந்தமான கோவிலை திறந்து திருவிழா நடத்த வேண்டும். இந்த பொது கோவிலில் பிரச்சினை ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. அதற்கு தீர்வு கண்டபின்பு இந்த கோவில் திருவிழாவை நடத்துவது குறித்து முடிவு செய்ய வேண்டும்’ என்றார்கள்.

    இது குறித்து இருதரப்பை சேர்ந்தவர்களிடமும் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாவிளக்கு மற்றும் பொங்கல் பூஜை படையல் போட்டு ஒரு தரப்பினர் வழிபாடு செய்து கொள்வது என்றும், தேர் கோவிலை மட்டும் சுற்றிவர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து கோவிலில் மாவிளக்கு பூஜை செய்யப்பட்டது. பின்னர் தேர்த்திருவிழா முடிந்தபிறகு பொது கோவில் திருவிழா பற்றி அனைவரும் கலந்து பேசி முடிவு செய்து கொள்ளுமாறு போலீசார் சமாதானம் செய்தனர்.

    இதையடுத்து பூந்தேர் வீதிஉலா நடைபெறாமல் கோவிலை சுற்றி மட்டும் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    ×