search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "velliangiri"

    • எதிர்பாராத விதமாக வீரக்குமார் கால் தவறி 7-வது மலையில் இருந்து கீழே விழுந்தார்.
    • ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடவள்ளி:

    திருப்பூர் மாவட்டம் எஸ்.பி.காலனியை சேர்ந்தவர் வீரக்குமார்(வயது31).

    இவர் தனது நண்பர்களுடன் கடந்த 18-ந்தேதி கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு வந்தார்.

    பின்னர் தனது நண்பர்களுடன் மலையேறி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து நண்பர்களுடன் கீழே இறங்கி கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக வீரக்குமார் கால் தவறி 7-வது மலையில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு வயிறு, காலில் படுகாயம் ஏற்பட்டது.

    இதை பார்த்த அவரது நண்பர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வனத்துறையினர் விரைந்து வந்து, மலைவாழ் மக்களுடன் சேர்ந்து வீரக்குமாரை மீட்டு, டோலி கட்டி மலையில் இருந்து மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர்.

    அவரை பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வீரக்குமார் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சித்ரா பவுர்ணமியன்றும், ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்வது வழக்கம்.
    • கடந்த மாதங்களில் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று திரும்பியதில் 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

    வடவள்ளி:

    கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.

    தென் கைலாயம் என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வார்கள்.

    கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு 5.5 கி.மீ மலைப்பாதையில் செல்ல வேண்டும். ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழாவுக்கு வரும் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையில் ஏழு மலையை கடந்து சென்று அங்கிருக்கும் சுயம்பு லிங்கத்தை தரிசித்து செல்கின்றனர்.

    சித்ரா பவுர்ணமியன்றும், ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்வது வழக்கம். ஆண்டுதோறும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே உள்ளது.

    இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி நாளை வருகிறது. இதனையொட்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வர தொடங்கி உள்ளனர். இவர்கள் மலையேறி சென்று சுயம்பு லிங்கத்தை தரிசக்க உள்ளனர்.

    கடந்த மாதங்களில் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று திரும்பியதில் 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து வனத்துறை பக்தர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. அதன்படி பக்தர்கள் மலையேறுவற்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வெள்ளியங்கிரி மலையேற வரும் பக்தர்கள், வனத்துறை அனுமதித்த பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும். மாற்று பாதைகளில் செல்லக்கூடாது.

    பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை வனத்திற்குள் போடக்கூடாது. மலையேறும் பக்தர்கள் வனவிலங்குகளுக்கு உணவு அளிக்க கூடாது.

    எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல அனுமதி கிடையாது. மேலும் வனப்பகுதிக்குள் எங்கும் தீ முட்டக்கூடாது.

    வெள்ளியங்கிரி 6-வது மலை ஆண்டி சுனையில் குளித்து விட்டு ஈர துணிகளை அங்கேயே போட்டு விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் இருதய நோய் சம்பந்தப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், மூச்சுத்திணறல், உடல் பருமன், நீரிழிவு நோய், வயதில் மூத்தவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள், கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்கள், வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் மருத்துவரை சந்தித்து முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். முழு உடல் பரிசோதனை செய்த பின்னரே மலையேறுவதற்கு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் குழுவாக செல்ல வேண்டும். மலைக்கு சென்று உயிரிழப்புகள் ஏற்படும் போது அவர்களின் குடும்பம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

    மேலும் உயிரிழப்புகள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்படும் நபர்களை அடிவாரத்திற்கு கொண்டு வருவதற்கு வனத்துறைக்கும் கடும் சவாலாக உள்ளது. மேலும் அனைவரின் நலன் கருதி மேற்கண்ட அறிவுரைகளை பக்தர்கள் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்து 20 ரூபாயை பெற்று கொள்ளலாம்.
    • வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.

    வடவள்ளி,

    கோவையில் மிகவும் பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாக தென் கைலாயம் என அழைக்கப்படும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலை யொட்டிய மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் ஏழாவது மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசிக்க ஆண்டுேதாறும் மார்ச் முதல் மே மாதம் வரை பக்தர்கள் வருவார்கள்.

    இந்த ஆண்டு மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று முதல் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை ஏற வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.

    முதல் நாளான நேற்று 10 ஆயிரம் பக்தர்கள் ஈசனை தரிசிக்க மலை ஏறினர்.இன்று மஹா சிவராத்திரி விழாவையொட்டி பூண்டி வெள்ளியங்கிரி மலையேற ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர்.அவர்கள் அடிவாரத்தில் இருந்து மலையேறினர். ஏழாவது மலைக்கு சென்று சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் வருகையை முன்னிட்டு கோவில் நிர்வாகம் பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளது.மலைக்கு செல்லும் படிக்கட்டுகளின் அடிவாரத்தில் வனத்துறையினர் சோதனை சாவடி அமைத்து பக்தர்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    அதன்பின்னரே பக்தர்களை மலையேற அனுமதித்து வருகின்றனர்.பக்தர்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு வனத்துறையினர் 20 ரூபாய் பெற்று கொண்டு ஸ்டிக்கர் ஓட்டி கொடுத்தனர். பக்தர்கள் திரும்ப வரும்போது பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்து 20 ரூபாயை பெற்று கொள்ளலாம்.

    சித்ரா பவுர்ணமியையொட்டி வெள்ளியங்கிரி மலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி என்ற இடத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. தென்கயிலாயம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    மலையடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்து விட்டு மலை மீது உள்ள 7-வது மலைக்கு சென்றால் அங்கு சுயம்புலிங்கமாக வீற்றிருக்கும் கிரிமலை ஆண்டவரை தரிசனம் செய்யலாம். இங்கு அடர்ந்த வனப்பகுதி வழியாகதான் செல்ல வேண்டும். அத்துடன் அடிக்கடி காலநிலை மாற்றமும் ஏற்படும்.

    எனவே ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு பிப்ரவரி மாத கடைசியில் இருந்து மே மாதம் வரை மலை மீது செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அத்துடன் சித்ரா பவுர்ணமி விழாவில் மலை மீது ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வது உண்டு.

    அதன்படி சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று காலை 6 மணிக்கு, கோவில் அடிவாரத்தில் உள்ள மனோன்மணி அம்பாள் சமேத வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவிய அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இந்த பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைகள் முடிந்த பின்னர் ஏராளமான பக்தர்கள் மலை மீது ஏற தொடங்கினார்கள். மலைமீது பிளாஸ்டிக் பொருட் கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதால், பக்தர்கள் கொண்டு சென்ற பைகளை மலையடிவாரத்தில் வனத்துறையினர் சோதனை செய்தனர்.

    சோதனை முடிந்ததும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூங்கில் கம்பு உதவியுடன் மலையேறினார்கள். அவர்கள் 6-வது மலையில் உள்ள ஆண்டி சுனையில் நீராடி விட்டு 7-வது மலையில் சுயம்புவாக வீற்றிருந்த கிரிமலை ஆண்டவரை தரிசனம் செய்தனர்.

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் குவிந்தனர். அங்கு தன்னார்வ அமைப்புகள் மற்றும் ஆன்மிக அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக மொட்டை அடித்துக்கொண்டனர்.பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோவையில் இருந்து பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்களின் மருத்துவ வசதிக்காக கோவில் அடிவாரத்தில் உள்ள அலுவலகம் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு இருந்தது.

    மேலும் அவசர கால உதவியாக கோவில் எதிரே 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத்துறை வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்தன. விழாவுக்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது. 
    ×