search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LokayuktaBill"

    பல் இல்லாத வாய் போல பவர் இல்லாத லோக் ஆயுக்தா உள்ளதாக மு.க.ஸ்டாலின் தி.மு.க தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். #LokayuktaBill #MKStalin

    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தலைவர் கலைஞர் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற 1971-76 ஆட்சிக்காலத்தில், ‘பொதுவாழ்வில் ஈடுபட்டோர் இலஞ்ச ஊழல் குற்றத் தடுப்பு சட்டம்’, தமிழ்நாடு சட்ட மன்றத்தில் 1973ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

    தற்போது இந்தியா முழுவதும் லோக்பால், லோக் ஆயுக்தா சட்டங்கள் குறித்த விழிப்புணர்வும் அது குறித்த வலியுறுத்தலும் பரவி மிகுந்துள்ள சூழலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையிலேயே லோக் ஆயுக்தாவைக் கொண்டு வருவோம் என, பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்ததை கலைஞரின் உடன்பிறப்புகள் என்ற முறையில் நாம் அனைவருமே பெருமிதத்துடன் எடுத்துக் காட்ட முடியும்.

    தேர்தல் களத்தில் நடந்த சூதான விளையாட்டுகளால் வெறும் 1.1 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே ஆட்சியைத் தொடரும் வாய்ப்பினை அ.தி.மு.க. பெற்றது. ஆனால், அது ஊழலை ஒழிக்கவோ, வெளிப்படைத்தன்மையான நிர்வாகத்தை அளிக்கவோ விரும்பாத காரணத்தால், லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க முன்வரவேயில்லை. சட்டமன்றத்திலேயே லோக் ஆயுக்தாவை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நானும் கழக உறுப்பினர்களும் வலியுறுத்திப் பேசினோம். “கரப்‌ஷன், கமி‌ஷன், கலெக்ஷன்” என்றிருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் எப்படி லோக் ஆயுக்தா சட்டத்தைக் கொண்டு வருவார்கள்?

    தமிழ்நாட்டைப் போலவே இந்தியாவில் இன்னும் சில மாநிலங்களும் இதேபோல இருந்த காரணத்தால், ஜூலை 10-ந்தேதிக்குள் லோக் ஆயுக்தாவை நிறைவேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் கண்டிப்பான உத்தரவிட்டது. அதன் காரணமாகத்தான் அரைகுறை மனதுடன், தமிழ்நாடு சட்டமன்றத்தில் லோக் ஆயுக்தா மசோதா கொண்டு வரப்பட்டது. தி.மு.கழகத்தைப் பொறுத்த வரை, மக்கள் நலன்காத்திட நன்மையளிக்கும் செயல்பாடு எந்தப் பக்கமிருந்து வந்தாலும், கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு ஆதரிப்பது வழக்கம்.

    அதே நேரத்தில் அந்த சட்டமுன்வடிவு முழுமையான வலிமை கொண்டதாக, நிர்வாகத்தில் ஊழலை உண்மையாகவே ஒழிக்கக்கூடியதாக வெளிப்படைத் தன்மை கொண்ட அரசாங்கத்துக்கு உத்தரவாதம் தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதில் தி.மு. கழகம் உறுதியாக இருப்பதால், அது குறித்த விவாதத்தின் போது கழகத்தின் சார்பிலான கருத்துகள் எடுத்து வைக்கப்பட்டன.

    தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள், சமூக நல அமைப்பினர் உள்ளிட்ட பலரும் தமிழ்நாடு அரசாங்கத்தின் லோக் ஆயுக்தா சட்டம், வலிமையற்றதாக வெறும் காகிதக்கணை போல இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர். மக்கள் மன்றத்தின் எண்ணங்களை சட்டமன்றத்தில் எடுத்து வைத்தது தி.மு.கழகம். நமது ஆலோசனைகள் ஏற்கப்படாத நிலையில், எதிர்ப்பினைப் பதிவு செய்யும் வகையில் வெளிநடப்பு செய்தோம்.

    நொண்டிக் குதிரைக்கு சறுக்கியதே சாக்கு என்பது போல, அரைகுறை மனதினரான அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் வலிமையில்லாத லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவின் குறைகளை மறைப்பதற்காக, லோக் ஆயுக்தா சட்டம் வேண்டும் என்று கோரிய தி.மு.க. அதனை எதிர்த்து வெளிநடப்பு செய்யலாமா என வழக்கம்போல தங்கள் மீது படிந்திருக்கும் களங்கத்தை மறைக்கும் யுக்தியாக, தி.மு.கழகத்தின் பக்கம் பழியைத் திருப்பப் பார்க்கிறார்கள். ஊடகங்கள் பத்திரிகைகள் ஒன்றிரண்டில்கூட, லோக் ஆயுக்தாவுக்கு தி.மு.க. எதிர்ப்பு என்பதைப் போலத் தலைப்பிடப்பட்டதைக் காண முடிகிறது.

    லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவை தி.மு.கழகம் எதிர்க்கவில்லை. அது, பல் இல்லாத பொக்கை வாயாக வெட்டப் பயன்படாத அட்டைக்கத்தியாக இருக்கிறது என்பதையும், அந்த ஓட்டை வாய் வழியாக ஊழல் பெருச்சாளிகள் குறுக்கு வழியில் தப்பி ஓடி, நிர்வாக நேர்மை என்ற உன்னதமான உயிருக்கே உலை வைக்கும் என்பதைத்தான் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது.

    கமி‌ஷன் ராஜ்ஜியம் நடத்தும் ஆட்சியாளர்கள் முடிவு செய்யும் ஒப்பந்தங்கள் (டெண்டர்கள்) பற்றி லோக் ஆயுக்தா நடவடிக்கை எடுக்க முடியாது; கலெக்ஷன் ராஜ்ஜியம் நடத்தும் ஆட்சியாளர்கள் நியமிக்கும் பணிகள் (போஸ்டிங்) குறித்து லோக் ஆயுக்தா நடவடிக்கை எடுக்க முடியாது. அப்படியென்றால், இந்த சட்டமுன்வடிவால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்? அ.தி.மு.க. கட்டியுள்ள மதில் இல்லாத அரைகுறை மாளிகையில் “பல்பு” மட்டுமில்லை, “மெயின் ஸ்விட்ச்சும்“ இல்லை; மின் இணைப்பும் இல்லை. எவருக்கும் பயன்படாத இருளடைந்தபாழடைந்த கட்டடமாகத்தான் அது இருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் மக்களிடம் எடுத்துரைப்போம்.

    முழுமையான வலிமை மிக்க லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்றால், தற்போதைய தி.மு.கழகத்தின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை வலியுறுத்திய நிலையில், முதலமைச்சரோ இந்த பல் இல்லாத லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவே நீடிப்பதுதான் தனக்கும் தன்னைச் சார்ந்தோருக்கும் பாதுகாப்பானது என்ற காரணத்தால், தேர்வுக் குழுவுக்கு அனுப்புவதற்கு தயங்குகிறார் மறுக்கிறார் புறக்கணிக்கிறார்.

    ஊழல் செய்வதற்காகவே மிச்சமிருக்கும் பதவிக்காலத்தை எப்படியாவது அனுபவித்து விடவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் மாநிலத்தின் உரிமைகளைக்கூட அடகு வைத்து அடிமை ஆட்சி நடத்து பவர்களிடம், ஊழலுக்கு எதிரான வலிமையான லோக் ஆயுக்தா சட்டத்தை எதிர் பார்க்க முடியுமா?

    உண்மையாகவே ஊழலை ஒழிக்கும் வலிமையுள்ள லோக் ஆயுக்தா வேண்டும் என்பதே ஆள்வோரிடம் நாம் வைக்கும் கோரிக்கை. ஊழலுக்கு இடம் தராமல், வலிமையான பற்களைக் கொண்ட லோக் ஆயுக்தா உருவாக்கப்பட்டு, ஆட்சி நிர்வாகம் என்பது அனைத்துத் தரப்பு மக்களும் அடி முதல் நுனி வரை விரும்பிச் சுவைக்கும் கரும்பு போன்ற சட்டத்தை வரவேற்று உருவாக்கும் காலம் விரைவில் ஜனநாயக ரீதியாக அமையும். அதுவரை போலிகள் போடும் கொண்டாட்டத்தைப் பொறுத்துக் கொண்டுதானே ஆகவேண்டும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    லோக்ஆயுக்தா சட்டத்தை 2 மாதங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #LokayuktaBill #SupremeCourt

    புதுடெல்லி:

    மத்திய மந்திரிகள், மாநில மந்திரிகள், மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க பாராளுமன்றத்தில் லோக் பால் மசோதாவும், லோக் ஆயுக்தா மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

    இதை பின்பற்றி மாநிலங்கள் சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதாவை நிறைவேற்றி நடைமுறைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி 13 மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

    தமிழகம், காஷ்மீர், புதுவை உள்பட 11 மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்தது. இதையடுத்து தமிழக அரசு லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் ஜூலை 10-ந்தேதி வரை (இன்று) கெடு விதித்தனர்.

    லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றி அது பற்றி சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

    இதைத்தொடர்ந்து தமிழக அரசு லோக் ஆயுக்தா மசோதாவை தயாரித்து அதை நேற்று சட்டசபையில் நிறைவேற்றியது. இதுபற்றிய பிரமாண பத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்தது.

    இன்று இந்த வழக்கு சுப்ரீம கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது லோக் ஆயுக்தா மசோதாவை தமிழக அரசு 2 மாதங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த வழக்கில் புதுவை அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் லோக்ஆயுக்தா வரைவு மசோதா தயாராகி வருவதாகவும், ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்ததும் சட்டம் நிறை வேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. #LokayuktaBill #SupremeCourt

    புலியாக அமைய வேண்டிய லோக் ஆயுக்தா, ஆட்சியாளர்களைக் கண்டு அஞ்சி ஓடும் எலியாக மாற்றப்பட்டுள்ளது என்று ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். #Ramadoss #LokayuktaBill

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதற்கான சட்டம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. லோக் ஆயுக்தா அமைப்பு எப்படி இருந்து விடக்கூடாது என்று அச்சம் தெரிவித்திருந்தேனோ, அதே போன்று தான் உருவாக்கப்படவிருக்கிறது. கோட்டையைக் காவல் காப்பதற்காக வலிமையும், வீரமும் மிக்க படைவீரனை நிறுத்துவதற்கு மாற்றாக சோளக்கொல்லை பொம்மையை நிறுத்தினால் எப்படி இருக்குமோ, அதேபோன்று தான் தமிழக அரசு உருவாக்கவுள்ள லோக் ஆயுக்தாவும் அமையும்.

    லோக் ஆயுக்தாவை உருவாக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளான பினாமி அரசு, லோக் ஆயுக்தாவாகவும் இருக்க வேண்டும்; தங்களின் ஊழல்களையும் கண்டு கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில் பொம்மை அமைப்பை உருவாக்கவே வகை செய்திருக்கிறது. தமிழக அரசு உருவாக்க உள்ள லோக் ஆயுக்தாவால் ஊழலை எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது என்பது தான் உண்மை.

    தமிழக முதல்-அமைச்சரும் லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்புக்குள் வருவார் என்று சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. முதல்-அமைச்சரும் ஓர் அமைச்சராகக் கருதப்படுவார் என்று 2(1)(ஐ)பிரிவில் கூறப்பட்டிருப்பதன் அடிப்படையில் மட்டுமே முதல்-அமைச்சர் மீதான ஊழல் புகாரை விசாரிக்கும் படி லோக் ஆயுக்தாவை கோர முடியும். இந்த குழப்பத்தை முதல்-அமைச்சர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    ஓர் அரசு நிர்வாகத்தில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடை பெறுவது ஒப்பந்தங்களை வழங்குவதிலும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களிலும்தான். ஆனால், இவை இரண்டிலும் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரம் லோக் ஆயுக்தாவுக்கு இல்லை.

    அதேபோல், அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்த புகார்களை லோக் ஆயுக்தா நேரடியாக விசாரிக்க முடியாது. தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையரிடம் இது குறித்து புகார் அளித்து, அதில் முகாந்திரம் இருப்பதாக அவர் கருதினால் மட்டுமே அப்புகார் லோக் ஆயுக்தாவுக்கு அனுப்பி வைக்கப்படுமாம். இவ்வாறு எந்த அதிகாரமும் இல்லாத லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவதற்கு பதிலாக, ஊழலை சட்டப்பூர்வமாக்குவதாக அரசு அறிவித்து விடலாம்.

    லோக் ஆயுக்தாவாக நியமிக்கப்படுவதற்கான தகுதிகளும், லோக் ஆயுக்தாவை தேர்வு செய்வதற்காக அமைக்கப்படவுள்ள குழுவும் லோக் ஆயுக்தா குறித்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் தகர்க்கின்றன. லோக் ஆயுக்தாவாக நியமிக்கப்படுவர்கள் அப்பழுக்கற்ற பின்னணி கொண்ட, தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவோ இருக்க வேண்டும் என்று கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் நான் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியைக் கூட லோக் ஆயுக்தாவாக நியமிக்கலாம் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

    கடந்த காலங்களில் ஜெயலலிதாவை ‘இதய தெய்வமே வணங்குகிறேன்’ என்று பதாகை அமைத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் உண்டு. அப்படிப்பட்டவர்கள் லோக் ஆயுக்தாவாக நியமிக்கப்பட்டு விட்டால் தமிழகத்தில் அரசு நிர்வாகம் என்ன ஆகும்? என்று நினைத்துப் பார்க்கவே மிகவும் அச்சமாக உள்ளது.

    அதேபோல், முதல்- அமைச்சர், சட்டப்பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவர் அடங்கிய குழு தான் லோக் ஆயுக்தாவை தேர்வு செய்யும் என அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் அபத்தமானதாகும்.

    நீதித்துறையின் பிரதிநிதி இல்லாத லோக் ஆயுக்தா தேர்வுக்குழு நம்பத்தகுந்ததாக அமையாது. தேசிய அளவில் ஊழலை ஒழிக்கும் அமைப்பான லோக்பாலை தேர்வு செய்வதற்கான குழுவில் பிரதமர், மக்களவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, புகழ்பெற்ற வல்லுனர் என ஐவர் இடம் பெற்றிருப்பார்கள்.

    இதன் மூலம் தகுதியான ஒருவர் மட்டுமே லோக்பால் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால், நீதித்துறையினர் இல்லாத தேர்வுக்குழு அரசியல் குழுவாகவே அமையும்.

    தமிழகத்தில் தகவல் உரிமை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை இத்தகைய குழுவே தேர்ந்தெடுக்கிறது. இதற்கான கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்க முடியாத சூழலை உருவாக்கி ஆளுங்கட்சிக்கு சாதகமானவர்களை தேர்வு செய்வதே வழக்கமாக உள்ளது.

    தி.மு.க. ஆட்சியின் போது, தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற ஸ்ரீபதியையும், அ.தி.மு.க. ஆட்சியில் காவல் துறை தலைமை இயக்குனர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற ராமானுஜத்தையும், பின்னர் முதல்வரின் செயலராக இருந்து ஓய்வு பெற்ற ஷீலாப் பிரியாவையும் நியமித்து தகவல் உரிமை ஆணையத்தை இரு கட்சிகளும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டன. அதேபோன்று லோக் ஆயுக்தாவுக்கும் தங்களுக்கு சாதகமான ஒருவரை நியமித்து, வழக்கம் போல ஊழலை தொடரும் கொடுமை தான் நடக்கப் போகிறது.

    இதற்கெல்லாம் மேலாக, லோக் ஆயுக்தாவில் தவறான புகார்களை அளிப்பவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. ஊழல்கள் குறித்து எவரும் புகார் செய்யக்கூடாது என்பதற்காகவே இத்தகைய மிரட்டல் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

    மொத்தத்தில் ஊழல் செய்பவர்களை அச்சுறுத்தும் வகையில் புலியாக அமைய வேண்டிய லோக் ஆயுக்தா, ஆட்சியாளர்களைக் கண்டு அஞ்சி ஓடும் எலியாக மாற்றப்பட்டுள்ளது. ஊழலை ஒழிப்பதற்கு பதிலாக ஊழலை வளர்க்கும் இந்த அமைப்பை ஏற்க முடியாது. இதற்கு மாற்றாக அனைத்து அதிகாரங்களும் கொண்ட புதிய லோக் ஆயுக்தா சட்டத்தை பேரவையைக் கூட்டி நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #LokayuktaBill

    ×