search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gold Win"

    பாரா ஆசிய விளையாட்டில் போட்டியில் நேற்று மட்டும் 5 தங்கப்பதக்கங்களை வென்ற இந்தியா பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. #AsianParaGames2018 #ParulParmar
    ஜகர்தா:

    3-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த செஸ் போட்டியில் பெண்களுக்கான ரேபிட் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜெனிதா அன்டோ இறுதி சுற்றில் 1-0 என்ற கணக்கில் இந்தோனேஷியாவின் மானுருங் ரோஸ்லின்டாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். செஸ் போட்டியில் ஆண்களுக்கான ரேபிட் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் கிஷான் கன்கோலி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

    பேட்மிண்டனில் பெண்களுக்கான ஒற்றையர் இறுதிஆட்டத்தில் இந்திய வீராங்கனை பாருல் பார்மர் 21-9, 21-5 என்ற நேர்செட்டில் தாய்லாந்து வீராங்கனை வான்டே காம்தமை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை உச்சி முகர்ந்தார்.

    ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர்கள் நீரஜ் யாதவ் 29.84 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கமும், அமித் பால்யான் 29.79 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கமும் வசப்படுத்தினர். ஆண்களுக்கான உருளை தடி எறிதலில் (கிளப் துரோ) இந்தியாவின் அமித் குமார் 29.47 மீட்டர் தூரம் எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். மற்றொரு இந்திய வீரர் தரம்பிருக்கு (24.81 மீ.) வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

    பெண்களுக்கான வட்டு எறிதலில் இந்தியாவின் தீபா மாலிக் வெண்கலப்பதக்கம் பெற்றார். அவர் ஈட்டி எறிதலிலும் வெண்கலம் வென்று இருந்தார். டெல்லியை சேர்ந்த 48 வயதான தீபா மாலிக் ரியோ பாரா ஒலிம்பிக்கில் குண்டு எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இந்தியா 5 தங்கம் உள்பட 13 பதக்கங்களை வென்றது.

    இந்த போட்டி இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை இந்தியா 13 தங்கம், 20 வெள்ளி, 30 வெண்கலம் என்று மொத்தம் 63 பதக்கங்களுடன் 9-வது இடத்தில் உள்ளது. சீனா 161 தங்கம், 84 வெள்ளி, 55 வெண்கலத்துடன் மொத்தம் 300 பதக்கங்கள் குவித்து முதலிடத்தில் நீடிக்கிறது.  #AsianParaGames2018 #ParulParmar
    ×